ant erumbu01

சிறுமலையில் சிறு எறும்புப்புற்று ஒன்று இருந்தது.  அதில் சிற்றெறும்புகள் சிறு கூட்டமாய் வாழ்ந்தன.  அதில் சின்னா என்ற குட்டி எறும்புதான் சிறியது. அது ஒரு நாள் தன் சிறிய நண்பரைக் காணப் புறப்பட்டது.

தன் சிறு புற்றைவிட்டு சின்னா வெளியில் வந்தது.  தன் சிறு கண்களை விரித்துப் பார்த்தது.  சிறு தூறல், சிறு புற்களில் பட்டுச் சிதறியது.

வழியில் கிடந்த சிறு முள்ளை எடுத்தது.  அதில் கொசுவின் சிறிய இறகைப் பொறுத்தியது. சின்ன குடை கிடைத்தது.  தனது சிறிய முன்னங்கால்களால் அதைப் பிடித்துக் கொண்டது.  சிரித்துக் கொண்டே சிறு நடைபோட்டது சின்னா.

வழியில் சில சிறு செடிகளையும் சிறு பூச்சிகளையும் கண்டது.  அவர்களுக்கு வணக்கம் சொன்னது.  ‘தன் நண்பன் சிறு கரையான் வீடு எங்கே?’ எனக் கேட்டுக் கொண்டே சென்றது.

சிறிதுநேரம் ஆனது.  சிறு மழை நின்றது. சிறு காற்றடிக்கத் தொடங்கியது.  பிய்ந்து போனது சின்னாவின் சிறுகுடை.  சிறு முள் மட்டும் சின்னாவிடம் இருந்தது. அதை ஓரம் போட்டது.

சுற்றும் முற்றும் தன் சின்ன குடையைத் தேடியது. சிறிது தொலைவில் ஒரு சிறிய குடில்.  சிறு புல்லிதழில் அழகாய் இருந்தது.  சின்னா அருகே சென்றது.  சிறிய பேன் வெளியே Louse pean01வந்தது. சின்னாவை வணங்கியது. சின்னாவும் மறு வணக்கம் சொன்னது.

“நீ எப்படி இங்கே” சின்னா கேட்டது.

சிறுபேன் மறுமொழியாக, “நான் ஒரு சிறுமி தலையில் இருந்தேன். சிறுமியின் அப்பா அவளைத் தூக்கி வந்தார்.  சிறுமியின் தலையை விட்டு இறங்கினேன்.  அப்பாவின் தலைக்கு ஏறினேன். அவர் தலையோ முழு வழுக்கை.  வழுக்கி கீழே விழுந்து விட்டேன்”, என, தன் சின்ன கதையைக் கூறியது.

“இப்படியே இருந்தால் எப்படி?!” சிற்றெறும்பு சின்னா வருந்திக் கேட்டது.

‘குளிக்க வருவார்கள்.  தங்கள் சிறு உடைகளை, அந்த சிறிய பாறையில் வைப்பார்கள்..  அதன் வழியாக ஒரு எண்ணெய் இல்லாத் தலையில் ஏறிக் கொள்வேன்’, என்று, தன் திட்டத்தைச் சொன்னது சிறு பேன்.

சிரித்தது சின்னா. சின்னாவின் சிறிய கண்கள் குடிலின் கூரையைப் பார்த்தன.  “குடிலில் சிறு ஓட்டை இருந்தது. சிறுமழை பெய்தாலும், நீர் கசியும்.  இந்த சிற்றிறகு அந்த ஓட்டையை அடைத்து விட்டது” என மகிழ்வாய்ச் சொன்னது சிறுபேன்.

தனது சின்னக் குடையில் இருந்த சிற்றிறகு, அந்தச் சின்னப் பேனுக்குப் பயன்பட்டதை, எண்ணி மகிழ்ந்தது சின்னா.

புதிய நண்பரிடம் விடைபெற்று, தனது சிறிய நண்பரைக்காணப் புறப்பட்டது, சிற்றெறும்பு சின்னா.

வெற்றிச்செழியன்02