–          அண்ணா விருதாளர் இரா.உமா

karunchattai_uma02

  பிற மொழி ஆதிக்கத்திற்குச் சிறிதும் இடம் கொடுக்காத மண் தமிழ்நாடு. மொழியை உயிராகக் கருதி, மொழிக்காக உயிரையும் துறக்கத் துணிந்தவர்கள் தமிழர்கள். இந்தித் திணிப்பை, தமிழ்நாடு எதிர்த்த எழுச்சி மிகு வரலாற்றை, வடநாடுகள் வாய்பிளந்து பார்த்தன. இப்போதுதான் அவை சற்றே உறக்கம் கலைத்திருக்கின்றன. இன்றைக்கும் மோடி தலைமையிலான பா.ச.க. அரசு இந்தியின் மேலாதிக்கத்தை மீண்டும் நிலைநாட்ட முயலும்போது, இந்தியாவில் தமிழ்நாட்டின் குரலே ஓங்கி ஒலிக்கிறது.

  1938, 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டங்களின் ஒரு பகுதியாக, இந்தி எழுத்துகள் கரிநெய்(தார்) பூசி அழிக்கப்பட்டன. தமிழ்நாட்டில் உள்ள hindhi_rly.station_board01தொடர்வண்டி நிலையங்கள், அஞ்சலகங்கள் முதலான மத்திய அரசு நிறுவனங்களின் பெயர்ப்பலகை, அறிவிப்புப் பலகைகளில் இருந்த இந்தி எழுத்துகளைத் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையில் திராவிட இயக்கத் தோழர்கள் கரிநெய்(தார்) பூசி அழித்தனர். ஆனால் சிலம்புச் செல்வர் ம.பொ.சி.யுடன் ஒரு கூட்டம் மண்ணெண்ணெய் கொண்டு கரிநெய்யை நீக்கி இந்தி எழுத்துகளைப் பளிச்சிடச் செய்ததையும் வரலாறு ஒரு பக்கத்தில் பதிவு செய்திருக்கிறது.

அப்படிப்பட்ட தமிழ்நாட்டில் இன்று என்ன நடக்கிறது தெரியுமா? சூன் 30ஆம் நாள் தன்னுடைய தொகுதியான திருவரங்கத்(ஸ்ரீரங்கம்)தில் ஒரு கட்டடத்தை, தமிழக முதல்வர் செயலலிதா திறந்து வைத்திருக்கிறார். ஒரு சட்டமன்ற உறுப்பினர் தன்னுடைய தொகுதியில் ஒரு கட்டடத்தைத் திறந்து வைப்பது நடைமுறைதானே, இதில் குறிப்பிட்டுச் சொல்ல என்ன இருக்கிறது என்று கேட்கலாம். அவர் திறந்து வைத்த கட்டடத்தின் பெயர் என்ன தெரியுமா?

‘யாத்ரி நிவாசு’ – இது ஏதோ மத்திய அரசுக்குச் சொந்தமான கட்டடமாக இருக்கும். உறுதியான நட்பின் அடிப்படையில், நம்முடைய முதல்வர் செயலலிதா அவர்களைத் திறந்து வைக்கச் சொல்லியிருப்பார்கள் என்று யாரேனும் நினைத்தால், உங்கள் அறியாமைக்கு அம்மையார் பொறுப்பேற்க முடியாது. (யானைக்குட்டி, புலிக்குட்டி முதல் தமிழர்களின் பிள்ளை குட்டிகள் வரை செயலலிதாவின் சமற்கிருதப் பெயர் சூட்டலுக்குத் தப்ப முடியவில்லை.)

yatriniwas01

அது தமிழ்நாடு அரசின் நிதியில் கட்டப்பட்ட கட்டடம். அதற்குச் செலவழிக்கப்பட்டிருக்கும் அரசுப் பணம் ஏறத்தாழ 43 கோடி உரூபாய். 2011இல் திருவரங்கம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார். அம்மையார். தன்னை வெற்றிபெறச் செய்த மக்களுக்கு நன்றி கூறச் சென்றபோது, வாக்களித்தார். அதுதான் ‘யாத்ரி நிவாசு’.

ஒரு சட்டமன்ற உறுப்பினர் தன்னுடைய தொகுதி மக்களுக்கு வேண்டியதைச் செய்வது அவருடைய சனநாயகக் கடமைதானே என்று நம்மில் பலருக்குத் தோன்றலாம். உண்மைதான், மறுக்கவில்லை. ஆனால் அவர் எதற்கு முன்னுரிமை அளிக்கிறார், எப்படி அதைச் செய்கிறார் என்பதையும் நாம் பார்க்க வேண்டியிருக்கிறது. சென்னை, கிண்டியில் கட்டப்பட்ட கட்டடங்களைக் காணொளிக் காட்சி மூலம் திறந்து வைக்கிறார் மாண்புமிகு முதல்வர். கோட்டையிலிருந்து கிண்டிக்கு வருவதற்குக் கூட நேரமில்லாமலோ, உடல் நிலை ஒத்துழைக்காமலோ போய்விட்டது அவருக்கு. 2011 சூலை 25இல், அதே பகுதியில், மகளிர் தோட்டக் கலைக் கல்லூரி – ஆராய்ச்சி நிலையத்தைக் காணொளிக் காட்சி மூலம்தான் திறந்து வைத்தார். ஆனால், ‘யாத்ரி நிவாசை’த் திறந்து வைக்க மட்டும், சென்னையிலிருந்து 315.4 புதுக்கல்(கி.மீ.) தொலைவில் உள்ள திருவரங்கத்திற்கு நேரில் போகிறார்.   இதன் உள்ளீடு என்ன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

jayalalitha06தாய்மொழிக்காகத் தன்னையே தீயின் நாக்குகளுக்குத் தின்னக் கொடுத்த மொழிப்பற்று மிக்கத் தமிழர்களின் சார்பாளராக இம்மாநிலத்தை ஆளுகின்ற ஒருவர், அரசு செலவில் ஒரு கட்டடத்தைக் கட்டி, அதற்கு, சமற்கிருதத்தில் ‘யாத்ரி நிவாசு’ என்று பெயர் சூட்டுகிறார் என்றால், அதற்குப் பின்னால் ஒளிந்துள்ள அவருடைய அரசியல் என்ன என்பதைப் பற்றி நாம் கவனம்கொள்ள வேண்டாமா? பா.ச.க. அரசுகூட, இந்திக்குப் பின்னால் மறைத்து வைத்துத்தான் சமற்கிருதத்தை நிலைநிறுத்த முயல்கிறது. செயலலிதா தமிழர்களின் நடு மண்டையில் நச்சென்று ஆணியடித்ததுபோல, நேரடியாக சமற்கிருதத்திலேயே பெயர் சூட்டிவிட்டார்.

இங்கே, கோயில், பக்தி என்கின்ற பேச்சுக்கே நாம் போகவில்லை. கடவுள் இல்லையென்று சொன்னாலும், கடவுள் நம்பிக்கையாளர்களின் வழிபாட்டு உரிமைக்காகப் போராடிய இயக்கம் திராவிட இயக்கம். தில்லையம்பலத்தில் தமிழ் ஒலிக்க வேண்டும் என்று போராடியவர்கள் திராவிட இயக்கத்தவர்கள். அனைத்துச் சாதியினரும் அருச்சகராகலாம் என்று சட்டம் இயற்றிய அரசியல் இயக்கம், திராவிட முன்னேற்றக் கழகம்.

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்

மங்காத தமிழென்று சங்கே முழங்கு

என்று சங்கநாதம் செய்த தமிழ்நாட்டில், அரசின் செலவில் அயல் மொழியில் அம்மையார் பெயர் வைத்திருக்கின்றார். ‘யாத்ரீகர்’ என்றால் பயணி; ‘நிவாசு’ என்றால் விடுதி; பயணியர் விடுதி என்று தமிழில் பெயர் வைத்திருக்க வேண்டியதுதானே! பயணியர் விடுதி என்று வைத்தால், திருவரங்கத்திற்கு வருகின்ற பயணிகள் யார் வேண்டுமானாலும் அங்கே போய்த் தங்கிக் கொள்வார்கள். அதுவே, ‘யாத்ரி நிவாசு’ என்று வைத்துவிட்டால் அதைத் தடுத்துவிட முடியும் என்று கூட நினைத்திருக்கலாம். ஏற்கெனவே, இந்து சமய அறநிலையத் துறைக்குக் கீழ் வரும் கோயில்களில் உள்ள மண்டபங்களில் ‘பிறத்தியாரை’ உள்ளேவிடக் கூடாது என்று உத்தரவிட்டவர்தானே அம்மை யார் செயலலிதா!

30ஆம் நாள் திறந்து வைக்கப்பட்ட இந்தக் கட்டடத்தைப் பேணும் பொறுப்பு இந்து சமய அறநிலையத் துறையிடம் ஒப்படைக்கப்பட இருக்கிறது. தமிழர்களின் வரிப்பணத்தில், தமிழ்நாடு அரசின் அரவணைப்பில் சமற்கிருதம் ‘யாத்ரி நிவாசு’ வடித்தில், தமிழர்களின் மொழிப்பற்றுக்கு அறைகூவல் விடுக்கிறது.

மத்தியில் பா.ச.க. இந்தியை எப்படியாவது தேசிய மொழி ஆக்கிவிட வேண்டும் என்று முயலுகிறது. அரசியலுக்காக அதைக் கண்டித்துக்kalaignar06 கொண்டே, இங்கே இந்தியையும், சமற்கிருதத்தையும் கலந்து பெயர் வைக்கிறார் செயலலிதா. சாடிக்கேற்ற மூடி போல், அங்கே மோடி, இங்கே செயலலிதா!

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 8ஆவது அட்டவணையில் சேர்க்கப்பட்டு, ஏற்பிசைவு (அங்கீகாரம்) பெற்ற மொழிகள் 22 மட்டுமே. தொடக்கத்தில் 14 மொழிகள் இடம் பெற்றிருந்தன. ஆனாலும் இந்தி அலுவல் மொழி, ஆங்கிலம் குறிப்பிட்ட சில ஆண்டுகள் வரையிலும் இணை அலுவல் மொழி என்ற அடிப்படையில்தான் வாதுரைகள் நடைபெற்றன. ஆனால், மாநிலங்கள் அவையில் பேரறிஞர் அண்ணா, மக்களாட்சியின் பொருள் விளங்கும்படியாக ஒரு கருத்தை முன்வைத்தார். 1965 மார்ச்சு 4ஆம் நாள் modi03குடியரசுத் தலைவர் உரைமீது நடைபெற்ற வாதுரையின்போது, ‘ இந்தியாவிலுள்ள முதன்மை மொழிகளான பதினான்கும் தேசிய மொழிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, ஆட்சி மொழியாகும் தகுதி தரப்பட வேண்டும்’ என்று சொன்னார். அதற்குத் தேவையான கட்டமைப்புகள் இல்லை என்று காரணம் சொல்லி, அதற்கு முற்றுப்புள்ளி வைத்தது இந்திய அரசு. ஆனால் இன்றைய கணினி அறிவியல் உலகில் இது ஒன்றும் பெரிய செயலில்லை. அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் அலுவல் மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்த வேண்டிய வேளை இது.

அதே உரையில் பேரறிஞர் அண்ணா சொன்ன இன்னொன்றையும் இங்கே சுட்டுவது பொருத்தமாக இருக்கும். “இந்தி ஆட்சி மொழியாவதை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராக இல்லை என்பது மட்டுமல்ல – ஆட்சி மொழியாக வருவதற்கு இந்தி மொழியே தயாராக இல்லை!அந்த மொழிக்குள்ள குறைபாடுகளை நீங்கள் கவனித்தீர்களா? வளர்ச்சியடைய வேண்டிய – வளமில்லாத ஒரு மொழியினை வைத்து, மற்ற வளர்ச்சியடைந்த மொழிகளை நொறுக்கி, அடிமைப்படுத்த உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது” என்று கேட்டார். சரக்கு தரமற்றிருப்பதால்தான், இன்று வரை எதிர்ப்புகளுக்கு அஞ்ச வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.

periyar-anna-bharathidasan01

வளமற்ற மொழியாக, தகுதியற்ற மொழியாக இருந்தாலும், பேசுபவர்களின் எண்ணிக்கை மிகச் சொற்பமானதாக இருந்தாலும், அந்த மொழியை யார் பேசுகிறார்கள் என்பதுதான் அதற்கான இடத்தை இந்த மக்களாட்சி நாட்டில் தீர்மானிக்கின்ற காரணியாக இருக்கிறது. 1961ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சமற்கிருதம் பேசுவோரின் எண்ணிக்கை வெறும் 2,544 மட்டுமே. எந்த மாநில மக்களுக்கும் தாய் மொழியாக இல்லாத, எந்தப் பகுதியிலும் பெரும் பான்மையினர் பேசும் மொழியாக இல்லாத சமற்கிருதத்திற்கு 8ஆவது அட்டவணையில் இடம் தரப்பட்டுள்ளது. இந்தியாவில் அம்மொழிக்காக ஏழு பல்கலைக்கழகங்கள் உள்ளன.

ஆனால், வடகிழக்கு இந்தியாவில் சற்றேறக்குறைய 30இலட்சம் மக்களால் பேசப்படுகின்ற சந்தால் மொழிக்கு 8ஆவது அட்டவணையில் இடம் இல்லை. காரணம், சந்தால் பழங்குடி மக்களால் பேசப்படுகின்ற மொழி. அதே நேரம் 20இலட்சம் மக்களால் பேசப் பட்டாலும், அது பனியாக்களின் மொழி என்பதால், சிந்தி மொழி அந்தப் பட்டியலில் 1967ஆம் ஆண்டு இடம்பிடித்துக் கொண்டது. இதுதான் மொழி ஆதிக்கம்.

உண்மைதான், “தமிழ்ப்படியேறின் தமிழினம் ஏறும், தலை விலை எனின் தரல் வேண்டும்” எனச் சொன்ன பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் வரிகளை மெய்ப்பித்துக் கொண்டிருக்கும் மண் இத் தமிழ்மண்.

இந்திய விடுதலையின் போது, ஒரே நேரத்தில் இரண்டு எதிரிகளோடு சண்டையிடுவது கடினம். ஆங்கிலேயன் போய்விட்டான், இனி இங்கிருக்கும் ஆதிக்கவாதிகளை எதிர் கொள்வதற்கு ஒன்றுபட்டு செயல்படுவது எளிது என்றார் பேரறிஞர் அண்ணா. ஆனால் இப்போது, தமிழ்நாட்டில் மீண்டும் அந்த நிலை திரும்பிவிட்டதாகத் தெரிகிறது. முதலில் சமூக வலைத் தளங்களில் இந்தியை நிலைநிறுத்த நினைத்த பா.ச.க., கடுமையான எதிர்ப்புகள் கிளம்பவே, பின்வாங்கி விட்டது. இது தற்காலிகமான நிலை தானே தவிர, இந்தியை இந்தியாவின் ஆட்சி மொழியாக்குவது என்னும் அவர்களின் கொள்கை அப்படியேதான் இருக்கிறது.

இந்நிலையில், இந்தியை எதிர்த்த திராவிட இயக்கம்தான், தமிழர்களை ஆங்கில மொழிக்கு அடிமையாக்கி விட்டது என்று சிலர் கூறிக்கொண்டே இருக்கிறார்கள். தமிழுக்கு மாற்றாக அல்ல, இந்திக்கு மாற்றாகத்தான் ஆங்கிலம் முன் வைக்கப்பட்டது என்பதை அரை நூற்றாண்டுக் காலம் விளக்கிச் சொல்லியாகி விட்டது. ஆனால் அரசியலுக்காக, ஆங்கிலம் நீடிப்பதற்கு திராவிட இயக்கமும், தி.மு.க.வும்தான் காரணம், இல்லையென்றால், தமிழ் எப்போதோ ஆட்சி மொழியாகி இருக்கும் என்று கூசாமல் சொல்லிக் கொண்டிருப்பவர்கள், செயாவின் சமற்கிருதப் பெயர் சூட்டல் எதற்கு மாற்று என்று சொல்வார்களா?

நல்ல தமிழ்ப் பெயரைப் பிள்ளைக்குச் சூட்டுங்கள்

நானொரு தமிழனென்று அடை யாளம் காட்டுங்கள்

என்பவை கவிஞர் முத்துக்கூத்தனின் பாடல் வரிகள். சமற்கிருதத்தில் பெயர் சூட்டி, தான் யார் என்பதை செயலலிதா அடையாளம் காட்டிவிட்டார். அவரை மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டியவர்களோ, வரலாறுகளைத் திரித்தும், மறைத்தும் மக்களிடம் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் ‘தமிழ்த் தேசத்’ தாகம், அம்மையாரின் அதிகாரத் தாகத்தைத் தணிக்கவே உதவிக் கொண்டிருக்கிறது.

ஒற்றை ஆயுதத்தின் இரட்டை முனைகளாக மோடியும், செயலலிதாவும் கூட்டணி அமைத்துக் களமிறங்குகிறார்கள். நாமும்,

நிலத்திற் கிடந்தமை கால்காட்டும் காட்டும்

குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல்(குறள்:959)

என்பதை மக்களுக்கு உணர்த்திப் போராட்டக்களம் காண வேண்டும் என்பது காலத்தின் கட்டளை.

thamizh-hindi02

pirar-karuvuulam

karunchattai-thamizhar01