(தந்தை பெரியார் சிந்தனைகள் 22 இன் தொடர்ச்சி)

தந்தை பெரியார் சிந்தனைகள் 23

3. சாதிக்கொள்கை தொடர்ச்சி

(ஙூ) பார்ப்பான் வந்து நமக்குத் திருமணம் செய்து வைப்பது சாத்திர விரோதமாகுமென்று சாத்திரமே கூறுகின்றது. இப்படித் திருமணம் மட்டுமல்ல; சாவுக்கும் வரக்கூடாது. இன்று நல்லகாரியமானாலும் கெட்ட காரியமானாலும் பார்ப்பான் வந்து சடங்கு நடத்திதான் வைக்கிறான். சாத்திரவிரோதத்தை நிவர்த்திக்கச் சிறிது நேரம் பூணூல் போட்டு மேல் சாதியாக்கிச் சில மந்திரத்தையும் சொல்லி நடத்தி வைத்து ஏமாற்றுகின்றனர்.

இன்று நடைபெற்றுவரும் செயல்கள் அனைத்திற்கும் பார்ப்பனர்கள் மட்டுமே காரணம் அன்று. அவர்கள் சூழ்ச்சியால் அனைத்தும் நடைபெறுகின்றன என்று கருதுவதும் நியாயம் அன்று. காலவெள்ளத்தில் எத்தனையோ செயல்கள் நடைபெற்று வழக்கங்களாகிவிட்டன. பார்ப்பனர் சாதிமீது அனைத்தையும் பழி சுமத்துவது நியாயம் அன்று என்று எனக்குத் தோன்றுகின்றது. தம் மனத்தில் பட்டவற்றை எல்லாம் மனத்தில் சிறிதும் களங்கமற்று எடுத்துரைக்கின்றார் பெரியார் இதனால் பெரியார் அவர்களை நாம் வெறுப்பதற்கு நியாயமில்லை. அவர் எடுத்துக்காட்டுபவை அனைத்திலும் உண்மை இல்லாமல் இல்லை. அந்த உண்மையை உணரவேண்டும், சிந்திக்க வேண்டும்.

இங்ஙனமே ஒரு குறிப்பிட்ட சாதியாரைக் கடுமையாகக் கடிவதற்கு உளவியல் கோட்பாட்டின்படி இரண்டு காரணங்கள் எனக்குப் புலப்படுகின்றன. அவற்றை ஈண்டு உங்கள்முன் வைக்கின்றேன்.

(1) தந்தை பெரியார் எழுதிய ஒரு சிறுகட்டுரையில்- சுயசரிதையில்- குறிப்பிட்ட ஒரு சம்பவப் பொறி பெருந்தீயாக கிளம்புவதற்கு வித்திட்ட வரலாறு அவர் வாக்கிலேயே தருவது.

“எங்கள் வீடு அந்தக்காலத்தில் அதாவது 1890-இல் சிறிய பணக்கார வீடு … வைணவமத விசுவாசமுள்ள பாகவதர் வீடு … சதா சந்நியாசிகள், பக்தர்கள், பாகவதர்கள், புராணீகர்கள், வித்துவான்கள் ஆகியோர் தங்கிப்போகவுமான வீடாகி விட்டதால் இவர்களிடம் வம்பளத்தல், தர்க்கம் பேசுதல் ஆகிய வசதி அதிகமாகிவிட்டது. இவர்களிடம் பேசுவது மத எதிர்ப்பு, சாத்திர எதிர்ப்பு, புராணஎதிர்ப்பு, கடவுள் எதிர்ப்பு என்கிற அளவுக்குப் போய்விட்டது. இதுவே எனக்குச் சாதி, மதம், கடவுள் என்கிற விஷயங்களில் நல்ல முடிவு ஏற்படும்படிச் செய்துவிட்டது. இதன்காரணமாக எனக்குப் பார்ப்பனீயத்தில் ஒரு வெறுப்பு ஏற்பட்டுவிட்டது.

ஒரு தடவை எங்கள் ஊருக்கு நெருஞ்சிப்பேட்டை சாமியார் (சங்கராச்சாரி போன்றவர்) அவர்களுக்கு எங்கள் ஊர் நகரத்து செட்டியார் வகுப்பு வியாபாரிகள் தடபுடலாய்ப் பிச்சை நடத்துவார்கள். எங்கள் தகப்பனாரும் 50 உரூபாய் கொடுத்தார். அந்தச் சாமியார் தம்பி ஒரு மைனர்; கடன்காரன். அவனும்கூட வந்திருந்தான். ஈரோட்டில் ஒரு வியாபாரிக்கு அவன் வாங்கிய கடன் திருப்பித்தரவேண்டும். அது கோர்ட்டில் டிக்ரி ஆகியிருந்தது. அந்தச் சமயம் வியாபாரி அக்கடனை வசூல் செய்ய என்னிடம் யோசனை கேட்டார். நான் ‘வாரண்டு கொண்டுவா’ என்றேன். மறுநாள் பகல் 12 மணிக்கு வாரண்டு எடுத்துக் கொண்டு சேவகனுடன் அந்த வியாபாரி என்னிடம் வந்தார். நான் அவர்களைக் கூட்டிக்கொண்டு ஈரோட்டில் சாமியார் இறங்கியிருந்த ‘எல்லயர் சத்திரம்’ சென்றேன். உள்ளே சுமார் 200 பேர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். சாமியார் தம்பியை வரவழைத்தோம். வாரண்டு என்று தெரிந்ததும் ஓடினான். சட்டென்று பார்ப்பனர்கள் உண்டு கொண்டிருந்த வீட்டில் புகுந்து கதவைத் தாளிட்டுக் கொண்டான். நான் தூணைத் தாவிப்பிடித்து வீட்டின்மீது ஏறி, ஓடுகள் உடையப் புறக்கடைப்பக்கம் வீட்டுக்குள் குதித்து சாப்பாடு இருக்கும் இடத்தையும் பார்ப்பனர்கள் சாப்பிடும் இடத்தையும் தாண்டி வந்து, வீதிக்கதவைத் திறந்து சாயுபு சேவகனைக் கூப்பிட்டு, ஓர் அறைக்குள் ஒளிந்து கொண்ட சாமியாரின் தம்பி கையைப் பிடித்து ஒப்புவித்தேன்.

வீட்டுக்குப் போய்ச் சாப்பிட்டுவிட்டுக் கடைக்குச் சென்றேன். நகரத்துச் செட்டியார், குமாசுதாக்கள், பார்ப்பனப்பிள்ளைகள் எங்கள் கடைக்கு வந்து எனது தந்தையாரிடம் நடந்ததைச் சொன்னார்கள். “சாப்பாட்டுப் பண்டம் தீட்டுப்பட்டுவிட்டது. 200, 300பேர் பட்டினி. எல்லாம் உங்கள் மகன் இராமுவால்” என்று செய்திகளைச் சொன்னார்கள். நான் நடந்ததைச் சொன்னேன். என் தகப்பனாருக்கு ஏற்பட்ட கோபத்துக்கும், ஆத்திரத்துக்கும் அளவே இல்லை. “அடத். . . மகனே உனக்கென்ன அங்கு வேலை?” என்று ஆத்திரத்தோடு கூறினார். வந்தவர்கள் மேலும் மேலும் சொன்னார்கள்.

“என்ன முழுகிப் போய்விட்டது? அந்தத்திருட்டுப் பார்ப்பான் பண்ணினதைப் பத்திச்சிந்திக்க மாட்டேன் என்கிறீர்கள். இவர்கள் கொழுத்துப் போய் சோற்றைக் கொட்டிவிட்டால் அதற்கு யார் என்ன பண்ணுவார்கள்?” என்றேன். என் தகப்பனாருக்கு மேலும் ஆத்திரத்தைக் கிளப்பிவிட்டது. “சாமி, நீங்க சும்மா இருங்க” என்று சொல்லிக்கொண்டு அவரது செருப்புகளில் ஒன்றை எடுத்துக்கொண்டு என்மீது வெற்றிலைப் பாக்கு எச்சிலைத் துப்பி, முகம், முதுகு என்று பார்க்காமல் 7/8 அடி பலமாக அடித்தார்.

“இந்தச் செய்கையால் கடைவீதியில் நான் ஒரு வீரனாகி விட்டேன். பார்ப்பான் சாப்பிடுவதை நாம் பார்த்தால் குற்றம், தோசம் என்று சொல்வது நமக்கு அவமானம் என்றும், கடைவியாபாரிகள், குமாசுதாக்கள் மனத்தில் படும்படியாக ஏற்பட்டுவிட்டது. இந்தப் பிரசுதாபம் சாதி பேதத்தைப் பற்றிய பேச்சாகிக் கடைசியில் ‘சாய்பு வீட்டில் சாப்பிட்டால் தான் என்ன கெடுதி?’ என்று ஏற்பட்டு, அப்போது முதலே சமபந்தி வருடா வருடம் சித்திராபெளர்ணமியன்று – என் தலைமை ஆதிக்கத்தில் நடப்பதென்றும், எல்லாச்சாதியார், மதத்தார் வந்து சாப்பிடுவது என்றும் வழக்கமாகிவிட்டது. “சாப்பிடுவதைக் கண்களால் பார்த்தால் குற்றம் என்பதில் ஆரம்பித்த விவகாரம் – “சாப்பாட்டில் சாதி பேதம் காட்டுவது அறியாமை” என்கிற முடிவு உண்மையாகவே மக்களுக்கு ஏற்படும்படி அந்தச்சம்பவம் செய்துவிட்டது” என்று தந்தை பெரியார் அவர்கள் அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்கள்.

(2) பிற்காலத்தில் இவர் காங்கிரசில் தீவிரமாக ஈடுபட்டிருந்த காலத்தில் நெல்லைப் பகுதியில் ஏதோ ஓர் ஊரில் நடைபெற்ற காங்கிரசு மாநாட்டில் வ.வே.சு.ஐயர் தலைமையில் பார்ப்பனர்களுக்குத் தனியாக உணவு படைக்க ஏற்பாடு செய்யப் பட்டது. இதனைப் பொறுக்கமுடியாமல் தந்தை பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறி சுயமரியாதைக் கட்சியைத் தொடங்கி அதனை நடத்திவரலானார்.

இன்றைய நிலைவேறு. இப்பொழுது பார்ப்பனர்களிடம் எவ்வளவோ மாற்றம் நிகழ்ந்து விட்டது. ஒருசிலரைத் தவிர பெரும்பாலோர் நம்மிடம் கலந்து பழகத்தொடங்கிவிட்டனர். இனியும் அவர்களிடம் வெறுப்புக் காட்டி ஒதுக்குவது- ஒதுங்கிப் போவது- அறிவுடைமையாகாது என்பது அடியேனின் கருத்து. பண்டைய நிகழ்ச்சிகள் இன்று வரலாறு போல் ஆகிவிட்டது. அந்த வரலாற்றைப் படிக்கின்றோம் என்பதாக நினைத்துக் கொள்வோம்.

(6) அரசியல்: அரசியல் மூலம் சாதி ஒழிப்பு செய்யமுடியுமா என்பது பற்றியும் தந்தை பெரியார் சிந்தித்துள்ளார். அந்தச் சிந்தனைகள் சிலவற்றை ஈண்டுக் காண்போம்.

(அ) இந்திய ஏழை மக்களுக்கும், பாமரமக்களக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் போதிய உணர்வும் சொரணையும் இல்லாததால் இன்று அரசியல் வேறாகவும் சமூகஇயல் வேறாகவும் இந்நாட்டில் இருந்து வரமுடிகின்றது.

(ஆ) ஒரு பெருங்கூட்ட மக்கள் இன்று சமூகவாழ்வில் தீண்டப் பெறாதவர்களாகவும், மற்றொரு பெருங்கூட்டமக்கள் சமூகவாழ்வில் சூத்திரர்கள், அடிமைகள், கூலிகள், தாசிமக்கள், இழிமக்கள் என்கின்ற பெயருடனும் இருந்து வருகிறார்கள் என்றால் இது மாறுவதற்கு அருகதை இல்லாத சுயராச்சியம் யாருக்கு வேண்டும்? இது மாறுவதற்கு இல்லாத மதமும் சாத்திரமும் கடவுளும் யாருக்கு வேண்டும்?

(இ) நமக்கு இன்று வேண்டிய சுயஆட்சி என்பதானது- சாதிக் கொடுமைகளையும், சாதிப் பிரிவுகளையும், சாதிச் சலுகைகளையும் அழிக்கும்படியாகவும் ஒழிக்கும்படியாகவும் இருக்கத் தக்கதாயிருந்தால் நமக்கு அதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்பதோடு மனப்பூர்வமாய் வரவேற்கவும் ஆசைப் படுகின்றோம்.

(ஈ) பாரதமாதாப் புத்திரர்களுக்கு ஏன் நாலு சாதி? ஒரு பாரதமாதாவுக்கு எப்படி நாலு சாதிப்பிள்ளைகள் பிறந்தன? அப்படியானால் பாரதமாதாவுக்கு எத்தனைக் கணவர்கள்? நானும் முதலியார் சாதி, என் மனைவியும் முதலியார் சாதியானால் எங்களுக்குப் பிறக்கும் பிள்ளைகளில் எப்படி ஒன்று செட்டியாராக, ஒன்று எப்படி நாயுடுவாக இருக்கமுடியும்? அப்படியிருக்குமானால் எனக்குத் தெரியாமல் என் மனைவிக்கு எத்தனைப் புதுப்புருடர்கள் இருந்தார்கள் என்பதுதானே இதன் அருத்தம்? உடன்பிறந்தாருக்குள் ஏன் இந்தப்பிரிவினை?

உருவகத்தில் ஒருவித மாய தேசபக்தியை உண்டாக்கும் அரசின் செயலுக்கு அதே உருவகத்தையே ஆயுதமாகக் கொண்டு அந்த அமைப்பைச் சாடுகிறார்கள் ஐயா அவர்கள். இன்றைய அரசியலில் சாதிகள் குழுக்களாக மாறியுள்ளன. ஒவ்வொரு சாதியாரும் சாதிச்சங்கங்கள் அமைத்துக்கொண்டு ஒரு குழுவிலிருந்து மிகவும் தாழ்ந்த குழுவுக்கு மாற்றுமாறு தீர்மானங்கள் நிறைவேற்றி அரசை மிரட்டித் தங்கள் கோரிக்கையை முற்றுவித்துக் கொள்ளுகிறார்கள். இன்னும் ஒரு விநோதனமான முயற்சி ஒரு குறிப்பிட்ட சாதியாருள் பல கிளைகள் இருக்குமானால் அவர்கள் மாநாடு போட்டு “நாங்கள் எல்லாம் ஒரு குடைக்கீழ் வரவேண்டும்” என்று தீர்மானம் போடுகிறார்கள். கட்சி அரசியலாதலால் அரசும் பணிந்து அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றுகின்றது. வாக்கு வங்கியை நினைத்துக் கொள்கின்றது அரசு. இது ‘சனநாயகம்’ என்று நாம் நினைத்துக் கொள்ளுகின்றோம். இஃது ஒருவித உரிமம்போல் (License) செயற்படுகின்றது. அறிவியல் நோக்கு மனப்பான்மையுள்ளவர்கள் தமக்குள் நகைத்துக் கொள்ளுகின்றார்கள். புராண நம்பிக்கை புள்ளவர்கள் “யுகதர்மம்” என்று நினைந்து மனத்தைத் தேற்றிக் கொள்ளுகின்றார்கள்.

 (உ) சாதிவேற்றுமையை ஒழிக்கும் அரசாயின் காவல்துறையினரிடம் கத்திரிக்கோலைக் கொடுத்துப் பூணூலையும் உச்சிக்குடுமியையும் நறுக்கச் சொல்லியிருக்க வேண்டாமா? மதவகுப்பு சார்பற்ற அரசு என்று சொல்லிக்கொண்டு மந்திரம் ஓத, பூணூல் போட, விரதம் இருக்க, கிருட்டிணன் பிறந்த ஒவ்வொருநாள் விடுமுறை என்றால் இதனை ஆரிய வகுப்பு வாதப் பிரச்சார ஆட்சி என்றுதானே கூற வேண்டும்?

இது பெரியாரின் கடுமையான சிந்தனை. மடங்களும் சங்கராச்சாரியார்கள் போன்றவர்களின் யோசனைகளை வைதிகர்கள் நிறைவேற்றிக் கொள்வது போலவே, பெரியார் சார்புள்ளவர்கள் அதனை நிறைவேற்றத் தொடங்குகின்றனர். முன்னவர் செயல் திட்டம் நிறைவேற்றப்பெறும்போது அமைதியாக நடைபெறுகின்றது. பின்னவர் செயல்திட்டம் நிறைவேற்றப்பெறும் போது கலகமாகிறது; சட்டம் ஒழுங்குப் பிரச்சனையாக வடிவங் கொள்ளுகின்றது.

பல்லாண்டுகட்கு முன் (1950-60களில்) என்பதாக நினைவு. திருச்சியில் பெரியாரின் “அருள்வாக்கை” கேட்ட ஒரு சுயமரியாதைக் கட்சியைச் சார்ந்த ஒருசிறு கும்பல் ஓர் அமாவாசையன்று திருச்சி காவிரிக்கரையில் தருப்பணம் செய்து வைக்கும் சாத்திரிகளின் உச்சிக்குடுமியையும் பூணுலையும் கத்திரித்த செய்தி நாளிதழ்களில் வெளியானதைப் படித்தேன்; வருந்தினேன். இது நாகரிகமற்ற செயல் என்று நினைத்துக்கொண்டேன். நான் துறையூரில் பணியாற்றிய போது (1941-50), ஏதோ ஓர் ஆண்டு (1948 என்பதாக நினைவு) பாரதிதாசன் ஒருவார காலம் என் இல்லத்தில் தங்கியிருந்தபொழுது “பூணுால் உச்சிக் குடுமியை வெட்டும் திட்டத்தை” கடுமையாக ஆதரித்துப் பேசியதும் நினைவிற்கு வருகின்றது. பாவேந்தர் பெரியார் கொள்கையினர் என்பதை நாம் அறிவோம்.

(தொடரும்)

சென்னைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் சி. .பெருமாள், அறக்கட்டளைச் சொற்பொழிவு – நாள்: 27.2.2001 முற்பகல், ‘தமிழ்ச்செம்மல்’ ‘கலைமாமணி’  பேராசிரியர் முனைவர் . சுப்பு(ரெட்டியார்), 

தெற்கு தென்கிழக்கு நாடுகளின் மரபுவழிப் பண்பாட்டு நிறுவனம், 

சென்னைப் பல்கலைக் கழகம்