(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 51 : எழுச்சி யூட்டல் – தொடர்ச்சி)

பொழிலில் பூங்கொடி

தாமரைக் கண்ணி தவிர்ந்த பின்னர்க்

தோமறு தமிழ்க்குக் கொண்டுகள் ஆற்றப்

பூமியிற் பிறந்த பூங்கொடி ஒருநாள்

 பொழில் நலங் காணும் விழைவினள் செல்வுழி,

மூதாட்டி வருகை

மழைமுகங் கண்ட மயிலென ஒருத்தி

நரை மூதாட்டி நல்லன எண்ணிப்

புரையறு செயலே புரிவது காட்டும்

முகத்தினள், கல்வி முற்றிய அறிவினள்,

 அகத்தினில் அன்பு நிறைந்தவள் ஆங்கே

எதிர்ப்பட் ‘டாயிழாய் யார்நீ ‘ எனலும்,

பூங்கொடி தன் வரலாறு கூறல்

முதிர்பரு வத் தாய்! மொழிகுவென் கேளாய்!

உலகந் தோன்றி ஊர்ந்து வளர்ந்து

பிள்ளைப் பருவத்துப் பேசிய மொழியாம்

வெல்லத் தமிழ்மொழி வெல்லப் பணிபுரிந்

தறிவொளி விளங்க ஆற்றினர் தந்தை,

குருடு படுமதிக் குழுவினர் சதியால்

மாண்ட வடிவேல் மனைவிளக் கருண்மொழி

ஈன்ற மகள் யான் என்பெயர் பூங்கொடி,

இல்லறம் தவிர்ந்தமை கூறல்

தனித்தொரு மகன் இக் கரணியில் வாழ

நினைத்தல் பலபிழை நிகழ்வதற் கேதென

உலகம் மொழிதல் உண்மையே யாயினும்

நிலவிய பொதுப்பணி நேர்வோர் தமக்குத்

தடையாம் இல்லறம் தவிர்ந்தேன்; நெஞ்சுரம்

உடையார் எங்கை உழைத்த அப் பணியே

தலையாக் கொண்டேன் தையால்! மணஞ்செயின்

குடும்பக் கவர்ச்சி

உலைவாய்ப் பட்ட இரும்பென உருகி

வளைந்து நெளிந்து வாழ்தல் வேண்டும்;

குழந்தை கணவன் குடும்பம் என் றெலாம்

எண்ணம் விரியும், இடும்பை கள் பெருகும்;

தன்னல மறுப்பெனும் நெருப்பினுள் மூழ்க

உன்னுங் காலை உளந்துணி யாதே!

அன்னாய்! அதனால் துறந்தனென் இல்லறம்:

கடல்நகர் வந்தமை கூறல்

இயல்பினில் வாய்த்தது இத்துற வுள்ளம்,

 மயலொரு சிறிதும் இல்லேன், மலையுறை

அடிகள் குறளகம் அண்டினேன், உய்ந்தேன்,

 கடிகமழ் தாமரைக் கண்ணிதன் துணையால்

இந்நகர் வந்திவண் இறுத்தனென், அதன்றலைப்

பன்னரும் பெருமைப் பழந்தொல் காப்பியப்

பொருள்நூல் உணர்ந்தேன்; புகன்றேன் என்னிலை;

அருள்விழி! நீயார் அறை’கென மொழிதலும்,

(தொடரும்)