(புதிய புரட்சிக்கவி:  களம் : 5  காட்சி : 3 தொடர்ச்சி)

புதிய புரட்சிக்கவி : களம் : 5 காட்சி : 4


நாற்சந்தி – பொதுமக்கள், மோனைப்புலவன்
அறுசீர் விருத்தம்

முதியோன்1: ஆவதும் அழிவதும் பெண்ணாலே
ஆன்றோர் பலரும் சொன்னாரே
காவது காக்கும் வலியின்றிக்
காளை காதல் வயப்பட்டான்
காவலன் மனத்தை அறியாளாய்க்
கன்னி காதல் கொண்டிட்டாள்
மேவன எண்ணா தரசனுந்தான்
மிகையாய்த் தண்டம் வித்திட்டான்

எண்சீர் விருத்தம்
மோனை: ஆணுக்கும் பெண்ணுக்குங்
காத லின்றேல்
அன்றுமுதல் இன்றுவரை
உலக மில்லை
வீணுக்குப் பெண்ணடிமை
உள்நு ழைத்தார்
விடிவிலையே சாதியிழிவுக்
கிங்கு மட்டும்
நாணுமின்றிச் சுந்தரர்க்குக்
காதல் தூது
நடராசர் நடந்ததாகப்
புராணஞ் சொல்லும்
சாணுக்குங் குறைவான
வயிற்றைக் காக்கச்
சாற்றிவைத்த தல்லாமல்
பயன்வே றுண்டோ

முதியோர் 2: வீணுக்குப் பேசுகிறாய்
தம்பி நீதான்
விடியளவு பேசினாலும்
இந்த மண்ணில்
காணுகிற வேற்றுமைகள்
மறைந்தா போகும்
கட்டுத்தறி முறிக்கின்ற
காளை மாடும்
பேணுமொரு உணவாகக்
கொள்ளு கின்ற
பெயர்மாறும் வெள்ளாடும்
ஒன்றா சொல்வாய்
நாணுகிற பேச்சாகும்
நாத்தி கந்தான்
நாம்காணும் பறவையெலாம்
ஒன்றென் றாமோ?

மோனை: மாரிபொழி காலத்துடல்
மதர்த்தா லுந்தான்
மனைகாக்கும் நாய்தானும்
நரியைக் கூடா
ஊரிலுள்ள மரமெல்லாம்
ஒருங்கே வாழும்
ஒருநாளுங் காக்கையினம்
கிளியைத் தேடா
வேரிலுள்ள பலாப்போல
விரும்பும் பெண்ணை
வேற்றுமையே கருதாமல்
எந்த ஆணும்
பூரிக்குந் தேனெடுக்கும்
வண்டு போலப்
புணர்ந்தின்பங் கொண்டுபிள்ளை
பெறுதல் கண்டோம்

முதியோர் 3: பிறப்பொன்று யாமறிவோம்
பிழையா நீதி
பெரும்புவிக்குச் சொல்லிவைத்த
வள்ளு வன்தான்
சிறப்புண்டு செய்தொழிலால்
என்றுஞ் சொன்னான்
சிந்தித்தால் அதுதானே
உண்மை யாகும்
மறத்தகையாய் நாடாளும்
மன்ன வர்க்கு
மண்குழைக்குங் குயத்தொழிலைச்
செய்வோ னொப்போ
பிறப்புக்குச் சொன்னபடி
தொழிலைச் செய்தால்
பெருந்துன்பம் இல்லையாகும்
மாந்தர்க் குள்ளே

மோனை: பிறப்பதிலே எவ்வுயிர்க்கும்
பேத மில்லை

பிழையாதீர் செய்தொழிலால்
என்றே சொன்னான்
இறப்பவிழி தொழிலாக
எண்ணு கின்ற
எளியோனின் துப்புரவுத்
தொழிலும் மற்றும்
பிறப்பொழித்த பேருடலை
எரித்தல் தானும்
பெருமையுற நம்தலையை
மழித்தல் தானும்
சிறப்புநல்கும் ஆடையினை
வெளுத்தல் தானும்
சிந்தித்தால் சமூகத்தின்
உறுப்பா மன்றோ

      உயர்வென்ன  தாழ்வென்ன
        தொழிலுக்  குள்ளே
        ஒற்றுமையைக் குலைப்பதற்கே
        அவற்றைச்  சொன்னார்
      மயல்வேண்டாம்  எத்தொழிலுந்
        தேவை  யின்றேல்
        மன்பதைதான் மயக்கமின்றி
        ஒதுக்கு மன்றோ
      அயர்வின்றி நாடோறும்
        வளரு  கின்ற
        அறிவியலால் தோன்றுகின்ற
        தொழிலை யெல்லாம்
      தயவாக  யாருக்கென
        ஒதுக்கி வைப்பீர்
        தடுமாற்றங் கொள்ளாது
        விளங்கச் சொல்வீர்

      ஒன்றுகூடி  மனிதயினம்
        வாழ ஈங்கே
        ஒருதலையாய் வேண்டுகிற
        தொழிலுக்  குள்ளே
      ஒன்றைமிகத் தாழ்வென்றும்
        மற்றும் ஒன்றை
        ஓங்குயர்வு கொண்டதென்றும்
        உரைத்தல்  நன்றோ
      தன்னுடைய  குலந்தழைக்கப்
        பிள்ளை வேண்டும்
        தாய்மையாகும்  பெண்பிறவி
        யிழிவென்  றாமோ
      தன்னுயிர்க்குப் பால்வேண்டும்
        ஆனால்  பாலைத்
        தருபவர்தாம் இழிஞரெனல்
        முறையோ சொல்வீர்

      வேதமோதும்  பார்ப்பானும்
        வியர்வை சிந்த
        வேளாண்மை  செய்கின்ற
        உழவன்  தானும்
      பேதமில்லாப் பிறப்பாளர்
        ஆத லாலே
        பிதற்றலாக  முணுமுணுக்கும்
        வேதந்  தன்னை
      ஓதுகின்ற  தொழிலைத்தான்
        உழவன்  செய்ய
        உடலுழைப்பைப் பார்ப்பானும்
        செய்ய  லாகும்
      பேதமில்லை  திறமையிலே
        என்ப  தன்றோ
        பெரும்புலவர்  வள்ளுவனார்
        சொல்லின்  நுட்பம்

      மன்பதைக்குத்  தலைமையொன்று
        வேண்டும்  ஆனால்
        மன்னனெனும் அதிகாரம்
        மாற வேண்டும்
      நன்னயமும்  நல்லொழுக்கும்
        உடையார் தம்மை
        நாமமர்த்தித்  துணைபுரியும்
        அதுவே  நன்றாம்
      தென்னையிள  நீர்வேண்டிப்
        பறித்த தேங்காய்
        திறந்தபடி  வாய்க்குள்ளே
        நுழைப்பா  ருண்டோ
      மன்னுமொரு  அதிகாரம்
        நாம்வ  ழங்க
        மறித்தொருவர்  ஆண்பெண்ணாய்
        ஆட்சி  செய்க

முதியோர்4: முற்பிறவி தனிற்செய்த
வினையா லன்றோ
முத்துவினை பாண்டியனார்
நாட்டி லன்று
கற்பின்கனல் கண்ணகியாள்
கணவன் தானும்
கள்வனெனக் கொலைப்பட்டான்
அறிவோ மந்தச்
சொற்படியே அவரவர்க்கும்
உயர்வுந் தாழ்வும்
சொந்தமென அமைதலையார்
தடுக்க வல்லார்
பிற்பிறவி பெருவாழ்வு
பெறுதல் வேண்டின்
பிறப்பின்படித் தொழில்போற்றிச்
செய்தல் வேண்டும்

மோனை: கற்பின்கனல் கணவனவன்
அடைந்த சாவின்
காரணமே முற்பிறவி
விளைவே யென்றால்
முற்பிறவி கோவலனால்
கொலையுண் டான், தன்
முற்பிறவி விளைவைத்தான்
அடைந்தா னந்தச்
சொற்படியே கொலைப்படுவோர்
யாரென் றாலும்
யார்மீதும் கொலைக்குற்றம்
சுமத்த லாமோ
மற்றுமிங்கே யாருக்கு
யாரால் தீங்கு
விளைந்தாலும் வழக்காடல்
தவிர்த்தல் வேண்டும்

      உய்வின்றி  நாள்முழுதும்
        உழைத்து ழைத்தும்
        ஒழியாத வறுமையிலே
        உழல்வார்  தாமும்
      தொய்வகற்றித்  துணிந்தெழுந்து
        புரட்சி செய்யத்
        துணிந்திடாமே  தடுப்பதற்கே
        சொல்லி வைத்தார்
      செய்தொழிலே தெய்வமெனும்
        புரட்டு வாதம்
        செயல்மாற்றி மேல்சாதி
        மக்கள் தாமும்
      மெய்நலிய  உழைக்குமொரு
        தொழிலை யேற்று
        மேன்மைமிகு தெய்வமென
        உழைக்கச்  சொல்வீர்

முதியோன் 5: கல்லுக்குள் வதிகின்ற
தேரை மற்றும்
கனிக்குள்ளே யிருக்கின்ற
வண்டெல் லாமும்
சொல்லிவைத்தாற் போன்றீங்கே
வாழக் கண்டோம்
சொந்தமென அவரவர்க்கும்
கடவுள் தந்தார்
தொல்லையின்றி ஒழுக்கத்தைக்
காத்தல் வேண்டின்
தொடர்ந்துநாம் சாதியினைக்
காத்தல் வேண்டும்
கொல்லையிலே பூமலர்த்தும்
வண்டு மாங்கே
குப்பைமலம் உருட்டுகிற
வண்டு மொன்றோ

மோனை: கனிக்குள்ளும் கல்லிடையும்
வாழு கின்ற
கருவண்டு தேரைக்கெல்லாம்
ஒத்தாற் போல
நனிசிறிதாய் உணவளிக்குங்
கடவுள் தாமும்
நாளடைவில் மாறுகின்ற
நாக ரீக
மனிதர்க்கும் ஒத்தாற்போல்
உணவில் லாது
மாறுபடும் சூழல்ஏன்
வகுத்த ளித்தார்
இனிதாகச் சிலர்வாழ
பலபேர் நாளும்
இன்னலிலே வதைபடவே
ஏன்ப டைத்தார்

      நாற்றத்தை    உருட்டுகிற
        வண்டை  மாற்றி
        நறுந்தேனைத் திரட்டுவித்தல்
        ஒல்லா    தாகும்
      மாற்றங்கள்   குறைந்திருக்கும்
        குரங்கைத்  தானும்
        மனிதனாக வாழ்விக்க
        வழியே  யில்லை
      கூற்றத்தை  விளிக்கின்ற
        வீர னாகக்
        குற்றேவல்  செய்வானையும்
        மாற்றல் ஒல்லும்
      ஏற்றங்கள்  இறக்கங்கள்
        மனித  வாழ்வில்
        இயைகின்ற  சூழலாலே
        அமைதல் கண்டீர்

      தகையாக வாழ்க்கையினை
        ஆக்கு  தற்குத்
        தக்கனதாம்  இனநலமும்
        மனமு  மென்றார்
      வகையாக அமைகின்ற
        சூழல்    தானே
        வாய்ப்பான  இனமாகி
        மனமு  மாகும்
      தொகையாக இவையெண்ணிப்
        பூங்குன்  றன்தான்
        தூற்றுதலும் போற்றுதலும் 
        செய்யே னென்றான்
      மிகையாகப்  பொருள்மாற்றி
        அவன்க  ருத்தை
        மீட்சியிலா விதிப்பயனாய்
        அடக்கி   விட்டார்

      முன்பிறவி  செய்ததொரு
        நன்மை யாலே
        மூதுலகில்  மேன்மையுறல்
        வாழ்தல் தானும்
      இன்னலையே  பிறர்க்கிழைத்த
        கொடுமை யாளர்
        இப்பிறவி    யிழிவுறுதல்
        இகழ்தல்   தானும்
      நன்னயமே   நாடுதலை
        யூக்கிப்    பின்னும்
        நலிவுபிறர்க்    கிழைக்காது
        தடுத்த   லன்றோ
      என்னஇதில்  இழுக்குண்டு
        பூங்குன்  றன்தான்
        எதனாலே இரண்டையுமே
        செய்யே னென்றான்?

      முன்செய்த  வினையாலே
        உயர்வுந் தாழ்வும்
        முளைக்கின்ற தென்றுசொன்னால்
        போற்றல் தூற்றல்
      சின்னதொரு  பிழையுமில்லை
        பிழையே யென்றால்
        சீரழிவுச்  செயல்செய்யத்
        தயங்கல் தானும்
      நன்னயமே   செய்வதிலே
        நாட்டந்   தானும்
        நானிலத்து  மக்கட்கெலாம்
        அற்றுப்   போகும்
      மன்னுபுகழ்ப்  பூங்குன்றன்
        சொன்ன  நுட்பம்
        மாற்றிட்டார்  மதவாதி
        மயங்க  வேண்டாம்

      பட்டங்களும் பதவிகளும்
        பலவாய்ப்  பெற்றுப்
        பகட்டாக வாழும்நிலை
        அடைந்தா ரெல்லாம்
      திட்டமான      தகுதியிலா
        அதனைப் பெற்றார்
        திணறடிக்கும்  வறுமையிலே
        உழல்வார்  தாமும்
      மட்டமான   அறிவினாலா
        துயர்கொள்  கின்றார்
        மன்பதையில் மக்களிடைத்
        தாழ்வு   யர்வும்
      எட்டுகின்ற   சூழலாலே
        இயைவ  தாலே
        எள்ளுதலும் போற்றுதலுஞ்
        செய்யே னென்றான்

      வீதிகூட்டி   குவித்துவைத்த
        குப்பை   மேட்டில்
        வீற்றிருப்போன் உணவாங்கே
        கொள்ளல் போலச்
      சாதிக்கொரு   நீதிசொல்லுஞ்
        சாத்தி   ரத்தைச்
        சரியாகக்  கடைப்பிடித்தல்
        ஒழுக்க   மென்பீர்
      பேதமிலா   தெவரவர்க்கும்
        பொருந்தும் வண்ணம்
        பெருமைமிகு ஒழுக்கத்தை
        அறியீர்   போலும்
      காதலுடன்    நாம்விரும்பும்
        செயலை  மட்டும்
        கற்றபடிப்  பிறர்கிழைத்தல்
        ஒழுக்க   மாகும்

      வாய்மைக்கும்  சால்புக்கும்
        வள்ளுவ வர்தாம்
        வகுத்துரைத்த  இலக்கணத்தை
        எண்ணிப் பார்ப்பீர்
      நோய்செய்யும்  நினைப்பின்றி
        மற்ற    வர்க்கு
        நுவலுங்கால் இயன்றளவும் 
        நன்மை  செய்யும்
      தாய்மைக்குணம்  அதுவொன்றே
        ஒழுக்க   மாகும்
        தாழ்வில்லா வாழ்வுக்கும்  
        அதுவே    போதும்
      ஏய்ப்பதுவே   பிறவிக்கொரு
        ஒழுக்கம்  பேசல்
        ஏமாற்றம்  இனிவேண்டாம்
        புரிந்து    கொள்வீர்

முதியோன் 6: அண்டங்கள் பலகோடி
படைத்த தெய்வம்
அத்தனையும் ஓரொழுங்கில்
இயக்குங் கண்டாய்
எண்ணங்கள் பலவாக
நாமு லைந்தே
எதற்காக வீண்முயற்சி
செய்ய வேண்டும்
மண்ணுலக வாழ்விலாசை
கொள்வோ மானால்
மறுபடியும் பிறவித்துயர்
வந்து சேரும்
நண்ணுகிற எல்லாமும்
நன்மைக் கென்றே
நாமமைதி கொள்ளுதலே
நல்ல தாகும்

மோனை: நோய்நாடி முதல்நாடி
அதுத ணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச்செய்
கென்றார் ஆன்றோர்
காய்கின்ற துயர்க்கெல்லாம்
பொருத்த மாகக்
கடவுளையே முன்னிறுத்தி
வைப்போ மானால்
பாய்கின்ற உணர்ச்சியங்கே
பட்டுப் போகும்
படுகின்ற வேதனைதான்
மரத்து நிற்கும்
தேய்பிறையாய் எளியர்நிலை
தேய்ந்தே போகும்
தெளிவில்லாச் சிந்தனைதான்
மிஞ்சி நிற்கும்

நடந்தனவும் நடப்பனவும்
நன்மை யென்றே
நவில்வாரும் யாரென்றே
எண்ணிப் பார்ப்பீர்
படுந்துயரம் மாற்றும்வழி
என்ன வென்னும்
பகுத்தறிவுச் சிந்தனையைத்
தடுப்ப தற்கே
கொடுமனத்தால் மேலாண்மை
செலுத்து கின்ற
குள்ளநரிக் குணமுடையார்
அதனைச் சொல்வார்
கெடுதலையே நல்லதென
நாம யர்ந்தால்
கீழ்நம்மை யடக்கியவர்
உயர்வார் கண்டீர்
மன்னுயிரைத் தன்னுயிராய்
மதித்த புத்தர்
மனத்திலாசை யடக்குங்கள்
என்று சொன்னார்
மண்ணுலகைத் தமதாக்க
எண்ணங் கொண்டோர்
மற்றவர்க்கே அதைச்சொல்லித்
தாமு யர்ந்தார்
மண்ணுலக வாழ்விலெதும்
நிலையா தென்றே
மண்டுபுகழ் வள்ளுவனார்
சொல்லி வைத்தார்
எண்ணாதே யிவ்வுலக
இன்பம் பற்றி
என்றுசொல்லி ஏழையரை
அடக்கி விட்டார்

      புத்தர்முதல்    இன்றுவரை
        இந்த    நாட்டில்
        புல்முதலாய் உயிர்கள்பால்
        அன்பு    கொண்டு
      மெத்தமனம்  உருகினவர்
        மிகுதி   யுண்டு
        மெய்யான புரட்சி மட்டும்
        தோன்ற  வில்லை
      எத்தனையோ  காரணங்கள்
        சொல்லக்   கூடும்
        என்றாலும்  ஒன்றுதான்முழு
        உண்மை  யாகும்
      பித்தாகும்   அன்புமட்டும்
        போதா    தீங்கே
        பேரறிவாம்  பகுத்தறிவும்
        இணைதல் வேண்டும்

      உறுப்புக்குள்  ஒன்றையொன்று
        தாழ்த்தல்  போல
        உறவுக்கு  வேலிகட்டிப்   
        சாதிப்   பேரால்
      வெறுப்புக்குள் உழல்வாராய்
        மக்கள்   தாமும்
        விதியின்மேற்  பழிபோட்டுக்
        கழித்தார்  நாளை
      செருப்புக்குங் கீழாகத்
        தேயும்   மக்கள்
        சினந்தெழுந்தால்  மேல்கீழும்
        ஒன்றா    யுங்கள்
      இருப்புக்குள்  எதுகுறையும்
        இழிவே  யல்லால்
        ஏனின்னுந்  தயங்குகிறீர்
        புரட்சி செய்ய ?

(தொடரும்)
புலவர் சா.பன்னீர்செல்வம், புதிய புரட்சிக்கவி