(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 5 காட்சி : 4 தொடர்ச்சி)

புதிய புரட்சிக்கவி : களம் : 5 காட்சி : 5
அரண்மனை – அரசனும் அமைச்சனும்
அறுசீர் விருத்தம்

அமைச்சன் : வாடிய முல்லையைக் கண்டே
வாய்த்தநற் றேரங்கே நிறுத்தி
நீடிய புகழ்கொண்ட பாரி
நிறுவிய தமிழ்மரபில் வந்தோய்
கூடிய காதலரைக் கொன்றே
கொடும்பழி ஏற்றிடலும் நன்றோ
தேடிய பெருமையெலாந் தீரத்
திக்கெலாம் பழிவந்து சேரும்

        மனத்தில்        நினைத்தவனை      யன்றி
            மற்றொரு     தெய்வத்தை  வணங்கல்
        இனத்தில்        பிறந்தவர்க்குத்     தாழ்வே
            என்பதால்    அறத்தோடு   நின்றே
        புனத்தில்       தினைகாக்கும்   பெண்ணும்
            போற்றிய     தமிழ்மரபுந்   தீதோ
        கணத்தில்        சினங்காத்த   லன்றோ
            கற்றவர்க்       கேற்பாகுந்  திண்மை

        காவிரிப்        புனல்கொண்டு     சென்ற
            கணவனை       நெடுந்தூரந்   தேடிப்
        பூவிரிக்        கடலோரங்         கொண்டாள்
            பொன்னியாள்  ஆதிமந்தி            என்பாள்
        பாவிரி      மாமதுரை         தன்னில்
            பழியிலன்        கணவனென      நாட்டி
        நாவிரி      யிசைகொண்ட       நங்கை
            நற்றமிழ்க்      கண்ணகியா   ளன்றோ

        காதலே       அகவாழ்வுப்      பண்பாய்க்   
            கண்டவர்     நற்றமிழ         ராவார்
        சாதலே       நேர்ந்தாலும்        நாணஞ்
            சறுக்கிடாத்     தமிழ்ப்பெண்டிர்  வாழ்வில்
        மோதலே       யானாலுங்   கற்பின்
            முனைப்பினில்    பிறழ்வதுவு   மில்லை
        ஆதலால்      தமிழ்காத்த  லன்றோ
            அருந்தமிழ்      மன்னவர்க்கு   மாண்பு

எண்சீர் விருத்தம்

அரசன்: தமிழ்காக்கும் முனைப்பினிலே
தடையேது மில்லை
தமிழ்ப்புலவோர் நிலைகாக்க
மறுப்பேது மில்லை
இமிழ்கடல்சூழ் புவியினுக்கே
உயிராவா னென்றே
இறையாகும் மன்னவரைச்
சொன்னவரும் நல்ல
தமிழ்காத்த புலவர்தாம்
அவ்வுரையுந் தீதோ
அடிமரத்தை நுனியிருந்து
வெட்டுதல்நன் றாமோ
உமிழ்நீராய் மன்னர்குலம்
வீழுமாயின் நாடும்
உருக்குலைந்து நிலைமாறி
அழியுமது நன்றோ

        கல்தோன்றி       மண்தோன்றாக்
            காலத்தின்           முன்னே
            கனத்ததொரு       வாளொடு
            தோன்றியதாம்     என்றே
        வில்கொண்டு      குடிகாக்கும்
            வழிமரபைச்       சொன்னார்
            வியப்பென்ன      அதுதானே
            மெய்யாகும்      மன்னர்
        இல்தோன்றிப்     பழமரபு
            காவாது          விட்டால்
            இழுக்கெல்லாம்       எனக்காகும்
            அதற்கென்ன       மாற்றம்
        அல்தோன்றித்     தமிழ்மரபும்
            அழியாது         காத்தல்
            அதுவன்றோ        மன்னவனின்
            கடனாகும்            சொல்வீர்

அமைச்சன்: எப்பொருளும் யார்யார்வாய்க்
கேட்டாலும் சொல்லின்
மெய்ப்பொருளைக் காண்பதுதான்
முறையாகு மென்றார்
தப்பின்றி உலகியலுஞ்
சீர்மையுற என்றும்
தலைமையது வேண்டுவதே
மறுப்பேது மில்லை
ஒப்பாகும் பிறப்புக்குள்
உறுதியுடன் யாரும்
உயிராகப் புவிகாக்க
வாய்ப்பளித்தல் தானும்
தப்பாகும் என்றெண்ணல்
சரியாமோ ஓர்ந்து
தடுமாற்றந் தனைவிடுத்து
முடிவெடுப்பீர் இன்று

அரசன்: இல்லடைந்து நீர்சொன்ன
இயல்பு மற்றும்
இங்கிருந்து நாமிருவர்
உரைத்த செய்தி
புல்லிருந்து கரைந்திழியும்
பனியைப் போலப்
புலவனவன் உள்ளத்தில்
மறைந்த தென்ன
சொல்காத்தல் அதுதானே
தூயோர் பண்பு
சொற்றமிழைக் கற்றவனதைத்
தள்ள லாமோ
சொல்காக்குந் துணிவில்லான்
நாட்டைக் காக்கச்
சோர்வில்லான் என்றெண்ணல்
சரியோ சொல்வீர்

அமைச்சன்: மிகுநீரை நிறுத்துகின்ற
தடுப்பு மில்லை
மேற்சுழலும் புயலுக்கெதிர்
வலியு மில்லை
உகுநீரால் மக்கள்கொளும்
எழுச்சி தானும்
ஊராள்வோர் சட்டத்தால்
குலைவ தில்லை
தகுநீர்மைத் தமிழ்ப்பற்றுக்
கொண்டோர் முன்னே
தாவிவரும் பகையுமெதிர்
நிற்ற லில்லை
புகுநீர்மைக் காதற்கணை
உள்ளம் மாற்றிப்
புறமோட்டுந் திறனுடையார்
எவரு மில்லை

        தோள்புடைத்து        வாள்சுழற்றும்
            வீரர்               தாமும்
            தோல்தடித்த          எருமைக்கன்
            றுதுள்ளக்           கண்டு
        தாள்துடிக்குங்      கோழைமனம்
            கொண்டோர்        மற்றும்
            தவவலிமை         மிகவுடைய
            முனிவர்         தாமும்
        வாள்மடியுங்         கடைக்கண்ணில்
            நங்கை           காட்டும்
            வளர்காதல்           தனிற்சாய்தல்
            இயற்கை          யாகும்
        நாள்முடியத்         தமிழ்கூறுங்
            கவிஞன்          தானும்
            நங்கையிடந்          தோற்றதிலே
            வியப்பே         யில்லை

        ஊராளுஞ்         செல்வரவர்
            உணவு            கல்வி
            ஒன்றுதானு           மில்லாத
            ஏழை             பேதை
        சீராளும்            பேரறிஞர்
            என்போ           ரெல்லாம்
            சிந்தித்தால்            காதல்நிலை
            ஒப்ப                ரன்றோ
        பேராளுங்            கவிஞனவன்
            சூழல்               மாறப்
            பேரழகாய்            நங்கையினைக்
            கண்ட                தாலே
        ஈராளும்         மனமொப்பிக்
            கொண்ட           காதல்
            இயற்கையன்றி     யிழிவென்று
            கொள்ள           லாமோ?

அரசன்: ஊரெல்லாந் தெருவெல்லாந்
தமிழ்மு ழங்க
உயர்கவிதை படைப்போரின்
பேர்வி ளங்க
சீரெல்லாம் பெற்றுதமிழ்
திசைவி ளங்க
செய்வினைகள் எதிலுங்குறை
வைத்தே னில்லை
பேரெல்லாந் தமிழாக
வேண்டு மென்று
பெருமுயற்சி செய்தவெலாம்
பொய்யென் றாக
யாரெல்லாம் என்னைப்பழி
தூற்று வாரோ
யாதுண்டு பழிதுடைக்க
என் செய் வேன்நான்

        தேனென்றும்      அமுதென்றுஞ்
            சொல்லா          தென்றுந்
            தெவிட்டாச்செந்      தமிழென்று
            மகள்வ           ளர்த்தேன்
        நானென்றும்      நீயென்றும்
            மன்னர்          பல்லோர்
            நாடும்வகை           கலைபலவுங்
            கற்கச்              செய்தேன்
        ஊனென்றும்       உயிரென்றும்
            வளர்த்த         பெண்ணை
            உயிர்நீக்க          இட்டதொரு
            ஆணை         யாலே
        நானென்றும்      பெரும்பழியை
            அடைந்தே         னந்தோ
            நாளைக்கென்      குலந்தழைக்க
            என்செய்         வேன்நான்

        கால்புதையுங்        கழனியெலாஞ்
            செந்நெல்            ஓங்க
            கலைபலவாய்       மக்கள்மனம்
            மகிழ்ச்சி           துள்ள
        வேல்புதையுஞ்        செருக்களத்தில்
            பகைவர்          சாய
            வினைத்திறத்தால்     புகழ்பலவாய்க்
            கொண்டே          னின்று
        நூல்புதையுந்        தமிழ்கூறும்
            புலவன்          தன்னை
            நுங்கைப்போல்        தலைசீவச்
            சொன்ன           தாலே
        தோல்புதையுஞ்        செருப்புக்குங்
            கீழாய்          என்னைத்
            தொடர்ந்துபழி        தூற்றுவரோ
            என்செய்         வேன்நான்

        மலைமுகடு            தன்னிலொரு
            பிளவில்         நீண்ட
            மரக்கிளையில்        தொங்கியதோர்
            அடையு           டைத்துத்
        தலைமுகடு            திகட்டுநறுந்
            தேனைக்          கொண்டோன்
            தடுமாற்றங்          கொண்டுகுடஞ்
            சாய்த்தாற்          போலக்
        கலைமுகடு            கண்டவளாய்
            வளர்த்த         பெண்ணைக்
            கருத்தின்றி         யிழந்திடவுந்
            துணிந்தே            னந்தோ   
        கொலைமுகடு       கண்டவனாய்
            மக்கள்          என்னைக்
            கொடும்பழியே     தூற்றுவரோ
            என் செய்            வேன்நான்

        முதிருலகின்         முன்னேற்றப்
            போக்குக்            கெல்லாம்
            முரணில்லா           தியைகின்ற
            புதுமைப்            பாங்கால்
        முதிரிளமைத்     திறம்வாய்ந்த
            தமிழைப்         பேணும்
            முனைப்பின்றி        வறிதிழக்கும்
            பேதை            யாக
        கதிரொளியாய்த்       தமிழொளிருங்
            கவிஞன்          தன்னைக்
            கற்கண்டுத்          தமிழாக
            வளர்த்த         பெண்ணை
        முதிர்வில்லாச்      சிந்தனையால்
            இழந்தே          னந்தோ
            முடிவில்லாப்        பழிசுமந்தேன்
            என்செய்         வேன்நான்

அமைச்சன்: எற்றென்றே இரங்குவன
செய்யேல் செய்யின்
மற்றன்ன செய்யாமை
நன்றா மென்று

மற்றொன்றே இணையில்லாத்
தமிழைச் சொன்ன
மதிவல்லார் வள்ளுவனார்
உரைத்தா ரன்றோ
கற்றொன்றே உளங்கொண்டு
வழிந டத்தல்
கடனாகும் என்னுமுரையும்
பொய்த்த லாமோ
பற்றொன்றே தமிழ்காத்தல்
என்று கொண்டால்
பாதைமிகத் தெளிவாகும்

குழப்பம் வேண்டாம்

        தேனாக           அல்லநறுந்
            தமிழே           யாகத்
            தீங்குரலாற்         பேசுமொரு
            மங்கை           காட்டு
        மானாக           அல்லமறக்
            கிழத்தி         யாக
            மறவருளம்            கொலுவேற்ற
            நங்கை           வெற்று
        வானாக           அல்லவானின்
            தருவே           யாக
            வழிபட்டார்          நாட்டுமக்கள்
            அந்தச்          செல்வம்
        ஊனாக            மண்பட்டே
            அழிய                லாமோ
            உயிர்ப்பித்தால்     கொண்டபழி
            தீரு                மன்றோ

        பேச்சாக         அல்லதனது
            மூச்சே          யாகப்
            பெருமையுறத்     தமிழ்வளர்த்த
            சான்றோன்            சொல்லின்
        வீச்சாக         அல்லகொள்கை
            முழக்க          மாக
            விழிப்புறுத்துங்        கருத்தெல்லாம்
            உரைப்பான்           தீதை
        ஏச்சாக          அல்லஉள்ளங்
            கொள்ளு          மாறு
            இன்னுரையாய்ச்       சொல்லவல்லான்
            அவனை            வெற்று
        மூச்சாக         உயிர்பறிக்க
            இட்ட                ஆணை
            முறித்துவிட்டால்        கொண்டபழி
            தீரு                மன்றோ

        இலம்தேடி            வருபவர்க்கே
            தமிழைச்         சொல்லி
            இன்புற்று           வாழ்ந்திருந்த
            கவிஞன்          தன்னை
        நலம்பேசி            நாமழைத்து
            வந்தோம்         உண்மை
            நயமாக           மறைத்துவிட
            முயன்றோம்       ஆனால்
        புலம்மாற்றும்       இளவயதின்
            இயற்கை          யீங்கே
            பொய்மைத்திரை        விலக்கியரங்
            கேறிற்          றென்றால்
        நலம்பேணக்           கடன்பட்டோம்
            நாமே                யன்றோ
            நம்மையன்றிப்        பிறர்நோதல்
            பொருத்த         மாமோ?

        கல்லென்றே           நாட்டுமக்கள்    
            எல்லாப்         போதும்
            கட்டுண்டே           கிடப்பரென
            எண்ண            வேண்டாம்
        ஒல்லென்றே       ஆர்ப்பரித்து
            மக்க                ளெல்லாம்
            ஊர்ப்புறத்தே        கூடுகின்ற
            விளைவு          மென்னாம்
        கொல்லென்றே      இட்டதொரு
            ஆணை         யாலே
            குலக்கொழுந்துந்     தமிழ்க்கவியும்
            மாயு                முன்னே
        நில்லென்றே      மாற்றாணை
            இடுக                மன்னா
            நீள்புவியும்            மகிழ்ந்துன்னைப்
            போற்றிக்            கொள்ளும்

        பேராண்மை            தறுகண்மை
            என்ற                சான்றோர்
            பெருவிரக்கம்        ஊராண்மை
            என்றுஞ்         சொன்னார்
        காராண்மை            மன்னவனின்
            அருளே           யென்ற
            கட்டுரையும்         பொய்யாகத்
            தள்ளற்          பாற்றோ
        சீராண்மைத்          தமிழ்க்கவியும்
            இளையாள்         தானும்
            சீர்பெறவே           யிடுகின்ற
            ஆணை         யன்றோ
        பேராண்மை            உமக்காகும்
            நாட்டு          மக்கள்
            பெருவாழ்த்துக்      கூறுவார்கள்
            அய்ய                மில்லை

அரசன்: திடுமென்றே அதிர்வெழுப்பி
மறவர் தம்மின்
திண்தோளைப் புடைப்பிக்கும்
முரசுக் கட்டில்
கொடுமென்றே கேட்கவந்த
புலவர் தாமுங்
கொடுவெயிலுக் கஞ்சிமிக
உறக்கங் கொள்ள
அடுமென்றே வாளோச்சி
விரைந்த மன்னன்
அதிர்வின்றி விசிறியதுந்
தமிழா லன்றோ
தடுமென்றே பழிநீங்கச்
சொன்னீர் நன்றே
தயக்கமிலை மயக்கமெலாந்
தீர்ந்த தாலே

        யாரங்கே         என்தேரைக்
            கொணர்க          வீங்கே
            யாம்விரைந்து        சென்றங்கே
            தமிழைக்         காப்போம்
        போரெங்கே            என்றுதேடி
            உயிரைக்         கொல்லும்
            புன்மையதை       விட்டொழித்து
            மக்க                ளெல்லாம்
        நேரென்றே            கொள்ளுமொரு
            மக்க                ளாட்சி
            நெறியொன்றே      சரியென்று
            கொண்டு          நாளும்
        நேரெங்கள்           உயிருக்குத்
            தமிழே           யென்று
            நெடும்புவியில்      தமிழோசை
            ஓங்கச்          செய்வோம்

        மலரட்டும்           புதியதோர்
            சமூகம்          முந்தை
            மயக்குறுத்தும்      மனப்பான்மை
            தொலைந்து        புரட்சி
        புலரட்டும்          மதத்தாலே
            சாதி                யாலே
            பொழுதெல்லாம்        மக்கள்தமை
            ஏய்க்கப்            பார்ப்போர்
        அலறட்டும்           செந்தமிழைச்
            சிதைக்கும்          பான்மை
            அகிலத்தின்          மெய்ம்மைநிலை
            மறைக்கும்           புன்மை
        விலகட்டும்          விளைவெல்லாம்
            பொதுவென்            றாக
            வியக்குமொரு     புத்துலகந்
            தோற்று          விப்போம்

(தொடரும்)

புலவர் சா.பன்னீர்செல்வம், புதிய புரட்சிக்கவி