(அகல் விளக்கு – மு.வரதராசனார். 23. தொடர்ச்சி)

அகல் விளக்கு

வந்த வழியில் ஒரு குடிசையிருந்தது. அதன் வாயிலில், ஒரு கிழவனும் கிழவியும் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். கிழவி புகையிலையைக் கிள்ளித் தர, கிழவன் அதை வாங்கி வாயில் வைத்துக் கொண்டு, வலக்கையை நெற்றியருகே வளைத்து என்னை உற்றுப் பார்த்தான். “யார் சாமி போகிறது?” என்றான்.

“இந்த ஊருக்கு வந்தேன். வெளியூர்”.

“யார் வீட்டுக்கு வந்தீர்கள்?”

“சந்திரன் வீட்டுக்கு-அதாவது சாமண்ணா வீட்டுக்கு”.

“அதுதானே நினைச்சேன். மொட்டையம்மா தம்பி பிள்ளை மாதிரி இருக்குதே, அந்தப் பிள்ளைதான் இரண்டு நாளைக்கு முன்னே பட்டணம் போச்சே, இது யாரு என்று பார்த்தேன்.

“சந்திரனைத்தான் பார்க்கலாம் என்று வந்தேன். அவன் இல்லை” என்று சொல்லிக் கொண்டே நகர்ந்தேன்.

கிழவியின் குரல் கேட்டது: “அந்தப் பிள்ளை படிக்கப் போயிருக்குதாம் பட்டணத்துக்கு.”

“போனதே நல்லதுதான். இந்த ஊரில் இருந்தால், கொழுத்துப்போன பெண் கழுதைகள் அதைக் கெடுத்து விடும். அதுவும், பெரிய வீட்டுப் பிள்ளை என்றால் சொல்லத் தேவையில்லை.”

கிழவனின் இந்தப் பேச்சைக் கேட்டு, நின்று மெல்ல நடந்தேன்.

“இன்னுமா அந்தப் பிள்ளையைக் கெடுக்காமல் இருக்கிறார்கள்? உனக்குத் தெரிந்தது இவ்வளவுதான். எல்லோரும் உன்னைப்போல என்னைப் போலப் பயந்து நடப்பார்கள் என்று கனவு காண்கிறாயே?” என்று கிழவி சொன்னதைக் கேட்டுத் திடுக்கிட்டு நின்றேன். அங்கு இருந்த மரத்தில் ஏதோ பறிப்பதுபோல நின்றேன்.

“மொட்டையம்மாவின் தம்பி சாமண்ணா நல்லவர். ஒரு தப்புக்கும் போகமாட்டார். எனக்குத் தெரிந்து இல்லை” என்றான் கிழவன்.

“அப்பன் யோக்கியமா இருந்தால், பிள்ளையும் அப்படி இருக்குதா? அதுதான் உலகத்தில் இல்லையே” என்றாள் அவனுடைய அனுபவம் முதிர்ந்த வாழ்க்கைத் துணைவி.

நிழற்படக் கருவி இருந்தால் அந்தக் கணவனையும் மனைவியையும் அவர்களுடைய கற்புள்ள வாழ்க்கைக்கு இடமாக விளங்கிய அந்தக் குடிசையையும் படம் எடுத்து வைத்துப் பூசை செய்யலாமே என்று எனக்குத் தோன்றியது.

சந்திரனுடைய வாழ்க்கையில் உண்மையாகவே களங்கம் தோன்றிவிட்டதோ என்று வருத்தத்தோடு எண்ணியபடியே நடந்து வந்து ஏரிக்கரையில் பேருந்து நிற்கும் இடத்தில் நின்றேன்.

அந்த ஏரிக்கரையின் அழகும் சாலையின் ஒழுங்கான மரங்களின் எழிலும் என் கண்களைக் கவரவில்லை. ஏரியில் நீர் நிரம்பியிருந்தது. நீர் நிரம்பிய காட்சியைப் பார்க்க வேண்டும் என்று முதல்முறை வந்தபோது என் மனம் ஆசை கொண்டது. அன்று பேருந்து வரும் என்று காத்து நின்றபோது, என் கண் எதிரே அந்த ஏரி நிறைந்த செல்வத்தைக் கண்டேன், ஆயினும் என் மனம் அந்த அழகில் ஈடுபடவில்லை.

நிறைந்த நீரில் கரையோரத்தே வந்து மோதும் அலைகளைக் கண்டேன். என் மனத்திலே சந்திரனுடைய களங்கம் பற்றிய எண்ணங்களே திரும்பத் திரும்ப அலை அலையாக வந்து மோதிக் கொண்டிருந்தன.

மறுபடியும் என் நல்ல மனம் சந்திரனுடைய அறிவையும் அழகையும்பற்றி எண்ணியது. ஒரு கால் அந்தக் கிழவி சொன்னது பொய்யாக இருக்கலாம். கிழவன் அறிவுரையாகச் சொன்ன கருத்தை அவள் மெய்யெனத் திரித்திருக்கலாம். பொதுவாக ஆணும் பெண்ணும் சிறிது நேரம் எங்காவது பேசுவதைப் பார்த்தாலும் அவர்களுக்கு விபசாரப் பட்டம் கட்டித் தூற்றுவது நம் நாட்டு வழக்கம். அதுவும் வேறு செய்திகள் குறைந்த கிராமத்தில் இப்படிப் பழி தூற்றுவது மிகுதி. ஆகையால் சந்திரனைப் பற்றிக் கிழவி சொன்னது நம்பத் தகுந்தது அல்ல. யாரோ சந்தேகப்பட்டுக் கட்டிவிட்ட கதையைக் கேட்டுக் கொண்டு வந்து அவள் கிழவனிடம் சொன்னாள் என்று எண்ணினேன்.

கிழக்கே ஊர்ப்பக்கம் திரும்பி நோக்கினேன், ஏரி நீர் சலசல என்று பல வாய்க்கால்கள் வழியாக ஓடி வயல்களில் பாய்ந்து கொண்டிருந்தது. ஒரு வாய்க்கால் ஓரமாக அரளிச் செடிகள் அடர்ந்து வளர்ந்திருந்தன. பச்சைப் பசேலென்று இலைகளுக்கு இடையே அதே நிறமான விதைகள் பல இருந்தன. உச்சியில் கொத்துக் கொத்தாகப் பூத்திருந்த செந்நிறப் பூக்கள் என் கண்களைக் கவர்ந்தன. கீழே இறங்கிச் சென்று ஒரு பெரிய மலர்க்கொத்தைப் பறித்தேன். சில இலைகளும் சேர்ந்து வந்தன. அதை எடுத்துக் கொண்டு கரைமேல் வந்து நின்றேன். பூக்களின் அழகும் மணமும் இன்பமாக இருந்தன.

கூர்மையான முனைகளோடு நீண்டிருந்த இலைகளால் ஒரு பயனும் காணோமே என்று எண்ணினேன். இவ்வளவு அழகான பூக்களுக்கு வரும் சத்து இலைகளுக்கும் வருகிறது. ஆனாலும் இலைகளில் மணம் இல்லை: அழகும் இல்லை. அதனால் இலைகளைப் போற்றுவாரும் இல்லை என்று எண்ணிக் கொண்டே, ஓர் இலையை ஒடித்து முகர்ந்தேன். அதிலிருந்து கசிந்த பால் மூக்கில் ஒட்டிக் கொண்டது. அரளி விதை பொல்லாதது, நஞ்சு உடையது என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். இலையின் பாலும் பழமும் ஏதாவது தீமை செய்யுமோ என்று அஞ்சி மறுபடியும் கீழே இறங்கி வாய்க்காலில் நீரை எடுத்து மூக்கை நன்றாக உள்ளும் புறமும் தேய்த்துக் கழுவிக் கொண்டு வந்தேன். இலைகளை எல்லாம் ஒடித்துப் போட்டுவிட்டு, மலர்களை மட்டும் வைத்துக் கொண்டேன். கீழே உதிர்ந்த அந்த நீண்ட இலைகளை நோக்கினேன்.

“உங்களுக்கு ஒருவகை மதிப்பும் இல்லையா? பயனும் இல்லையா? ஐயோ! மலர்களோடு பிறந்தும், மலர்கள் பிறப்பதற்குக் காரணமாக இருந்தும், உங்களுக்கு வாழ்வு இல்லையே!” என்று எண்ணினேன். மேற்கே வேலத்து மலையின் சிகரம் சிவலிங்கம் போல் வானளாவி நிமிர்ந்து நின்றது. அதன் அடியில்தான் தாழை ஓடை இருந்தது. சந்திரனும் நானும் அங்கே போய்வந்த இன்ப நாள் நினைவுக்கு வந்தது. அந்தத் தாழை மரங்களை நினைத்தேன். தாழை மரத்திலும் பூக்கள் மட்டுமே மதிப்புப் பெறுகின்றன. முள் நிறைந்த அதன் இலைகளை யார் மதிக்கிறார்கள்? அந்த இலைகள்தான் உழைத்துக் காற்றையும் ஒளியையும் மண்ணின் சத்தையும் நீரையும் உட்கொண்டு மலர்களை உண்டாக்கித் தருகின்றன. ஆயினும் அந்த முள் இலைகளை எவரும் போற்றுவதில்லை. அரளி இலைகளை நின்ற இடத்திலேயே எறிந்தேன். தாழையின் இலைகளை அப்படி எறிவதிலும் துன்பம் உண்டு. நம் காலிலும் படாமல், பிறர் காலிலும் படாமல் அவற்றை எறிய வேண்டும். ஆனால் பூக்களோ மணம் நிறைந்த பூக்கள், அவற்றின் மணத்திற்கு நிகர் ஏது?

இவ்வாறு பல எண்ணிக் கொண்டிருந்தபோது ஆங்கில ஆசிரியர் பைரன் என்னும் ஆங்கிலப் புலவரைப்பற்றி வகுப்பில் கேட்டது நினைவுக்கு வந்தது. பைரனுடைய பாட்டுகளை மட்டுமே எடுத்து நுகர வேண்டுமாம்; அந்தக் கவிஞனுடைய வாழ்க்கைச் செய்திகளை மறந்தொழிக்க வேண்டுமாம்; அவை பயனற்ற நாகரிகமும் அற்ற – மதிப்புக்கு உரியனவல்லாத – செய்திகளாம். உடனே, மனிதரிலும் தாழைபோல், அரளி போல் சிலர் உள்ளனர் என்ற உண்மை விளங்கியது. சந்திரனுடைய அறிவும் அழகும் தவிர, அவனுடைய வாழ்க்கையில் நல்லவை வேறு இல்லை என்று எண்ணினேன்.

கீழிருந்து ஒரு நறுமணம் வந்ததை உணர்ந்தேன். என் இடக்கைப் பக்கம் ஒரு பனைமரத்தின் அடியில் துளசிச்செடி ஒன்று இருந்தது. அதன் மணம்தான் என்று உணர்ந்தேன். அந்தச் செடி அவ்வளவு அழகாகத் தோன்றவில்லை. அதனிடம் கவர்ச்சியான மலர்களும் இல்லை. மலர்களுக்கும் இலைகளுக்கும் நிறத்திலும் அவ்வளவாக வேறுபாடு இல்லை. ஆனால் துளசிமலர்கள் போலவே துளசி இலைகளும் நறுமணம் வீசும் சிறப்பு ஒரு புதுமை என உணர்ந்தேன். குனிந்து ஒரு காம்பை ஒடித்து முகர்ந்தேன். அந்த நறுமணம் மலர்களின் மணமா, இலைகளின் மணமா என்று பகுத்துணர முடியவில்லை. எதைக் கிள்ளி எறிவது, ஏன் கிள்ளி எறிவது என்று வியந்தேன். என்னை அறியாமல், அந்தக் கிளையில் இலை இல்லாத குச்சியை ஒடித்து மூக்கின் அருகே கொண்டு சென்றேன். அது வெறுங் குச்சி: இலை, பூ ஒன்றும் இல்லை. ஆனாலும் துளசியில் அருமையான நறுமணம் வீசியது. ஒருகால் இலைகளைத் தொட்ட என் விரல்களில் இருந்த நறுமணமோ என்று விரல்களை நன்றாக வேட்டியில் துடைத்து அந்தக் குச்சியை மறுபடியும் மூக்கின் அருகே கொண்டு சென்றேன். முன் போல் நறுமணம் கமழவே, துளசிக் குச்சிக்கும், நறுமணம் இருத்தலைத் தெளிந்தேன். என் வியப்பு மிகுந்தது.

அதற்குள் சோழசிங்கபுரத்திலிருந்து பேருந்து வரவே, ஏறி உட்கார்ந்தேன். பேருந்து ஏறியபோது, அரளிப்பூக் கொத்தை எறிந்துவிட்டுத் துளசியை மட்டும் கையோடு எடுத்துக் கொண்டேன். பேருந்திலும் பழைய எண்ணமே தொடர்ந்து வந்தது. அரளியையும் தாழையையும் படைத்த இறைவனே துளசி போல் எல்லாம் நறுமணம் கமழும் செடியையும் படைத்திருக்கின்றான் என்று எண்ணினேன். புலவர் பைரனைப்போல் நண்பன் சந்திரனைப்போல் ஒரு பகுதி மட்டும் மணம் கமழ்ந்து மற்றப் பகுதியெல்லாம் வெறுத்து ஒதுக்கத்தக்க வகையில் வாழும் வாழ்வைவிடத் துளசி போல் வாழும் தூய எளிய வாழ்வு நல்வாழ்வு என்று எண்ணினேன். அந்த வாழ்வு அடக்கமான வாழ்வாக இருந்தாலும், உள்ளும் புறமும் ஒரே வகையாக மணம் கமழும் நல்ல வாழ்வு அல்லவா?

பேருந்து  வாலாசா (இரயில்) நிலையத்தைக் கடந்து இலுப்பை மரங்கள் அடர்ந்த சாலை வழியாக வந்து கொண்டிருந்தது. அந்த இலுப்பை மரங்களின் அடியில் நானும் சந்திரனும் உட்கார்ந்து, சென்ற ஆண்டில் பல நாட்கள் மாலைக் காலத்தில் தரையில் கோடுகள் கிழித்துக் கணக்குப் போட்டது நினைவுக்கு வந்தது. சந்திரன் எவ்வளவு உதவியாக இருந்தான்! அவனுடைய வாழ்வில் என்ன குறை கண்டோம்? யாரோ சொல்லக்கேட்டு அதை நம்பி அவனைப் பழித்து எண்ணலாமா? பைரனுடைய வாழ்வோடு ஒன்றாகச் சேர்க்கலாமா? அவ்வாறு எண்ணக் கூடாது. எண்ணியது குற்றம் என்று உணர்ந்தபடியே பேருந்தைவிட்டு இறங்கினேன்.

(தொடரும்)

 முனைவர் மு.வரதராசனார், அகல்விளக்கு