அடிமைத்தனத்தின் தொடக்கமல்ல!  

தொடர்ச்சியே எடப்பாடி அரசு!

  அனைத்துத் தரப்பாரும் ஒருமித்துத் தெரிவிக்கும் கருத்து எடப்பாடி க.பழனிச்சாமியும் அவரது அமைச்சர்களும் பாசகவின் அடிமையாக இருக்கிறார்கள்; ஆட்சியைக் காப்பாற்ற அடிமைத்தனத்தில் மூழ்கிக் கிடக்கிறார்கள்; அடிமைத்தனத்தில் ஊறி மாநில உரிமைகளைக் காவு கொடுக்கிறார்கள் என்பனவே. ஆனால் எடப்பாடியார் மட்டுமல்ல, இதுவரையிலான தமிழக அரசுகள் மத்திய அடிமையாகத்தான் இருந்து வந்துள்ளன. அந்த வரிசையில் இவரும் இவரது அமைச்சர்களும் பாசக அடிமையாக இருக்கிறார்கள என்பதுதான் உண்மை.

  இந்தியா, குடியரசான பின் தமிழ்நாட்டில் அமைந்தது காங்கிரசு ஆட்சி. மத்தியிலும் காங்கிரசு ஆட்சி.  பிற மாநிலங்களில் ஆட்சி செய்த காங்கிரசு  கட்சிகள் தத்தம் மாநில உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் மத்திய அரசுடன் போராடி வெற்றி கண்டன. தமிழ் நாட்டுக் காங்கிரசு அரசோ அடிமைத்தனத்தில் ஊறி இருந்தது. எனவே தமிழ்நாட்டின் நில உரிமை, மொழி உரிமை, வாழ்வுரிமை எனப் பலவும் பறி போயின. இன்றைய காவிரியாற்றுச் சிக்கல், முல்லை-பெரியாற்றுச்சிக்கல் முதலான பலவற்றிற்குக் காரணமே அன்றைய காங்கிரசின் அடிமைத்தனத்தால் நாம் உரிமைகளை இழந்தமைதான்.

  1967 இல் காங்கிரசை விரட்டியடித்து ஆட்சிக்கு வந்தது தி.மு.க. தொடக்கத்தில் ஆட்சி புரிந்த பேரறிஞர் அண்ணா, மத்திய ஆட்சியுடன் இணக்கமும் பிணக்கமும் கொண்டு மாநில உரிமைகளுக்குக் குரல் கொடுக்கத் தவறவில்லை. அடுத்து முதன் முறையாக ஆட்சிப்பீடம் ஏறிய கலைஞர் கருணாநிதியும் இந்தப் பாதையில்தான் நடை போட்டார். எனவேதான் தமிழ்நாட்டிற்குத் தனிக்கொடி கேட்டுப்போராடினார். 27.08.1970 இல் தில்லியில்  செய்தியாளர்கள் முன்னிலையில், தமிழக அரசின் கொடி எப்படி இருக்கும் என்றும்  அறிமுகப்படுத்தினார்.

 ஆனால்,  இவரது ஆட்சிக்காலத்தில்தான் அப்போதைய மத்திய அரசு, மாநில அதிகாரப் பட்டியலில் (State List) இருந்த கல்வித் துறையை நடுவண் அரசுக்கும், மாநில அரசுக்கும் உரிமையுடைய பொது அதிகாரப் பட்டியலுக்கு (Concurrent List)   03.01.1976இல் மாற்றிவிட்டது. கல்விச்சாலைகளில் இந்தித்திணிப்பு, நீட்டு தேர்வு எனப்படும் பொதுத்தேர்வுக் கொடுமை போன்றவற்றிற்கு மூல வித்தே இதுதான்.

  இவ்வாறு மெல்ல மெல்ல மாநில உரிமைகள் பறிபோகும் பொழுது அதிக அளவில் கலைஞர் கருணாநிதி கிளர்ந்தெழவில்லை; “மாநிலத்தில் தன்னாட்சி, மத்தியில் கூட்டாட்சி” என முழங்கி வந்தாலும் மத்திய அரசை  இணங்கச்செய்ய நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் அடிமைத்தனத்தையும் கைவிடவில்லை. ஆட்சிக்காலங்களில் இவரின் அடிமைத்தனங்களுக்குச் சான்றுகளே காவிரியாறு தொடர்பான வழக்கைத் திரும்பப் பெற்றமை, கச்சத்தீவைப் பறி கொடுத்தமை ஆகியன.

 பொதுவாக எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது தமிழனாகவும் ஆளுங்கட்சியாக இருக்கும் பொழுது இந்தியனாகவும் காட்டிக்கொள்ளும் இவரின் போக்கே இவற்றிற்குக் காரணம்.  அதுவும் நெருக்கடி நிலைக்குப் பின்னர் ஆட்சி கலைக்கப்பட்டதால் தன் குரலுக்கு வாய்ப்பூட்டுப் போட்டுக் கொண்டார் என்றே சொல்லலாம். புரட்சித்தலைவர் எம்ஞ்சியாருக்குப் பின்னர் மீண்டும் ஆட்சிக்கு வந்த பொழுது பேச்சால் தன்மானமிக்கவராகவும் செயலில் மத்திய அடிமையாகவும் நடந்துகொண்டார்.

  புரட்சித்தலைவர் எம்ஞ்சியார், புரட்சித்தலைவி செயலலிதா ஆகியோரும் மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து சிலவற்றைச் சாதித்துக் கொண்டாலும் அடிமையாகத்தான் இருந்தனர். மேதகு பிரபாகரனுக்குப் பணஉதவி  அளிப்பதாகக் கூறி இராசீவு தராமல் போனபொழுது புரட்சித்தலைவர் எம்ஞ்சியார் அத்தொகையான 4 கோடி உரூபாயைத் தன் சொந்தப் பணத்திலிருந்து வழங்கினார். ஆனால், பிரபாகரன் மீது இராசீவு நடவடிக்கை எடுத்தபொழுதும் எடுக்கச் செய்தபொழுதும் அடிபணிந்துதான் போனார்.

  இலங்கைத் தமிழறிஞர்கள் தமிழகத்தில் நடைபெறும் மாநாடுகளுக்குத் தமிழக ஆட்சியாளர்கள் தடை விதித்ததன் காரணமும் மத்தியஆட்சியின் அடிமைத்தனமே!  இன்றளவும் தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழர்களைக் கடுஞ்சிறையில் வைப்பதுபோல் மாறிமாறி வரும் தமிழக அரசுள் நடத்துவதும் அடிமைத்தனத்தின் வெளிப்பாடே!

 மேதகு பிரபாகரனின் தாயாரை மருத்துவத்திற்காக வரவிடாமல் செய்தது, ஈழத்தமிழர்கள் பெறவிரும்பிய கல்வி, மருத்துவ உதவிகளைத் தடுத்தது முதலான பலவும் அடிமைத்தனத்தின் வெளிப்பாடன்றி வேறென்ன? ஈழத்தில் பேரளவில் இனப்படுகொலைகள் நடந்தபொழுது  போலி உண்ணாநோன்பு இருந்து அதையும் நிறுத்தியது அடிமை உணர்வு மேலோங்கியதால்தானே!

  தமிழ்மக்களுக்கு எதிரான மத்திய அரசின் திட்டங்களைத் தமிழ்நாட்டில் நிறைவேற்றும் பெரும் செயல்களில் மட்டுமல்ல, பெயர் சூட்டலில்கூட அடிமைத்தனத்தில் அமைதிகாக்கின்றனர் என்பதைப் பார்த்தால் வேறு நாம் பார்க்க வேண்டியதில்லை.

  1953 இல்,  தால்மியாவின் தொழிற்சாலை அமைந்த பகுதிக்குத் தால்மியாபுரம் என வடநாட்டான் பெயரைச் சூட்டுவதற்கு  எதிர்ப்பாகத் தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்தவர் எனப் பெருமைப்படுத்தப்படுபர் கலைஞர் கருணாநிதி. (இதை அருகிலுள்ள ஊரான கல்லக்குடி பெயரில் அழைக்க வேண்டும் எனப் போராடி இறுதியில் 1969 இல் கல்லக்குடி பழங்காநத்தம் எனப் பெயர் சூட்டப்பட்டது.) ஓர் ஊரின் பெயரே வட நாட்டான்பெயரில் இருக்கக்கூடாது என்ற கலைஞரின் ஆட்சியில்தான் எண்ணற்ற குடியிருப்புகள்  இந்திராகாந்தி பெயரிலும் இந்திப்பெயரிலும் அமைக்கப்பட்டன. தாய்சேய் நல மையங்கள்கூட அங்கன்வாடி என்ற பெயரில் தொடங்கப்பெற்றவை இன்றும் அப்பெயரில்தான அழைக்கப்படுகின்றன.

இவரைத் தொடர்ந்து புரட்சித்தலைவர் எம்சிஆர் ஆட்சியில்

இந்திரா அவாசு யோசனா(1985),

செயலலிதா ஆட்சியில்

பிரதம மந்திரி ரோசகர் யோசனா(1993),

கசுதூரிபா காந்தி பாலிகா வித்யாலயா (2004 ),

பாரத்து நிர்மாண்(2005),

சனனி சுரட்சா யோசனா (2005),

இராசீவு காந்தி கிராமீன் வித்யூதிகரன் யோசனா (2005),

எனப் பல திட்டங்கள் தமிழைத் தொலைத்துவிட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. “எங்கும் தமிழ்” என்பது  வெற்றுப்பேச்சாக  மாறியதன் விளைவு அடிமைத்தனத்தின் மற்றுமோர் அடையாளம் அல்லவா?

 மத்திய அரசின் திட்டங்களின் பெயர்கள், துறை முழக்கங்கள் யாவும் இந்தி அல்லது இந்திமயமாக்கப்பட்ட சமற்கிருதப்பெயர்கள்தாமே!  இதை எதிர்க்கும் துணிவற்ற அடிமைகள்தாமே நம் ஆட்சியாளர்கள். அவ்வாறிருக்க  இப்போது மட்டும் அடிமைத்தனத்தைக் குறைகூறி என்ன பயன்?

  பன்னீர் செல்வம் அடிமை ஒப்பந்தத்தால்தான் முதலமைச்சரானார். எடப்பாடி க.பழனிச்சாமி அடிமையாக இராவிட்டால் போகப்போவது அவரது ஆட்சி மட்டுமல்ல  அதிமுக ஆட்சியும்தான். பா.ச.க. விரும்புவதுபோல் சசிகலா குடும்பத்தினர் அகற்றப்பட்டால் மாவீரனாகக் காட்டிக்கொள்ளலாம். அம்முயற்சியில் தோல்வியுற்றால், கட்சியைக் காப்பாற்ற  வேறுவழியின்றி இவ்வாறு நடந்துகொண்டதாகப் பூசி மெழுகலாம். எவ்வாறிருப்பினும் இன்றைய அதிமுகவின் சூழலில் அடிமையால் மட்டுமே ஆட்சியில் இருக்க முடியும். எனவே, வழி வழி அடிமைத்தனத்தில் நடை போடுபவர்களைப் புதியதாக அடிமைப்பாதையில் செல்வதுபோல் கூறுவது சரியல்ல.

  மக்கள் அடிமைத்தனத்தில் ஊறி இருப்பதால் ஆட்சியாளர்களும் மத்திய ஆட்சியின் அடிமையர்களாக உள்ளனர். நாம் உரிமை உணர்வு பெற்றால் மட்டுமே ஆட்சியாளர்களும் உரிமை உணர்வுடன் விளங்குவர் என்பதை நாம்புரிந்து கொண்டு தன்மானத்துடன் வாழ்ந்தால்தான்  நாட்டிற்கு விடிவு கிடைக்கும். அதுவரை அடிமையாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களை அடிமைகள் என்று சொல்லிப் பயனில்லை

 

இலக்குவனார் திருவள்ளுவன்