அறிவுக்கதைகள்நூறு – கி. ஆ. பெ. விசுவநாதம்: 13-15
(அறிவுக்கதைகள் நூறு – கி. ஆ. பெ. விசுவநாதம்: 10 -12-தொடர்ச்சி)
அறிவுக்கதைகள் நூறு
13. திருடனை விரட்டிய கழுதை
நாயை வளர்த்தான் வண்ணான். துணிகளைத் திருடாமல் காவல் காத்துவந்தது அது. ஒரு சமயம் திருட வந்தவனைக் கண்டு குலைத்தது. வீட்டுக்கார வண்ணான் விழித்துக் கொள்ளவே, வந்த திருடன் ஓடிப்போய் விட்டான். இதனால் நாயைக் கண்டு பெரிதும் மகிழ்ச்சியடைந்தான். இப்படியிருக்க.
சில நாட்களுக்குப் பின்,
வேறொரு திருடன் துணிமணிகளைத் திருட வந்தான். நாய் அங்கு இல்லை. திருடனைப் பார்த்த கழுதை சத்தம் போட ஆரம்பித்தது.
வண்ணான் எழுந்தான்; தடியை எடுத்து வந்தான். “பகலெல்லாம் உழைத்து இரவிலே தூங்குகிற என்னைத் தூங்கவிடாமல் கத்தித் தொந்தரவு படுத்துகிறாயே! இது சரியா?” என்று, அடித்து நொறுக்கினான். இதிலிருந்து ஒருவர் வேலையை மற்றொருவர் செய்யக் கூடாது என்று தெரியவருகிறது.
சில வேலைகளைச் சிலர் தான் செய்யவேண்டும் ; அந்த வேலையை மற்றவர் செய்யக்கூடாது என்பது உண்மைதானே!
———
14. அபாயமும் உபாயமும்!
வேற்றூர்க்குப் பயணமாக நடந்து கொண்டிருக்கிறான் ஒருவன். வழியிலே பாழ் மண்டபம். அதில் இரண்டொரு தூண்கள் விழுந்தும் உடைந்தும், மண்டபத்திலே கருங்கற்கள் சில சிதைந்தும், சிதறியும் கிடந்தன.
அதைக் கண்டதும், வழிப்போக்கன், ‘இதன் உள்ளே நுழைந்து சென்றால் நம்முயிர்க்கு ஆபத்து; மண்டபத்தின் கருங்கற்கள் நம் தலைமீது விழுந்துவிடும்’ இவ்வாறு சற்று நேரம் சிந்தித்தான் சுற்று முற்றும் பார்த்தான்.
மண்டபத்தைச் சுற்றி ஒற்றையடிப் பாதை இருந்தது. அதிலே நடந்து சென்றான். இருள் கவ்வும் நேரம், செடி கொடிகள் நடுவே படுத்திருந்த பாம்பை அவன் மிதிக்கவே, அது கடித்தது; கீழே விழுந்தான்; உயிர் துடித்தது.
அப்போது ‘அவன் : நினைப்பு’
“அபாயம் வரும் என்று நம்பி ஒர் உபாயம் தேடினேன். உபாயம் தேடிய வழியிலேயே அபாயம் வந்தது. சிறிதும் சிந்திக்காமல், மண்டபத்தைக் கடந்து வந்திருக்கலாம்; இந்த அபாயமும் வந்திராது மண்டபமும் நிலைத்து நின்று கொண்டிருக்கிறது. இதற்கு ஒரு உபாயம் தேடியதுதான் தவறு.”
அதிகமாகச் சிந்தித்து – உபாயம் தேடியதே – அபாயமாய் முடிந்தது. இம்மாதிரி அனுபவம் தம் வாழ்க்கையில் பலருக்கு நேரிடுவதுண்டு. என் செய்வது? ‘அளவுக்கு மீறிய யோசனைகளால் ஆபத்து வருவது உண்டு’ – என்பதற்கு இதுவும் ஒரு சான்று.
———
15. இரு கிளிகள்
இரண்டு கிளிகளை ஒருவன் மிகச் செல்லமாக வளர்த்தான். தீனி கொடுப்பான்; சுதந்திரமாகப் பறக்க விடுவான். அவையும் பறந்து திரிந்து, அவனது கூண்டுக்கே திரும்பி வந்து தங்கிக்கொள்ளும்.
அவை இப்படி வளருங்காலத்திலே, ஒருநாள் வெளியே பறந்தபோது ஒரு வேடனின் வலையிலே சிக்கிக் கொண்டன. அவ் வேடன் அவ்விரண்டையும் தனித் தனியே இருவரிடம் விற்றுவிட்டான்.
வளர்த்த பாசத்தினாலே – பல நாட்கள் – அவன் – கிளிகளை வளர்த்தவன் – எங்கெங்கோ அலைந்து தேடிக் கொண்டேயிருந்தான்.
கடைசியாக ஒருநாள், தங்கி இளைப்பாறிப் போகலாம் என்று ஒர் ஆசிரமத்தின் உள்ளே நுழைந்த போது – தான் வளர்த்துக் காணாதுபோன பச்சைக்கிளிகளில் ஒன்று, ஆசிரமத்தின் கூண்டில் அடைப்பட்டிருப்பதைக் கண்டான். கண்டதும் தனது கிளியே என மகிழ்ச்சியுடன் பார்த்தான்.” அது “வாருங்க சாமி, வாருங்கோ, வந்து உட்காருங்க. ஆகாரம் என்ன சாப்பிடு நீங்க? சில நாள் ஆசிரமத்தில் தங்கிப் போங்க” – என்று சொல்லியது. தான் வளர்த்த கிளி ஆசிரமத்திலே சந்நியாசிகள் பேசும் சொற்களையே திருப்பிச் சொல்கிறது என்று எண்ணி மிகவும் களித்தான்.
மற்றொரு கிளியும் எங்கே என்று தேடிக் கண்டுபிடித்து, இதையும் சேர்த்து வாங்கிப் போகலாம் என்று அதையும் தேடினான்
சற்று தூரம் சென்றபின் அங்கே ஒரு கசாப்புக் கடையில் கிளி இருந்தது; அது தன் கிளியா எனப்பார்க்கப் போனான்.
இவனைக் கண்டதும் கிளி,
“வா ஐயா, வா, ஆட்டுக்கறி வேணுமா? – கோழிக்கறி வேணுமா? ஆட்டுக்கறி 5 பணம், கோழிக்கறி 6 பணம்; வெட்டு, கொத்து” என்றது.
அதுவும் தான் வளர்த்த கிளிதான் என்று தெரிந்து கொண்டான்.
அவனுக்குச் சிந்தனை –
“ஒரே தாய் வயிற்றிற் பிறந்து, ஒரே ஆண்டிலே வளர்ந்த இரண்டு கிளிகள், இப்படி மாறுபட்டும் வேறுபட்டும் பேசுவதேன்?” என.
கடைசியாக, அவரவருடைய அறிவு திறமை, சொல், செயல் எல்லாம் அவரவர்களின் சுற்றுச்சார்புக்கும் சூழ்நிலைக்கும் ஏற்பவே அமைகிறது என்பதைக் கண்டு, மனமுடைந்து திரும்பினான்.
எப்படி – ஆசிரமத்தில் வாழ்ந்த கிளி?
எப்படி – கசாப்புக் கடையில் வாழ்ந்த கிளி?
இதனைக் கண்ட பின்பேனும், மக்களாய்ப் பிறந்தவர்கள் சுற்றுச்சார்புக்கும் சூழ்நிலைக்கும் அடிமைப்பட்டு விடாமல் வாழ்வதே நல்லது.
000
(தொடரும்)
–முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்,
அறிவுக்கதைகள் நூறு
Leave a Reply