மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 20
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 19 தொடர்ச்சி)
குறிஞ்சி மலர்
அத்தியாயம் 8
“நின்னாவார் பிறரன்றி நீயே ஆனாய்
நினைப்பார்கள் மனத்துக்கோர் விபத்தும் ஆனாய்
பொன்னானாய் மணியானாய் போகமானாய்
பூமிமேல் புகழ்தக்க பொருளே உன்னை
என்னானாய் என்னானாய் என்னில் அல்லால்
ஏழையேன் என்சொல்லி ஏத்துகேனே“
– தேவாரம்
“முக்கியமான காரியம் பூரணி. எங்கே, எதற்கு என்று கேட்டுக் கொண்டிருக்காதே. மறுக்காமல் என்னோடு உடனே புறப்படு…” என்று மங்களேசுவரி அம்மாள் வந்து கூப்பிட்டபோது அவளால் அந்த அழைப்பைத் தட்டிக் கழிக்க முடியவில்லை. பழைய வீட்டிலிருந்து சாமான்களை ஒழித்துப் புது வீட்டுக்கு மாற்றும் வேலையைத் தம்பி திருநாவுக்கரசு, கமலா, ஓதுவார்க் கிழவர் ஆகியவர்களிடம் விட்டுவிட்டு அந்த அம்மாளோடு உடனே புறப்பட்டாள் பூரணி.
அன்று அவள் கமலாவிடம் சிரித்துப் பேசிக்கொண்டே புது வீடு பார்த்துவிட்டு வந்தாள். உற்சாகமாக சரவணப் பொய்கைக்குக் குளிக்கப் போனாள். பழைய வீட்டுக்காரர் கொடுத்திருந்த காலத்தவணைக்கு முன்பே அதைக் காலி செய்து விடத் துணிந்தாள். உடல்தான் சுறுசுறுப்பாக இவ்வளவையும் ஊக்கத்தோடு செய்தது. இதழ்களில்தான் சிரிப்பு விளங்கியது. உள்ளம் முழுவதும் வேதனை. உள்ளம் எரிந்தது. அங்கே சிரிப்பு இல்லை. சீற்றம் இருந்தது. அமைதி இல்லை, ஆற்றாமை இருந்தது. உற்சாகம் இல்லை, அழற்றி இருந்தது.
தன்னுடைய எந்தத் துன்பங்கள் தன்னைத் தவிர மற்றவர்களுக்குத் தெரியக்கூடாது என்று அவள் நினைத்தாளோ அவை தெரிந்துவிட்டன; அவளுடைய வீட்டில் பசியும், ஏழ்மையும், பரிவும், வேதனையும் நிறைந்திருப்பதை உலகம் தெரிந்து கொண்டுவிட்டது; உலகம் என்றால் என்ன? கமலம் தெரிந்து கொண்டுவிட்டாள். இந்த அனுதாபத்தைத் தான் காலால் எட்டி உதைக்க நினைத்திருந்தது அவள் மனம். நடைமுறையில் அப்படிச் செய்ய முடியவில்லையே! மிகவும் நெருங்கிப் பழகிய தோழி செய்கிறாள். அந்த உதவியை வாய் கூசாமல் மறுத்துவிட்டு வீட்டுக்குள் அடைந்து பட்டினி கிடக்க அவளுக்கு ஏது உரிமை?
சந்தனக் காட்டில் நெருப்புப் பிடித்த மாதிரி எண்ணங்களை எரித்து அழிக்கும் அந்தத் துக்கத்தில் மனத்துக்கு இதம் அளிக்கும் மனம் ஒன்றும் இருந்தது. அரவிந்தனைப் பற்றிய நினைவுதான் அந்த மனம். அவனைப் பற்றிக் கண்ட கனவுதான் அந்த மனத்தின் சுகம். அவளுடைய நினைவுப் பசும்பயிர்களுக்கு அரவிந்தன் வித்தாக இருந்தான்.
பலவித நினைவுகளோடு மங்களேசுவரி அம்மாளின் வண்டியில் உடன் சென்று கொண்டிருந்த பூரணி தானாக அந்த அம்மாவிடம் எதுவும் பேசவில்லை. தன் சிந்தனைகளின் போக்கிலே மௌனமாக அந்த அம்மாளின் பக்கத்தில் அமர்ந்திருந்தாள். மேற்குப்புறம் உயர்ந்த மண்மேடும் கிழக்குப் புறம் பசுமை போர்த்திய வயல்வெளிகளும் கடந்து மூலக்கரைச் சாலையின் அடர்த்தியில் திரும்பியது வண்டி. வடக்கே ஒரே மாதிரி வரிசை வரிசையாய்த் தெரியும் கற்காரைக் கட்டடங்களுடன் கூடிய ஆலைத் தொழிலாளர் குடியிருப்புத் தோன்றி மறைந்தது. பசுமலையின் பசுமைச் சூழ்நிலைக்குள் புகுந்து மதுரையை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள் அவர்கள். சிறிது தொலைவுவரை ஒருவருக்கொருவர் பேசவில்லை. ஒருவாரத்து உழைப்பின் அலுப்பெல்லாம் கிடந்து உறங்குவது போல் கடைகள் அடைக்கப்பெற்றுச் சோர்ந்து தென்படும் ஞாயிற்றுக்கிழமையின் விடுமுறைத் தளர்ச்சி வீதிகளில் வெளிப்படையாய்த் தெரிந்தது.
மங்களேசுவரி அம்மாள் தான் முதலில் பேச்சைத் தொடங்கினாள். “இப்போது உன்னை நான் எங்கே அழைத்துக் கொண்டு போகிறேன் தெரியுமா?”
“தெரியாது. நீங்கள் சொன்னால்தான் தெரியும் எனக்கு.”
“உனக்கு ஒரு நல்ல வேலை வாங்கிக் கொடுக்கப் போகிறேன். அதாவது வாழ்க்கை விபத்திலிருந்து உன்னைக் காப்பாற்றப் போகிறேன்.”
பூரணி நம்பிக்கை மலரும் முகத்தோடு அந்த அம்மாளைப் பார்த்தாள். வண்டி வடக்கு ஆவணி மூலவீதியில் ‘மதுரை மங்கையர் கழகம்’ என்று எழுதியிருந்த ஒரு பெரிய கட்டடத்தின் முன்பு வந்து நின்றது. “வா உள்ளே போகலாம்” என்று பூரணி பின் தொடர உள்ளே சென்றாள் மங்களேசுவரி அம்மாள். கட்டட வாயிலில் வேறு சில வண்டிகளும் வரிசையாய் நின்றன.
உள்ளே மங்களேசுவரி அம்மாளைப் போலவே பெரிய செல்வக் குடும்பத்தைச் சேர்ந்த முதிய பெண்கள் ஐந்து, ஆறு பேர்கள் அமர்ந்திருந்தனர். மதுரை நகரின் பிரமுகர்களாகவும் வளமுள்ளவர்களாகவும் இருந்த பெரிய மனிதர் வீட்டுப் பெண்கள் அவர்கள். பூரணி அவர்களில் பெரும்பாலோரைப் பல இடங்களில், பல சமயங்களில் பார்த்திருக்கிறாள். தெரிந்து கொண்டிருக்கிறாள். ஆனால் அவர்கள் அவளை இன்னாரென்று தெரிந்து கொண்டிருக்க நியாயமில்லை. ஏழைகளைப் போலத் தராதரமில்லாமல் பணக்காரர்கள் எல்லாவற்றையும் எல்லாரையும் தெரிந்து நினைவு வைத்துக் கொண்டால் பிறகு அவர்களுடைய பெருமையும் கௌரவமும் என்ன ஆவது? “பூரணி! இவர்கள் எல்லாரும் இந்த மங்கையர் கழகத்தின் நிருவாகிகள். இவர்களுக்கு வணக்கம் சொல்லு, அம்மா!” என்று அவள் காதுக்கருகில் மெல்லச் சொன்னாள் மங்களேசுவரி அம்மாள். பூரணி மெதுவாக எல்லாருக்கும் சேர்த்து ஒருமுறை கை கூப்பினாள்.
“நான் சொன்னேனே, அது இந்தப் பெண் தான். காலஞ்சென்ற பேராசிரியர் அழகிய சிற்றம்பலத்தின் பெண் இவள். தமிழ் இலக்கண இலக்கியங்களெல்லாம் முறையாகவும் நன்றாகவும் படித்திருக்கிறாள். ஆங்கிலமும் வேண்டியது தெரியும். நாம் புதிதாகத் தை மாதத்திலிருந்து தொடங்கத் திட்டமிட்டிருக்கும் வகுப்புகளைக் கவனித்துக் கொள்ள இவளையே ஆசிரியையாக நியமித்துவிடலாம் என்று நினைக்கிறேன்” என்று பூரணியையும், அவளை அழைத்து வந்திருக்கும் நோக்கத்தையும் மங்களேசுவரி அம்மாள் ஒன்றாக இணைத்து அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.
“எங்களுக்கு மறுப்பு இல்லை. ஆனால் வயது கொஞ்சமாக இருக்கும் என்று தோன்றுகிறதே?” என்று ஒரு சந்தேகத்தைக் கிளப்பினாள் ஒரு முதிய அம்மாள். மங்களேசுவரி அம்மாளும் இந்தச் சந்தேகத்துக்குச் சுடச்சுடப் பதில் தந்தாள். “வயதில் என்ன இருக்கிறது? இவளோடு சிறிது நேரம் பேசிப் பாருங்கள் தெரியும். உங்களுக்கும் எனக்கும் இத்தனை வயதுக்குப் பின்னும் தெரியாத அவ்வளவு அனுபவ ஞானமும் சிந்தனையும் இவள் பெற்றிருக்கிறாள். இவளுடைய தந்தை இவளுக்குப் பூரணி என்று பெயரிட்டிருக்கிறார். இவளது படிப்பும், அறிவுக் கூர்மையும் அந்தப் பெயருக்குப் பொருத்தமாகவே வாய்த்திருக்கின்றன.”
“நீங்கள் சொன்னால் சரிதான்; விளையாட்டுக்காகவோ பொழுது போக்குக்காகவோ நாம் நமது மாதர் சங்கத்தில் இந்த வகுப்புக்களைத் தொடங்கவில்லை. உண்மையாகவே நல்ல விதமான மாறுதல்களையும், வளர்ச்சியையும் நமது பெண்கள் இதன் மூலம் பெறவேண்டும்.”
மங்களேசுவரி அம்மாளும், மற்றவர்களும் பேச்சில் ஆழ்ந்திருந்த போது பூரணி அமைதியாகவும், அடக்கமாகவும் உட்கார்ந்திருந்தாள். அங்கேயிருந்த பெண்களின் முகங்களையும் தோற்றங்களையும் ஒவ்வொன்றாகப் பார்த்து அவற்றின் மூலம் அவர்களுடைய உள்ளங்களையும் குணங்களையும் அனுமானம் செய்ய முயன்று கொண்டிருந்தாள். அவளைப் போல் கூர்ந்து பார்க்கும் கண்களும், ஆழ்ந்து சிந்திக்கும் மனமும் உள்ளவளுக்கு ஒவ்வொரு முகமும் ஓர் உலகம்; ஒவ்வொரு முகமும் ஒரு சுவை; ஒவ்வொரு முகமும் ஓர் அனுபவம்; ஒவ்வொரு முகமும் ஓர் வாழ்க்கை; ஒவ்வொரு முகமும் ஓர் அழகு; ஒவ்வொரு முகமும் ஓர் புத்தகம்; அவற்றை அவள் பார்த்துப் படித்துச் சிந்தித்து வைத்துக் கொள்ளவேண்டும்.
மங்கையர் கழகத்துக்குள் நுழைகிற இடத்துக்கு நேர் எதிரே தூய்மையே பேருருவெடுத்துப் பெரிதாய் மலர்ந்து சித்திரமானாற் போலச் சாரதாமணி தேவியாரின் படம் மாட்டியிருந்தது. சுவர்களில் விவேகானந்தர், பரமஅம்சர், திருவள்ளுவர் போன்ற வேறு பெரியோர்களின் படங்களும் காட்சியளித்தன. சாரதாமணி தேவியாரின் படத்துக்குக் கீழே பக்கத்துக்கு ஒன்றாக இரண்டு குத்துவிளக்குகள் பொற்சுடர் பூத்து எரிந்து கொண்டிருந்தன. சந்தன வில்லைகளைக் கொளுத்தி வைத்திருந்ததால் கட்டடம் முழுவதும் சந்தனப் புகை மணந்தது. சில பெண்கள் வைத்திருந்த மல்லிகைப் பிச்சிப் பூக்களின் மணமும் அதோடு சேர்ந்து கொண்டது. அந்த மணங்களும், எதிரே புனிதமான சாரதாமணி தேவியாரின் ஓவியமும் பூரணியின் உள்ளத்தை என்னவோ செய்தன. மிகப்பெரியதாக எதையோ உணர்ந்து, எதற்காகவோ தாகம் கொண்டது அவள் உள்ளம். பெண்மைப் புண்ணியமெல்லாம் சேர்ந்து பூத்தது போன்ற சாரதாமணி தேவியாரின் முகத்திலிருந்து எதையோ புரிந்து கொண்டாள் அவள். பழுக்கக் காய்ச்சிய இரும்பு நீரை இழுத்து உறிஞ்சிக் கொள்கிற மாதிரி, அந்த முகத்திலிருந்து ஏதோ சில உணர்வுகளை இழுத்து உட்படுத்திக் கொண்டாள் பூரணி.
“உனக்குத் திருமணம் ஆகிவிட்டதா, அம்மா?” இந்தக் கேள்வி, தன்னை நோக்கிக் கேட்கப்பட்டதும் பூரணி சாராதாமணி தேவியாரின் படம் அளித்த சிந்தனைத் தூய்மைகளிலிருந்து கீழிறங்கிக் கேள்வி கேட்ட அம்மாளின் முகத்தைத் திரும்பிப் பார்த்துப் பதில் கூறினாள்.
“ஆகவில்லை.”
“அப்படியா? வயது நிறைய ஆகியிருக்கும் போல் இருக்கிறதே?”
இந்த மாதிரியே இன்னும் என்னென்னவோ கேள்விகளையெல்லாம் கேட்டார்கள்; செல்வக் குடும்பத்துப் பெண்களின் வாயரட்டைகளுக்கும் வம்புக் கேள்விகளுக்கும் கணக்கு வழக்கு ஏது? அத்தனை கேள்விகளுக்கும் பொறுமையாய்ப் பதில் சொன்னாள் பூரணி. இடையிடையே பூரணிக்காக மங்களேசுவரி அம்மாளே ஏற்றுக்கொண்டும் பதில் சொன்னாள். எல்லாவற்றையும் கேட்டுவிட்டுக் கடைசியாகத் ‘தமிழிலும் ஆங்கிலத்திலுமாக ஒரு பி.ஏ. பட்டம் கூடப் பெறாதவளை எப்படி நாம் இங்கே நியமிப்பது? கல்லூரிகளில் படிக்கும் பெண்கள் கூட நமது மாலை நேரத்து வகுப்புகளில் கலந்து கொள்வார்களே. இவளால் சமாளிக்க முடியுமா?’ என்று புதியதொரு தடையை வெளியிட்டவள் முதலில் பேசிய முதியவள். மங்களேசுவரி அம்மாளுக்கு அடக்க முடியாத கோபம் வந்துவிட்டது.
“பட்டம் மனிதர்கள் கொடுப்பது. நாலைந்து கனத்த புத்தகங்களை ஐந்தாறு ஆண்டுகளுக்குக் கைகளிலும், மனத்திலுமாக மாற்றி மாற்றிச் சுமக்கிற எல்லோருக்கும் அது கிடைக்கும். ஞானம் பிறவியிலேயே வருவது. அதை மனிதர்கள் மட்டுமே தந்துவிட முடியாது. இந்த ஞானம் இந்தப் பெண்ணிடம் குறைவின்றி இருக்கிறது. விருப்பமிருந்தால் இவளை வேலைக்கு எடுத்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் ‘இல்லை’ என்று சொல்லிவிடுங்கள். அதற்காக எதிரே உட்கார்த்தி வைத்துக் கொண்டு இப்படி அவமானப்படுத்துகிறாற்போல் கேள்விகளையெல்லாம் கேட்கவேண்டா” என்று மங்களேசுவரி அம்மாள் பொறுக்க முடியாமல் பதிலுக்குக் குத்தலாகச் சொல்லிக் காட்டிய பின்பே அவர்களுடைய வம்புக் கேள்விகள் நின்றன. அதற்காக அந்த அம்மாளுக்கு மனதுக்குள்ளேயே நன்றி சொல்லிக் கொண்டாள் பூரணி.
அந்த வேலை தனக்கே கிடைத்துத் தானே கற்பிக்கும் பணியை ஏற்றுக்கொண்டால் பட்டம் பெற்றவர்கள் மூக்கில் விரலை வைத்து வியக்கும்படி வகுப்புகளை நடத்திச் சந்தேகப்பட்டவர்கள் முகங்களில் கரி பூசவேண்டும் என்றொரு கொதிப்புக் கலந்த வைராக்கியம் பூரணிக்கு அந்த வினாடியே உண்டாயிற்று. சாரதாமணி தேவியாரின் படத்தைப் பார்த்தவாறே இந்த வைராக்கியத்தை மனத்தில் உண்டாக்கிக் கொண்டாள் அவள்.
மங்களேசுவரி அம்மாளின் செல்வாக்கு வெற்றி பெற்றது. அவருடைய விருப்பத்திற்கு யாரும் குறுக்கே நிற்கவில்லை. பூரணிக்கே அந்த வேலை கிடைத்தது. தைமாதம் முதற்கொண்டு நாள்தோறும் மாலை ஆறுமணியிலிருந்து எட்டுமணி வரையில் அவள் வகுப்புகளை நடத்த வேண்டுமென்றும், அதற்காக அவளுக்கு மாதம் நூறு ரூபாய் சம்பளம் கொடுத்து விடுவது என்றும் முடிவு ஆயிற்று. முதல் தேதியன்று வந்து சந்திப்பதாக மற்றவர்களிடம் கூறி விடைபெற்றுக் கொண்டு மங்களேசுவரி அம்மாளோடு புறப்பட்டாள் பூரணி. வாசலுக்கு வந்து வண்டிக்குள் ஏறிக்கொள்கிறவரை சாரதாமணி தேவியாரின் தெய்வத் திருமுகம் அவள் கண்களுக்கு முன் மலர்ச்சி காட்டிக்கொண்டு நின்றது.
மாதர் சங்கத்திலிருந்து திரும்பியதும், மங்களேசுவரி அம்மாளின் வீட்டில் சிறிது நேரம் கழிந்தது.
“பூரணி! என்னால் முடிந்தவரை சொல்லி வேலையை வாங்கிக் கொடுத்துவிட்டேன். மாதர் சங்கத்தில் எல்லாரும் வம்புக்காரிகள். நன்றாகக் கற்பித்து நல்ல பேர் எடுக்க வேண்டியது உன்னுடைய பொறுப்பு அம்மா.”
“நீங்கள் சொல்லவே வேண்டா. நான் உங்கள் வார்த்தையைக் காப்பாற்றுவேன்.”
அந்த அம்மாளுக்கு உறுதிமொழி அளித்தாள் அவள். மூத்த பெண் வசந்தா மாடியறையில் பியானோ வாசித்துக் கொண்டிருந்தாள். செல்லத்தைத்தான் பூரணி காண முடிந்தது.
“பூரணியக்கா! நீங்க தினம் வந்து பேசிக்கொண்டிருந்து விட்டுப் போனால் நல்லது. இரவிவர்மா படத்திலேயே சரசுவதி முகத்தைப் பார்க்கிறாற்போல் உங்க முகத்தைப் பார்த்துப் பேசினாலே மனம் பரிசுத்தமாகப் போயிடுது” என்று களங்கமின்றிச் சிரித்துக் கொண்டே சொன்னாள் செல்லம்.
(தொடரும்)
Leave a Reply