(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 15. தொடர்ச்சி)

குறிஞ்சி மலர்
அத்தியாயம்  6 தொடர்ச்சி

 

தரளம் மிடைந்துஒளி
தவழக் குடைந்துஇரு
பவளம் பதித்த இதழ்
முகிலைப் பிடித்துச் சிறு
நெளியைக் கடைந்துஇரு
செவியில் திரிந்த குழல்
அமுதம் கடைந்துசுவை
அளவிற் கலந்துமதன்
நுகரப் படைத்த எழில்


படித்துக் கொண்டே வரும் போது, அந்தப் பெண்ணின் முகத்தைக் கண்களுக்கு முன் கொண்டு வர முயன்றான் அரவிந்தன். குடையும் கையுமாக அவள் அன்னநடை பயின்றதும், பின்பு வீதி நடுவே மூர்ச்சையற்று விழுந்ததும் அவன் கண்ணுக்குள் மறையாக் காட்சிகளாய் நின்றன. அசை போடுவதுபோல் பாட்டை மறுபடியும் மறுபடியும் சொல்லி இன்புற்றான். ‘நான் கூட நன்றாகத்தான் பாடியிருக்கிறேன். என்ன சந்தம், என்ன பொருளழகு’ என்று தனக்குத்தானே பெருமையாகச் சொல்லிக் கொண்டான். அதற்குள் முதலாளியின் அதிகாரக் குரல் அவனை விரட்டியது. ஏட்டுப் புத்தகத்தை ஒளித்து வைத்துவிட்டு உள்ளே ஓடினான்.

“ஏம்பா அரவிந்தா? அந்த நாவல் புத்தகம் ஒண்ணு வேலை செய்ய எடுத்துக் கொண்டோமே ‘அயோக்கியன் எழுதிய அழகப்பனின் மர்மங்கள்‘ என்று . . .”

சார். . . சார். . . தப்பு அழகப்பன் எழுதிய ‘அயோக்கியனின் மர்மங்கள்’ என்பதுதான் சரியான தலைப்பு.”

“ஏதோ ஒரு குட்டிச் சுவரு . . . அது எத்தனை பாரம் முடிந்திருக்கிறது.”

“பத்துப் பாரம் முடித்தாகிவிட்டது.”

“பத்தா! சரி . . . சுருக்கப் பார்த்து விரைவாக முடி. எதற்குச் சொல்கிறேன் என்றால், நானே சொந்தத்தில் பெரிதாக ஒரு வெளியீட்டு வேலை எடுத்துக் கொள்ள நினைத்திருக்கிறேன். அது சம்பந்தமாக நீ கூட இன்று ஓர் இடத்துக்குப் போய் வர வேண்டும். இந்த நாவலை முடித்துக் கொண்டால் வேறு அதிக வேலையின்றி என் திட்டத்திற்கு ஏற்ற மாதிரி ஓய்வாக இருக்கும்.”

“ஓ! அதற்கென்ன சார், இதை இன்னும் இரண்டே நாட்களில் முடித்து விடுகிறோம்.”

பெரியவர் கோபம் தணிந்து அரவிந்தனிடம் நிதான நிலைக்கு வந்திருக்கிறார் என்பதை அவர் பேச்சுக் காட்டியது. எப்போதுமே அவர் இப்படித்தான் காரணமின்றி இரைவார். உடனே தோளில் கைவைத்துப் பேசவும் ஆரம்பித்து விடுவார். சீக்கிரமே கோபம் மறந்து போகும் அவருக்கு. சில சமயத்தில் உரிமையோடு அளவுக்கு மீறி இரைந்து பேசிக் கடிந்து கொண்டாலும் அரவிந்தன் மேல் அவருக்குத் தனி அபிமானமும் பாசமும் உண்டு. அரவிந்தனுக்கு வீடு வாசல் எல்லாம் அதுதான். இரவு பகல் பாராமல் உழைத்துவிட்டு அங்கேயே நாலு நியூசு பிரிண்ட்டு காகிதத்தை விரித்து அதிலேயே படுத்து உறங்கிவிடுகிறவன் அவன்.

‘மீனாட்சி அச்சகம்’ என்ற நகரத்தின் புகழ்பெற்ற அச்சகத்துக்கு மேலாளர், பிழை திருத்துநர், வாசகர், கணக்கு எழுதுபவர் எல்லாம் அரவிந்தன் தான். சமயங்களில் ‘பில் கலெக்டர்‘ கூட அவன் தான். எந்த வேலையை எப்போது எப்படிச் செய்ய வேண்டும் என்று அரவிந்தனுக்கு அத்துபடி. அவனுக்கு நல்ல முகராசி உண்டு. விநயமும் அதிகம். சுறுசுறுப்பு ஒரு நல்ல மூலதனம். அரவிந்தனிடம் அது குறைவின்றி இருந்தது. அவனால் எதையும் செய்யாமல் ஒரு வினாடி கூட இருக்க முடியாது. ஒவ்வொரு வினாடியும் எதையாவது செய்து கொண்டிருக்க வேண்டும் அவனுக்கு. அப்படி ஒரு கூர்மை. அப்படி ஒரு துறுதுறுப்பு.

‘நாட்குறிப்பு’ எழுதுகிற பித்து அவனுக்கு அதிகம். நாட்குறிப்பு என்ற பெயரில் இரண்டு மூன்று பெரிய ஏட்டுப் புத்தகங்களைத் தைத்துக் கட்டிட்டு (பைண்டு செய்து) வைத்துக் கொள்வான். ஒன்றில் பொன் மொழிகளாகக் குறித்து வைத்துக் கொள்வான். இன்னொன்றில் தனக்குத் தோன்றுகிறதை அப்போதைக்கப்போது கிறுக்கி வைத்துக் கொள்வான். மூன்றாவது ஏட்டில் வரவு, செலவு, அச்சக சம்பந்தமான நினைவுக் குறிப்புகள் எல்லாம் இருக்கும். இந்தக் கவி எழுதுகிற கிறுக்கு ஒரு நெறியாகவே அவனைப் பற்றிக் கொண்டிருந்தது. திடீர் திடீர் என்று வரும் அந்த வேகம் எங்கே உட்கார்ந்திருந்தாலும், கையில் எந்தக் காகிதம் கிடைத்தாலும் அந்த வேகத்தை மனத்தில் தோன்றுகிறபடி எழுத்தில் எழுதித் தணித்துக் கொண்டாக வேண்டும். நன்றாக முற்றிவிட்ட ஆமணக்கினால் வெடிக்காமல் இருக்க முடியாது. அதுபோலத் தான் அரவிந்தனின் கவிதை வேகமும். எழுதாவிட்டால் தாங்கிக் கொள்ள முடியாது. அந்த மாதிரி ஓர் அழகிய வேகமாகும் அது. அச்சக முதலாளியின் நாற்காலியில் அவர் இல்லாதபோது உட்கார்ந்து இது மாதிரி ஏதாவது கிறுக்கிக் கொண்டிருப்பான். மறந்து ஏட்டுப் புத்தகத்தை அங்கேயே அவருடைய மேசையில் வைத்து விட நேர்ந்து, எதிர்பாராத சமயத்தில் அவரும் வந்து பார்த்துவிட்டால் இப்படித்தான் வாங்கிக் கட்டிக் கொள்வான். அவரும் ஏதோ கோபத்தில் பேசி விடுவாரேயொழிய மனத்துக்குள் ‘பயல் பிழைத்துக் கொள்வான். கொஞ்சம் மூளைக் கூர் இருக்கிறது. எதை எதையோ கிறுக்கி வைத்தாலும் கருத்தோடு அழகாகக் கிறுக்கி வைக்கிறானே’ என்று அவனைப் பற்றி நினைத்துப் பெருமைப்படுகிறவர்தான்.

மீனாட்சிசுந்தரம் உள்ளே இயந்திரங்களைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தார். அரவிந்தன் மனத்திலோ குடை பிடித்த மங்கையும் குமிண் சிரிப்பு முகமுமாக மத்தியானம் மயங்கி விழுந்த பெண் உலா வந்து கொண்டிருந்தாள். அவன் அங்கிருந்து மெல்ல நழுவினான். மறுபடியும் முன்புற அறைக்கு வந்து ஒளித்து வைத்த ஏட்டுப் புத்தகத்தை எடுத்து முதலில் எழுதியிருந்த கவிதை வரிகளுக்குக் கீழே,

“குடையைப் பிடித்த கரம் – மனக்
கொதிப்பைச் சுமந்த முகம் – பெரும்
பசியில் தளர்ந்த நடை”


என்று பதற்றத்தோடு அவசரம் அவசரமாக எழுதி முடித்தான்.

“கோவிந்தா திரையரங்கினர் ஏதோ சுவரொட்டி அடிக்க வேண்டுமென்றானே; தாள்பேப்பர் அனுப்பினாயா?”

“இல்லை ஐயா, காலையிலே வந்தான், ‘நீங்களே உங்கள் கணக்கில் கடனாகத் தாள் வாங்கி அடித்துக் கொடுத்தால் பின்னால் கொடுத்துவிடுகிறேன்’ என்றான். ‘அதெல்லாம் உனக்குச் சரிப்படாது. சாயங்காலம் தாளோடு வா, இல்லையானால் நீயே ஆர்ட்டு பேப்பர் மாதிரி மழமழவென்று வெளுப்பாயிருக்கே. உன்னையே இயந்திரத்தில் விட்டு அடித்துவிடுவேன்’ என்று பயமுறுத்தி அனுப்பினேன்.”

“சமர்த்துதான் போ. இந்த வாயரட்டைக்கு ஒன்றும் குறைவில்லை.”

அரவிந்தன் மெல்லச் சிரித்துக் கொண்டான். ஃபோர்மேன், அச்சுக்கோப்பவர்கள், இரண்டு டிரெடில்மேன் உட்பட எல்லாரும் அரவிந்தனின் நகைச்சுவையை இரசித்துச் சிரித்துக் கொண்டிருந்தனர். அரவிந்தனின் குறும்புக்கு இணையே இல்லை. யாருடைய குற்றத்தையும் எவருடைய தவறுகளையும் ஒளிவு மறைவின்றிப் பளிச்சென்று நாலுபேருக்கு முன்னால் உடைத்து விடுவான். தன்னிடம் குற்றமோ பொய்களோ போன்ற அழுக்குகள் இல்லாததால் அவனுக்கு மற்றவர்களிடம் பயமே இல்லை. இதனால் எல்லாருக்கும் அவனிடம் பயம். அவனுக்கு முன்னால் தப்புச் செய்ய பயம். தப்பாகப் பேசப் பயம். தீயவை எல்லாவற்றுக்குமே அவன் முன் பயம் தான்.

ஒரு சமயம் தொடர்ந்தாற் போல் ஓர் அச்சுக் கோப்பவன் (கம்பாஸிடர்) ஈய எழுத்துக்களைத் திருடித் தன் உண்கலனில் ( ‘டிபன் பாக்சில்‘) போட்டுக் கடத்திக் கொண்டிருந்தான். அரவிந்தனுக்கு இது தெரிந்துவிட்டது.

மறுநாள் காலை அந்த அச்சுக்கோப்பவன் தன் இடத்துக்கு வந்த போது அங்கே கீழ்வருமாறு, கம்போசு செய்து வைத்திருந்தது.

‘நாலே நாட்களில் 150 ‘க’னாக்களையும் 200 ‘அ’னாக்களையும் 70 ‘லை’யன்னாக்களையும் ‘டிபன்செட்‘ மூலம் கடத்திய தீரனே! இன்று மாலை மூன்று மணிக்குள் அவற்றையெல்லாம் திரும்பக் கொண்டு வருகிறாயா? அல்லது இதற்கு மேல் நீயே ‘கம்போசு‘ செய்து கொள்ளலாம்.’

        அரவிந்தன்

இதைப் படித்துவிட்டு அலறியடித்துக் கொண்டு ஓடி வந்தான் அந்த ஆள். உடனே வீட்டுக்குப் போய் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு அரவிந்தனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். ஒரு திரையரங்குக்காரரிடம் நிறைய பாக்கி விழுந்துவிட்டது. அவருடைய திரைரங்கிற்கு அடித்து அனுப்பிய சுவரொட்டிகளில் அச்சகத்தின் பேர் போடுகிற மூலையில் ‘உங்கள் பாக்கி விசம் போல் ஏறிவிட்டது; கடிதம் எழுதியும் பில் அனுப்பியும் எனக்கு அலுத்துப் போயிற்று. விரைவில் பாக்கியைத் தீருங்கள். வேறு வழியில்லாததால் உங்கள் செலவில் உங்கள் தாளிலேயே இதை அச்சிட்டு அனுப்புகிறேன்’ என்று சிறிய எழுத்துகளில் அச்சிட்டுக் கீழே அச்சகத்தின் பெயரையும் போட்டு அனுப்பிவிட்டான் அரவிந்தன். சுவரொட்டி ஒட்டப்பட்டபோது ஊரெல்லாம் கேலிக் கூத்தாகி விட்டது. மறுநாளே ஓடோடி வந்து பாக்கியைத் தீர்த்துவிட்டுப் போனார் திரையரங்கக்காரர். 
(தொடரும்)

தீபம் நா.பார்த்தசாரதி