(அகரமுதல 108   கார்த்திகை13, 2046 / நவ.29, 2015 தொடர்ச்சி)

attai_ezhilarasi

 

  1. உணவு முதற்பல ஒன்றும் விரும்பாள்

காதலன் பிரிவினும் சாதலே இனிதெனத்

துயரம் பெருகத் தொல்நோய்ப் பட்டு

இழந்தன ளெழிலை; இவள்சோ தரரை

“வாடிய மலரென மங்கை தோன்றிடக்

  1. காரணம் யாதெனக்” கண்டோர் வினவ

“நோயா லவளும் நோத லுற்றனள்

தேர்ந்த மருத்துவர் ஓர்ந்து பற்பல

மருந்துங் கொடுத்தனர்; மன்னிய நோயும்

தீர்ந்திடக் காணேம்! செய்வதென் யாமும்”

  1. என்றேயியம்பிக் கன்றிய மனதுடன்

உண்மை வெளிப்படின் உற்றிடுந் தீங்கென

எழிலர சியுந்தன் *இகுளை யோடும்

விரும்பிய வாறு வெளியி லுலாவ

விழைந்த போது முன்போற் றடுத்திலர்

  1. தோழியும் தலைவியின் துயரம் போக்கக்

கண்டவ ருள்ளம் கவருங் காட்சிகள்

மிளிரு மிடங்களைத் தெளிவுறக் காட்டுவள்

காட்டினும் கவினுறு காட்சிகள் முன்னே

காதலன் உருவே கவின்பெற் றிலங்கிடும்

  1. இன்பம் விளைக்கும் இனிய தோற்றம்

துன்பம் பெருக்கித் துயரைக் கொடுத்தன

இயற்கை வனப்பால் இவள்துயர் போக்கக்

கருதிய தோழி காட்டிற் கழைத்தனள்

இசைந்திட அவளும் இருவரும் இணைந்து

  1. காட்டை யடைந்தனர்; கவினுற் றிலங்கும்

மலரைப் பார்த்தாள்; மலர்ந்தவை தளிரில்

சாய்ந்து பொருந்திய சாயலைக் கண்டு

தலைவனைத் தழுவிச் சாய்ந்து முத்தம்

கொடுப்ப நினைத்தனள்; கொடுந்துய ரெய்தினள்

(எழில் கூடும்)

பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்

(எழிலரசி அல்லது காதலின் வெற்றி 11)