(அகல் விளக்கு – மு.வரதராசனார். 14. தொடர்ச்சி)

அகல் விளக்கு

சிறிது நேரத்தில் ஒரு கிழவர் அந்தப் பக்கம் வந்தவர், சந்திரனைப் பார்த்து, “யார் என் மச்சான் பிள்ளையா?” எப்போ வந்தே? மொட்டையம்மாவும் வந்திருக்குதா?” என்றார்.

சந்திரன் “ஆம் ஆம்” என்று விடை சொன்ன பிறகு, அந்தக் கிழவர் என்னைப் பார்த்து, “யார் அப்பா” என்றார்.

“இவன் பேட்டையில் என்னோடு படிக்கிற பிள்ளை” என்றான் சந்திரன்.

கிழவர் நகர்ந்தபிறகு, சந்திரனைப் பார்த்து, “மொட்டையம்மா யார்? அத்தையா?” என்றேன்.

“ஆமாம். அத்தைதான். இந்த ஊரிலே மொட்டையம்மா என்று சொன்னால்தான் அத்தையைப் பற்றித் தெரியும். சின்ன வயதிலே ஒரு பெரிய காய்ச்சல் வந்து தலைமயிர் உதிர்ந்து போச்சாம். மறுபடியும் முடிவளர நெடுங்காலம் ஆச்சாம். அதனால் அப்படிப் பெயர் வந்துவிட்டது.”

“இயற்கையான பெயர் என்ன?”

“சிவகாமி என்று பெயர். ஆனால் அந்தப் பெயரைச் சொன்னால் ஒருவருக்கும் தெரியாது. எனக்கும் போன வருசம் வரையில் தெரியாது. அப்பா ஒரு நாள் சொன்னார். அத்தை அப்பாவை என்ன என்று கூப்பிடுவார், தெரியுமா?”

“என்ன என்று கூப்பிடுவார்?”

“குழந்தை என்று கூப்பிடுவார். தம்பி என்று சொல்வது எப்போதோ ஒரு முறைதான் இருக்கும்.”

“இந்த ஊரில் அத்தையையும் முறையிட்டுத்தான் அழைப்பார்களா?”

“ஆமாம். அண்ணி, அத்தை, அக்கா, பெரியம்மா, சின்னம்மா, பாட்டி என்று அவரவர்கள் அந்தந்தக் குடும்பத்து முறை சொல்லித்தான் கூப்பிடுவார்கள்.

“அதிலே ஒரு கணக்கு ஒழுங்கு உண்டா?”

“ஆமாம். பங்காளிகள் முறை உண்டு. சம்பந்தி முறையும் உண்டு. மற்றொன்றாக மாறாது.”

எனக்கு எல்லாம் புதுமையாக இருந்தது.

அன்று இரவு ஏழு மணிக்கு நிலாப் புறப்பட்டது. கிழக்கே தென்னந்தோப்பினிடையே ஒரு புதிய ஒளியும் வண்ணமும் கண்டேன். தோப்பை யாரோ அலங்காரம் செய்வதுபோல் இருந்தது. சிறிது நேரத்தில் தோப்புக்கு மேலே வெண்கதிர்கள் மெல்லத் தோன்றின. எழுந்துவரும் நிலாவை வரவேற்பதற்காக வான வழியில் கூடிய கூட்டம் போல், மேகம் பல தலைகளாய்த் தோன்றிக் காட்சி அளித்தது. நிலாவும் மேலே வந்தது. மேகக் கூட்டம் மேலும் சிதைந்து செம்மறியாட்டுக் கூட்டம் போல் தோன்றியது. இன்னும் சிறிது நேரத்தில் அந்த மேகக் கூட்டத்தின் இடையே நிலாத் தோன்ற, கூட்டம் மேலும் கரைந்து, சிறு சிறு மணல் குவியலாக, ஆயிரக்கணக்கான குவியலாகத் தோற்றமளித்தது. அந்த மணல் குவியல்களுக்கிடையே மகிழ்ந்து முகம்காட்டும் பெண் போல் விளங்கியது நிலா. எனக்கு உடனே கற்பகத்தின் முகம் நினைவுக்கு வந்தது. அவளும் அப்போது அங்கே வந்து, “என்ன அண்ணா! அவர் நிலாவை அப்படிப் பார்க்கிறாரே” என்றாள்.

சந்திரனைப் பார்த்துச் சிரித்தேன். “சந்திரா! உண்மையாகவே இவ்வளவு அழகாக நிலா வருவதை நான் எங்கும் எப்போதும் பார்த்ததே இல்லை. சந்திரனுடைய அழகை இங்கே அடிக்கடி அப்பா பார்த்து மகிழ்ந்திருப்பார். அதனால்தான் உனக்குச் சந்திரன் என்று பெயர் வைத்திருப்பார்” என்றேன்.

“அப்படியானால் இவள் பெயர்?” என்று தன் தங்கையைக் காட்டினான் சந்திரன்.

“இந்தத் தோப்பு அவருக்கு அப்போது வானுலகத்துக் கற்பகச் சோலை போல் தோன்றியிருக்கும்” என்றேன்.

“நீ எதிர்காலத்தில் பெரிய புலவன் ஆகப் போகிறாய். இல்லாத புளுகு எல்லாம் புளுகப் போகிறாய்” என்றான் சந்திரன்.

கற்பகம் கைகொட்டிச் சிரித்துக் கொண்டே போய் விட்டாள்.

மறுநாள் காலையில் எழுந்து தோப்புப் பக்கம் சென்றோம். வழியில் நடுத்தர வயது உள்ள ஓர் அம்மா சந்திரனை வழிமறித்து, “என்ன மருமகனே! எப்போது வந்தே? பேசாமல் போறேயே. என் பெண்ணைக் கட்டிக் கொள்ளாவிட்டாலும் வாயைத் திறந்து பேசிவிட்டுப் போகக்கூடாதா?” என்றார். சந்திரன் வெட்கத்தோடு விடை சொன்னான். மறுபடியும் அந்த அம்மா, “பேட்டைக்குப் போனாயே! உன் பெண்டாட்டிக்கு என்ன கொண்டு வந்தே, மாமிக்கு என்ன கொண்டு வந்தே, ஒரு பட்டுச்சேலை வாங்கித் தரமாட்டாயா?” என்றார். சந்திரன் தலைகுனிந்தபடியே என்னுடன் வந்துவிட்டான்.

தோப்பை அணுகியவுடன், “இந்த ஊரார் இப்படித்தான். நாங்கள் இந்த ஊரில் பழைய குடி. செல்வமும் செல்வாக்கும் உள்ள குடும்பம். அதனால் ஆண் பெண் எல்லாரும் இப்படிப் பேசுவார்கள்” என்றான்.

நான் அவனைப் பார்த்துச் சிரித்து, “உன் பாடு யோகம் தான். இந்த ஊரில் உனக்கு எத்தனையோ மாமி வீடுகளும் எத்தனையோ மனைவிமாரும் இருப்பதாகத் தெரிகிறதே! உனக்கு எப்போது திருமணம் ஆச்சு? எத்தனை திருமணம் ஆச்சு?” என்றேன்.

“சரிதான் போ அய்யா! இந்த அம்மா என் மாமியாரா? அவளுடைய மகள் எனக்குப் பெரியவள். என் அக்கா போல வளர்ந்திருக்கிறாள். அவளுக்கு ஓர் எழுத்துக்கூடத் தெரியாது. மாடு போல் உழைக்கத் தெரியும். கூடை கூடையாய்ச் சுமக்கத் தெரியும். குடம் குடமாகத் தண்ணீர் எடுத்துவரத் தெரியும். இதெல்லாம் வெறும் பேச்சுக்கு” என்றான் சந்திரன்.

“எங்கள் வீட்டில் இப்படி யாராவது மருமகன் பெண்டாட்டி என்றெல்லாம் என்னிடம் பேசினால், அம்மாவுக்குப் பிடிக்காது. சின்ன வயசிலே இந்தப் பேச்செல்லாம் தப்பு அல்லவா?” என்றேன்.

“இங்கே இதெல்லாம் பழக்கம் ஆகிவிட்டது. தப்பாக எண்ணமாட்டார்கள்.”

“நீயும் பெண்களோடு இப்படி வேடிக்கையாகப் பேசுவாயா?”

“என் வயதுப் பிள்ளைகள் பேசுகிறார்கள். எனக்கு மனம் வரவில்லை. சும்மா கேட்டுக் கொண்டு, சிரித்துக் கொண்டு இருப்பேன்.”

“எனக்கு என்னவோ, இது பிடிக்கவில்லை”

“எனக்குப் பழகிப்போச்சு, பெரிய வீட்டுப் பையன் என்று எல்லோரும் அன்பாகப் பேசுகிறார்கள். என்ன செய்வது?” என்றான்.

சந்திரன் தோப்புக் காவலாளை அழைத்துப் பல் துலக்கக் குச்சி ஒடித்துத் தரச் சொன்னான். அவன் கருவேலங்குச்சி இரண்டு கொண்டு வந்து கொடுத்தான். கிணற்றங்கரையில் உட்கார்ந்து பல் துலக்கிக் கொண்டிருந்தோம். காவலாள் எங்கள் எதிரே வந்து, “எப்போ சாமி கலியாணம்? பெண்ணெல்லாம் பெரிசாகி விலையாகிப் போகுது. நீ மட்டும் சும்மா இருந்தால் எப்படி? ஏதாவது இரண்டு மூணு பார்த்துக் கட்டிக்கொள் சாமி” என்றான்.

சந்திரன் அவனுடைய வாயை அடக்கி, “இந்தப் பேச்செல்லாம் இவனுக்குப் பிடிக்காது. நீ போ” என்றான்.

பல் துலக்கியானதும், சந்திரன் எழுந்து, “நீ இங்கேயே இரு. நான் மட்டும் கிணற்றில் இறங்கி இரண்டு சுற்று நீந்திக் குளித்து விட்டு வந்து விடுவேன், உனக்கு அம்மா வெந்நீர் வைத்திருப்பார்” என்று சொல்லிக்கொண்டே ஒவ்வொரு படியாய் இறங்கினான்.

“நீ எப்போதும் தண்ணீரில்தான் குளிப்பதா?” என்றேன்.

“ஆமாம், சனிக்கிழமை தவிர.”

“வாலாசாவில் வெந்நீரில் குளித்தாயே.”

“என்ன செய்வது? அந்தத் தண்ணீர் ஒரே உப்பு, எனக்குப் பிடிக்கவில்லை. உடம்புக்கும் நல்லது அல்ல. பாலாற்றுக்குப் போய்க் குளித்துவிட்டு வரலாம் என்றால் யாரும் துணை இல்லை. நேரமும் ஆகும்.”

உடையைக் கழற்றியதும் சந்திரன் துடும் எனக் குதித்து நீரில் ஆழ்ந்து மேலே வந்தான். எனக்கு அது அரிய பெரிய வித்தையாகத் தோன்றியது. வேலூரில் என் அத்தைமகன் இப்படிக் குதித்து எழுவதை இமைகொட்டாமல் பார்த்து வியந்து பெருமூச்சு விட்டிருக்கிறேன். சந்திரன் குதித்து நீந்திய போதும் அப்படித்தான் வியந்து பார்த்தேன்.

“சந்திரா! ஊர்க்குப் போவதற்குள் நானும் நீந்தக் கற்றுக் கொள்ளட்டுமா?” என்று ஆவலோடு கேட்டேன்.

சந்திரன் பேசுவதற்கு முன், தோப்புக்காவலாளியின் குரல் கேட்டது. “அதற்கு என்ன சாமி! வாங்க இறங்குங்க. ஒரே நாளில் நான் கற்றுத் தருவேன்” என்றான்.

அவனுடைய தன்னம்பிக்கை எனக்குப் பெரிய வியப்பாக இருந்தது.        

(தொடரும்)
முனைவர் மு.வரதராசனார்
அகல்விளக்கு