(நாலடி நல்கும் நன்னெறி 25 : சமயங்கள் வெவ்வேறு: உணர்த்தும் நெறி ஒன்றே! – தொடர்ச்சி)

உறுபுனல் தந்துலகூட்டி அறுமிடத்தும்
கல்லூற்றுழியூறும் ஆறேபோல்; – செல்வம்
பலர்க்காற்றிக் கெட்டுலந்தக் கண்ணும் சிலர்க்காற்றிச்
செய்வர் செயற்பாலவை.

பொருளுரை:

மழைக்காலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து வருவதால் மிகுதியான நீரை உலகமக்களுக்குக் கொடுத்து  உண்பிக்கும் ஆறு. கோடைக்காலத்தில் நீரற்றுபோனாலும்   ஊற்றுக்குழியைத் தோண்டுவோருக்கு, நீர்சுரந்து உதவிசெய்யும். இத்தகைய ஆற்றைப்போலப், பெரியோர் தம்செல்வத்தைப் பலருக்கும் கொடுத்து உதவுவர். அவர்கள் வறுமை நேரிட்டாலும்  தம்மால் இயலும் அளவு பிறர்க்கு உதவி செய்வர். வறுமையிலும் பிறருக்குத்தரும் பெருமையை நாம் கொள்வோம்.

பதவுரை

 உறுபுனல்= (மழைக்காலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிவரும்) மிகுதியான நீர்; தந்து= கொடுத்து; உலகூட்டி  = உலகினருக்கு ஊட்டி, அஃதாவது உண்பித்து; அறுமிடத்தும்= வறண்டு நீர் அற்ற காலத்திலும்;  கல்லூற்றுழி= தோண்டும் ஊற்றினிலே; ஊறும்= நீர் சுரக்கும், அஃதாவது நீரைச் சுரந்து சிலருக்கேனும் உதவுகின்ற; ஆறே போல்= ஆற்றைப்போல்; செல்வம்= பெரியோர்த ம்மிடம் உள்ள பொருளை; பலர்க்கு ஆற்றி=பலருக்கும் கொடுத்து உதவி; கெட்டு உலந்தக் கண்ணும்= நிலைமை கெட்டுப் பொருள் இல்லாது ஒழிந்த பின்னும்; சிலர்க்காற்றி=இயன்ற வரையில் சிலருக்கேனும் உதவி; செயற்பாலவை= செய்யக் கூடியவற்றை;செய்வர்=செய்வார்கள்.

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே

செல்லும் வாய்எல்லாஞ் செயல்.   (திருக்குறள், ௩௰௩- 33)

என்கிறார் திருவள்ளுவர்.

முடியக்கூடிய இடங்களில் எல்லாம் அறச்செயல் புரிய வேண்டும். முடியாதபோதும் வாய்ப்புள்ள வழியில் எல்லாம் அறச்செயல் செய்யவேண்டும் என வலியுறுத்துகிறது இக்குறள். பணம் கொடுப்பது மட்டும்தான் அறவினைஅல்ல.  பிறருக்குத் துன்பம் நேரும்பொழுது அதைத் துடைக்கிற எல்லாச் செயலும் அறம்தான். பிறருக்கு உதவி தேவைப்படும்பொழுது நம்மால் முடியக்கூடிய வழிகளில் உதவ வேண்டும்.

கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி என்னும் வேந்தர்    

தமக்கென முயலா நோன்தாள்,

பிறர்க்கென முயலுநர் உண்மையானே.

என்கிறார்.

உலகம் எதனால் இயங்குகிறது என வினா தொடுத்து, பிறருக்கு உதவுவதற்காக முயலும் பெரும்பண்பினராலேயே உலகம் இயங்குகிறது என்கிறார். இவர்கள் தாம்வாழவேண்டும் என்பதற்காக முயற்சி மேற்கொள்பவர்கள் அல்லர். பிறர் வாழவேண்டும் என்பதற்காக முயற்சி மேற்கொள்பவர்கள்.

ஒளவையாரும் இதனையே கூறுகிறார்.

“ஆற்றுப்பெருக்கற்றடிசுடு மந்நாளு மவ்வாறு

ஊற்றுப்பெருக்கால் உலகூட்டும்-ஏற்றவர்க்கு

நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார்ஆனாலும்

இல்லை யெனமாட்டார் இசைந்து”(நல்வழி பாடல்: 9)

என்கிறார் அவர்.

ஆற்றில் நீர்ப்பெருக்கின்றி வற்றிப் போனாலும் உலகுக்கு ஊட்ட ஊற்றின்மூலம் நீரைவழங்கும். அதைப்போல் நற்குடிப்பிறந்தோர் வறுமையுற்றாலும் தம்மை நாடிவருவோருக்கு இல்லை என்று சொல்லமாட்டார்கள்.

உயர்நிலை தாழ்நிலை என எந்நிலைவந்தாலும் தங்கடமைகளைச் செய்தலே பெரியோர் இயல்பாகும். சிறியோர்  தம் செல்வப்பெருக்கில் இருந்தாலும்கூடப் பிறருக்கு உதவுதல் அரிதாகும். அவ்வாறு நாம் இருத்தல் கூடாது. 

இவ்வாறு கொடைக்கடனை என்றும் மறவாது போற்றும் பெரியோர்போல் வாழவேண்டும் என நாலடி நவில்கிறது. ஆதலின் நம்மிடம் செல்வம் இருந்தாலும் இல்லாமல் வறுமை உற்றாலும் இயன்றவரைபிறருக்கு உதவ வேண்டும்.