எழிலரசி அல்லது காதலின் வெற்றி 9 – பேரா.சி.இலக்குவனார்
(அகரமுதல 106 கார்த்திகை 06, 2046 / நவ. 22, 2015 தொடர்ச்சி)
9
ஆயினும் அவளும் அடிக்கடி வைகலும்
வினவத் தொடங்கினள் வீணே வருந்திக்
காரணம் பலசொலிக் கழித்தன ராயினும்
மூத்தோ னொருவன் முனிந்தன னோக்கி 8
- “ஆடலனென்ற ஆடவனைத் தினமும்
வந்து வினவக் காரணம் யாதோ?
என்ன முறையினன்; என்றும் வினவுவாய்
வினவின் இனிநீ விரும்பா ஒர்விடை
விரும்பி யளிப்போ மென்ற விடைத்தனன்”
- அன்பனைக் காணா அவ்வெழி லரசி
அடுத்துச் சொல்லின் கெடுக்கவுந் துணிவரென்
றஞ்சிக் கூறினள் மிஞ்சிய வார்த்தை
உள்ளில் மிளிரும் உயர்பெருந் தலைவன்
கண்முன் தோன்றவும், காதலில் நீந்தவும்
- பேரவாக் கொண்டனள்; பெரிதும் வருந்தினந்
அல்லும் பகலு மவனின் மையினால்
சோலை புக்குச் சோர்ந்து புலம்பி
நிலையாய் நிற்கும் மாந்தரு வேயோ
நீபோய்க் கடிதிற் கூறா யேயோ
- அலையும் நெஞ்சை அமையும் இலைகாள்
அருளென் தன்மை யறியீ ரேயோ
இணைந்து நிற்பீர் என்றும் குருகீர்
என்னிலை கண்டு நொடியும் உருகீர்
குலவும் கிளிகாள் கூவும் குயில்கள்
- கூடிக் சென்று கூடச் சொல்வீர்
எனப்பல புகன்று; ஏங்கினள் மிகவும்;
மகிழ்ந்து குலவும் மகளீர் முன்வரின்
உள்ளங் குளிர்ந்து ஒருநொடி யும்மவர்
இத்தகைத் துன்பம் எய்த அஞ்சுவள்
(எழில் கூடும்)
பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்
Leave a Reply