(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 24 தொடர்ச்சி)

குறிஞ்சி மலர்


அத்தியாயம் 10 தொடர்ச்சி

 

ஆனால் அப்படிச் சொல்ல வாயெழவில்லை. நடுத்தெருவில் திடீரென்று அவளைச் சந்தித்த கூச்சம் தடுத்தது. புன்னகைக்குப் பதிலாகப் புன்னகை மட்டும் செய்தான். பூரணி தனக்குத்தானே நினைத்துப் பார்த்தாள். ‘புது மண்டபத்து புத்தக வியாபாரி உட்பட பெரும்பாலோர், பிறருக்குச் சேரவேண்டிய பொருளையும் தாமே அபகரித்துக் கொண்டு வாழ ஆசைப்படும் இதே உலகில்தான் அரவிந்தனும் இருக்கக் காண்கிறேன். தனக்குக் கிடைக்கிறதையெல்லாம் பிறருக்கே கொடுத்து மகிழும் மனம் இந்த அரவிந்தனுக்கு எப்படித்தான் வந்ததோ?’

மெல்ல நகர்வது போலத் தோன்றினாலும் காலம் வேக வேகமாகத் தான் ஓடியது. மதுரையில் சித்திரை மாதத்தில் வெய்யிலும், திருவிழாக்களும் அதிகம். மங்கையர் கழகத்து வகுப்புகளுக்குப் படிக்க வரும் செல்வக் குடும்பத்துப் பெண்கள் எல்லாம் வெய்யிலுக்குப் பயந்து உதகமண்டலத்தையும், கொடைக்கானலையும் முற்றுகையிட்டிருந்தனர். வகுப்புக்கு ஒரு மாதம் விடுமுறை விட்டிருந்தார்கள். பூரணிக்கு அந்த மாதம் முற்றிலும் ஓய்வு இருந்தது. அரவிந்தனுடைய இடைவிடாத உழைப்பின் பயனாக அந்த மாதம் அவள் தந்தையின் நூல்கள் சில முற்றுப் பெற்று வெளியாயின. நூல்கள் நிறைவேறி வெளியானதும், ஏற்கனவே மனம் புகைந்து கொண்டிருந்த பழைய பதிப்பாளர் மேலும் எரிச்சல் கொண்டார்.

வேனிலைக் கழிப்பதற்காக மங்களேசுவரி அம்மாள் பெண்களை அழைத்துக் கொண்டு கொடைக்கானல் புறப்படும் போது பூரணியையும் வற்புறுத்திக் கூப்பிட்டாள்.

“அப்பாவின் புத்தக வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. நானும் இங்கு உடனிருந்து கவனிக்க வேண்டும். இப்போது வசதிப்படாது. இன்னொரு முறை உங்களோடு கண்டிப்பாக வருகிறேன் அம்மா” என்று சொல்லி அந்த அம்மாவின் அழைப்பை மறுத்துவிட்டாள் பூரணி. இந்த விடுமுறை நாட்களில் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் மாலை வேளையில் அரவிந்தன் திருப்பரங்குன்றத்துக்கு வந்தான்.

இருவரும் மனம்விட்டுப் பேசிக்கொண்டே உலாவப் போனார்கள். தென்புறத்துச் சாலையில் கூத்தியார் குண்டுக் கண்மாய் முடிகிற இடம் வரை நடந்து போய்விட்டுத் திரும்பினார்கள். குன்றில் ஏறினார்கள். திருப்பரங்குன்றத்து மலையில் ஒரு வழக்கம் உண்டு. மலையேறிப் பார்க்க வருகிறவர்கள் அங்குள்ள பாறைகளில் நினைவுக்கு அடையாளமாகவோ என்னவோ, தம் பெயர்களைச் செதுக்கிவிட்டுச் செல்வதுண்டு. இந்த வேலையைச் செய்து காசு வாங்கிக் கொள்வதற்காக உளியும் கையுமாக இரண்டொரு கல் தச்சர்கள் மலையில் திரிவார்கள். பூரணியும் அரவிந்தனும் மலையில் ஏறிப் பார்த்துக் கொண்டிருந்த போது இம்மாதிரி பேர் செதுக்கும் கல்தச்சன் ஒருவன் வந்து அவர்களை நச்சரித்தான்.

“பேர் செதுக்கணுமா? ஐயா பேர். . .”

அரவிந்தன் பூரணியின் முகத்தைப் பார்த்தான். பூரணி சிரித்துக் கொண்டே ஒரு முழு எட்டணா நாணயத்தை எடுத்து அந்தக் கல்தச்சனிடம் கொடுத்தாள்.

“பேர்களைச் சொல்லுங்க அம்மா!”

பூரணியின் முகம் சிவந்தது. அவள் வெட்கம் அடைந்தாள். கீழே கிடந்த ஒரு பழைய அழுக்குத்தாளை எடுத்து அரவிந்தன் – பூரணி என்று பேனாவால் முத்துக் கோத்தாற்போல் எழுதி நாணத்தோடு அந்தத் தச்சன் கையில் கொடுத்தாள். இருபது முப்பது பேர்களைப் பொறிக்கச் சொல்லிவிட்டு இரண்டணாவுக்கும் நாலணாவுக்கும் பேரம் பேசுகிற ஆட்களைத்தான் அந்தக் கல்தச்சன் தன் நடைமுறையில் பார்த்திருக்கிறான். இவர்கள் விந்தையாக அவன் மனத்தில் தோன்றியிருக்க வேண்டும்! அல்லது இவர்களின் இணைப்பும் அழகும் பொருத்தமும் அவன் உள்ளத்தைக் கவர்ந்திருக்க வேண்டும்! வேறு பெயர்களே செதுக்கப் பெறாத ஒரு தனிப் பாறையில் தனிச்சிறப்போடு கூடிய சித்திர எழுத்துக்களில் அந்த இரண்டு பெயரையும் செதுக்கினான் அவன். தச்சன் செதுக்கி முடிந்ததும் அரவிந்தன் பூரணியிடம் கூறினான் – “நம்முடைய பெயர்களை உயர்ந்த இடத்தில் உயர்ந்த விதத்தில் தனியாகச் செதுக்கியிருக்கிறான். பேர் பரவுவதற்காகவும், பேர் நிலைப்பதற்காகவும் எத்தனையோ மனிதர்கள் ஆயிரக்கணக்கில் செலவழித்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்களோ அரை ரூபாய் செலவில் பேரை நிலைக்க வைத்திருக்கிறீர்கள்.”

அரவிந்தன் சிரித்துக் கொண்டே அவள் முகத்தைப் பார்த்து இப்படிச் சொன்னபோது அவளுடைய அந்த செழிப்பான கன்னங்களில், சிரிக்கும் இதழ்களில், மலர்ந்த விழிகளில், பிறை நெற்றியில் எங்கும் நாணம் பூத்து நளினச் சாயம் மணந்தது. பூரணி பலமுறை தன்னை ஒருமையில் ‘நீ, உன்னை’ என அழைத்தால் போதும் என்று வற்புறுத்திச் சொல்லியிருந்தும் அரவிந்தன், ‘நீங்கள், உங்களை’ என்று பன்மையிலேயே அவளை அழைத்துக் கொண்டு வந்தான். மீண்டும் மீண்டும் அவன் அப்படி அநாவசியமாக மரியாதை கொடுக்கும் போதெல்லாம் கடிந்து கொண்டும், அன்புக் கோபம் கொண்டும் பிணங்கியும் பேச மறுத்தும், அவனை வழிக்குக் கொணர்ந்து ஒருமையில் உரிமையோடு கூப்பிடும்படி மாற்றினாள் பூரணி. அவளுடைய அன்புத் தொல்லை பொறுக்க முடியாமல் அரவிந்தனும் அவளை ஒருமையில் உரிமையோடு அழைக்க இணங்க வேண்டியதாயிற்று.

அந்தக் கோடையில் கிடைத்த விடுமுறைக் காலம் இவ்வாறு அரவிந்தனுடன் நெருங்கி மனம் விட்டுப் பேச வாய்ப்பளித்தது பூரணிக்கு. சில நாட்களில் அவர்கள் இரண்டு பேருமாகச் சேர்ந்து திருப்பரங்குன்றம் கோயிலுக்குப் போவார்கள். அப்படிப் போயிருந்த ஒரு நாளில் கோயிலுக்குள்ளேயே உள்ள ஒரு குளத்தின் கரையில் அரவிந்தன் ஒரு கருத்துச் சொன்னான். அந்தக் குளக்கரையில் உப்பும், மிளகும், சர்க்கரையும் சேர்த்து முடிச்சு முடிச்சாகத் தனித்தனியே கட்டி விற்பார்கள். அவற்றை வாங்கித் தண்ணீரில் போட்டால், அவ்வாறு போட்டுப் பிரார்த்தனை செய்கிறவர்களின் பாவங்களும், நோய்களும் கரைந்துவிடும் என்பது பரம்பரையாக இருந்து வரும் முறைமை. பூரணி இரண்டு முடிச்சுகளை வாங்கி ஒன்றைத் தன் கையால் நீரில் கரைத்துவிட்டு மற்றொன்றை அரவிந்தனிடம் நீட்டினாள். “நீயே கரைத்துவிடு. எனக்கு வேண்டாம் பூரணி. நான் சமூகத்தின் பாவங்களையும் நோய்களையும் கரைத்துவிட ஆசைப்படுகிறவன். அவை இந்தச் சிறிய உப்பு முடிச்சைக் கரைப்பதனால் கரைய மாட்டா. அவற்றைக் கரைத்து அழிக்க உயர்ந்த குறிக்கோள்களை வெள்ளமாகப் பெருக்கி வேறோர் இலட்சியக் குளம் தேக்க வேண்டும்” என்று இவ்வாறு சொல்லி அதை மறுத்தான் அரவிந்தன். பூரணி சினம் தொனிக்கும் குரலில், ஆனால் சிரிப்பு நிலவும் முகத்தோடு, “சமூகம், பிரச்சினைகள், ஏழ்மை, வறுமை எப்போது பார்த்தாலும் இதே பல்லவிதானா? அரவிந்தன் இந்தப் பல்லவிகளை மறந்து வேறு எதையேனும் அளவளாவிப் பேசுவதற்குச் சிறிதுகூட நேரமில்லையா உங்களிடம்?” என்று அவனைக் கேட்டாள்.

“என்ன செய்வது பூரணி? நான் பிறந்த வேளை அப்படி” என பதில் சொல்லிவிட்டு மேலே வெறித்துப் பார்த்தான் அரவிந்தன்.

இப்படி எத்தனன எத்தனையோ நிகழ்ச்சிகளின் மூலம்தான் அரவிந்தனை அவள் புரிந்து கொள்ள முடிந்தது. அவ்வாறு புரிந்து கொள்ளப் புரிந்து கொள்ள அவளுடைய சின்னஞ்சிறு பெண்மனம் அவனுடைய பெரிய மனத்துக்குள் கலந்து கரைந்து கவிந்து ஒடுங்கலாயிற்று.

கோடை விடுமுறையெல்லாம் கழிந்து பள்ளிக்கூடங்கள் திறந்து விட்டார்கள். பூரணி, குழந்தை மங்கையர்க்கரசியைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்தாள். தம்பிகள் இரண்டு பேரும் மேல் வகுப்புகளுக்குத் தேர்ச்சிப் பெற்றுப் பள்ளிக்கூடம் போய்க் கொண்டிருந்தார்கள். பள்ளிக்கூடச் சம்பளம், புதிய புத்தகங்கள் என்று செலவு நிறைய ஆகிக் கொண்டிருந்தது. மங்கையர்க் கழகத்தில் தந்த மாதச் சம்பளமும், புத்தகங்கள் விற்ற வருமானமுமாக மாதா மாதம் ஒரு கணிசமான தொகை கிடைத்தாலும் அது போதவில்லை. வரவுக்கும் செலவுக்குமாக இழுத்துப் பறித்துக் கொண்டுதான் காலம் ஓடியது. சில நாட்கள் சில்லரை காசுக்குக் கூட தட்டுப்பாடு இருந்தது. தினசரி மாலையில், நகரத்துக்குச் சென்று திரும்புவதற்கு வண்டிச் செலவு ஆயிற்று. எளிமையான கோலத்தோடு, எளிமையாக வாழத்தான் அவள் விரும்பினாள். மங்கையர் கழகத்து நிருவாகிகளும் மாணவிகளும் ஆடம்பரத்தில் தோய்ந்து தோன்றும் செலவ வளமுள்ளவர்களாக இருந்தார்களாகையினால் அவள் அவர்கள் குறை சொல்லாமல் இருப்பதற்காகவாவது தன்னைச் சிறிது பேணிக் கொண்டாள். இந்தச் செலவுகளையெல்லாம் சமாளித்துக் குழந்தைகளுக்கு வயிறு வாடாமல் வேளைக்கு வேளை கவனித்துக் கொள்ள முடிந்தது. அரவிந்தன் கற்றுக் கொடுத்த பழக்கத்தை அவளும் ஏற்றுக் கொண்டு கடைபிடிக்கலானாள். பலவேளை உணவுகளைத் தன்னளவில் மிகவும் சுருக்கிக் கொண்டாள். அரவிந்தன் அதை இலட்சியத்துக்காகச் செய்தான். அவளுக்கு இல்லாமையே அந்த இலட்சியத்தை அமைத்துக் கொடுத்தது. இல்லாமையே சில வசதிகளைக் குறைத்துக் கொள்ளும் துணிவை அளித்திருந்தது.

(தொடரும்)

தீபம் நா.பார்த்தசாரதி