அண்ணாவின் அருகே தம்பியின் துயிற் பேழை

– காரணர்களுக்கு நன்றி.

  இந்திய நாட்டின் மூத்த தலைவரும் தி.மு.க.வின் தலைவரும் முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதி நோய்வாய்ப்பட்டு மரண வாயிலை நெருங்கும் பொழுதே குடும்பத்தினர் அடக்கம் செய்யும் இடம்பற்றி முடிவெடுத்துள்ளனர். எனவேதான் இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திரர்(மோடி) அவரைப் பார்க்க வரும்பொழுதே சென்னைக் கடற்கரையில் அறிஞர் அண்ணா நல்லடக்க இடத்தருகே இடம் ஒதுக்க ஏற்பாடு செய்து தருமாறு வேண்டியுள்ளனர். பின்னர் தமிழக முதல்வரை மூத்த தி.மு.க.தலைவர்களும் குடும்பத்தினரும் சந்தித்து விண்ணப்பம் கொடுத்து இடம் ஒதுக்க வேண்டியுள்ளனர்.

  ஆனால், தொடக்கத்தில் தமிழக அரசு இவ்வேண்டுகோளை மறுத்துவிட்டது. இதற்காகக் காழ்ப்புணர்ச்சியால் பாசகவும் அதிமுகவும் வேண்டுகோளை நிறைவேற்றவில்லை என்பது சரியாகப் படவில்லை.

  பாசக அரசியல் பேர அடிப்படையில் கூட்டணி, ஒத்துழைப்புபோன்ற எதையும் எதிர் நோக்கியிருக்கலாம். ஆனால் பாசக முதலான அனைத்துக் கட்சியினருமே இந்திய அரசியலில்  பல திருப்புமுனைக்குக் காரணமாக இருந்த கலைஞர் கருணாநிதியை இந்தியத் தலைவராகக் கருதி அதற்குரிய மதிப்பை அளித்துள்ளனர். எனவேதான்  நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திராத அவருக்காக மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரண்டையும் ஒத்தி வைத்துள்ளனர். இதனால் எல்லாம் பாசகவிற்குத் தமிழ்நாட்டில்  வாக்கு விழுந்துவிடாது. எனவே, காழ்ப்புணர்ச்சியின்றி மதிப்பளித்து உள்ளார்கள் என்றுதான் பாராட்ட வேண்டும்.

  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, காந்தி மண்டபம் அருகே 2 காணி நிலம் தருவதாகவும் வேறிடம் கேட்டாலும் தருவதாகவும் அரசு மதிப்புடன் நல்லடக்கம் செய்ய ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கும் முன்னரே முதல்வரும் அமைச்சர் பெருமக்களும் காவேரி மருத்துவமனை சென்று மேனாள் முதல்வர் நலம்குறித்து உசாவி வந்துள்ளனர். மேனாள் முதல்வர் செயலலிதா இருந்தால் இதற்கான வாய்ப்பு இருந்திருக்க வாப்பில்லை. ஒருவேளை அவர் அதிரடியாக நேர் மாறாகவும் இருந்திருக்கலாம். அண்ணா சதுக்கத்தில் இடம் தர இயலாமைக்குச் சட்டச்சிக்கல்தான் காரணம் என்பதையும் முதல்வர் விளக்கியுள்ளார்.

  தங்கள் தங்கத்தலைவிக்கு இடம் ஒதுக்கி அடக்கம் செய்ததை எதிர்த்து வழக்கு தொடுத்தவர்களின் தலைவருக்கு இடம் தந்தால் கட்சியில் கொந்தளிப்பு ஏற்படலாம். நாளை வழக்கு முடிவு மாறுபட்டு இருந்தால் நல்லடக்கம் செய்ததைத் தோண்டி அப்புறப்படுத்தும் நிலையும் வரலாம். எனவேதான் இந்தக் கூற்று. இதன் மூலம் தங்களுக்குள்ள சிக்கலைப் போக்க எண்ணி இறுதியில் அதில் வெற்றியும் பெற்றுள்ளளனர்.

 உயர் நீதி மன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதி மன்றத்திற்கு மேல் முறையீட்டிற்குப் போகாமையே அவர்களின் காழ்ப்புணர்ச்சி யின்மையைக் காட்டுகிறது. ஆனால், சூழ்நிலை மாறியிருந்து திமுக ஆட்சியில் செயலலிதாவிற்கு நல்லடக்க இடம் கேட்டிருந்தால், மேனாள் முதல்வர் காமராசர், மேனாள் முதல்வர் சானகியம்மாள் ஆகியோருக்கு இடம் ஒதுக்காததுபோல் குற்றவாளி என்பதையும் கூறி  மறுத்திருக்கவே வாய்ப்பு உள்ளது.

 ஆனால், மக்கள் வேறு வகையாகப் பார்க்கின்றனர். காந்தி மண்டபம் அருகே முதல்வர் எனச் செயலலிதாவிற்கு இடம் ஒதுக்கவில்லை. தங்கள் புரட்சித்தலைவருக்கு அடுத்த நிலையில் இருந்து கட்சியைக் காத்தவர் என அவருக்கு அருகேதான் ஒதுக்கியுள்ளனர்.

  இதுபோல் திமுகவின் தலைவர் அறிஞர் அண்ணாவிற்குப் பிறகு கட்சியைக் காத்தவர் என்ற முறையில் கலைஞர் கருணாநிதிக்கும் அவர் அருகேதான் இடம் ஒதுக்க வேண்டும் என்பது திமுகவினரின் கருத்து மட்டுமல்ல. பெரும்பாலான பொதுமக்களும் அவ்வாறுதான் கருதினர்.

  கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருக்கும்பொழுது மறைந்தால்தான் அறிஞர் அண்ணாவின் அருகே அடக்கம் செய்ய இயலும். இல்லையேல் அறிவாலயத்தில்தான் அடக்கம் செய்ய வேண்டிவரும். எனவே, அவர் மறைவின்பொழுது ஆட்சியில் இருக்க வேண்டும் எனத் திமுக தொண்டர்கள் பலரும் கூறியுள்ளனர். கலைஞர் கருணாநிதியும் அவ்வாறு எண்ணம் கொண்டுள்ளதாகவும் கூறுவர். ஆனால், எதிர்க்கட்சியாக இருந்தபொழுதும் அவரும் தொண்டர்களும் விரும்பியவாறு அறிஞர் அண்ணாவின் அருகேயே தம்பி கருணாநிதிக்கும் இடம் ஒதுக்கப்பட்டுவிட்டது.

  13 முறை  சட்ட மன்ற உறுப்பினராகவும் ஒரு முறை சட்ட மேலவை உறுப்பினராகவும் 5 முறை முதல்வராகவும்  நாட்டின் தலைமையமைச்சர்கள் தேர்ந்தெடுக்கப்பட வழிகாட்டியாகவும் விளங்கிய மாபெரும் தலைவர் கலைஞர் கருணாநிதி; அவர் விரும்பியவாறும் மக்கள் விரும்பியவாறும் அறிஞர் அண்ணாவின் துயிற்பேழை அருகே தம்பி கலைஞர் கருணாநிதியின் துயிற்பேழையையும் அடக்கம் செய்ய முடிந்துள்ளது.

  இதற்கு ஏற்ப சென்னைக் கடற்கரையில் அடக்கம் செய்ய இசைவளித்துத் தீர்ப்பளித்த தலைமை நீதிபதி (பொறுப்பு)  குலுவாடி இரமேசு (Huluvadi G. Ramesh)  நீதிபதி சுந்தர் ஆகியோருக்கும் தடையை விலக்கும் வகையில் வழக்குகளைத் திரும்பப் பெற்றவர்களுக்கும் வில்சன், வீர கதிரவன், ஆர்.விடுதலை ஆகிய வழக்குரைஞர்களுக்கும் தீர்ப்பினைச் செயல்படுத்திய தமிழக அரசிற்கும் கோரிக்கை வைத்த திமுகவின் குடும்பத்தினருக்கும் தலைவர்களுக்கும் நன்றியைத் தெரிவிக்கிறோம்.

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

திண்ணியர் ஆகப் பெறின். (திருவள்ளுவர், திருக்குறள் 666)

 

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை, அகரமுதல