(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 32 தொடர்ச்சி)

குறிஞ்சி மலர் 13

பாளையாந் தன்மை செத்தும் பாலனாந் தன்மை செத்தும்
காளையாந் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும்
மீளும் இவ்வியல்புமின்னே மேல்வரும் மூப்பும் ஆகி
நாளும் நாம் சாகின்றோமால் நமக்கு நாம் அழாததென்னோ?
      —
குண்டலகேசி


வாழ்க்கையின் பொருளடக்கம் போல் வகையாக வனப்பாக அமைந்த வீதி அது. மேலக் கோபுரத்திலிருந்து மதுரை நகரத்து இரயில் நிலையம் வரையிலுள்ள வீதிக்குப் பகலும் இல்லை இரவும் இல்லை. எப்போதும் ஒரு கலகலப்பு. எப்போதும் ஒரு பரபரப்பு. கையில் கடிகாரத்தையும் மனத்தில் ஆசைகளையும் கட்டிக்கொண்டு எதற்கோ, எங்கோ விரைவாக இயங்கிக் கொண்டிருக்கும் மனிதர்களின் கூட்டம் பெருகியும், தனித்தும், பொங்கியும், புடைபரந்தும், வற்றாமல், வாடாமல் உயிர்வெள்ளம் பாய்ந்து கொண்டிருக்கிற துடிப்பு, சந்தித்து விசாரித்துக் கொள்ளும் குரல்கள், பிரிந்து விடைபெறும் குரல்கள், கடைகளின் வியாபாரம், பேரம் பேசுதல், கார்கள், ரிக்ஷா, குதிரை வண்டிகள் ஓடும் ஒலிகள் – வாழ்க்கையை அஞ்சல் செய்து ஒலி பரப்புவது போல் ஒரு தொனி, இந்த வீதியில் கண்ணை மூடிக் கொண்டு நிற்பவர்களுக்குக் கூடக் கேட்கும்.

அன்று இரவு ஒன்பது மணிக்கு மேல் ஆகியிருந்தது. இந்தக் கலகலப்பான வீதியில் இரு சிறகிலும் பொய்கள் பூத்து மின்னுவதுபோல் விளக்குகள் தோன்றின. மனத்தில் சிந்தனை முறுக்கேறி நிற்கிற சில சமயங்களில் அரவிந்தன் அச்சகத்து வாசலில் நின்று ஒருவிதமான நோக்கமுமின்றிக் கவின்கண்களால் இந்தக் காட்சிகளைப் பருகிக் கொண்டிருப்பது வழக்கம். அன்று அவனால் நெடுநேரம் அப்படி நின்று வீதியின் அழகை அனுபவித்து நோக்க முடியவில்லை. உள்ளே அவன் செய்ய வேண்டிய வேலைகள் நிறையக் கிடந்தன. அன்று காலையில் தான் அவன் வெளியூரிலிருந்து வந்திருந்தான். ஏறக்குறைய நண்பகல் வரை திருப்பரங்குன்றம் சென்று பூரணியைப் பார்த்துவிட்டுத் திரும்புவதில் நேரம் கழிந்துவிட்டது. பின்பு மாலையில் அச்சக உரிமையாளர் மீனாட்சிசுந்தரத்தோடு வரவு செலவுக் கணக்கு, புதிய அச்சு இயந்திரங்கள், இவைபற்றிப் பேசிக் கொண்டிருந்து விட்டான். திருத்த வேண்டிய அச்சுப் படிகள் குவிந்திருந்தன. உடனிருந்து அச்சுப் படிகளை ஒப்புநோக்கிப் படிப்பதற்கும் உதவுவதற்கும் முருகானந்தத்தை வரச் சொல்லியிருந்தான் அவன். இரவு ஒன்பது மணிக்கு மேல் முருகானந்தத்தையும் துணைக்கு வைத்துக் கொண்டு இரண்டு மணி நேரம் விழித்திருந்து வேலைகளை முடிக்கலாம் என்று திட்டமிட்டிருந்த அரவிந்தன் முருகானந்தத்தின் வரவை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தான்.

முருகானந்தம் தையல் கடையைப் பூட்டிவிட்டுச் சாவிக் கொத்தை விரலில் கோத்துச் சுழற்றிக் கொண்டே வந்து சேர்ந்த போது மணி ஒன்பதே முக்கால்.

“இங்கே வேலை முடிய அதிக நேரம் ஆகும். நீ சாப்பிட்டாயிற்றா முருகானந்தம்?” என்று கேட்டான் அரவிந்தன்.

“அதெல்லாம் வரும்போது உணவகத்தில் முடித்துக் கொண்டு தான் வந்தேன். உன்னை நம்பி இங்கே வந்தால் நீ நாலு நிலக்கடலைப் பருப்பையும் பாதி வாழைப் பழத்தையும் கொடுத்துப் பட்டினி போடுவாய். முன்னெச்சரிக்கையாக நானே சாப்பாட்டை முடித்துக் கொண்டு வந்துவிட்டேன். படுக்கை இங்கே தான். வீட்டுக்குச் சொல்லியனுப்பியாயிற்று” என்று சிரித்துக் கொண்டே பதில் கூறினான் முருகானந்தம். அவனுடைய வீடு பொன்னகரத்தின் நெருக்கமான சந்து ஒன்றில் இருந்தது. முருகானந்தத்தின் குடும்பத்தில் அத்தனை பேரும் உழைப்பாளிகள். தாயார், தகப்பனார், சகோதரி மூவருக்கும் ஆலையில் வேலை. அவன் தான் அந்த வழியிலிருந்து சிறிது விலகித் தையல் கடை வைத்திருந்தான். உள்ளங்கை அகலத்துக்கு ஓர் இடத்தில் ஒரே தையல் இயந்திரத்தோடு அந்தக் கடையைத் தொடங்கினான் அவன். தொடக்கத்தில் அளவு எடுப்பதிலிருந்து பித்தான்களுக்குத் துளை போடுவதுவரை எல்லா வேலைகளையும் ஒரே ஆளாக இருந்துகொண்டு செய்தவன், திறமையாலும் சுறுசுறுப்பாலும் படிப்படியாக வளர்ந்து இன்று தன்னோடு இரண்டு தையற்காரர்களை உடன் வைத்துக் கொண்டு வேலை வாங்குகிற அளவு முன்னேறியிருந்தான். ஒவ்வோர் ஊரிலும் குறிப்பிட்ட தொழிலில் பலர் இருந்தாலும் சிலருக்குத்தான் அந்தத் தொழிலில் பெரும் புகழும் வந்து பொருந்தும். மதுரையில் அத்தகைய பேரும் புகழும் பொருந்திய சில தையற்காரர்களில் முருகானந்தம் முதன்மை பெற்றிருந்தான்.

அரவிந்தனின் நட்பும், பழக்கமும் முருகானந்தத்திற்குத் தமிழ்ப் பற்றும் அறிவு உணர்ச்சியும் அளித்திருந்தன. ஆவேசம் நிறைந்த மேடைப் பேச்சாளனாகவும் அவன் உருவாகியிருந்தான். பொன்னகரம், பிட்டுத்தோப்பு, ஆரப்பாளையும், மணிநகரம் ஆகிய பகுதிகள் மதுரை நகரத்தின் உழைக்கும் மக்கள் பெரும்பாலோர் வசிக்கும் இடம். கைகளில் உழைப்பும், மனத்திலும் வீட்டிலும் ஏழ்மையுமாக வாழும் அந்தத் தொழில் உலகத்தில் முருகானந்தம் ஒரு பிரமுகர் போல் மதிப்புப் பெற்றிருந்தான். இத்தனை சிறு வயதில் அவ்வளவு பெருமை வருவதற்குக் காரணம் அவன் மற்றவர்களோடு பழகுகிற எளிய முறைதான். கூசாமல் எங்கே துன்பத்தைக் கண்டாலும் புகுந்து உதவுகிற மனம், எந்த இடத்திலும் யாருக்கு அநியாயம் இழைக்கப்பட்டாலும் தனக்கே இழைக்கப்பட்டது போல் உணர்ந்து குமுறிக் கொதிக்கிற பண்பு, சுற்றித் திரிந்து பல இடங்களில் அலைந்து பலரோடு பழகும் இயல்பு, இவற்றால் முருகானந்தம் உழைக்கும் மக்கள் நிறைந்த பகுதியில் அப்படி ஒரு செல்வாக்கைப் பெற்றிருந்தான். வெளியில் இவ்வளவு செல்வாக்குப் பெற்றிருந்த அவன் அரவிந்தனிடம் பழகிய விதமே தனிப்பட்டது. கருத்துகளையும் இலட்சியங்களையும் கற்கும்போது ஆசிரியனுக்கு முன் பணிவான மாணவனைப் போல் அவன் பழகினான். நண்பனாகப் பழகும்போது தோளில் கைபோட்டுக் கொண்டு உரிமையோடு பழகினான். உதவி செய்ய வருகிறபோது வேலைக்காரனைப் போல் கூப்பிட்டவுடன் வந்து உதவினான். ஆனால் அரவிந்தனுக்கும் முருகானந்தத்துக்கும் உள்ள வேறுபாடு இலட்சியங்களைச் செயல்படுத்துகிற விதத்தில் இருந்தது. ஒழுங்கையும் மனத் திடத்தையும் கொண்டு இலட்சியங்களை நிறைவேற்ற ஆசைப்பட்டான் அரவிந்தன். முரட்டுத்தனத்தையும் உடல் வன்மையையும் கொண்டு இலட்சியங்களை உருவாக்க ஆசைப்பட்டான் முருகானந்தம். அதற்கேற்ற உடல்கட்டும் அவனுக்கு இருந்தது.

அரவிந்தனுக்கு அச்சுப் படிகள் படித்துத் திருத்துவதற்கு உதவும் நாட்களில் இரவில் நீண்ட நேரம் வரை கண்விழிக்க வேண்டியிருக்குமாகையால் முருகானந்தம் அவனோடு அச்சகத்திலேயே படுத்துக் கொண்டுவிடுவான். வேலை முடிந்து படுத்துக் கொண்ட பிறகும் படுக்கையில் கிடந்தவாறே பல செய்திகளைப் பற்றிப் பேசிவிட்டுக் கண்கள் சோர்ந்த பின்பே அவர்கள் உறங்குவார்கள். அன்றைக்கோ அவர்கள் உள்ளே போய் உட்கார்ந்து வேலையைத் தொடங்கும்போதே ஏறக்குறைய இரவு பத்துமணி ஆகிவிட்டது. இரண்டாவது ஆட்டம் திரைப்படத்துக்குப் போகிற கூட்டமும், முதல் ஆட்டம் விட்டு வருகிற கூட்டமுமாக வீதி பொலிவிழக்காமலிருந்தது.

“நீ கொஞ்சம் விரைவாகவே வந்துவிடுவாய் என்று எதிர்பார்த்தேன். நேரமாக்கிவிட்டாய் முருகானந்தம்… இந்தா, இதை நீ வைத்துக்கொண்டுப் படி. நான் சரி பார்க்கிறேன். முடிந்த வரை பார்த்துவிட்டுப் படுக்கலாம்” என்று சொல்லிவிட்டுக் கையெழுத்துப் படிகளாகிய மூலத்தாள்களை முருகானந்தத்திடம் கொடுத்தான் அரவிந்தன்.

அவற்றைக் கையில் வாங்கிக் கொண்டு “தையல் கடையில் இன்றைக்கு ஒரு வம்பு வந்து சேர்ந்தது. துணியைத் தைத்துக் கொண்டு கடன் சொல்லுகிறவர்களையும் பேரம் பண்ணுகிறவர்களையும் அதிகம் பார்த்திருக்கிறேன். காலையில் ஒரு வெளியூர் மனிதன் தைத்த துணியை வாங்கிக் கொண்டு போகிற போது ‘மணிபர்சை’ மறந்து வைத்துவிட்டுப் போய்விட்டான். வாங்கிக் கொண்டு போக வருவானோ என்று நானாகவே சிறிது அதிக நேரம் காத்திருந்தேன். வழக்கமாக வருகிற மனிதனுமில்லை அவன். ஆனால் எனக்குக் கடையின் நாணயமோ, பேரோ கெட்டுவிடக் கூடாதென்று பயம். அதுதான் காத்துப் பார்த்தேன். ஆள் வரக்காணோம். பையைத் திறந்து பார்த்தால் ஏதோ கடிதம், புகைப்படங்கள். இரண்டு மூன்று நூறு உரூபாய்த் தாள்கள் எல்லாம் இருக்கின்றன. அதற்காகவே வழக்கமாகக் கடைப் பூட்டுகிற நேரத்துக்கு மேலும் திறந்து வைத்துக் கொண்டு இருந்தேன். இல்லாவிட்டால் ஒன்பது மணிக்கே இங்கு வந்திருப்பேன்” என்று தாமதத்துக்குக் காரணம் சொன்னான் முருகானந்தம்.

“சரி… சரி… நீ படிக்க ஆரம்பிக்கலாம். இன்னும் ஏதாவது கதையளந்து நேரத்தை வீணாக்காதே” என்று அரவிந்தன் துரிதப்படுத்தவே முருகானந்தம் பேச்சை நிறுத்திவிட்டுப் படிக்கத் தொடங்கினான். பூரணியின் தந்தை பேராசிரியர் அழகிய சிற்றம்பலம் எழுதிய ‘தொல்காப்பியர் காட்டும் வாழ்க்கை நெறி’ என்னும் புத்தகத்துக்கான அச்சுப்படிதிகள் அவை. முதல் திருத்தத்துக்கான காலி புரூஃப்கள்.

(தொடரும்)

தீபம் நா.பார்த்தசாரதி

குறிஞ்சி மலர்