(இராவண காவியம்: பாயிரம்: தமிழ்த்தாய் 11-15 தொடர்ச்சி)

இராவண காவியம்: பாயிரம் 16-20

16.ஒருது ளிகடு வுண்ணினும் பால் கெடும்

பொருளை யாய்ந்தயற் புன்மையைப் போக்கியே

பெருமை வாழ்வு பெறுதற் கவாவியே

வருத னித்தமிழ் மக்களைப் போற்றுவாம்.

புலவர்


17.பலது றைத்தமிழ்ப் பாட்டு முரையுஞ்செய்

துலக மின்புற வோதியுந் தாய்மொழிக்

கலகி லாததொண்டாற்றிய முத்தமிழ்ப்

புலவர் பொன்னடிப் போதை வணங்குவாம்.


18.மூப்பி யன்றநம் முன்னவர் வாழ்விய

லாப்ப யின்ற வொழுக்க மனைத்தையும்

யாப்பி யற்படி நூல்செய் தனித்ததொல்

காப்பி யப்பெரி யாரைக் கருதுவாம்.

வேறு


19.இக்கதைக் கடிப்படை யிவைக ளாமென

அக்கறை யொடுதமிழாய்ந்து கண்டுமே

தக்கசெந் தமிழ்வளர் தந்தை தாயராம்

ஒக்கலைத் தமிழ்வள ருளத்தி ருத்துவாம்.

அரசர்-வேறு

20.மலையுங் காடும் வயலுங் கடலுமா

முலக நான்கு முறுவளந் தேங்கிய

நிலைய மாக நிகழ்த்திய நானிலத்

தலைவர் பொற்கழல் தம்மை வழுத்துவாம்.

(தொடரும்)

இராவண காவியம்

புலவர் குழந்தை