(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.5.6-10  தொடர்ச்சி)

           11.    தன்னலமென் னும்பொருளைத் தான்காணா ராய்ச்செய்யும்
                 இன்னலமே யந்நலமா யெந்நலமும் பொதுநலமா
                 நன்னலஞ்செய் தெண்ணியவை நண்ணிநல மன்னினரால்
                 பன்னலமும் பொருந்தியதன் பயன்றுய்க்கும் பழந்தமிழர்.

 12.    முட்டாற்றுப் படவெவரு முயலாமை யெனுங்குறையை
                 விட்டோட்டித் தாளாண்மை வேளாண்மைப் படவாழ்ந்தார்
                 நட்டாற்றுக் கிடைப்படினு நலியாது தமிழ்வளர்க்குங்
                 கொட்டாட்டுப் பாட்டுடைய குலமோங்குங் குணநாடர்.

           13.    அவ்வவர்தம் பிறப்புரிமை யவரெய்தி யவ்வவருக்
                 கவ்வவரே யரசர்களா யவரரசுக் கவரரசாய்
                 அவ்வவர்தம் முதற்கடமை யவ்வவர்செய் தேவாழ்ந்தார்
                 எவ்வளவு மிறைமுறையி னியனெறிமா றாத்தமிழர்.

           14.    கூலியா யிரங்காணங் கொடுக்கினுமே கோலொருவும்
                 போலியா ரெனுமுரையைப் பொய்யாக்கி மெய்ந்நின்றார்
                 வேலியா யிரங்கலநெல் விளைவுயர் மலையிலெழுந்
                 தாலியா வருமொலிய லனைவளற்றுந் தமிழ்நாடர்.

           15.    மண்ணரசு மனையரசும் மற்றையபஃ றொழிலரசும்
                 பெண்ணரசு மாணரசும் பிரியாத பேரரசாய்
                 நண்ணரசு புரிந்தொருங்கு நல்லரச ராய்வாழ்ந்தார்
                 பண்ணரசர் வளர்த்தவிசைப் பாவரசத் தமிழரசர்.

+++

12. முட்டு – குறைவு, இடையூறு. ஆற்றுப்பட – செல்ல. 14. காணம் –
பொன். ஆலித்தல் – ஒலித்தல். ஒலியல் – ஆறு. வளற்றும் – வளஞ்செய்யும்.

++

(தொடரும்)

இராவண காவியம் – புலவர் குழந்தை