(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 12. தொடர்ச்சி)


குறிஞ்சி மலர்

அத்தியாயம் 5



சோதியென்னும் கரையற்ற வெள்ளம்
தோன்றி எங்கும் திரைகொண்டு பாய,
சோதியென்னும் நிறைவு இஃதுலகைச்
சூழ்ந்து நிற்ப ஒருதனி நெஞ்சம்
சோதியென்றதோர் சிற்றிருள் சேரக்
குமைந்து சோரும் கொடுமையிதென்னே!
      — பாரதி


மயக்கம் தெளிந்து கண் விழித்தபோது ஒருகணம் தான் எங்கே இருக்கிறோமென்றே பூரணிக்கு விளங்கவில்லை. ஏதோ ஒரு பெரிய வீட்டில், புதிய சூழ்நிலையில் காற்றைக் சுழற்றும் மின்விசிறிக்குக் கீழே கட்டிலில் படுத்திருப்பதை உணர்ந்தாள். பரக்கப் பரக்க விழித்தவாறே தன்னைச் சுற்றிலும் பார்த்தாள். அப்படி அவள் ஒன்றும் புரியாமல் விழித்துப் பார்த்தபோது தான் சற்றுத் தள்ளி மெத்திருக்கையில்(சோபாவில்) அமர்ந்திருந்த அந்த அம்மாள் எழுந்து வந்து அருகில் நின்று ஆறுதலாகப் பேச்சுக் கொடுத்தாள்.

“புதிய இடமாயிருக்கிறதே என்று கூச்சப் படாதே அம்மா! இதை உன் சொந்த வீடு மாதிரி நினைத்துக்கொள். ஓர் உறவினரை ஊருக்கு வழியனுப்பி விட்டு தொடர்வண்டி நிலையத்திலிருந்து மகிழுந்தில் வந்து கொண்டிருந்தேன். நகரவைச்சாலை முடிந்து மேலக் கோபுரத் தெருவுக்குள் வண்டி நுழையத் திரும்பியபோது தான் நீ குறுக்கே வந்து சிக்கிக் கொண்டு அப்படி மயங்கி விழுந்தாய். உன்னை என் வண்டியிலேயே எங்கள் வீட்டுக்குக் கொண்டு வந்து விட்டேன். இப்போது நீ எங்கள் வீட்டில் இருக்கிறாய். கீழே விழுந்ததற்கு அதிகமாக ஆண்டவன் புண்ணியத்தில் உனக்கு வேறெந்த விபத்தும் ஏற்படவில்லை. கவலைப்படவோ, பயப்படவோ வேண்டாம்.”

தெருவில் வந்து கொண்டிருந்தபோது தனக்கு நேர்ந்ததைப் பற்றி அந்த அம்மா கூறியதைக் கேட்க வெட்கமாக இருந்தது பூரணிக்கு. என்ன நடந்தது என்பதை அந்த அம்மாள் கூறி விளக்கிய பின்புதான் அவளுக்கு ஒருவாறு புரிந்தது. நாத் தழுதழுக்க அந்த அம்மாளுக்கு நன்றி சொல்லத் தொடங்கினாள்.

“உங்களுக்கு எப்படி எந்த வார்த்தைகளால் நன்றி சொல்லப் போகிறேன்? தாயைப் போல் வந்து என்னைக் காப்பாற்றி இங்கே கொண்டு வந்திருக்கிறீர்கள். . .”

“நன்றி இருக்கட்டும். மகிழுந்தும் வண்டியும் கூட்டமுமாக ஒரே நெருக்கடியாயிருக்கிற நாற்சந்தியில் அப்படித்தான் பராக்குப் பார்த்துக்கொண்டு நடப்பதா பெண்ணே? நல்ல வேளையும் நல் வினையும் உன் பக்கம் இருந்து காப்பாற்றியிருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும். மயிரிழையில் தப்பிப் பிழைத்திருக்கிறாய்.”

“இந்த விபத்தில் தப்பிவிட்டேன். நீங்கள் காப்பாற்றிவிட்டீர்கள். இதைவிடப் பெரிய விபத்து ஒன்று இருக்கிறது. ஒவ்வொருவரும் விரும்பியோ, விரும்பாமலோ அடைகிற விபத்து அது!”

“நீ என்ன சொல்கிறாய்? எதைப் பற்றிச் சொல்கிறாய்?”

வாழ்க்கையைப் பற்றிச் சொல்கிறேன்! அதுவும் ஒரு விபத்தாகத்தான் எனக்குப் படுகிறது.”

இதைக் கேட்டு அந்த அம்மாள் சிரித்தாள். தும்பைப் பூச்சரம் போல் தூய்மைக் கீற்றாய்த் தோன்றி மறைந்தது அந்த நகை. ஒழுங்காய் அமைந்த வெண் பல்வரிசை அந்த அம்மாளுக்கு.

“இந்த வயதில் இப்படி நூற்றுக் கிழவிபோல் எங்கே பேசக் கற்றுக் கொண்டாய் நீ!”

“பேசக் கற்றுவிட்டதனால் என்ன இருக்கிறது? அறிவுக்குக் கற்றவற்றைக் கொண்டு வாழ்வுக்கு முயல முடிவதில்லை. வாழ்க்கைப் படிப்பே தனியாக இருக்கிறது. அங்கே  தோல்வியுற்றவர்களை மேல் வகுப்புக்கு அனுப்புகிறார்கள். வெற்றிபெறுகிறவர்களைக் கீழ் வகுப்புக்கு அனுப்புகிறார்கள். எல்லாம் தலைகீழாகத்தான் இருக்கிறது. அதை ‘விபத்து’ என்று கூறாமல் வேறு எப்படி கூறுவது?”

அந்த அம்மாள் முகம் வியப்பால் மலர்ந்தது. பித்தளை என்று தேய்த்துப் பார்த்து அலட்சியமாக எறிய இருந்த பொருளைத் தங்கம் என்று கண்டுகொண்டாற் போன்ற மலர்ச்சி அது. ‘ஏதோ நடுத்தெருவில் மூர்ச்சையாகி விழுந்த பெண், சிறிது நேரத்துக்கு வைத்துக் கொண்டிருந்துவிட்டு வீட்டுக்கு அனுப்பி விடலாம் என்ற சாதாரண எண்ணம் மாறி பூரணியின் மேல் அந்த அம்மாளுக்கு அக்கறை விழுந்தது. மனோரஞ்சிதப் பூ எங்கிருந்தாலும் எப்போதிருந்தாலும் அதனால் மணக்காமல் இருக்க முடியாது. அழகியசிற்றம்பலம் தம் பெண்ணை அறிவுப் பிழம்பாய் உருவாக்கிவிட்டுப் போயிருந்தார். அவள் எங்கே பேசினாலும், யாரிடம் பேசினாலும், எப்போது பேசினாலும், மனோரஞ்சித மணம்போல் சொற்களில் கருத்து மணக்கிறது. அந்த மணத்தை நீக்கிப் பேச அவளாலேயே முடியாது.

“நிறையப் படித்திருக்கிறாய் போலிருக்கிறது. உன்னைப் பற்றி எனக்குக் கொஞ்சம் சொல், அம்மா! பட்டுக் கத்தரிப்பது போல் அழகாகவும் அளவாகவும் பேசுகிறாயே நீ!”

தன்னைப் பற்றி அந்த அம்மாளிடம் சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்தானா என்ற தயக்கத்துடன் அந்தத் தாய்மை கனிந்த முகத்தை நிமிர்ந்து பார்த்தாள் பூரணி. காலையில் குளிக்கும் பொழுது மனங்குமுறியழுத சமயத்தில் நினைவு வந்ததே தாயின் முகம் அது மறுபடியும் அவளுக்கு நினைவு வந்தது.

அதிக முதுமை என்றும் சொல்வதற்கில்லை. அதிக இளமை என்றும் சொல்வதற்கில்லை. நடுத்தர வயதுக்குச் சிறிது அதிகமான வயதுடையவளாகத் தோன்றிய அந்த அம்மாளின் முகத்தில் ஒரு சாந்தி இருந்தது. பூரணி தன் மனத்தை மெல்ல மெல்ல நெகிழச் செய்யும் ஏதோ ஓர் உணர்வை எதிரேயிருந்த முகத்தில் கண்டாள்.

“நான் உன்னைப் பற்றி கேட்பது தவறானால் மன்னித்துவிடு; விருப்பமிருந்தால் என்னிடம் சொல்வதில் தவறில்லை. நிறைய விரக்தி கொண்டவள் மாதிரி வாழ்க்கையே விபத்து என்று கூறினாயே, அதிலிருந்து உன்னைக் காப்பாற்ற முடியுமா என்று அறிவதற்காகத்தான் இதை விசாரிக்கிறேன்.”

பூரணி சுருக்கமாகத் தன்னைப் பற்றி சொன்னாள். குடும்பத்தின் பெருமைகளைச் சொல்லிப் பீற்றிக் கொள்ளவும் இல்லை; குறைகளாகச் சொல்லி அழவுமில்லை. சொல்ல வேண்டியதை அளவாகச் சொல்லி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.

“உன் தந்தையாரைப் பற்றி நான் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன் அம்மா. அவருடைய புத்தகங்கள் கூட இரண்டொன்று படித்திருக்கிறேன். எனக்கும் சொந்த ஊர் மதுரை தான். நீண்ட காலமாக கடலுக்கு அப்பால் இலங்கையில் இருந்துவிட்டு இப்போதுதான் ஊரோடு வந்துவிட்டோம். எங்களுக்கு அங்கே நிறையத் தேயிலைத் தோட்டங்கள் இருந்தன. என் கணவர் காலமான பின் என்னால் ஒன்றும் கட்டிக்காத்து ஆள முடியவில்லை. எல்லாவற்றையும் விற்றுக்கொண்டு ஊரோடு, வீட்டோடு வந்தாயிற்று. எனக்கு இரண்டு பெண்கள். ஒருத்தி பள்ளிக்கூடத்தில் எட்டாவது படிக்கிறாள். மூத்தவள் கல்லூரியில் படிக்கிறாள். ஏதோ கடவுள் புண்ணியத்தில் நடந்து கொண்டிருக்கிறது.”

“உங்கள் பெயரை நான் தெரிந்து கொள்ளலாமா அம்மா?”

“என்னை மங்களேசுவரி என்று கூப்பிடுவார்கள் பூரணி. பார்த்தாயோ இல்லையோ, நான் எவ்வளவு மங்களமாக இருக்கிறேன் என்பதை?”

அந்த அம்மாள் சிரித்துக் கொண்டே வேடிக்கையாகச் சொல்வது போல்தான் இப்படிச் சொன்னாள். ஆனாலும் அந்தச் சொற்களின் ஆழத்தில் துயரம் புதைந்திருப்பதைப் பூரணி உணர்ந்தாள்.

சிரிப்பில் எப்போதுமே இரண்டு வகை. சிரிப்பதற்காகச் சிரிப்பது. சிரிக்காமல் இருக்கக்கூடாதே என்பதற்காகச் சிரிப்பது. இரண்டாவது வகைச் சிரிப்பில் துன்பத்தில் ஆற்றாமை ஒளிந்து கொள்கிறது. மங்களேசுவரி அம்மையார் தன் நிலையைப் பற்றி கூறிவிட்டுச் சிரித்த சிரிப்பில் ஆற்றாமை தெரிந்தது. ‘வாழ்க்கை ஒரு விபத்து’ என்று தான் கூறியபோதே அந்த அம்மாளின் வதனத்தில் மலர்ந்த தூய நகையையும் இந்தத் துயர நகையையும் மனத்துக்குள் ஒப்பிட்டுச் சிரித்தாள் பூரணி.

மெதுவாகக் கட்டிலில் எழுந்து உட்கார்ந்து கொண்டு பார்த்த போது சன்னல் வழியாகத் தெருவின் ஒரு பகுதி தெரிந்தது. அது தானப்ப முதலி தெரு என்று பூரணி அனுமானித்துக் கொண்டாள். தன் அனுமானத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக, “இது தானப்ப முதலி தெருதானே?” என்று அம்மாளைக் கேட்டாள். ‘ஆமாம்’ என்று பதில் வந்தது. பார்க்கும் போது செல்வச் செழிப்பைக் காட்டும் பெரிய வீடாகத்தான் தோன்றியது. பளிங்குக் கற்கள் பதித்த தரை. சுவர் நிறைய பெரிய பெரிய படங்கள். திரும்பின பக்கமெல்லாம் ஆள் உயரத்துக்கு நிலைக் கண்ணாடிகள். பட்டு உறை போர்த்திய பாங்கான மெத்திருக்கைகள். விதவிதமான மேசைகள். வீட்டில் செல்வச் செழுமை தெரிந்தது வீட்டுக்குரியவளிடம் அன்பின் எளிமை தெரிந்தது. தரையிலும், சுவரிலும் செல்வம் மின்னியது. தாய்மை மின்னியது. அடங்கி ஒடுங்கி அமைந்த பண்பு மின்னியது. ஓடியாடித் திரிந்த உலக வாழ்வு இவ்வளவுதான் என்று வாழ்ந்து மறந்த அசதி தெரிந்தது; வாழ்வு முடிந்த அலுப்புத் தெரிந்தது.

குழந்தையின் சுட்டு விரலில் பாலைத் தோய்த்துக் கோடிழுத்த மாதிரி நெற்றியில் வரி வரியாகத் திருநீறு துலங்க மலர்ந்த நெற்றியோடு மங்களேசுவரி அம்மையார் பூரணியின் அருகில் வந்து நின்றாள்.

“என்னம்மா இப்படிப் பார்க்கிறாய்? நான் வரும்போது பாழடைந்த அரண்மனை மாதிரி உப்புப் படிந்த சுவரும் பெருச்சாளிப் பொந்துகள் மயமான தரையுமாக இருந்தது இந்த வீடு. மூத்த பெண்ணுக்கு ஆடம்பரத்தில் அதிகப் பற்று. மூன்று மாதத்தில் பணத்தை வாரியிறைத்து இப்படி மாற்றியிருக்கிறாள். எனக்கு இதெல்லாம் அலுத்துவிட்டது, அம்மா! ஏதோ செல்லமாக வளர்ந்துவிட்ட குழந்தைகள் சொன்னால் தட்ட முடியாமல் போகிறது.”

“உங்கள் மூத்த பெண் எந்தக் கல்லூரியில் படிக்கிறாள்?”

“அமெரிக்கன் கல்லூரியில் சேர்த்திருக்கிறேன். இந்த ஊரில் இது ஒரு வசதிக் குறைவு பூரணி. கல்லூரிகள் எல்லாம் நகரின் நான்கு புறமும் தனித்தனியே சிதறியிருக்கின்றன. காலையில் தல்லா குளம் போனால் ஐந்து மணிக்கு வீடு திரும்புகிறாள். மகிழுந்து இருக்கிறது. ஓட்டுநர் இருக்கிறான். இந்தப் பெரிய வண்டியில் போய் வர வெட்கமாக இருக்கிறதாம் அவளுக்கு. சிறிதாக ஒரு புது மகிழுந்து வாங்கித் தரவேண்டுமாம். அதுவரையில் பேருந்தில் தான் போவேன் என்று பிடிவாதமாகப் போய் வந்து கொண்டிருக்கிறாள். சிறிய வண்டிக்குச் சொல்லியிருக்கிறேன். பணத்தைக் கொடுக்கிறேனென்றாலும் மகிழுந்து சுலபத்திலா கிடைக்கிறது?”

“இந்த ஊரில் இரண்டு பெண்கள் கல்லூரிகள் இருக்கும்போது எப்படி ஆண்கள் கல்லூரியில் சேர்க்க மனம் வந்தது உங்களுக்கு?” இந்தக் கேள்வியைத் துணிந்து கேட்டுவிட்ட பின் அந்த அம்மா முகத்தைப் பார்த்தபோது கேட்காமல் இருந்திருக்கலாம் என்று பட்டது பூரணிக்கு.

“இந்த விசயத்தில் நான் கொஞ்சம் முற்போக்கான கருத்துடையவள், பூரணி! பெண்கள் வாழ்க்கை முழுவதும் ஒரே வட்டத்தில் பழக வேண்டியிருக்கிறது. திருமணமாகும் முன்னும் சரி, திருமணமான பின்னும் சரி, மாறுபட்ட சூழ்நிலையில் பழக வாய்ப்பே இல்லை அவர்களுக்கு. படிக்கிற காலத்திலாவது அந்தச் சூழ்நிலை அவர்களுக்குக் கிடைத்தால் பிற்கால வாழ்வுக்கு நல்லதென்று நினைக்கிறவள் நான்.”

பூரணி மெல்லச் சிரித்தாள். பிறரோடு கருத்து மாறுபடும் போது முகம் சிவந்து கடுகடுப்போடு தோன்றும் பெரும்பாலோர்க்கு. ஆனால் பூரணியின் வழக்கமே தனி. தனக்கு மாறுபாடுள்ள கருத்து காதில் விழும்போது அவள் மாதுளைச் செவ்விதழ்களில் புன்னகை ஓடி மறையும். அப்பாவிடமிருந்து அவளுக்குக் கிடைத்த பயிற்சி அது. பூரணியின் புன்னகையை மங்களேசுவரி அம்மாள் பார்த்துவிட்டாள்.

“வட்டத்திற்கு மூலைகள் இல்லை என்பதுதானே கணிதம்! பெண் மாறுபட்ட சூழ்நிலையில் பழகினாலும் பெண்தானே! பெண்மையின் வாழ்க்கை ஒழுங்குகளே தனி. அவை வட்டத்தைப் போல் அழகானவை. சதுரமாகவும் இருக்க வேண்டுமென்று நாமாக நினைப்பதுதான் பெரும் தவறு.”

“வாழ்க்கைக்குச் சதுரப்பாடுதான் (சாமர்த்தியம்) அதிகம் வேண்டியிருக்கிறது. சற்று முன் நீ கூட இதே கருத்தைத்தான் வேறொரு விதத்தில் சொன்னாய், பூரணி.”

வட்டத்தில் ஒழுங்கு உண்டு. வழி தவற வாய்ப்பில்லை. சதுரத்தில் சாமர்த்தியம் உண்டு. தவறவும் இடம் உண்டு. பெண்ணின் வாழ்க்கை ஒரே வட்டத்தில் இருப்பதில் தவறு இல்லை என்பது என் தந்தையின் கருத்து.”

மங்களேசுவரி அம்மாளின் வியப்பு மேலும் அதிகமாயிற்று. குண்டூசி செருகி(மெத்தை)யில் ஊசி இறக்குகிற மாதிரி இந்த வயதில் இந்தப் பெண்ணால் நறுக்கு நறுக்கென்று எவ்வளவு கச்சிதமாகப் பதில் சொல்ல முடிகிறது. தீபத்தில் எப்போதாவது சுடர் தெறித்து ஒளி குதிக்கிறதுபோல் கருத்துக்களைச் சொல்லும்போது இந்தப் பெண்ணின் முகத்திலும் விழிகளிலும் இப்படி ஓர் ஒளியின் துடிப்பு எங்கிருந்துதான் வந்து குதிக்கிறதோ என்று மனதில் நினைத்துக் கொண்டாள் அந்த அம்மாள்.

தன்னை அங்கேயே சாப்பிடச் சொல்லி அந்த அம்மாள் வற்புறுத்திய போது பூரணியால் மறுக்க முடியவில்லை. அந்தத் திருநீறு துலங்கும் முகத்துக்கு முன்னால், தெளிவு துலங்கும் வதனத்துக்கு முன்னால் பூரணியின் வறட்டுத்தன்மானம் தோற்றுத்தான் போய்விட்டது. தாய்க்கு முன் குழந்தைபோல் ஆகிவிட்டாள் அவள்.

(தொடரும்)

தீபம் நா.பார்த்தசாரதி