(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 48 : தொல்காப்பியம் உணர்ந்த காதை – தொடர்ச்சி)

  `குலக்கொடி இன்னுங் கூறுவென் கேட்டி!

கலக்குறு நெஞ்சினன் காமம் விஞ்சிய
கோமகன் சிலரொடு குழுமி ஆங்கண் 30
பாமக னாகிய பாவலன் பெயரால்
படிப்பகம் நிறுவிப் பணிபூண் டொழுகினன்;
உடைப்பெருஞ் செல்வன் ஆதலின் ஊரார்
தடைக்கல் இட்டிலர்; தமிழின் பெருமை
முடுக்குகள் தோறும் முழங்குதல் கண்டேன்’ 35
எனுஞ்சொற் கேட்டுளம் எழுச்சி கூர்ந்து
மனங்கொளும் மகிழ்வின் வாழ்த்தினள் பூங்கொடி;

பொதுப்பணி வேடர்

 `இருஇரு செல்வி! இளையோன், தமிழ்க்குப்

புரிபணி உளத்தில் பூத்த தன்றே!
தந்நலம் வேண்டும் தணியா ஆர்வலர் 40
பொதுநலம் புரிவோர் போலப் பேசுவர்;
மதுநலங் கண்ட வண்டென மக்களும்
மதிமயக் குற்று வாழ்த்தொலி எழுப்புவர்;

புதுநிலை எய்துவர் புகழ்பொது மக்களால்;

 
மேனிலை எய்தலும் மிதிப்பர்அம் மாந்தரை;   45
 நானிலம் இவ்வணம் நடந்திடல் கண்டோம்;   

கோமகன் வஞ்சகப் பணி

 இளையோன் றானும் இவ்வழி செல்லும்

உளமே உடையோன், தன்னலம் ஒன்றே
குறியா வைத்துக் குழைந்து பொதுப்பணி
புரிவோன் ஆயினன், பூங்கொடி நின்னை 50
வஞ்சித் திருந்து வதுவை புரிதலை
நெஞ்சத் தழுத்தி நின்றனன் காணுதி!
தமிழ்ப்பணி எனின்நீ தலைபணி வாய்என
மனப்பால் குடித்து மகிழ்ந்தனன்’ என்றனள்;

(தொடரும்)

+++

இடும்பை – துன்பம், வதி – தங்கும், கூர்ந்து – மிகுந்து, இளையோன் – கோமகன், ஆர்வலர் – ஆவலுடையவர்.

+++