(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  38 தொடர்ச்சி)

குறிஞ்சி மலர்
15

“மங்கைய ராகப் பிறப்பதற்கே – நல்ல
மாதவம் செய்திடல் வேண்டும் அம்மா
பங்கயக் கைநலம் பார்த்தலவோ – இந்தப்
பாரில் அறங்கள் வளரும், அம்மா!”
      — கவிமணி

பூரணி கொண்டு வந்த தந்தியை முருகானந்தம் படித்தான். தன்னிடமிருந்த புகைப்படங்களையும் வசந்தா கைப்பட எழுதிய கடிதத்தையும் காட்டி அவளுக்கு விளக்கிச் சொன்னான்.

“திரைப்படத்தில் கதாநாயகியாய் நடிக்க வாய்ப்பு உண்டாக்கித் தருவதாக இப்படி எத்தனை பேரை ஏமாற்றிப் பணம் பறித்திருக்கிறானோ அந்த ஆள்? அவனுடைய போதாத வேளை; இங்கே மதுரையில் என்னிடம் உடைகள் தைத்து வாங்கிக் கொண்டு இந்த மணிபர்சையும் மறந்து வைத்துவிட்டுப் போய்விட்டான். இந்தத் தடவை நிச்சயமாக அகப்பட்டுக் கொண்டு கம்பி எண்ணப் போகிறான் பாருங்கள். அக்கா. . . நான் இவனைச் சும்மா விடப்போவதில்லை. எப்படியாவது கண்டுபிடித்து உள்ளே தள்ளப் போகிறேன்” என்று மணிபர்சின் மைக்கா உறைக்குள் இருந்த ஆணின் படத்தை பூரணிக்குக் காட்டிச் சினமாகப் பேசினான் முருகானந்தம். அப்போது அருகிலிருந்த அரவிந்தன் பூரணியின் முகத்தை நோக்கி முறுவல் செய்தவாறு கேட்கத் தொடங்கினான்:

“நீ என்னவோ நாள் தவறாமல் தமிழ்நாட்டுப் பெண்மையின் சிறப்பையும் பண்பாட்டையும் பற்றி உங்கள் மங்கையர் கழகத்தில் சொற்பொழிவுகள் செய்வதாகச் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்கிறாய்! வளர்கின்ற தலைமுறையைச் சேர்ந்த புதுப்பெண்கள் எப்படி இருக்கிறார்கள் பார்த்தாயா? தொட்டியில் வளரும் குரோட்டன்சு செடி மாதிரி வேரூன்றிக் கொள்ள இடமில்லாமல் வெறும் கவர்ச்சி மட்டும் நிறைந்த வாழ்க்கைக்கு ஆசைப்பட்டுப் பதிவின்றி வாழ்கிறார்களே! திரைப்படத்தில் நடிக்க இடம் வாங்கித் தருகிறேன் என்றவுடன் படிப்பு, குடும்பப் பெருமை, செல்வாக்கு எல்லாவற்றையும் காற்றில் பறக்க விட்டுவிட்டு முன்பின் தெரியாத ஆணுடன் கிளம்புகிற அளவுக்கு அசடாய்ப் பைத்தியமாய் நிலையிழந்து ஓடலாமா ஒரு பெண்? பாதி வழியில் ஏமாந்து, பணத்தைப் பறிகொடுத்துவிட்டுத் திரும்பி வரச் செலவுக்கு இல்லாமல் பெற்றவளுக்குத் தந்தி கொடுக்க வெட்கமாக இராதா ஒரு பெண்ணுக்கு! தப்பு செய்த மனமும் கைகளும் அதற்காகக் கூச வேண்டாமோ?”

“பெண் தன்னைப் பற்றி அதிகக் கவலை கொள்ள நேராமல் சமூகத்தின் பொது அறங்களே அவளுடைய நிறைக்குக் காவலாகி அவளைக் காத்த காலத்தில் கூட அவளுக்கு அந்தக் கூச்சமும் வெட்கமும் இருந்தது! ஆனால் இன்றோ சமூகத்தின் பொது அறங்கள் மாறி வளர்ந்துவிட்டன. பெண் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டிய காலம் இது. அசட்டு ஆசைகளால் ஏமாறக்கூடாது. ஆனால் இவள் ஏமாந்துவிட்டாள். நான் கருத்துகளைக் கூறும் முறையிலும், சொற்பொழிவு செய்வதிலும் கேட்பவர் பின்பற்றத் தூண்டும் சக்தி குறைவு என்பதற்கு இது ஒரு அடையாளமோ என்று தோன்றுகிறது அரவிந்தன்! என் ஆற்றலை நான் இன்னும் அதிகப்படுத்திக் கொள்ளவேண்டும்” என்றாள் பூரணி. அரவிந்தனுடைய அந்தப் பேச்சு, ‘பிறருக்கு வழிகாட்டியாகிற ஆற்றலை உன்னிடம் நீ இன்னும் அதிகமாகத் தூண்டிவிட்டுக் கொள்ளவேண்டும்’ என்று தன்னை மென்மையாகக் குத்திக் காட்டியது போல் தொனித்தது பூரணிக்கு. இந்தப் பேச்சை இதற்கு மேல் வளர்க்காமல், “நானும் அந்த அம்மாளும் காரில் திருச்சிக்குப் புறப்படுகிறோம். எங்களோடு உங்கள் இருவரில் யாராவது ஒருவர் உடன் வந்தால் நல்லதென்று அந்த அம்மா கருதுகிறார்கள்” என்று நடக்கவேண்டிய காரியத்தை அவசரப்படுத்திக்கொண்டு சொன்னாள் பூரணி.

“முருகானந்தம்! நீ இவர்களோடு திருச்சிக்குப் போய்விட்டு வா. தையற்கடைச் சாவியை என்னிடம் கொடுத்துவிட்டுப் போ. கடை வேலையாட்கள் வந்தால் நான் சாவியைக் கொடுத்து விடுகிறேன்” என்று முருகானந்தத்தைப் புறப்படச் சொன்னான் அரவிந்தன்.

“நான் எதற்கு அரவிந்தன்? அந்த அம்மாவும் பூரணியக்காவும் போனால் போதுமே. துணைக்கு வண்டியோட்டி இருப்பான்.”

“இல்லை, நீ கட்டாயம் போக வேண்டும். ஏதாவது வம்பு வந்தாலும் சமாளிப்பதற்கு நீதான் சரியான ஆள். மறுக்காமல் போய்விட்டு வா. கார் பெரியது. மணிக்கு ஐம்பது கல் போனால் எப்படியும் பகல் பன்னிரண்டு மணிக்குள் திரும்பி விடலாம்.” அரவிந்தன் இவ்வாறு வற்புறுத்தவே முருகானந்தத்தால் தட்டிக் கழிக்க முடியவில்லை. தையற்கடைச் சாவியைக் கொடுத்துவிட்டுப் புறப்பட்டான். போகும்போது பூரணி அரவிந்தனிடம் கூறினாள்:

“நீங்கள் ஓர் உதவி செய்யவேண்டும் அரவிந்தன். முடிந்தால் இந்தப் பையனைத் தேடிப் பிடித்துக் கொண்டு வந்து கண்டிக்க வேண்டும். எக்கேடு கெட்டுப் போகட்டும் என்றுதான் பேசாமல் இருக்க முயன்றேன். ஆனால் மனம் கேட்கவில்லை. உடன்பிறந்த பாசம் எதையாவது நினைத்து வேதனைப்படச் சொல்கிறது”

“யார், உன் தம்பி திருநாவுக்கரசைப் பற்றித்தானே சொல்கிறாய். நான் பார்த்து அழைத்து வருகிறேன். நீ போய் வா” என்றான் அரவிந்தன்.

பூரணியையும் முருகானந்தத்தையும் அனுப்பிவிட்டு உள்ளே வந்து அமர்ந்தான் அரவிந்தன். முதல்நாள் மாலைக்குப் பின் நடந்த நிகழ்ச்சிகளை ஒவ்வொன்றாய் எண்ணிப் பார்த்தபோது அவன் உள்ளம் தெளிவிழந்து தவித்தது. பூரணியின் தம்பி கெட்ட பழக்கங்களால் இப்படி ஆகிவிட்டானே என்று நினைக்கும் போது துயரமும் கவலையும் கொண்டான். அச்சகத்தின் பின்பக்க வழியாக நெருப்பு வைக்கும் தீயநினைவோடு வந்து போன ஆளை எண்ணியபோது பொறாமையின் சிறுமையை எண்ணி வேதனை கொண்டான். தாயைக் கதிகலங்கச் செய்துவிட்டுப் பணத்தோடு ஓடிப்போன மங்களேசுவரி அம்மாளின் பெண்ணைப் பற்றி எண்ணியபோது அனுதாபமும் இரக்கமும் உற்றான். குழப்பமான மன நிலையோடு அறையிலிருந்தவாறே வெளியே நோக்கின அவன் கண்கள். எதிரே சன்னலுக்கு நேர் கிழக்கே பூமியைப் பிளந்துகொண்டு மேலெழுந்து நிற்கும் சத்தியம்போல் கோபுரம் விடியற்காலை வானத்தின் பின்னணியில் அற்புதமாய்த் தெரிந்தது. கூடலழகப் பெருமாள் கோயிலுக்கு வைகை நதியிலிருந்து திருமஞ்சன நீர் சுமந்து செல்லும் யானையின் மணியோசை காலைப்போதின் அமைதி கவிந்த வீதியெல்லாம் நிறைத்துக் கொண்டு ஒலிப்பது போல் அழகாக ஒரு பிரமை. எதிர்ப்பக்கம் ஒரு வீட்டு மாடியிலிருந்து சங்கீதம் பழகும் இளம் பெண் ஒருத்தி உலகத்தின் இன்பமயமான சௌந்தர்ய சக்திகளையெல்லாம் தட்டி எழுப்புவது போல் வீணையையும் தன் குரலையும் இனிமைக்கெல்லாம் இனிமையான ஒரு பேருணர்வில் குழைத்து உதயராகம் பாடிக்கொண்டிருந்தாள். குழாயடியில் குடங்கள் மோதும் விகாரமான ஓசையும் வாய்கள் மோதும் வசைமொழிகளுமாக இது மண்ணுலகம் தான் என்று நினைவுபடுத்துகிறார்போல் ஓர் அடையாளம் அற்புதமான இந்த வைகறைச் சூழ்நிலையில் மலர்வதற்குத் துடிக்கிற அரும்புகள் போல் அவன் மனத்தில் சில நினைவின் அரும்புகள் முறுக்கு நெகிழ்ந்தன. சட்டைப் பையிலிருந்து எப்போதும் தன்னிடம் இருக்கும் சிறிய திருக்குறள் புத்தகத்தை எடுத்துப் பிரித்தான். அந்தச் சமயத்தில் தன் மனத்தில் அரும்பியிருந்த சிந்தனைகளுக்கு ஏற்ற சில குறட்பாக்களைத் தேடிப் படித்து அவற்றின் உணர்வில் ஆழ்ந்தான். இந்த மாதிரி மனநிலை அடிக்கடி உண்டாகும் அவனுக்கு. சித்தப்பிரமை பிடித்த மாதிரி உட்கார்ந்திருப்பான். சில வேதனை நிறைந்த சிந்தனைகளின் போது கண்கள் கலங்கி விடுவதும் உண்டு. இப்படிப்பட்ட உருக்கமான மனநிலை முற்றும் போது அவன் மன விளிம்பில் கவிதைகளுக்கான செழிப்புள்ள சொற்கள் ஒன்றுகூடி உருவாகி வெளிவரத் துடிக்கும். கருவிலிருந்து வெளிவரத் துடிக்கும் நிறைமாதத்துக் குழந்தைபோல் இந்த வேதனை அவனது மனத்தின் இரகசியம். இத்தகைய சிந்தனைச் சூழ்நிலையில் உள்ளத்தின் மலர்ச்சியையும் சேர்த்து அவன் முகத்தில் பார்க்கலாம். கையைக் கட்டிக்கொண்டு நிமிர்ந்து நிற்கிறாற்போல் மலர்ந்த முகத்தோடு ஒரு விவேகானந்தர் படம் பார்த்திருப்பீர்களே! அந்த முகத்தில் உங்களைக் கட்டுப்படுத்தி நிற்க வைத்துவிடுகிற ஏதோ ஒரு களை இருக்கும். சிந்தனையில் பார்க்கும் போது அரவிந்தனின் முகத்தில் நிலவும் ஒளி இந்த வகையைச் சேர்ந்ததுதான்.

மூழ்கிச் சிந்திக்கிறபோது உடம்பில் வேர்க்கும் அவனுக்கு. ஆனால் அந்த சிந்தனை முடிகிறபோதோ, காயரும்பாக இருந்த பிச்சிமொட்டு இறுக்கம் நெகிழ்ந்துபோய் பிச்சிப்பூவாக மலர்கின்றபோது மணக்குமே ஓர் அற்புத மணம், அதுபோல் மணக்கும் அவன் உள்ளம். மணத்தின் சிறப்பால் மோர்ந்து பார்க்கிறவர்களையெல்லாம் பித்துக்கொள்ளச் செய்வதனால்தான் இந்தப் பூவுக்குப் பிச்சி, பித்திகை என்று பெயர் வந்திருக்கலாமோ? என்று அரவிந்தன் நினைப்பான். இந்தப் பூ அருகில் இருக்க வேண்டுமென்பதில்லை. இதன் மணத்தைப் பற்றி நினைத்தாலே உள்ளம் துள்ளும் அவனுக்கு. ‘கடவுள்’ உலகத்தைப் படைக்கும்போதே இன்ன இன்ன துர்நாற்றங்கள் உலகத்தில் உண்டாகலாம் என்பதை அனுமானம் செய்துகொண்டுதான் உலகத்தில் மணமுள்ள பூச்செடிகளைப் படைத்தார் என்று கற்பனை செய்து அரவிந்தன் ஓர் அழகான கவிதை எழுதியிருந்தான். எப்போதோ அதை அவனுடைய ஏட்டுப் புத்தகத்தில் படித்துவிட்டுப் பூரணி அவனை ஒரு கேள்வி கேட்டாள்.

“இன்னோர் அபூர்வமான அழகு உங்களுக்குத் தெரியுமா அரவிந்தன்? அப்பா தமிழ்ச் சொற்களின் ஒலி வனப்புப் பற்றி ஓர் ஆராய்ச்சி நூலை எழுதிக் கொண்டிருந்தபோதே எனக்கு இந்த உண்மையைச் சொல்லிக் கொடுத்தார். ‘பூ, மலர்’ இந்த இரண்டு தமிழ் வார்த்தைகளில் எதைச் சொல்லிப் பார்த்தாலும், சொல்வதற்காக வாய் திறக்கும் போது உங்கள் உதடுகளே பூ மலர்வதுபோல் மலர்ந்து பிரியும். ப, ம இந்த இரண்டு எழுத்துக்களையும் உதடு மலராமல் சொல்லவே முடியாது.”

(தொடரும்)

தீபம் நா.பார்த்தசாரதி

குறிஞ்சி மலர்