தலைப்பு-ஆனந்தமாகிறாள், செந்திவேலு : thalaippu_aananthmaakiraal_senthivelu

ஆனந்தமாகிறாள் 

 பல் வரிசை தப்பினது அவளுக்கு மிக அழகாகவே அமைந்து போயிருந்தது. இவளை மாதிரித் ‘தெத்துப்பல்’தான் அந்தப் புகழ்மிகு திரைப்பட நடிகைக்கும் கூட தனிப்பட்ட  தன்மையாய் அமைந்துள்ளது என எண்ணிக் கொண்டவன் அதை நேரிடையாய் அவளிடமே சொன்னதும் பெரிய கலவரமாகித்தான் போனது. இருந்தும் அப்போது அதை  மகிழ்ச்சியாகவே எதிர் கொண்டவன் இப்போது எல்லாம்  நிரம்பவும் மாறித்தான் போயிருந்தான்.

நந்தினி !

  ஆனந்தனின் வம்புக்கு ஆளானவள், ஆசைப்பட்டவள். இப்போது அவள் எதிராய் நடந்து வந்தாள் என்றால் பார்வையைத் திருப்பிக் கொள்வது அவன் வழக்கமாகவே ஆகியிருந்தது.

    அன்றும் கூட அப்படித்தான். திரும்பிக் கொண்டு நடந்தவனை அவள்தான் பேரைச் சொல்லிக் கூப்பிட்டாள். திரும்பினான் அவன். நெடுநாளைக்கு அப்பறமாய் நந்தினியின் பார்வை நேரிடையாகத் தன் மீது விழுவதைக் கண்டவனுக்கு உள்ளுக்குள் ஒரு வித  மகிழ்ச்சியும் ஈர்ப்பும் எல்லாமும் ஆகக் கூடிக் கொண்டது.

      ‘மன்னித்துவிடு’ என்றாள் அவள். கிட்டத்தட்ட சில  வருடங்களுக்கு முந்தி நடந்தவற்றிற்கு.

    காதில் வாங்காதவனாய் ஆனந்தன் அவளை உற்றுக் கவனித்தபடி நின்றான். உப்பித் தெரிந்த அவளது அரைவயிற்றையும்கூட அப்போது அவன் கண்கள் அளக்கத் தவறவில்லை.

   அவள் தான் பேச்செடுத்தாள் ‘எந்தப் பெண்ணையும் பிடிக்கவில்லைஎன்று சொல்கிறாயாமே? உங்கள் அம்மா சொல்லி அழுகிறது”

      ‘உன்னண்டையா வந்து சொல்லியது ?”

      ‘இல்ல. அப்பனண்டை வந்து சொன்னது, நான் கேட்டேன்”

   ‘உன்கிட்ட எதுவும் பேசவில்லையா?” ஆனந்தன் இப்படிக் கேட்டதில் உள்ளுற ஒருவித எதிர்பார்ப்பு அடங்கிக் கிடப்பது நொடியில் புலப்பட்டுப் போனது அவளுக்கு.

      தான் மன்னிக்க வேண்டிக் கேட்டது கூட காலாவதியாகிப்போன ஒன்றாக ஆனந்தன் எண்ணிக் கொண்டுவிட்டான் என்று தோன்றியது நந்தினிக்கு. கேட்டதை அவன் துளியும் சட்டை பண்ணாமல் விட்டாலும் அவளுக்கோ அந்தப் பழைய ஞாபகங்கள் ஒரு போதும் வராமல் இருந்ததில்லை.

      பள்ளிக்கூடத்தில் அந்தப் பருவக்குணம் வேலைசெய்யத் தொடங்கிய காலமது.  நகருக்குப் போய்ப் பேருந்து நிலையம் ஒட்டியிருக்கும் புத்தகக் கடையின் முன்னால் ஓரிரு மணி நேரத்திற்கு மேலாய்ப் பயமும் தயக்கமுமாய் நின்றிருந்து ஒரு வழியாய்த் துணிவை வரவழைத்து வாங்கிய  கீழ்மை(ப்பாலுணர்வு)ப் புத்தகங்கள்  அனைத்தையும் பரணியில் ஏறி ஒளித்து வைத்திருந்து அவ்வப்போது களவாக எடுத்து வாசிப்பதை ஒரு பழக்கமாகவே வைத்திருந்தான் ஆனந்தன். அவ்வப்போது அவன் படித்து முடித்திருந்த புத்தகங்களைப் பள்ளிக்கு எடுத்துச் சென்று நண்பர்களுக்குச் சுழற்சி முறையில் வாசிக்கக் கொடுப்பதையும் வழக்கப்படுத்தி வைத்திருந்தான். இதனாலேயே  உடன்மாணவர்கள் மத்தியில் ‘காதல்பித்தன்” எனப் பேரெடுத்துப் புகழ்கொண்டிருந்தான். அப்போது பத்தாவது படித்துக் கொண்டிருந்த இவனுக்கு மேல்வகுப்பு படிக்கும் நந்தினியின் மீது ஒருவிதமான ஈர்ப்பு உண்டாகிப் போனது.  பள்ளிக்குப் போகும் வழியில் அவளைப் பின்தொடர்ந்து போவதும் வருவதுமாக இருந்தவன் திடீரென ஒருநாள் வழிமறித்து அப்படிக் கேட்டது ஊர் முழுவதுமாய் பரவிவிட்டது. நந்தினியின் அப்பா  செய்தியைத் தலைமையாசிரியர்வரை கொண்டு சென்றுவிட ஆனந்தன் ஒரு வாரமாய்ப் பள்ளிக்கு மட்டம் போட்டு விட்டுத் தலைமறைவாகிப் போனான். அச்சமயத்தில் பாலுணர்வுப் புத்தகமும் கையுமாய் மாணவனொருவன் ஆசிரியரிடம் மாட்டிக் கொள்ள, ஆனந்தனின் பாடு மேலும் சிக்கலாகிப் போனது.  உடன் மாணவர்களைக் கெடுப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு வீடுவரை செய்தியும் கசிந்து வந்து விட்டது.

  இதனோடு இன்னொரு  செய்தியும் பூதகாரப்படுத்தப்பட்டுவிட்டது. இதனால் ஏற்பட்ட கசப்பான விவாதங்களுக்குப் பின்னர் ஆனந்தனின் குடும்பத்திற்கும் நந்தினியின் குடும்பத்திற்கும் இடையில் பேச்சே அறுந்து போய்விட்டது. அந்த நேரத்தில் சுற்றித்திரிந்தவன் பள்ளிக்கு முன்னால் நின்றபடி     ‘ படத்துக்குப் போகலாமா?’ என்று மட்டுந்தான் நந்தினியிடம் கேட்டான். அவன் அப்படிக் கேட்டதை உடன் வந்த சில மாணவிகள்தான் பெரிதுப்படுத்தியும் பரப்பியும் விட்டிருந்தனர். நந்தினியோ, தந்தை மேற்கொண்ட விசாரணையில், ஆனந்தன் கேட்டது உண்மைதான் என ஒப்புக் கொண்டதைத் தவிர வேறெதும் புகார் சொல்லவில்லை. ஆனந்தனுக்குப் படிப்பு தடைப்பட்டுப் போனது. நினைத்து நினைத்து வருந்தியவள் ஆனந்தனிடம் பேச முனைந்து அளாவினாள். சந்திப்பின் சமயம் அவளுக்குள்ளாகவே ஓர் மாற்றமும் உண்டானது. எல்லாம் எல்லாமுமாய் அது கூடக் கூட வளர்ந்து பின்னமாய் வளர்த்த அப்பன் கெஞ்சி உருகியதில் வாடியும் வருகியும் கூடாமலே போனது.

      நந்தினியின் வீட்டிற்கு எப்போதுமில்லாத வகையில் சிலர் அவளின் தகப்பனாரிடம் வந்து வந்து பேசிப் போய் கொண்டிருந்தனர். கிசுகிசுத்துப் பேசிய அவர்களுக்கிடையிலான உரையாடல்கள் ஓரிரு வாரத்துக்குள்ளாகவே கலகலவென உரக்கப் பேசுமளவில் மாறிப்போன போது கேட்டதும் அதிர்ந்தேதான் போனாள் நந்தினி. மனம் கலவரத்திற்கு உள்ளாகிப் போனது. பலவாறு  சிந்தித்துப் பார்த்தாள். பின் ஒரு வழியாய் ஆனந்தனின் அம்மாவைப் போய் பார்ப்பதென்ற முடிவுக்கு வந்தாள்.

      பார்த்தாள் ?

      நந்தினியைப் பெண் பார்க்க எல்லோருமாய்க் கூட்டமாய் வந்திருந்தனர். ஆனந்தனின் அம்மா தரையில் கிடத்தியிருந்த விரிப்பிலும் நாற்காலியிலும் எல்லோரையும் அமரும்படி சொல்லிக் கொண்டிருந்தது அறைக்குள் இருக்கும் நந்தினிக்கு நன்றாகவே கேட்டது. நிச்சயமாய் ஆனந்தனும் உடன் வந்திருப்பான் என நினைத்துக் கொண்டாள்.

     ‘பெண்ணை அவைக்கு வரச்சொல்லுங்கள் ‘ சத்தமாகச் சொன்னார் ஒருவர்.

    கேட்டதும் அறைக்குள் ஓடிய பெண்மணிகள் சீக்கிரம், சீக்கிரம்… எனச் சொல்லி நந்தினியின் அருகிலாய் நின்று கொண்டிருந்தவர்களை அவசரப்படுத்தினார்கள்.

      “சேலையே இன்னும் கட்டவில்லை. … பொறுங்கள்” என்றாள் ஒருத்தி.

      “ஏய் ….  ஆண்கள் சத்தம் போடுகிறார்கள்.. மசமசஎன்று நிற்காமல் சீக்கிரமாகக் கூட்டிக் கொண்டு வாருங்களடி” மீண்டும் வந்து சொன்னாள் இன்னொரு பெண்.

      “சத்தம் போட்டால் எல்லாம் ஒன்றும் நடக்காது. அவசரப்பட்டால் நான்தான் வரவேண்டும் .. வரவா?” பொண்ணுக்கு உடனாய் நின்றவளில் ஒருத்தி இப்படிச் சொன்னதும் எல்லாரும் கெக்கை போட்டு சிரிக்க ஆரம்பித்தனர்.

      அவசரப்படுத்தியவள், “உம் புருசனிடம் கேட்கிறேன்” என்றாள் பதிலுக்கு.

     “கேளுங்க(ள்)அத்தை … நல்லாக் கேளுங்க.(ள்).. சரி என்று சொல்வான் … வந்து என்னைக்  கூட்டிக் கொண்டு போங்க(ள்)” நக்கல் பேச்சு பதிலாய் வந்து விழுந்ததில் அவ்விடம் முழுவதும் சிரிப்பலைகளால்  ஆரவாரமானது. ஒருவழியாய் சிங்காரப்படுத்தி முடித்து எழவைத்து நந்தினியை அழைத்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறினர். புதுப் பெண்ணாய்  அவையில் வந்து நின்ற நந்தினி எல்லோருக்குமாய் வணக்கம் வைத்தாலும் கூட, அவள் பார்வை என்னவோ ஆனந்தனின் அம்மாவை நோக்கிய படிதான் இருந்தது. அவளும் நந்தினியைப் பார்த்தபடி புன்முறுவலிட்டு மெலிதாக ஒரு சிரிப்பு வைத்தாள். இவ்விருவருக்குமான  கமுக்கச் சந்திப்பு ஆனந்தனின் அம்மாவுக்கு வந்து நிழலாடிப் போனது.

   மாப்பிள்ளையாய்த் தனியென நாற்காலியில் அமர்ந்திருந்தவனைச் சுற்றி நின்ற கூட்டம் உசுப்பேற்றி விட்டுக் கொண்டிருந்தது. ஆனந்தனின் அம்மாவுக்கு ஒன்றுவிட்ட சகோதரி மகன் தான் மாப்பிள்ளை பையனாய் உட்கார்ந்து இருந்தான். திருச்சிராப்பள்ளிக்குப் பக்கத்தில் வேலையில் இருக்கிறவன் அவ்வப்போது இடையிடையே ஊருக்கு வருவான். வளர்ந்த பிறகு எல்லோரிடமும் மரியாதையாகத்தான் அவன் பழகுவான் என்றாலும் ஒரு பழக்கத்தை மட்டும் அவனால் மாற்றிக் கொள்ள இயலவில்லை.

   அவனுக்கு இளநீர் என்றால் அவ்வளவு  விருப்பம். ஊருக்கு வந்து விட்டதுமாய் எல்லோரது தென்னை மரங்களைப்பற்றித்தான் ஆனந்தனிடம் விசாரிப்பான். அத்துடன் அவனைக் கூட்டிக் கொண்டு போய் நோட்டமிட்டும் வருவான். ஆளிலில்லாத நேரமாய்ப் பார்த்து  இலாகவமாய் மரத்தில் ஏறிக் கையிலும் வாயிலுமாய் இளநீர் கொத்தைக் கவ்விக் கொண்டு இறங்குவதில் பலே ஆள்தான் அவன் என்பது அவனது வயதை ஒத்தவர்களுக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும் மரமேற கிளம்புகையில் ஆனந்தனை மட்டும்தான் கூட்டிக் கொண்டு போவான். அன்றும் கூட அப்படித்தான். நந்தினியின் வீட்டுத் தோப்பில் அவன் மரத்தில் ஏறியிருந்த சமயமாய் அவளது அப்பா திடீரெனத் தோட்டத்துக்குள் வந்து விடக் கீழ் நின்றிருந்த ஆனந்தன் கவனித்து விட்டான். மரத்திலிருந்தவனிடம் சொல்லிக் கொள்ளாமல் ஆனந்தன் நழுவிப் போய் விட இளநீருடன் இறங்கியவன் மாட்டிக் கொண்டு விட்டான். அவனைப்பற்றிய விவரங்களை நந்தினியின் அப்பா கேட்டறிந்தார். அதன் பின்னர்தான் அப்படியொரு முடிவு எடுத்;து நந்தினியை அவனுக்குப் பேசியும் முடித்தார். இப்படி அமையுமென கனவிலும் நினைத்திராத நந்தினிக்கு அப்பா மேற்கொண்ட பேச்சுகளைக் கேட்டதும் திக்கென ஆகிவிட்டது. இருந்தும்  ஒன்றும் சொல்ல இயலாமல் திணறியவள், அதன் பின்னர்தான் ஆனந்தனின் அம்மாவைக் கமுக்கமாய்ப்போய்த் தனியாகப் பார்த்தாள்.

   ஆனந்தன் தன்னை விரும்புவதாக ஊருக்குள் பலரிடம் சொல்லியிருந்ததை வெளிப்படுத்தியவள், யாருமில்லாத ஒரு சமயமாய் வீட்டுக் கொல்லைப்புறத்தில் மறைந்திருந்து தன் கையைப் பற்றியிழுத்ததையும்கூடச் சொல்லத் தவறவில்லை.

      அவள் சொன்னதைக் கேட்டதும் தூக்கி வாரிப் போட்டது ஆனந்தனின் அம்மாவுக்கு ‘அம்மாடி இதை  மனத்தில் போட்டு  வைத்துக்காத ஆத்தா பேசின கல்யாணம் நல்லா நடக்கட்டும். என்னிடம் சொன்னமாதிரி யாரிடமும் சொல்லி விடாாத ஆத்தா”

      ”மனத்தில் பட்டது அதனால்தான் சொன்னேன்”

    “அதனால் ஒன்றுமில்லை. நீ கட்டிக்கப் போகிறவனும் எம்பிள்ளைதான்…ஆத்தா மனத்தைக் குழப்பிக்காத… அந்தப் பயலை நான் கண்டிக்கிறேன்.”

     “அதெல்லாம் ஒன்றும் வேண்டாம்”

     “ஏன் பயப்படுகிறாய்? நானாச்சு… ஆத்தா”

   “இல்லை … உங்கள் பிள்ளையை எனக்கும் பிடித்திருக்கு” நந்தினி இப்படியாய்த் தலையில் இடியிறக்குவாள் என கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ஆனந்தனின் அம்மாவுக்குத் தலை கிறுகிறுத்துச் சுற்றிவிட்டது. ‘நீ அவனுக்கு மூன்று வருடம் மூப்பு என்று தெரியாதா என்ன? சரிப்படாது.. ஆத்தா,  பெண்பிள்ளைகள் நாமதான் மனத்தை அடக்கி  வைத்துக்க வேண்டும்.ஆத்தா ஆத்தாமாதிரிச் சொல்கிறேன்.  சிவனே என்றிருந்து எல்லாவற்றையும் மறந்துவிடு”

     “தம்பிக்காரனை நினைத்துவிட்டேன். அண்ணனுக்குக் கழுத்தை  நீட்டச் சொல்கிறீர்களா?”

      “யாருக்குத் தெரியும் நீ நினைத்தது? எல்லாஞ் சரியாப் போய்விடும் … கொஞ்ச நாளில் நீ எப்படி மாறிப் புருசனும் குடும்பமுமா இருப்ப என்று பாரு”

      ஆனந்தனின் அம்மா சொல் கேட்டுத்தான் நந்தினியும் கூட அப்படியே நடந்தாள். ஆனாலும் அந்தப் பெரிய மனுசி சொன்னதுதான் எதுவும் நடவாமலே மாறிப் போனது. கல்யாணம் கட்டிய கொஞ்ச நாளில் நந்தினி கருப்பிடிக்கவும், கட்டியவனைக் காலன் கண்டெடுத்துப் போகவும்… எல்லாமும் மாறிப் போனது.

   இப்போது அவளுக்கு நாலு மாதம் கடந்து விட்டதில் வயிறு கூட அளவாகத் தான் பெருத்துயிருந்தது.

    ஆனந்தன் பேச்சினூடே தன்னைக் கண் கொண்டு அளப்பதை நந்தினியும் கவனிக்கத் தவறவில்லை. தன் உடலமைப்பில் உண்டாகியிருக்கும் உருவாகியிருக்கும் மாற்றத்தை ஆனந்தன் நன்கு அறிய வேண்டுமென்ற நோக்கில் அவளும் அருகிலாய் எட்டெடுத்து வைத்து வந்து நின்றாள். ஆனந்தனுக்கு மனம் மென்மேலுமாய் கனத்துப் போனது.

    “அம்மா உன்னிடம் பேசவே இல்லையா?”  நந்தினியிடம் மீண்டுமாய்க் கேட்டான் அவன்.

    “இல்லை” சொல்லாமலே தலையைத்தான் ஆட்டினாள் அவள்.

  “நான் உன்னைக் கட்டிக்கிறேன் என்று சொல்லச் சொன்னேன்… சொல்ல வில்லையா?” ஆனந்தன், நேரடியாய் பளிச்சென இப்படிக் கேட்டது உள்ளுற நந்தினிக்குப் புதுமாதிரியான  மகிழ்ச்சியை ஏற்படுத்தத்தான் செய்தது. இருந்தும் காட்டிக் கொள்ளாமல் இயல்பு நிலைமாறாமல் நிதானமாகவேதான் பேசினாள் “எனக்குப் பிறக்கும் பிள்ளைக்கு உன்னண்ணன் பேரைத்தான் வைக்க வேண்டுமென்று உங்கம்மா சொன்னது”

    “அதிருக்கட்டும் … கேட்டதற்குச் சொல்லு” கொஞ்சமாய்க் கோபம் கொப்பளித்து விட்டது அவனுக்கு. பதில் சொல்லவில்லை அவள். ஆனந்தனிடமிருந்து வெளிப்பட்ட கோபத்தை இரசித்தவளாய் நகர்ந்து போகலானாள்.

     ஆனந்தன் விடவில்லை பின் தொடர்ந்தான். யோசனை மறந்தவனாய் ‘நில்லு” வெனக் கத்தியவன் நந்தினியின் தோளைப் பிடித்து நிறுத்தினான். நந்தினி அதிர்ந்துபோய்த் திரும்பினாள். சுற்றுமுற்றுமாய்ப் பார்வையைப் பரப்பினாள்.

      ‘நீ இல்லாமல் வாழமாட்டேன் என்று எங்கையைப் பிடித்து அப்ப சொன்னதான நந்தினி” ஆனந்தன் அழுத்தமாகவே கேட்டான். பதிலில்லை அவளிடம்.

    அவனோ விடுவதாயில்லை ‘நந்தினி’ என்றான். வார்த்தை அதிர்ந்து விழுந்தது. கிளம்ப முனைந்தவள் திரும்பிப்  பார்த்தாள். ஆனந்தன் பெருமூச்சுவிட்டுச் சொன்னான். “நீ சொன்னது படி நடக்கவில்லை… நான் சொன்னது படி செய்கிறேன் பார்” என்று.

     நந்தினிக்குக் கண்ணீர் கொப்பளித்து வழிந்து விட்டது. ஆனந்தனையும் இழக்க நேரிட்டு விடுமோ என்ற பயம் உள்ளுககுள் தொற்றிக் கொண்டு விட விறுவிறுஎன்று வீடு நோக்கி நடையை நீட்டினாள்.

        திண்ணையில் அமர்ந்து செய்தித்தாளைப் புரட்டிக் கொண்டிருந்த நந்தினியின் அப்பா தூரத்தில் அவளைக் கண்டதுமாய்  அதிர்ந்தே தான் போனார். எழுந்து நின்றவரின் கைகள் நடுநடுங்கிட செய்தித்தாள் தரையில் விழுந்து பரந்து விரிந்தது. அவருக்கு வார்த்தை எழவில்லை. நந்தினியின் கழுத்தில் தொங்கிய மஞ்சள் கயிற்றை வைத்தகண் மாறாது பார்த்த வண்ணமே அசைவற்று நின்றார் அவர்.

  முதல்முறையாக நந்தினிக்கும் கூட அப்போதுதான் தைரியம் வந்தேறியிருந்தது. ‘ஆனந்தன் தான் இப்படிச் செய்தான்” என்று சொன்னாள், பொய்யாக.

ஆ.செந்திவேலு

மானுடம்-ஏப்.சூன் 2016 : பக்கங்கள் 43-47

அட்டை-மானுடம் : attai_manudam