(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.71-75 தொடர்ச்சி)

76. முல்லையைக் குறிஞ்சி சார முல்லைமற் றதனைச் சார

எல்லியுண் டாக்கு பாலை யிருமையுஞ் சேரச் சார

மல்லலஞ் செறுவை நெய்தல் மருவிட மருதந் தன்னைப்

புல்லிடக் கழியை யைந்தும் புணரியாப் புறுமாங் காங்கே.

77. அருந்தமி ழகத்தெப் பாலு மமைந்தநா னிலத்தாங் காங்கே

பொருந்திய நடுவண் வானம் புகுதரு மாடக் கோயில்

இருந்தனர் தலைவ ரானா ரினத்தொழில் மக்க ளெல்லாம்

திருந்திய சிற்றா ராங்கண் திகழ்ந்தனர் புறஞ்சூழ்ந் தம்மா.

78. பேரர சதன்கீழ் மூன்று பெருந்திற லரசு மந்தச்

சீரர சதன் கீழ்ச் செங்கோற் றிருவமர் நாடும் நன்னாட்

டாரர சதன்கீழ்ச் சீறூ ரரசுமாங் கமைந்து மக்கட்

சாரர சுரிமை பூண்டு தமிழகம் பொலிந்த தம்மா.

79, எழுநிலை மாட க டத் தியன்றகல் தெருவும் தாங்கி

நழுவிலா வளங்கள் மேவி நல்வழிப் படிவீ டெல்லாம்

வழிவழி பெருகி மக்கள் வாழ்வதற் கேற்ற வாறு

பழமரச் சோலை சூழ்ந்து பசந்திருந் தனசீ ரூரே.

80, இன்னபல் வளத்த தாகி யியற்கையி னியல்பி யாவும்

மன்னிய குறிஞ்சி முல்லை வளமிலி மருத நெய்தல்

அந்நெறி யமைந்த செல்வத் தைந்நிலக் கிழமை தாங்கித்

தன்னிக ரிலாத மேன்மைத் தமிழகம் பொலிந்த தம்மா

குறிப்புகள்

76. இதுவும் ஐந்நிலத்தும் நிகழ்வது. 80. வளமிலி-பாலை.

(தொடரும்)

இராவண காவியம்

புலவர் குழந்தை