அகல் விளக்கு – மு.வரதராசனார்: 36
(அகல் விளக்கு – மு.வரதராசனார். 35. தொடர்ச்சி)
அகல் விளக்கு
அத்தியாயம் 14 தொடர்ச்சி
“முதலாம் நாள் சந்திரனைக் கண்டு பழகி வீட்டில் பேசிக் கொண்டிருந்தோமே, அன்று அம்மா ஒன்றும் சொல்லவில்லை. அடுத்தமுறை ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலையில் சந்திரன் வந்து போனார் என்று சொன்னேன் அல்லவா? அன்று இரவு அம்மா என்னைத் தனியே அழைத்து அறிவுரை கூறினார். “நல்ல பிள்ளை அம்மா அதில் எனக்குச் சந்தேகம் இல்லை. இருந்தாலும் ஒத்த வயது உள்ள ஆண் பிள்ளைகளோடு பழகுவதில் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உன் வாழ்வோ தாழ்வோ அதை ஒட்டித்தான் இருக்கிறது. பருவ உணர்ச்சி பொல்லாதது.
அதைக் கடந்து பொதுவான அன்போடு அண்ணன் தங்கைபோல் பழக முடியுமானால் பழகு. சந்திரனுக்கே மனம்மாறி உன்னிடத்தில் வேறு வகையாகப் பழகத் தொடங்கினாலும் விலகிவிடு; அல்லது உன் மனமே சந்திரனிடத்தில் வேறு வகையாகச் செல்லுமானாலும் விலகிவிடு. ஏன் என்றால், ஆண் பெண் உறவு என்பது ஒரு நாளில் உங்கள் உணர்ச்சியால் முடிவு செய்யக்கூடியது அல்ல. அது வாழ்க்கை முழுவதையுமே மாற்றக்கூடியது. ஆகையால் அனுபவம் நிறைந்த எங்கள் அறிவுரையும் அதற்கு வேண்டும். அதனால்தான் சொல்கிறேன். கவனித்துப் பொறுப்போடு நட. தங்கைபோல் பழக முடிந்தால் பழகு. இல்லையானால் பழகாதே” என்று கூறினார். அந்த அறிவுரை எனக்குப் பயன்பட்டது. ஆனால் அவருக்கு அப்படி ஒருவர் அறிவுரை சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்” என்றாள்.
நான் பேசாமல் இருந்ததைக் கண்டு, “என்மேல் தவறு இருந்தால் சொல்லுங்கள்” என்றாள்.
“நீங்கள் அன்பாகப் பழகியதால் அவன் அப்படி எண்ணிவிட்டான்” என்றேன்.
“அப்படியானால் ஒரு பெண் ஆணோடு நட்புக்கொண்டு பொதுவாகப் பழகவே கூடாதா?”
“கூடாது என்று நான் சொல்லவில்லை. நடைமுறையில் தீமையாக இருக்கிறதே!”
“அதை வெல்லவேண்டும். முன் காலம் வேறு. பெண் வாழ்ந்த எல்லை குறுகிய எல்லை. வீடு, வீட்டைச் சார்ந்த அக்கம் பக்கம் அவ்வளவுதான். இப்போது எந்தக் குடும்பத்துப் பெண்ணும் பல ஆண்களோடு பழகவேண்டியுள்ளது. கடைத்தெரு, மருந்தில்லம், பள்ளிக்கூடம், கலையரங்கம் இப்படி எத்தனையோ இடங்கள்; குடும்பத்திற்காக, குழந்தைகளுக்காக, வியாபாரிகள், மருத்துவர்கள், ஆசிரியர்கள், இசைக்கலைஞர் முதலானோர் பலருடன் பழகவேண்டியுள்ளது. தந்தையின் நண்பர்கள், கணவரின் நண்பர்கள் இப்படிப் பலரோடு பழகவேண்டியுள்ளது. ஆகையால் பெண்கள் ஆண்களோடு பழகாமல் வாழ முடியாத காலம் இது. பொது அன்பை வளர்த்து நட்பு முறையில் பழகக் கற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.”
“மெய்தான்.”
“நான் குற்றவாளி அல்ல என்று நீங்கள் சொன்னால் போதும். அதுதான் எனக்கு ஆறுதல் அளிக்கும்.”
“நீங்கள் குற்றவாளி அல்ல என்பது நன்றாகத் தெரிகிறதே!”
“ஆனால் ஒரு குற்றம் என்மேல் உண்டு. அவருடைய மனம் இப்படி வளர்ந்துவருகிறது என்பதை நான் கண்டு கொள்ளாமல் இருந்துவிட்டேன். அது குற்றம்தான். அதற்குக் காரணம், அவர் என்னிடம் அப்படி அண்ணன் போல் பழகினார். சில வேளைகளில் அண்ணன் போல் அதிகாரம் செய்தும் நடத்தியிருக்கிறார். உடம்பு நன்றாக இல்லை. ஆகையால், நாளைக்குக் கல்லூரிக்குப் போகக் கூடாது என்று தடுத்திருக்கிறார். சில பாடங்களில் கேள்விகள் கேட்டுத் தவறு செய்தபோது கடிந்திருக்கிறார். சில பெண்களோடு பழகக்கூடாது என்று தடுத்திருக்கிறார்.”
அப்போதுதான் நான் உரிமையோடு சில கேள்வி கேட்டேன். “நீங்கள் இருவரும் தனியே பேசிக்கொண்டு போனது உண்டா?” என்றேன்.
“உண்டு! அம்மாவுக்குச் சொல்லிவிட்டுக் கடற்கரைக்குப் போயிருக்கிறோம். சினிமாவுக்குப் போயிருக்கிறோம். தங்கையை அழைத்துக் கொண்டு போனதும் உண்டு. நாங்கள் இருவர் மட்டுமே போனதும் உண்டு.”
சந்திரன் தன் அறையில் இல்லாமல் அடிக்கடி வேறு வேலை. வேறு வேலை என்று வெளியே போய்வந்த காரணம் அப்போதுதான் எனக்குத் தெரிந்தது. தொடர்ந்து சில கேட்டேன்.
“அவனை என்னவென்று அழைப்பீர்கள்?” என்றேன்.
“‘சந்திர்’ என்று பெயர் சொல்லி அழைப்பேன்.”
“யாராவது பார்த்தால் தப்பாக நினைப்பார்களே என்று எண்ணவில்லையா?”
“வெளிப்படையாகப் பழகினோம்; குற்றம் செய்யவில்லை; ஆகையால் மற்றவர்கள் நினைப்பதைப் பற்றிப் பயப்பட்டதில்லை. அண்ணனும் தங்கையும் பழகுவதில்லையா!”
“நான் என் தங்கையோடு நெருங்கிப் பழகுவதில்லையே!”
“அடிக்கடி சண்டையிட்டது உண்டு அல்லவா?”
“உண்டு.”
“நானும் சந்திரனும் அப்படி அடிக்கடி சண்டையிட்டிருக்கிறோம். இங்கே வீட்டில், கடற்கரையில் அம்மா அப்பா எதிரில்.”
“கல்லூரியில் எங்கள் விடுதியில் மாணவர்கள் சிலர் உங்கள் இருவரையும் காதலர் என்று எண்ணியிருக்கிறார்கள் தெரியுமா?”
“இருக்கலாம். உடன் பிறந்த அண்ணனும் தங்கையும் புதிய ஊரில் ஒரு தெரு வழியாக போனால், அந்த ஊரார் பலர் அவர்களைக் காதலர் என்றுதான் எண்ணுவார்கள். அது உலக இயற்கை! மனிதரின் மனத்தில் பொதுவாக உள்ள காம இச்சை அப்படி எல்லாரையும் பார்த்துச் சொல்லச் செய்கிறது!”
அவளுடைய அறிவின் திட்பத்தைக் கண்டு வியந்தேன். இன்னொன்றும் கேட்கவேண்டும் என்று தோன்றியது; கேட்டேன். “இந்த அனுபவத்திற்குப் பிறகு, நீங்கள் உங்கள் தங்கைக்கு என்ன வழி சொல்வீர்கள்” என்றேன்.
“எதைப்பற்றி?”
“ஆண்களோடு பழகுவதில்!”
“அம்மா எனக்குச் சொன்னதையே சொல்வேன்.”
“அதனால் குறை ஏற்படுகிறதே; இப்படி ஒரு வாழ்வு பாழாகிறதே.”
இதைச் சொன்னவுடன், அவளுடைய திட்பமும் தெளிவும் பறந்து போயின. “அதை நினைக்கும்போதுதான் எனக்குத் துயரமாக இருக்கிறது. நான் குற்றவாளி அல்ல என்பதை உங்களிடம் சொல்லி, என் மன வேதனையைத் தீர்த்துக்கொண்டேன். ஆனால் என் அன்புக்குரிய சந்திரனுடைய வாழ்வு கெடுவதை நினைத்தபோது எனக்குத் துயரமாக இருக்கிறது” என்று வருந்தினாள். அவளுடைய முகம் வாடியது. ஒரு பெருமூச்சு விட்டாள். “அன்று உங்களுடைய கல்லூரியில் ஒரு நாடகம் நடந்தது. நான் வந்திருந்தேன்.
அவருடைய நடிப்பைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தேன். மறுநாள் வீட்டுக்கு வந்திருந்தார். அந்தப் பெண் வேடத்தோடு நான் அவர் பக்கத்தில் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொன்னேன்; வேண்டாம் என்று மறுத்தார். இயல்பான உடையோடு புகைப்படம் எடுக்கலாம் என்று சொன்னார். அதற்கு நான் இணங்கவில்லை. அதிலிருந்து அவர் தெரிந்து கொண்டிருக்கலாம். தேர்வு தொடங்குவதற்கு முன் இங்கு வந்திருந்தபோது அம்மா வீட்டில் இல்லை. எங்கே என்றார். திருமண வேலையாக என்று சொன்னேன். யாருக்கு என்றார்? எனக்குத்தான், என்று சிரித்தேன். அவரும் சிரித்தார். அன்று அவர் தெரிந்து கொள்ளாமல் போனது வியப்பாக இருக்கிறது” என்றாள்.
“நீங்கள் நாணத்தால் சிரித்திருக்கலாம். வேடிக்கை பேசியதாகக் கருதி அவன் சிரித்திருக்கலாம்” என்றேன்.
சிறிது நேரம் அசையாமல் சிற்பம் போல் இருந்தாள். “உண்மைதான்! அவ்வாறு கருதியிருக்கக் கூடும். என்ன வாழ்க்கை இது!” என்றாள்.
“நம் நாட்டு நாகரிகம்! எல்லாவற்றிலும் வெளிப்படையாகப் பழகிவிடுகிறோம். ஆனால் வாழ்க்கைக்கு அடிப்படையான காதலில் – திருமணப் பேச்சில் மட்டும் வெளிப்படையாகப் பேசி விளக்குவதில்லை. பெற்றோரும் மக்களிடம் அப்படி இருக்கிறார்கள்; மக்களும் பெற்றோரிடம் அப்படி இருக்கிறார்கள். அண்ணன் தங்கையும் அப்படி நடக்கிறார்கள்; நீங்களும் அப்படித்தான்” என்றேன்.
“நான் பெண், அவர் இயல்பாகத் துணிவும் அஞ்சாமையும் உடையவர். அவர் வெளிப்படையாகப் பழகியிருக்கலாமே?”
“நீங்கள் பெண்தான்; ஆனால் பழங்காலப் பெண் அல்லவே? வெளிப்படையாகச் சொல்லியிருக்கலாமே?”
“அவர் சொல்லியிருக்கலாமே!”
“ஆண் பெண் பழக்கம் என்றால் அது காதல் வரையில் நீளக்கூடியது. அதன்படி அவன் இயற்கையாக நடந்து கொண்டான். நீங்கள்தான், இந்தப் பழக்கம் அதுவரையில் செல்லக்கூடாது என்று கட்டுப்பாட்டோடு பழகினீர்கள். அந்தக் கட்டுப்பாட்டையாவது சொன்னீர்களா?”
மறுபடியும் சிறிது நேரம் திகைத்து நின்றாள். “ஆம்! சொல்லவில்லை. என்னுடைய குற்றம்தான். எவ்வளவோ முன்னேறினாலும், இந்த நாட்டில் வழிவழியாக வந்த பழக்கம் – வெளிப்படையாகச் சொல்லாமல், பழகும் பழக்கம் – இது. என் தவறுதான்” என்று வருந்தினாள்.
மறுபடியும் தங்கை வந்து, “அம்மா கூப்பிடுகிறார்கள்” என்றாள்.
“கடைசியில் உங்களுக்கு வருத்தம் உண்டாக்கி விட்டேனா?” என்று நான் எழுந்தேன்.
“அவருடைய வாழ்க்கையே கெட்டுவிட்டது! நான் சிறிது நேரம் வருந்தினால் என்ன?” என்றாள். “சிறிது உட்காருங்கள்; சிற்றுண்டியும் காப்பியும் உண்டு செல்ல வேண்டும்” என்று உள்ளே சென்றாள். தங்கையிடம் அவற்றைக் கொடுத்தனுப்பினாள். விரைவில் திரும்பி வந்து “திருமணத்திற்கு நீங்களாவது வரவேண்டும்” என்றாள்.
“சந்திரனே அதற்குள் திரும்பி வரவேண்டும் என்று விரும்புகிறேன்” என்றேன்.
“அப்படி அவர் வந்தால், அதைவிடப் பெரிய மகிழ்ச்சி வேறு இல்லை. எங்கள் இல்லத்தில் முதல் விருந்து அவருக்கு நடத்துவதாக எண்ணியிருந்தேன். என் எண்ணம் நிறைவேறினால் நன்றாக இருக்குமே” என்று கண் கலங்கினாள்.
அங்கு உள்ள குடும்பப் பொறுப்புகளுக்கு இடையூறாக நிற்கக்கூடாது என்று விரைவில் விடை பெற்றுத் திரும்பினேன்.
Leave a Reply