(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  55 தொடர்ச்சி)

குறிஞ்சி மலர்

20 தொடர்ச்சி


அவள் துன்பப்பட்டிருக்கிறாள்! பொறுப்புகளைச் சமாளித்திருக்கிறாள். வாழ்க்கை வீணையின் நரம்புகளில் எல்லாவிதமான துன்ப நாதங்களையும் கேட்டிருக்கிறாள். ஆனால் அவற்றால் மூப்புக் கொண்டு அழிந்து விடவில்லை. தன்னுடைய உடம்பைப் பேண நேரமின்றி, பேணும் நோக்கமும் இன்றித் தன்னையே மறந்துவிட்டிருந்தாள் அவள். ஆனால் உடம்பு அவளை மறந்துவிடவில்லை.

கண்ணாடியில் உடம்பைக் கண்டு கொண்டே மனத்தில் சிந்தனைகளைக் காண்பது சுகமாக இருந்தது. சமையற்கார அம்மாள் வந்து ‘மருந்து சாப்பிட வேண்டிய நேரம்’ என்று நினைவுபடுத்திய போது தான் பூரணி இந்த உலகத்துக்குத் திரும்பி வந்தாள். மதுரையில் அவள் உடல்நிலையைப் பரிசோதித்துக் காற்று மாற வேண்டுமென்று கூறிய மருத்துவர், ஏதோ ‘டானிக்‘குகள், மாத்திரைகள் எல்லாம் நிறையக் கொடுத்து அனுப்பியிருந்தார். பழங்கள், காய்கறி, கீரை, காய்ச்சின பால் எல்லாம் நிறையச் சாப்பிட வேண்டுமென்பதும் அவர் கூறி அனுப்பியிருந்த அறிவுரை. மருத்துவர் அறிவுரைகளுக்கு ஏற்பப் பூரணியைக் கவனித்துக் கொள்கிற பொறுப்பு வசந்தாவிடமும் சமையற்கார அம்மாளிடமும் விடப்பட்டிருந்தது.

பூரணி உள்ளே போய் மருந்தைச் சாப்பிட்டுவிட்டு மறுபடியும் சாய்வு நாற்காலியில் வந்து சாய்ந்து கொண்டாள். கடல் கடந்தும் நெடுந்தொலைவுக்குப் பயணம் செய்தும், ஆற்ற வேண்டிய அந்த சொற்பொழிவுகளை, ஏற்றுக் கொள்ளலாமா வேண்டாமா என்பதைத் தனக்கு மிகவும் அந்தரங்கமான எவரிடமாவது கலந்தாலோசித்து முடிவு செய்தால் நன்றாக இருக்குமென்று அவளுக்குத் தோன்றியது.

இந்தச் சமயத்தில் அரவிந்தன் அருகில் இருந்தால் அவரைக் கேட்டுக் கொண்டு முடிவு செய்யலாம். என்னுடைய காரியங்களைத் திட்டமிடும் உரிமையைத் துணிந்து அவரை நம்பிக் கொடுத்து விடலாம் என்று எண்ணினாள் அவள். அடுத்த கணமே அவளுக்கு இன்னொரு விந்தையான நினைவும் எழுந்தது.

‘இந்த அரவிந்தனிடம் அப்படி என்ன ஆற்றல் இருக்கிறது? எனக்காக நான் எதைச் சிந்தித்தாலும் அந்தச் சிந்தனையின் நடுவில் என் உடம்பிலும் நெஞ்சிலும் சரிபாதி பங்கு கொண்டவர் போல் இவர் ஏன் நினைவுக்கு வருகிறார்? அரவிந்தன் என்னுடைய ஊனிலும், உயிரிலும், அதனுள் நின்ற உணர்விலும் எல்லாவற்றிலும் நீங்கள் எப்போது கலந்து உறைந்தீர்கள்? எப்படிக் கலந்து உறைந்தீர்கள்? நானே தெரிந்து கொள்ள முடியாமல் எனக்குள்ளே வந்து நல்லனவும் தீயனவும் பகுத்துணரும்படி என்னைச் சிந்திக்க வைக்கிறீர்களே!’ என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டாள். ‘ஆணுக்கும் பெண்ணுக்கும் எண்ணங்களின் கலப்பில் உண்டாகும் தெய்வீகப் பேருணர்ச்சியாகக் கவிகள் பாடி வைத்திருக்கிறார்களே, அந்த உணர்ச்சியைத்தான் இந்த அரவிந்தனிடம் நான் காண்கிறேனோ’ – இப்படி நினைத்தபோது பூரணிக்கு மெய்சிலிர்த்தது. மலர்கின்ற தாமரையைப் போல் இதயத்தில் ஏதோ ஒரு உணர்வு விகசித்தது.

‘எப்போதோ ஒரு பிறவியில் இந்த அரவிந்தனும் நானும் அன்றில் பறவைகளாக இருந்து காதல் வெற்றி பெறாமல் அழிந்திருக்கிறோமோ? எவனாவது கொடிய வேட்டுவன் எங்களை அம்பெய்து கொன்று எங்களையும் எங்கள் கனவுகளையும் அழித்து விட்டானா?’ – தாபம் என்கிற உணர்வு என்னவென்று இப்போது அவளுக்குச் சிறிது சிறிதாகப் புரிந்தது.

மலையின் சீத மென்காற்று இதமாக வீசியது! எண்ணெய் நீராடிய அலுப்பில் இனிய நினைவுகளோடு சாய்வு நாற்காலியிலேயே கண்ணயர்ந்து விட்டாள் பூரணி. அந்த மலைத் தொடர்களைக் கடந்து ஓடோடிச் சென்று ‘என்னுடைய மனத்தை எனக்குத் திருப்பிக் கொடுத்து விடுங்கள்! நீங்கள் பெரிய திருடர்’ என்று சிரித்துக் கொண்டே அரவிந்தனிடம் கூறிவிட வேண்டும் போலத் தேகத்திலும் இதயத்திலும் ஒரு தவிப்பை உணர்ந்தாள்.

அவள் எவ்வளவோ படித்திருக்கிறாள். அவளுடைய இதயம் துன்பங்களால் பக்குவப்பட்டிருக்கிறது. அன்பைக் கூட அந்தரங்கமாக வைத்துக் கொள்ளத் தெரிந்தவள் அவள். ஆனால் இப்போது இந்தக் கணத்தில் அவள் உணருகிற தாபத் தவிப்பை எந்தப் பெண்ணும், எந்தக் காலத்திலும் தவிர்த்திருக்க முடியாதென்று அவளுக்குத் தோன்றியது. ஊர் ஊராகப் பொதுப்பணிக்கும் சொற்பொழிவுகளுக்கும், அலைந்து கொண்டிருந்த காலத்தில் அவள் மறந்திருந்த அல்லது அவளை மறந்திருந்த இந்தத் தவிப்பு காய்ந்த மரத்தில் நெருப்புப் போல் இந்த ஓய்வில் இந்தத் தனிமையில் அவளை வாட்டுகிறதே! மனிதர்கள் மனிதர்களாகவே இருப்பதற்குக் காரணமான சில உணர்ச்சிகள் உண்டு. அவற்றை வென்றுவிடுவது எளிமை அல்லவென அவள் நினைத்தாள்.

பகல் உணவுக்கு வசந்தா அவளை எழுப்பினாள். சாப்பாடு முடிந்ததும், பூரணியை உட்கார்த்தி தான் வாங்கி வந்திருந்த வளையல்களை அவளுக்கு அணிவித்தாள் வசந்தா. முன் கைகளை மறைத்துக் கொண்டு, ‘கலின் கலின்’ என்று கைகளை சலதரங்கம் வாசிப்பது போல் வளையல்கள் நாதமிட்டன.

“அக்கா! இந்தக் கோலத்தில் கலியாணப் பெண் மாதிரி அழகாக இருக்கிறீர்கள்” என்று சொல்லிச் சிரித்தாள் வசந்தா. பூரணி எதை மறக்க முயன்று கொண்டிருந்தாளோ அதை அதிகமாக்கினாள் வசந்தா. உடம்பு கொள்ள முடியாமல் மனத்திலும் இடம் போதாமல் நிரம்பி வழிகிற இந்தப் பூரிப்பை எங்கே போய்க் கொட்டுவது?

கொட்டுவதற்கு இடம் இருந்தது! இரண்டு நாட்களுக்கு எங்கும் அசைவதில்லை என்று தமிழ்ச் சங்கத்துப் புத்தகங்களை எடுத்துக் கொண்டு படித்துத் தீர்ப்பதென்று கண்டிப்புடன் உட்கார்ந்தாள் பூரணி. தாகூரின் கீதாஞ்சலி, இராம தீர்த்தர், விவேகானந்தரின் ஆங்கிலச் சொற்பொழிவு நூல்கள், சி.இ.எம். சோடின் அறிவு நூல்கள் இவற்றின் சிந்தனை உலகில் நீந்தினாள். எச்.சி..வெல்சு, சா போன்றோரின் நூல்களும் சில இருந்தன.

இரண்டாவது நாள் மாலை சி.இ.எம். சோடினது ‘நாகரிகத்தின் கதை’ (The story of civilization) என்ற நூலின் கடைசிப் பக்கத்தில் கருத்தெல்லாம் அவள் ஒன்றிப் போய் ஈடுபட்டிருந்த போது வாசலில் தந்தி பியூன் குரல் கொடுத்தான். வசந்தா ஓடிப்போய் கையெழுத்திட்டு வாங்கிக் கொண்டு வந்தாள். ‘ஒரு முக்கியமான காரியமாக அவளைச் சந்தித்துப் பேசுவதற்கு மறுநாள் அரவிந்தனை அனுப்புவதாக’ மீனாட்சி சுந்தரம் தந்தி கொடுத்திருந்தார்.

தன்னுடைய நினைவுகளுக்கு ஏதோ மந்திரசக்தி எற்பட்டுவிட்டது போல் வியப்பாயிருந்தது பூரணிக்கு. எவருடைய வரவை அவள் விரும்பினாளோ அவர் தானாகவே வருகிறார். தனக்காகவே நேருகிறதோ இந்த அற்புதமெல்லாம் என்று கருதிக் களித்தாள் அவள். இரவெல்லாம் கனவுகளில் நீந்தினாள்.

பூரணி மறுநாள் காலையில் சீக்கிரமே நீராடிவிட்டு வாயிற்புறமாகக் கார் வருகிற சாலைக்கு நேரே புத்தகத்தை வைத்துக் கொண்டு உட்கார்ந்து விட்டாள். அரவிந்தனுடைய வரவுக்காகவே அன்று கோடைக்கானல் அவ்வளவு அழகாக இருக்கிறதோ என்று அவள் மனத்தில் ஒரு பிரமை உண்டாயிற்று.

அன்று அவள் தன்னை அலங்காரம் செய்து கொண்டிருந்தாள். தலை பின்னி மல்லிகைப் பூ வைத்துக் கொண்டிருந்தாள். ‘இந்த அழகு அலங்கார ஆசைகளெல்லாம் சாதாரணப் பெண்களுக்கு அசட்டுத் தனமாக உண்டாவது போல் தனக்கும் உண்டாகி விட்டதே!’ என்று நினைக்கும் போதே அவளுக்குக் கூச்சமாக இருந்தது. ஆனால் ஏனோ அன்று அப்படியெல்லாம் செய்து கொள்ள வேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது. நீலமேக நிறத்தில் வெள்ளைப் பூப்போட்ட கைத்தறிப் புடவை ஒன்றை தழையத் தழையக் கட்டிக் கொண்டு தோகையை விரித்துக் கொண்டிருக்கும் மயில் போல் வீற்றிருந்தாள் பூரணி.

பதினொரு மணிக்கு அச்சக அதிபர் மீனாட்சிசுந்தரத்தின் கார். பங்களா காம்பவுண்டுக்குள் நுழைந்தது.

கைகளில் வளையல்களும், மனத்தில் குதூகலமும் பொங்க எழுந்து நின்றாள் பூரணி. கண்கள் அந்த முகத்தை நன்றாகப் பார்க்கும் ஆவலோடு அகன்று விரிந்தன. இதழ்களில் அரவிந்தனுக்காகவே இந்தச் சிரிப்பை சிரிக்க வேண்டுமென்று சிரித்தது போல் ஒரு மோகனச் சிரிப்புடன் காரருகே சென்றாள் அவள். மனம் ஆவலினால் வேகமாக அடித்துக் கொண்டது. நெஞ்சுக்குள் கள்ளக் குறுகுறுப்பு ஐசு கட்டியை ஒளித்து வைத்தது மாதிரி பனி பரப்பிற்று.

வண்டியிலிருந்து மீனாட்சிசுந்தரம் இறங்கினார். முருகானந்தம் இறங்கினான்; அரவிந்தன் வரவில்லை! அவளுடைய நெஞ்சில் மலர்ந்திருந்த ஆசைப் பூக்கள் உதிர்ந்தன. ஏமாற்றத்தால் வந்தவர்களை ‘வா’ என்று சொல்லாமல் இருந்துவிடலாகாதே என்பதற்காக ‘வாருங்கள்’ என்று சிரிக்க முயன்றவாறு அவர்களை வரவேற்றாள். “உடம்பெல்லாம் சரியாக இருக்கிறதா?” என்று விசாரித்த மீனாட்சிசுந்தரத்தினிடம், “உங்களோடு அரவிந்தன் வரவில்லையா? அவர் வருவதாக அல்லவா நேற்றுத் தந்தி கொடுத்தீர்கள்?” என்று அடக்க முடியாமல் கேட்டு விட்டாள் அவள்.

“வரவில்லை! இன்று காலையில் அவன் அவசரமாகத் தன் சொந்தக் கிராமத்துக்குப் போகும்படி நேர்ந்து விட்டது. உள்ளே வா! விவரம் சொல்லுகிறேன்” என்றார் மீனாட்சிசுந்தரம்.

(தொடரும்)

தீபம் நா.பார்த்தசாரதி

குறிஞ்சி மலர்