(வெருளி நோய்கள் 1266 -1270 :  தொடர்ச்சி)

திருப்புளி குறித்த வரம்பற்ற பேரச்சம் திருப்புளி வெருளி.

திருப்புளியைக் கவனக் குறைவாக ஒரு முறை பயன்படுத்தி அதனால்  காயம் வந்ததை எண்ணி அல்லது பிறர் அவ்வாறு கையாண்டு காயம் உற்றதைப் பார்த்து எப்பொழுதும் தேவையற்ற பேரளவு அச்சம் கொள்வோர் உள்ளனர்.

Katsavidi என்னும் கிரேக்கச் சொல்லிற்குத் திருப்புளி எனப் பொருள்.

00

திருமண உரையர் (wedding speakers) குறித்த வரம்பற்ற பேரச்சம் திருமண உரையர் வெருளி.

மதச்சார்புத் திருமணங்கள், தேவாலயம் முதலியவற்றில் நடக்கும் பொழுது திருமணம் நடத்தி வைத்து உரையாற்றுபவர் நீண்ட நேரம் பேசுவது எரிச்சலைத் தந்து திருமண உரை என்றாலே வெறுப்பு கொள்வோர் உள்ளனர். நேரம் வீணாகப்போகிறது என்று கவலைப்பட்டு வெறுப்பவர்களும் உண்டு. தமிழர் தமிழ்த்திருமண முறையில் திருமணம் நிகழ்த்துநரும் வாழ்த்துநரும் உரையாற்றுகின்றனர். மறுமலர்ச்சிக்கும் தன்மான எழுச்சிக்கும் உந்துதலாக இவ்வுரை அமைகிறது. எனினும் அரசியல் கலக்கும் வாழ்த்துரைகளை விரும்பாதவர்கள் இவ்வுரைகள் மீதும் உரையாற்றுநர் மீதும் பேரச்சம் கொள்கின்றனர்.

00

திருமணம் குறித்த தேவையற்ற அச்சமே திருமண வெருளி.

சிலர் தாங்கள் மண வாழ்க்கைக்குத் தகுதியற்றவர் எனக் கருதுவதாலும் தங்களுக்குரிய சில பழக்க வழக்கங்கள் மண வாழ்க்கையில் ஈடுபடும் தகுதியை இழக்கச்செய்துள்ளது என அஞ்சுவதாலும் சிலர் துறவு வாழ்க்கை அல்லது தனி வாழ்க்கையை விரும்புவதாலும் இல்லற உறவைச் சிலர் இழிவாகக் கருதுவதாலும் இத்தகையோருக்குத் திருமணம் மீது வெறுப்பும் அதனால் அச்சமும் வருகின்றன. சிலருக்குத் தற்பாலுறவில் ஏற்படும் நாட்டமும் திருமண வாழ்க்கை குறித்து அச்சத்தை ஏற்படுத்தலாம்.

திருமண வெறுப்பு குறித்துச் சந்திரோதயம் திரைப்படத்தில் வாலி எழுதிய பின்வருமாறு உள்ள பாடல் போல் எண்ணுவோர் உள்ளனர்.

கெட்டி மேளம் கொட்டு(கி)ற கல்யாணம்

தங்கத் தாலி கட்டு(கி)ற கல்யாணம்

பூ விலங்கு மாட்டு(கி)ற கல்யாணம்

என்ன கல்யாணமடி கல்யாணம்

என்ன கல்யாணமடி கல்யாணம்

…..               ……              …..

அந்தக் கோணங்கிக்கும் பூங்கொடிக்கும்

கல்யாணமாம் கல்யாணம்

…..               ……              …..

வண்ண மயில்களுக்கும் மந்திகளுக்கும்

கல்யாணமாம் கல்யாணம்

கலியாணம் என்பதும் தமிழ்ச்சொல்லே. கலி = ஆரவாரம், பெருக்கு, செருக்கு, தழைத்தல், மகிழ்ச்சி; யாணம் = அழகு; கலியாணம் =  நன்னிகழ்ச்சி, மகிழ்வூட்டும் செயல், விழா. பேச்சு வழக்கில் கல்யாணம் என்கின்றனர்.

‘gamo’ என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் திருமணம்.  

இஃது ஒருவகையில் தனியர் வெருளி(Anuptaphobia)க்கு எதிரானதே! 

00

திருமணப் பங்கேற்பு குறித்த வரம்பற்ற பேரச்சம் திருமணப் பங்கேற்பு வெருளி.

திருமணத்தில் கருத்து மாறுபாடு உள்ள உறவினர்களையோ நண்பர்களையோ சந்திக்க நேரும் என்று அஞ்சல், மொய் அல்லது அன்பளிப்பு குறைந்த மதிப்பு உள்ளது என ஏளனமாகப் பார்க்கப்படுமோ என்ற கவலை, அல்லது சற்றுக் கூடுதலாக மொய்யோ அன்பளிப்போ வழங்கிச் செலவுத்தொகை கட்டுப்படாமல் போகுமோ என்ற கவலை, குடும்பத்தில் திருமணமாகாப் பிள்ளைகள் இருந்தால், அவர்கள் திருமணம்பற்றிக் கேட்பார்களே என்ற எரிச்சல், மணமகன் அல்லது மணமகள் மட்டுமே தெரிந்திருந்தால் எவ்வாறு பங்கேற்பது என்ற கவலை போன்றவற்றால் தேவையற்ற வரம்பு மீறிய பேரச்சம் கொள்கின்றனர்.

Pantreia என்னும் கிரேக்கச் சொல்லிற்குத் திருமணம் எனப் பொருள்.

00

திருமறை(Bible) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் திருமறை வெருளி.

 பைபிள் எழுத்தொலிப்பில் விவிலி என்றாகி அம் விகுதி சேர்த்து விவிலியம் எனப்படுகிறது. எனவே, விவிலியம் என்பது தமிழ்ச்சொல்லன்று. பைபிள் என்றால் கிரேக்கத்தில் நூல் எனப் பொருள். சிறப்பிக்க இதனைத் திரு நூல் எனலாம். எனினும் மறைநூல் என்பதைச் சமயத்துடன் தொடர்பு படுத்திக் கூறுவதா் கிறித்துவ மறை நூலைத் திரு மறை எனலாம்.

00