அறிவுக்கதைகள் நூறு – ரு. அரசு – அரசியல் : கி.ஆ.பெ.விசுவநாதம் : 59-61

(அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 56-58-தொடர்ச்சி)
அறிவுக்கதைகள் நூறு
ரு. அரசு – அரசியல்
59. யார் தவறு?
படிப்பறிவில்லாதவர் சட்டசபைத் தேர்தலில் நின்றார். வெற்றி பெற்றார். மந்திரியாகவும் ஆனார்.
அந்த ஊர்ப் பொதுமக்கள் மிகவும் மகிழ்ந்தனர் தங்கள் பள்ளிக்கூடக் கட்டடத் திறப்பு விழாவிற்கு அவரை அழைத்தார்கள். அவரும் இசைந்துவிட்டார். ஆனால் அங்கே என்ன பேசுவது என்பது தெரியவில்லை.
தன் செயலரைக் கூப்பிட்டார்; பேசவேண்டிய பேச்சு – கேட்டுத் தெரிந்துகொண்டார்.
திறப்பு விழா மண்டபத்தே –
“இது ஒரு நல்ல பணி; இது போன்ற கட்டடங்கள் இன்னும் பல கட்டியாக வேண்டும். இதிலே படிக்கின்ற மாணவர்கள் தொகை, மேலும் அதிக அளவில் பெருகி யாக வேண்டும் என்று நானும் வாழ்த்துகின்றேன். பெரு மக்களும் இது பெருகவேண்டுமென்று வாழ்த்துச் சொல்வார்கள்” என்றார். அவருக்கும் மகிழ்ச்சி, கூடியிருந்த எல்லாருக்கும் மகிழ்ச்சி
இதற்கு அடுத்த நாள் பக்கத்து ஊரிலே புதுக் கட்டடம் – சிறைச்சாலைக்காக கட்டப்பட்டுத் திறப்பு
விழாவுக்கு எதிர்பார்த்திருந்தது. மாவட்ட ஆட்சியாளர். மந்திரியைத் திறப்புவிழாவுக்கு அழைத்தார். அமைச்சரின் செயலாளர் அப்போது ஊரில் இல்லை. வெளியூர்
போயிருந்தார். அதனால் என்ன?
அமைச்சர் நினைத்தார், நமக்குக் கட்டடம் திறந்து வைக்கிற பழக்கம் இருக்கிறதே என மகிழ்ச்சி. சிறைச்சாலைக் கட்டடத் திறப்பு விழா – அங்கே அந்நேரத்திற்கு வந்தார்; மேடை ஏறினார் . பேச ஆரம்பித்தார்; “இது ஒரு நல்ல பணி. இம்மாதிரிக் கட்டடங்கள் இன்னும் பல பெருக வேண்டும். பலபேர் விரும்பி இங்கு வந்து தங்கியிருக்க வேண்டும். மேலும் இது ஓங்கி வளர்க – “என்று பேசி முடித்தார்.
– அவ்வளவு தான். மாவட்ட ஆட்சியாளருக்கு, என்ன செய்வதென்றே” தெரியவில்லை.
அவரும் விழித்தார்; அமைச்சரும் விழித்தார். அன்று மாலை, ஊர் மக்கள் எல்லாரும் கூடினர்பேசினர்.
“இது அமைச்சர் தவறல்ல –
அவருக்கு வாக்கு போட்டவர்களின் தவறு.” – என்று கூறி விருத்தம் தெரிவித்துக் கொண்டனர்.
————–
60. பெரியாரும் இராசாசியும்
ஐம்பத்தைந்து ஆண்டுகட்கு முன், ஈரோட்டில் பெரியார் மாளிகையின் மாடியிலே ஒருநாள் உண்டியல் காசுகளை எண்ணிக் கொண்டிருந்தேன் நான்.
பெரியார் குடியரசு பத்திரிகைக்கு ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். அந் நேரம், அவர்கள் வீட்டுப் பையன் மாடி ஏறி வந்து, ஐயாவிடம், ‘இராசாசி வந்திருக்கிறார்’ என்று சொன்னான்.
உடனே பெரியார், தன் சால்வையை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு, கீழே இறங்கி ஒடோடிச் சென்று வணங்கி, அவரை மேலே அழைத்துவந்தார்.
‘ஏது தலைவர் இவ்வளவு தூரம்’ என்று கேட்டார் பெரியார்.
‘காரணம் இருக்கிறது’ என்று சொல்லிக் கொண்டே, தம் ஒரக்கண்களால் இராசாசி என்னைப் பார்த்தார்.
இக் குறிப்பை உணர்ந்த பெரியார். “அவர் நம்ம ஆள்தான். செய்தியைத் தாராளமாக சொல்லலாம் என்றார்.
அவர் (இராசாசி), “ஒரு சந்தேகம்; உங்களிடம் சொல்லி ஆலோசனை பெற வந்தேன்” என்றார்.
உடனே பெரியார்,
“சந்தேகமா – தலைவர்க்கா?”
“ஆலோசனையா – அதுவும் என்னிடமா?”
– என்று அடுக்கினார்.
“ஆமாம் நாயக்கரே, உம்மிடந்தான் – அது கேட்க வந்தேன்” என்று ஒரு சங்கதியைச் சொல்லி, “இதற்கு என்ன செய்யலாம் – என்று ஆலோசனை கேட்டார்,
“எனக்கும் கூடச் சிக்கலாகத்தான் தோன்றியது”பெரியார் ஒரு விநாடிகூடச் சிந்திக்காமல்,
“இப்படிச் செய்தால் என்ன?” என்றார். அதற்கு அவர்.
அதை நானுல் யோசித்தேன் நாயக்கரே. அப்படிச் செய்தால், பொதுசனங்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்? – என்று திரும்பக் கேட்டார்.
அதற்குப் பெரியார் பொது சனங்கள் – என்ற சொல்லை மற்றவர்கள் யாரும் சொல்லலாம்; தாங்களும் நானும் (அதை) நினைக்கலாமா?” – என்று கேட்டார்.
உடனே இராசாசி – அப்ப சரி என்று எழுந்து போய்விட்டார்
இந்த உரையாடலின் கருத்து – எனக்குப் பெரு வியப்பை உண்டுபண்ணியது.
– தங்களைத் தவிர வேறு எவரும் பொது சனம் என்று இல்லை – தங்களின் கருத்துத்தான் – பொதுசன வாக்கு – நாம்தான் பொதுசனங்களை உண்டாக்கு வின்றோம் – என்பது அதன் முடிவு. –
அதுதான், நான் கற்றுக்கொண்ட அரசியலின் முதல் பாடம்.
———–
61. இந்தி புகுத்தும் கதை – இட்லி, சட்னி, வேட்டி சட்டை
1982இல் தமிழக மந்திரி சபையில் இராசாசி அவர்கள் முதல்வராக இருந்தபோது, இந்தி கட்டாயப் பாடம் ஆக்கப்பட்டது. அதற்குத் தமிழ்நாடு முழுதும் கொதித்து எழுந்து பெரும் போராட்டம் நடைபெற்றது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தினால் பெரியார் பல்லாரிச் சிறையில் இருந்தார். அதை நடத்தவேண்டிய முழுப் பொறுப்பும் நான் ஏற்கவேண்டி நேர்ந்தது.
சட்டசபையில், இராசாசி ஒருநாள். ‘தமிழ் என்றால் இட்லி; இந்தி என்றால் சட்னி; இரண்டையும் கலந்து சாப்பிடுவதுதான் நல்லது’ என்றார்.
மற்றொருநாள், “தமிழ் என்றால் வேட்டி; இந்தி என்றால் சட்டை இரண்டையும் போட்டுக் கொள்வது தான் தமிழ் மக்களுக்கு நல்லது” என்றும் கூறினார்.
அடுத்த நாள் திருவல்லிக்கேணியில் பெரிய கூட்டம் – மக்கள் திரண்டு நின்றனர்.
அந்த உவமைகளைப் பற்றி மேடையில் நான் எழுந்து,
“சட்னி இல்லாமலே இட்லியைச் சாப்பிட்டாலும் சாப்பிடலாம்; இட்லியே இல்லாத போது சட்னியை எப்படி, சாப்பிடுவது?” – என்றும்
“சட்டை இல்லாமல் வேட்டியைக் கட்டிக்கொண்டு வீதியில் போகலாம்; ஆனால் வேட்டி இல்லாமல் சட்டையை மட்டும் போட்டுக்கொண்டு வீதியில் எப்படி நடப்பது? – என்றும் கூறினேன்.
அதன் பிறகு –
அதிலிருந்து இராசாசி அவர்கள் இந்த உவமைகள் கூறுவதை விட்டுவிட்டார்,
அந்த இராசாசி அவர்களே –
1965 – திருச்சிராப்பள்ளியில் நான் கூட்டிய இந்தி எதிர்ப்பு மாநாட்டில் வந்து கலந்துகொண்டு, பலமாக இந்தியை எதிர்த்துப் பேசினார். அது நாட்டில் பெரும் வியப்பை உண்டாக்கியது.
————-
(தொடரும்)
முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்,
அறிவுக்கதைகள் நூறு
Leave a Reply