(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.4.23-28  தொடர்ச்சி)

  1. ஒழுக்கப் படலம்

கொச்சகம்

       1.     ஒப்பாரு மில்லாத வுலகேத்துந் தமிழ்மக்கள்
             எப்பாலுந் தமக்குரிய வியனெறியாஞ் செயன்முறையிற்
             றப்பாமற் செய்வனவுந் தவிர்வனவுங் கடைப்பிடித்து
             முப்பாலின் படியொழுகி முறைமையொடு வாழ்ந்தனரால்.

       2.     அன்பாகி யருளாகி யறிவாகி யுலகுயிரின்
             முன்பாகி யொளியாகி முதலாகி முடியாத
             இன்பாகி யியல்கின்ற இறைவாழ்த்தி முறைவாழ்ந்தார்
             தன்போலப் பிறவாழ்வு தனைப்பேணும் பழந்தமிழர்.

       3.    பொல்லாரைக் காணினுஞ் செம்பொன் முதலாம்பொருள் சிறிதும்
             இல்லாரைக் காணினுமே யெத்தொழிலுந் தெரியாத
             புல்லாரைக் காணினும் பால்பொருந் தியவாண் பெண்ணிலொரு
             கல்லாரைக் காணாராய்க் கற்றுநல முற்றனரே.

       4.     மனத்தானும் பிறர்பொருளை வௌவாராய் வறியோருக்
             கெனைத்தானுந் தினைத்தேனு மீத்துண்டு தமைச்சூழும்
             இனத்தாரி னினத்தாரா யிடர்காணாப் படிவாழ்ந்தார்
             தனைத்தானே நிகராகுந் தமிழ்த்தாயின் றலைமக்கள்.

       5.     சான்றோரி னுறுதிமொழி தலைக்கொண்டு சான்றோரை
             ஈன்றோரின் படிபேணி யீன்றவிரு மக்களையும்
             சான்றோரென் றுலகேத்தத் தாமாக்கிப் புகழ்பூண்டார்
             வான்றோயு மலையாறு வளஞ்செய்யுந் தமிழ்நாடர்.

       2. பிற - பிறவுயிர்

(தொடரும்)
இராவண காவியம்
புலவர் குழந்தை