(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 66 : சாதி ஏது?-தொடர்ச்சி)

          முரடர் சிலர்அம் மீனவன் முகத்தில்       

          குருதி சிதறக் குத்தினர்; மயக்குறக்        185

          கட்டவிழ்த் தேகினர்அக் கருணை மாந்தர்;

சுட்டாற் செம்பொன் கெட்டா போகும்?

முட்டாள் தடுக்க முற்படின் பயணம்

தொட்டார் குறியிடம் விட்டொழி வாரோ?       

          மயங்கினன் கிடக்கும் மகன்றனை வளர்த்தவன்     190

          புயங்களிற் சுமந்து தன்மனை புகுந்தனன்;    

—————————————————————

          தேலா – தோற்காத, வேட்டம் – வேட்டை, கோடு – கொம்பு, முட்டாள் – முள்தாள்.   

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

          வயங்கிழை நல்லாள் வாய்விட் டலறித்

`துரும்பும் படாஅவகை விரும்பி வளர்த்தேன்

குறும்பர் இவ்வணம் கொடுந்துயர்ப் படுத்தவோ?   

          அந்தோ அந்தோ’என் றழுவோள் முன்னர்        195

          நொந்துழல் உடலினன் நுண்ணிதின் உயிர்க்கக்

கண்ணீர் மல்கிக் கசிந்துளம் உருகிப்

புண்ணீர் துடைத்துப் பொருந்திய மருந்திட்

டாற்றி, `என்துயர் ஆற்றினை மகனே!    

          ஏற்றுள இப்பணி இனிமேல் வேண்டா    200

          நமக்கேன் ஊர்ப்பகை? நல்லது கெட்டது

சுமப்பவர் நாமே! சொல்வது கேள்’எனத்

மீனவன் உணர்ச்சி மொழி

          `தாயே வரைத்தேன் தாம்பெற முயலுநர்

ஈயின் தாக்குதல் ஏற்பதும் வேண்டும்;   

          குலவுநன் முத்துக் குளிப்பவர் கடல்மிசை       205

          அலைவரல் காணலும் அடங்கவோர் இல்லை;

தேனும் முத்தும் மானும்நம் செந்தமிழ்;

யானும் அதனை நயந்துளேன் ஆதலின்

அலைக்கும் ஈக்கும் அஞ்சேன், என்பணி

          நிலைக்கும் வெல்லும் நீமனங் கலங்கேல்’       210

          எனவாங்கு

உரைத்திவன் இருக்க ஊர்க்குறு மாக்கள்       

          துரைத்தனம் செய்தனர் தொல்லைகள் தந்தனர்;

வளர்த்தவர் அவற்றால் வாடி வதங்கினர்;       

          இடுக்கண் இவர்க்குறல் என்னா லன்றோ?       215

          துடுக்கர் புன்செயல் தொலைவதெந் நாளோ?

          விடுத்திவ் வூரின் வெளிப்படல் நன்றென,       

—————————————————————

          படாஅவகை – படாமல், வரை – மலை, குறுமாக்கள் – தீயவர், துரைத்தனம் – அதிகாரம்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

          ஈண்டிய இருளில் எவர்கணும் படாவணம்

பாண்டிநன் னாட்டுப் பழம்பெரும் மூதூர்       

          கூடல் நகரினைக் குறுகினன் சென்று    220

          பாடல் சான்றஅவ் வையைப் பதியுள்

ஓவியத் திறனும் உயர்இசைத் திறனும்

காவியப் புலமும் காட்டி நல்லோர்

          யாவரும் நயந்திட மேவினன் அவனே.    204

—————————————————————

          புலம் – அறிவு.

++++++++++++++++++++++++++++++++++++++++++++

 (தொடரும்)