(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.5.21- 1.6.2தொடர்ச்சி)

இராவண காவியம்

1. தமிழகக் காண்டம்

6. தாய்மொழிப் படலம்

           3.     இனியசெந் தேனு மினியவான் பாலு

                      மினியதீஞ் சுவைநிறைந் தியலும்

                 கனியதன் சாறுங் கரும்பினின் சாறுங்

                      கனிவரு முதலவின் பருப்பும்

                 இனியவின் சுவையொன் றேயுளங் கேட்டற்

                      கினிமைநம் பாலிலை யென்று

                 கனியவுள் ளுருகிக் கவன்றிட விரங்கிக்

                      கைசெயுங் கனிதமிழ் மொழியே.

           4.     உரப்பியுங் கனைத்து முடிமுத லடிநாக்

                      குழறியுங் குழறியு முயிர்ப்பை

                 நிரப்பியுங் கழுத்தி னெஞ்சினி லிதழை

                      நெகிழ்த்துமுள் ளுயிர்ப்பது வெளியில்

                 வரத்துணை யின்றித் திணறியு மெழுத்தை

                      யொலித்திடும் வருத்தம தின்றிப்

                 பொருத்திய வாயைத் திறக்கவா றைந்தும்

                      புறப்படு மெளியசெந் தமிழே.

           5.     எழுத்தொலி வேறா வொவ்வொரு சொல்லி

                      னிடத்துமவ் வொலிகள்வெவ் வேறா

                 அழுத்தவோர் பொருளா நெகிழ்க்கவோர் பொருளா

                      வவற்றிடை நலியவோர் பொருளா

                 எழுத்தொரு பயனு மின்றியாங் கடுக்கா

                      வினையன வேற்றுமை பலவா

                 வழுப்பட லின்றி யெலாமொரு வகையா

                      வமைந்தது வண்டமிழ் மொழியே.

 6.    அம்முதல் னௌவீ றாகிய வெழுத்தை

                     யறிந்தவ ரெளிதினிற் றாமே

                தம்முறு துணையாத் தடைசிறி தின்றித்

                     தமிழறி வுடையவ ராவர்

                அம்முறை மேலு முயன்றிடிற் புலமை

                     யடைகுவ ரையமின் றிதைப்போற்

                செம்மொழி வேறொன் றுளதெனப் புகல்வோர்

                     தெரிதர வுரைக்கமுன் வருவீர்.

          7.     சொற்றொறும் பொருளின் சிறப்புமப் பொருளிற்

                     சொற்பொருந் துறவமை சிறப்பும்

                சொற்றொட ரமைவின் சிறப்புமத் தொடரிற்

                     சொற்பொரு ளமைதியின் சிறப்பும்

                கற்றொறு முள்ளங் களிக்கவத் தொடரிற்

                     கருத்தமைத் திருக்குநற் சிறப்பும்

                பெற்றுள தமிழ்த்தாய்க் கினியொரு சிறப்புப்

                     பேசுவ தெனதவாப் பெருக்கே.

+++++++++++++++++++++++++++++++++++++++

           3. கைசெய்தல் – உதவுதல்.

+++++++++++++++++++++++++++++++++++++++

(தொடரும்)

இராவண காவியம் – புலவர் குழந்தை