(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 16. தொடர்ச்சி)

குறிஞ்சி மலர்

அத்தியாயம்  6 தொடர்ச்சி

 

இந்த இருபத்தெட்டு வயதில் அரவிந்தன், மீனாட்சி அச்சக நிருவாகத்தையே தனித்தூண் போலிருந்து தாங்கிக் கொண்டிருந்தான். அரவிந்தன் அழகன், அறிஞன், கவிஞன், சாமர்த்தியமான குறும்புக்காரன், எல்லாம் இணைந்த ஒரு குணச்சித்திரம் அவன்; பார்த்தவுடன் பதிந்துவிடுகிற, கவரும் தன்மை வாய்ந்த முக்கோண வடிவ நீள முகம் அவனுடையதாகையால், ஒரு தடவை பார்த்தாலும் அவனை மறக்க முடியாது. ஆணியல்புக்குச் சற்று அதிகமாகவே சிவந்து தோன்றும் உதடுகளின் குறும்பு நகை நெளிய அவன் பேசும்போது சுற்றி நிற்பவர்களின் கண்களெல்லாம் அவன் முகத்தில்தான் ஆவலோடு பதிய முடியும். அரவிந்தனுக்குப் பிடிக்காதவை காலர் வைத்த ஆடம்பரமான சட்டைகள் அணிவதும், எட்டு முழம் வேட்டி கட்டுவதும். எளிமையை எல்லாவற்றிலும் விரும்புகிற சுபாவமுள்ளவன் அவன். தமிழ்நாட்டுச் சூழ்நிலையே எளிமைக்கு ஏற்றது என்று வாதாடுவான்.

இது ஏழைகளின் தேசம். இங்கே ஒவ்வொருவரும் குறைவான வசதிகளை அனுபவிப்பதோடு மற்றவர்களுக்கு விட்டுக் கொடுக்கத் தயாராயிருக்க வேண்டும்” என்று அடிக்கடி புன்னகையோடு கூறுவான் அரவிந்தன். காந்தியக் கொள்கைகளைப் போற்றுவதில் விருப்பமும் மதிப்பும் கொண்டிருந்தான் அரவிந்தன். கைப்பிடிக்குள் அடங்கிவிடுகிறாற்போல் ஒரு சின்னஞ்சிறு திருக்குறள் புத்தகம் எப்போதும் அவனுடைய சட்டைப் பையில் இருக்கும்.

“அரவிந்தா! இப்படி வா. உன்னிடம் கொஞ்சம் தனியாகப் பேசவேண்டும்” என்று அவனை அன்போடு முன்னறைக்கு அழைத்துக் கொண்டு சென்றார், அச்சக உரிமையாளர் மீனாட்சி சுந்தரம்.

உள்ளே அழைத்துக் கொண்டு போய் அவனை உட்காரச் செய்து தம் திட்டத்தை விவரித்தார். விளையாட்டுப் பிள்ளை போல் தோன்றினாலும் அவனுடைய திறமையில் அவருக்கு அசையாத நம்பிக்கை. அவனைக் கலந்து கொள்ளாமல் எதுவும் செய்யமாட்டார். அவர் அன்று கூறிய புதுத்திட்டத்தை அரவிந்தன் முழு மனத்தோடு வரவேற்று ஒப்புக்கொண்டான்.

“நிச்சயமாக இந்தத் திட்டம் நமக்கும் பயன்படும், நாட்டுக்கும் பயன்படும். சிறந்த தமிழ் அறிஞர்கள் நூல்களை மலிவான விலையில் வெளியிட்டுப் பரப்ப வேண்டியது அவசியம்தான். சாமர்த்தியமாக வெளியிட்டு விற்றால் நமக்குக் கைப்பிடிப்பு இருக்காது.”

“அப்படியானால் முதலில் இதோ இந்த முகவரிக்குப் போய் உரியவர்களைப் பார்த்து ஆகவேண்டிய காரியங்களை ஏற்பாடு செய்து பேசிவிட்டு வா” என்று முகவரியை நீட்டினார் அவர்.

“நான் ஏழரை மணிவரை இங்கேயே இருக்கப் போகிறேன். வண்டியிலேயே போய்விட்டு வந்துவிடு அரவிந்தா. . .”

அவருக்குத் தெரியாமல் தன்னுடைய ஏட்டுப் புத்தகத்தையும் எடுத்துக் கொண்டான் அரவிந்தன்.

“நினைவு வைத்துக்கொள். இப்போது நீ போகிற இடத்திலிருந்துதான் முதலில் நாம் வெளியிடப் போகிற நூல்கள் கிடைக்க வேண்டும்; காரியத்தைப் பழமாக்கிக் கொண்டு வா. . .” என்று வாசல் வரை உடன் வந்து கூறி அவனை வண்டியில் ஏற்றி அனுப்பினார் மீனாட்சி சுந்தரம்.

மருள் மாலைப்போதின் ஒளி மயங்கிய மாலை, அழகு மதுரை நகரின் தெருக்கள் எப்படி இருக்கிறதென்று கவியின் கண்ணோடு அனுபவித்துக் கொண்டே வண்டியில் விரைந்தான் அரவிந்தன்.

திண்டுக்கல் சாலையின் அருகில் மேற்கே திரும்பியதும் ஓட்டுநர், “எங்கே போகணுங்க?” என்று இடம் கேட்டான். அரவிந்தன் இடத்தைச் சொன்னான். வேகத்தில் மனம் துள்ளியது. நினைவுகள் உல்லாசத்தில் மிதந்தன. ‘நினைவைப் பதித்து மன அலைகள் நிறைத்துச் சிறுநளினம் தெளிந்த விழி’ என்று வாய் இனிமையில் தோய்த்த குரலை இழுத்துப் பாடியது. மனம் அந்த முகத்தை நினைத்தது. இதழ்களில் குறுநகை நிலவியது.

மங்களேசுவரி அம்மாள் வீட்டு ஓட்டுநருக்கு வீட்டை அடையாளம் காட்டித் திருப்பியனுப்பிய பூரணி வீடு பூட்டியிருப்பது கண்டு திகைத்து நின்றாளல்லவா? அந்த சமயத்தில் இன்னொரு சிறிய வண்டி அவ்வீட்டு வாசலில் வந்து நின்றது.

“பேராசிரியர் அழகியசிற்றம்பலம் அவர்களின் வீடு இதுதானே?”

பூட்டிய கதவைப் பார்த்துக் கொண்டு மலைத்துப் போய் நின்ற பூரணி, விசாரிக்கும் குரலைக் கேட்டுத் திரும்பினாள். திரும்பிய முகத்தைப் பார்த்து அரவிந்தன் ஆச்சரியத்தில் திளைத்தான். அதே முகம். அதே அழகு. நிலவைப் பிடித்துச் சில கறைகள் துடைத்துக் குறுமுறுவல் பதித்த வதனம்! அன்று நண்பகலில் அச்சகத்துக்கு எதிரே தெருவில் மயங்கி விழுந்தபோதே அவன் மனத்திலும் மயங்கி விழுந்த அதே பெண். அவனுக்குக் கவிதை தந்த வனப்பு, கனவு தந்த முகம், கற்பனை தந்த சௌந்தர்யம், அந்த வாசற்படியில் நின்று கொண்டிருந்தது.

“நீங்கள் யார்? உங்களுக்கு என்ன வேண்டும்?” – சிறிது சினத்துடன் கேட்டாள் பூரணி.

“நான் மீனாட்சி அச்சகத்திலிருந்து வருகிறேன். என் பெயர் அரவிந்தன். புத்தகங்கள் வெளியிடுகிற விசயமாகப் பேராசிரியரின் பெண்ணைப் பார்த்துக் கொஞ்சம் பேச வேண்டும்” என்றான்.

சிரித்துக் கொண்டே மறுமொழி கூறிய அரவிந்தன் கையில் ஏட்டுப் புத்தகத்தோடு வாசல் திண்ணையின் மேல் தானாக எடுத்துக் கொண்ட உட்காரும் உரிமையோடும் துணிந்து அமர்ந்துவிட்டான்.

பூரணிக்கு அப்போது ஒரே கசப்பான மனநிலை. ‘உலகத்தில் அத்தனை பேரும் ஏமாற்றுபவர்கள், அத்தனை பேரும் பிறருக்கு உதவாதவர்கள்’ என்கிற மாதிரி விரக்தியும் வெறுப்பும் கொதித்துக் கொண்டிருந்த சமயம். புதுமண்டபத்து புத்தக வெளியீட்டாளர் மேலிருந்த கோபம் அத்தனை புத்தக வெளியீட்டாளர் மேலும் திரும்பியது. அரவிந்தன் வந்த விதம், சிரித்துக் கொண்டே உட்கார்ந்து பேசத் தொடங்கிய விதம் ஒன்றும் இவளுக்குக் கவர்ச்சியளிக்கவில்லை. உதடுகள் துடிக்க, அழகிய முகம் சிவக்க அரவிந்தனை வார்த்தைகளால் சாடினாள் அவள்.

“புத்தகமுமாயிற்று; புடலங்காயுமாயிற்று. புண்ணாக்கு விற்கிறவர்கள் எல்லாம் புத்தகம் வெளியிட வந்துவிடுகிறார்கள். இப்போது யாரையும் நம்ப முடிவதே இல்லை. வரும்போது சிரிக்கச் சிரிக்க அரிச்சந்திரன் போல் உண்மை பேசுகிறார்கள். கடைசியில்  . . .” அவள் முடிக்கவில்லை, அரவிந்தன் இடைமறித்துக் குறுக்கிட்டான். அவன் முகத்தில் சிரிப்பு மாறிவிட்டது.

“நிறுத்துங்கள்; உங்கள் மனநிலை இப்போது சரியில்லை போலிருக்கிறது. இன்னொரு சமயம் வருகிறேன். நீங்கள் தெருவில் மயங்கி விழுந்துவிட்டால், அதற்கு உலகமெல்லாம் பிணை என்று நினைத்துச் சீற வேண்டியதில்லை.” திண்ணையிலிருந்து எழுந்து விறுவிறுவென்று நடந்துபோய் வண்டியில் உட்கார்ந்து கதவைப் படீரென்று அடைத்துக் கொண்டான் அரவிந்தன். வண்டி தூசியைக் கிளப்பிக் கொண்டு விரைந்தது. கோபத்தோடு ஏதோ சொல்ல வாய் திறந்த பூரணி, அந்தச் சொற்களை வாய்க்குள்ளேயே அடக்கிக் கொண்டாள். தான் தெருவில் மயங்கி விழுந்தது இந்த இளைஞனுக்கு எப்படித் தெரியும் என்ற வினா அவள் மனத்தில் பெரியதாய் எழுந்தது. திரும்பினால், திண்ணையில் அவன் உட்கார்ந்திருந்த இடத்திற்கு அருகில் அவன் கையில் கொண்டு வந்த ஏட்டுப் புத்தகத்தை மறந்து வைத்து விட்டுப் போயிருந்தான்.

அதைக் கையில் எடுத்துக் கொண்டு தெருவில் விரைந்து இறங்கி ‘மிசுடர் அரவிந்தன்’ என்று அவள் எழுப்பிய குயிற்குரலின் ஒலி எட்ட முடியாத தூரத்திற்கு, வண்டி போயிருந்தது. அந்த முகமும், அந்தச் சிரிப்பும், காளையைப் போல் நடந்து போய்க் காரில் ஏறிய விதமும், அப்போதுதான் அவள் நினைவை நிறைத்தன. ஒரு கணம்தான்; ஒரே கணம் தான் அந்த நினைவு. அடுத்த வினாடி சொந்தக் கவலைகள் வந்து சேர்ந்தன. பூட்டியிருக்கும் வீடு, தங்கையும் தம்பிகளும் எங்கே போனார்களென்று தெரியாத திகைப்பு, எல்லாம் வந்து அவள் மனத்தில் சுமை பெருக்கி அழுத்தின.

(தொடரும்)

தீபம் நா.பார்த்தசாரதி