(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  58 தொடர்ச்சி)

குறிஞ்சி மலர்
அத்தியாயம் 21
தொடர்ச்சி

 சிற்றப்பா வாழ்வை நடத்திய விதத்தையும் பாதிப் புத்தகம் படித்து நிறுத்தினாற் போல் முடித்துக் கொண்ட விதத்தையும் நினைத்தால் அரவிந்தனுக்குப் பரிதாபமாக இருந்தது. தந்தி வந்தபோது மீனாட்சிசுந்தரமும் முருகானந்தமும் அருகில் இருந்தனர். தந்திச் செய்தியை அவர்களும் படித்து அறிந்து கொண்டிருந்தனர். ‘ஏறக்குறைய இலட்ச ரூபாய் சொத்துக்காரர் இறந்து போயிருக்கிறார். அவ்வளவுக்கும் உரிமையாளனாகப் போகிற இவன் ஏன் இப்படி ஒரு பரபரப்பும் அடையாமல் மலைத்துப் போய் நின்று கொண்டிருக்கிறான்?’ என்று அரவிந்தனைப் பற்றி நினைத்தார்கள் அவர்கள் இருவரும். இந்த இலட்ச ரூபாயையும் சொத்தையும் பற்றித்தான் அவர்களுக்கு நினைக்கத் தோன்றியது. அதே செல்வத்தினால் அவனுடைய தந்தை அழிந்தார் என்பதையும், அவன் அவமதிக்கப்பட்டு ஓடி வந்தான் என்பதையும் அவர்கள் நினைக்கவில்லை. அரவிந்தனின் முகம் கடுமையாக மாறியது.

“எவனாவது அநாதைப் பிணத்துக்குப் போடுகிற மாதிரி கோவிந்தா கொள்ளிப் போட்டுவிட்டுப் போகட்டும். யாருக்கு வேண்டும் இந்த நாய்க்காசு?” என்று தந்தியைக் கிழித்தெறிந்தான் அரவிந்தன். மீனாட்சிசுந்தரம்தான் அவனைத் தனியாக அழைத்துச் சென்று பக்குவமாக உபதேசம் செய்தார்.

“அடே அசடு! மரணம் என்பது எத்தனை பெரிய காரியம். அதில் போய்ப் பழைய கோபதாபங்களையும், குரோதத்தையும் காட்டிக் கொண்டிருக்கலாமா? பேசாமல் நான் சொல்லுகிறபடி கேளு! நீ இன்று கோடைக்கானல் போக வேண்டா. நானும் முருகானந்தமும் போய்க் கொள்கிறோம். நீ புறப்பட்டு உன் கிராமத்துக்குப் போய் சிற்றப்பாவின் காரியங்களை நடத்தி விட்டு வா. இல்லாவிட்டால் எவனாவது மூன்றாவது முறைத் தாயாதிக்காரன் கொண்டு போவான். அந்தச் சொத்து உன் கைக்கு வந்தால் நல்ல காரியத்துக்குச் செலவு செய்யேன். அதற்காக ஒரேயடியாக வேண்டா என்று கண்களை மூடிக் கொண்டு வெறுப்பானேன்?” என்றார் மீனாட்சிசுந்தரம்.

அந்த வீட்டு வாயிற்படியில் கால் எடுத்து வைக்க நினைக்கவே கூசும்படி அத்தனை கெடுதல் எனக்குச் செய்திருக்கிறாரே அவர்!”

“செய்திருக்கட்டுமே, அப்பா! அவருடைய பணத்தை நல்ல காரியத்துக்குச் செலவழித்து அத்தனைக்கும் பழிவாங்கி விடேன் நீ.”

என்னென்னவோ சமாதானங்களையெல்லாம் எடுத்துச் சொல்லி அரவிந்தனை வழிக்குக் கொண்டு வந்தார் மீனாட்சிசுந்தரம். காலையில் அந்த நேரத்துக்குச் சரியாக இராமேசுவரம் போகிற இரயில் இருந்தது. முருகானந்தமும் அவரும் அரவிந்தனைக் காரில் கொண்டு போய் இரயிலேற்றி அனுப்பி வைத்தார்கள். வேண்டா வெறுப்பாகச் சிற்றப்பனுக்கு அந்திமச் சடங்குகள் செய்ய ஊருக்குப் புறப்பட்டான் அவன். போகும்போது இரயிலில் அவன் மனம் பழைய சிந்தனைகளில் ஆழ்ந்தது. நினைவுகளே பெருங்காற்றாக மாறி அந்தக் காற்றில் நெஞ்சினிடையே மூளும் சிந்தனைக் கனல் கொழுந்து பாய்ச்சிச் சுடர் பரப்பிற்று. எதை எதையோ எண்ணிக் கொண்டு பயணம் செய்தான் அவன்.

‘மீனாட்சிசுந்தரமும், முருகானந்தமும் கோடைக்கானல் போகிறார்களே! அவர்கள் சொல்லிப் பூரணி தேர்தலில் நிற்க ஒப்புக் கொண்டு விடுவாளா? இந்தச் சமயத்தில் இந்தப் பெரிய காரியத்துக்கு இணங்கலாமா, வேண்டாமா என்று பூரணி முடிவு செய்ய என்னுடைய கருத்தையல்லவா கேட்பாள்? பார்க்கலாமே என்னைக் கேட்டுக் கொண்டு முடிவு செய்கிறாளா? அல்லது மீனாட்சிசுந்தரம் விவரம் சொல்லிய அளவில் ஒப்புக் கொண்டு விடுகிறாளா? இந்தச் சந்தர்ப்பத்தில் நானே போய் அவளைச் சந்தித்து நல்லது கெட்டது இரண்டையும் சீர்தூக்கித் தேர்தலில் நிற்கலாமா நிற்கலாகாதா என்று தீர்மானம் செய்தால் அவளுக்கு ஆறுதலாக இருக்கும். தந்தியில் நானும் முருகானந்தமும் புறப்பட்டு வருவதாகத்தான் கொடுத்திருக்கிறார். நான் இங்கே இந்தக் கிழவனுக்குக் கொள்ளி வைக்க வந்தாயிற்று. என்னை எதிர்பார்த்துப் பெரிதும் ஏமாற்றமடைந்திருப்பாள் பூரணி’ என்று நினைத்தான் அரவிந்தன். எதற்கோ ஆசைப்பட்டுக் கொண்டு அநாவசியமாகப் பூரணியைத் தேர்தலில் வம்புக்கு இழுக்கும் மீனாட்சிசுந்தரத்தின் மேல் கோபம்தான் வந்தது அவனுக்கு. ‘நான் என்ன செய்ய முடியும்? என்னால் முடிந்த மட்டும் அவருடைய இந்த எண்ணத்தைத் தடுத்துவிட முயன்றேன். முடியவில்லையே? பிடிவாதமாகத் திருவேடத்துக்கு கூட்டிக் கொண்டு போய்ப் பூக்கட்டி வைத்தும் பார்த்து உறுதி செய்து கொண்டு விட்டாரே’ என்று தன் மனத்தைத் தேற்றிக் கொண்டான் அவன்.

இரயிலிலிருந்து இறங்கி அவன் கிராமத்துக்குப் போய்ச் சேர்ந்த போது காலை ஒன்பது மணிக்கு மேல் ஆகிவிட்டது. உறவினர்கள் அவன் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். இரண்டொரு வயதான பாட்டிமார்கள் அவனிடம் போலியாக அழுதுகொண்டே துக்கம் விசாரிக்க வந்தார்கள். மற்றவர்கள் சம்பிரதாயமாக அழுகையெல்லாம் இல்லாமல் வாய் வார்த்தையில், “சிற்றப்பா காலமாகி விட்டாரே தம்பி!” என்று தொடங்கி விசாரித்தார்கள். விசாரித்தவர்களை விட விசாரித்தோமென்று பேர் பண்ணியவர்கள் தான் அதிகம்.

‘கணிதப் பாடத்தில் சரியான விடை வந்தாலும் வழி எழுதாத கணக்குத் தப்புக்குச் சமம்தான். செல்வமும் செல்வாக்கும் அறவழியில் ஈட்டப்படாமல் வேறு வழியில் குவிக்கப்பட்டிருந்தால் வழி எழுதாத கணக்கைப் போல் அவை மதிப்பிழந்து நிற்கின்றது‘ என்பதை அன்று அங்கே சிற்றப்பாவின் ஈமச் சடங்கிலே கண்டான் அரவிந்தன். உள்ளூரில் நல்லவர்கள் யாரும் மயானம் வரை கூட உடன் வரவில்லை. தன்னைப் பற்றிக் கூடச் சிலர் ஊரில் கேவலமாகப் பேசிக் கொண்டதாக அரவிந்தன் காதுக்குத் தகவல் வந்தது. நேரிலும் கேள்விப்பட்டான். “பணம் அல்லவா பேசுகிறது. இந்தப் பையன் அரவிந்தனுக்காகவா இத்தனை பாடுபட்டுச் சேர்த்து வைத்தான் கருமிப்பயல்” என்று அவன் காதுபடவே ஒருவர் சொன்னார். அவருக்குத் தாயாதிப் பொறாமை.

“என்னவோ விரோதம்! அவன் கொள்ளி போட வரமாட்டான் என்றீரே. சொத்து ஐயா! சொத்து! நாய் மாதிரி ஓடி வந்திருக்கிறான் பாரும்” என்று வேறு ஒருவர் பேசியது காதில் விழுந்த போது அரவிந்தனுக்கும் மனம் புண்பட்டது. ‘தன்னைப் பற்றி இவ்வளவு சர்வ சாதாரணமாக மதிப்பிடுகிறார்களே அவர்கள்’ என்று தான், அவன் வருந்தினான். கேதத்துக்கு (அந்திமக்கிரியை) மதுரையிலிருந்து இரண்டொரு உறவினர்கள் வந்திருந்தார்கள். அவர்களில் ஒருவர் மதுரை நகரின் அரசியல் வட்டாரத்தில் செல்வாக்குள்ளவர். வயது முதிர்ந்தவர். நீண்ட நாட்கள் அனுபவசாலி. ஈமச் சடங்கு முடிந்து மயானத்திலிருந்து திரும்பி வரும்போது அவர் கூறிய செய்தி அரவிந்தனைத் திகைப்பில் ஆழ்த்தி விட்டது. அவன் பரம ரகசியம் என்று நினைத்துக் கொண்டிருந்த செய்தியை எல்லோருக்கும் நடுவில் அவர் வெளிப்படையாக விசாரித்தார்.

“என்னப்பா தம்பி, உன் முதலாளி அந்தப் பெண் பூரணியைத் தேர்தலில் நிறுத்தி வைக்க ஏற்பாடு செய்கிறாராமே? உனக்குத் தெரிந்திருக்குமே?”

அவருடைய கேள்விக்கு என்ன பதில் கூறுவது என்று அரவிந்தன் தயங்கியபோது அவரே மேலும் கூறினார். அவர் வாயிலாக முக்கியமான தொரு செய்தி வெளிவந்தது.

“மீனாட்சிசுந்தரம் இதில் எல்லாம் கெட்டிக்காரர் தான் அப்பா. விவரம் தெரிந்துதான் செய்வார். ஆனால் எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன். எதற்கும் அவர் காதில் போட்டு வை. அந்தத் தொகுதியில் போட்டி கடுமையாக இருக்கும் போலிருக்கிறது. புதுமண்டபத்தில் ஒரு புத்தகக் கடைக்காரன் இருக்கிறான். முரடன், எதற்கும் துணிந்தவன், அவனே நிற்கப் போவதாகக் கேள்வி” என்று அவர் கூறிக் கொண்டே வந்த போது அரவிந்தன் குறுக்கே மறித்து, “யார் தாத்தா அந்தப் புத்தகக் கடைக்காரர்?” என்று கேட்டான். அவன் சந்தேகம் சரியாயிருந்தது. அவர்களுக்கு விரோதியான அந்த ஆளின் பெயரைத்தான் கிழவர் கூறினார். ‘அவன் மிகவும் மும்முரமாகத் தேர்தலில் இறங்கி இருப்பதாகவும்’ அவர் கூறினார். அப்போதே புறப்பட்டுப் போய்க் கோடைக்கானலில் அவர்களுக்கு இச்செய்தியை அறிவித்து விட வேண்டும் போல் அரவிந்தனுக்குத் துடிப்பு உண்டாயிற்று.

(தொடரும்)

தீபம் நா.பார்த்தசாரதி

குறிஞ்சி மலர்