அமைச்சரவையில் உதயநிதியின் எழுச்சி மிகு உதயம்– இலக்குவனார் திருவள்ளுவன்
அமைச்சரவையில் உதயநிதியின் எழுச்சி மிகு உதயம்!
குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்
(திருவள்ளுவர், திருக்குறள் 1023)
சட்ட மன்ற உறுப்பினரான மு.க.தா.உதயநிதி, கார்த்திகை 28,2053/14.12.2022 அன்று அமைச்சரானார்.
உதயம் என்பது, எழுதல், மேலெழும்புதல், தோன்றுதல், பிறத்தல் முதலிய பொருள்களையுடைய தமிழ்ச்சொல்லே. கீழ்த்திசையிலிருந்து மேலெழும்பும் சூரியனை உதய சூரியன் என்பதும் தமிழே! உதயநிதியும் அமைச்சரவையில் உதித்துள்ளார். அவரது கட்சியினரில் அவர் ஆதரவாளர்கள் விரும்பியவாறும் பல தரப்பாரும் விரும்பியோ விரும்பாமலோ எதிர்பார்த்தவாறும் ஊடகங்களில் உலா வந்த செய்திகளின்படியும் தமிழக அமைச்சர்களுள் ஒருவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவரின் பன்முகச் செயற்பாடு பாராட்டும்படியே உள்ளது. 2009 இல் ‘ஆதவன்’ திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் சிறுவேடத்தில் அறிமுகமானது முதல் 2022 ‘கலகத்தலைவன்’ வரை (வெளிவர உள்ள இரு படங்களையும் சேர்த்து) 18 படங் களில் நடிகராகத் தன் நடிப்பாளுமையை வெளிப்படுத்தியுள்ளார்.
2008 இல் ‘குருவி’ திரைப்படம் முதல் 17 படங்களின் உருவாக்குநராகவும் 2010 ‘விண்ணைத்தாண்டி வருவாயா?’ முதல் 7 படங்களின் வழங்குநராகவும் இருந்து தன் திரையாளுமையை வெளிப்படுத்தியுள்ளார்.
2018 மார்ச்சு முதல் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2019-இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் தமிழகச் சட்டசபையின் 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களிலும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்குமான தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டார். இதன்மூலம் மக்களிடம் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார். அரசியலில் பட்டறிவை வளர்த்துக் கொண்டார் 2019 சூலை 7 அன்று திமுக இளைஞர் அணிச் செயலாளரானார். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றுச் சட்டமன்ற உறுப்பினரானார். இத்தொகுதியில் இவர் 67.89 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்றுள்ளார் என்பது இவருக்கு உள்ள மக்கள் ஆதரவைக் காட்டுகிறது.
இளைஞர் நலன் – விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள உதயநிதிக்கு, இத்துறைகளுடன் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை, வறுமை ஓழிப்புத் திட்டங்கள், ஊரகக் கடன்கள் ஆகிய துறைகளும் பொறுப்புகளாக வழங்கப்பட்டுள்ளன. இவை இளைஞர்களுடனும் மக்களுடனும் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தும். தன்னுதவிக் குழுக்கள், சிறு தொழில்கள் ஆகியவற்றை ஒழுங்குபடுத்தி ஊரக வளரச்சி மூலம் தமிழ்நாட்டை வளர்ச்சிப்பாதையில் இட்டுச் செல்ல இயலும்.
பதவியேற்றபின் செய்தியாளர்களிடம் பேசுகையில் இவர் தெரிவித்தவை இவர்மீது நம்பிக்கை வைக்கச் செய்கிறது. அவர், “என் மீது குறையுரைகள் வந்து கொண்டே தான் இருக்கும். குறையுரைகளுக்கு எனது செயல்பாடுகள் மூலம் விடை அளிப்பேன். முடிந்தவரை அமைச்சர் பதவியில் சிறப்பாகச் செயல்படுவேன். விளையாட்டு வீரர்களுக்கு ஊக்குவிக்கும் பணிகளில் ஈடுபடுவேன். தமிழ்நாட்டை விளையாட்டுத் தலைநகராக மாற்றுவோம் எனத் தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தோம். அதை நிறைவேற்றும் வகையில் செயல்படுவேன். தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட ஒவ்வொரு தொகுதிக்கும் சிற்றரங்கம் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன்” என்று கூறியுள்ளார்.
வழித்தோன்றலால் கிடைத்த பதவி என்பதற்குப் பிறகட்சிகளிலும் பிற மாநிலங்களிலும் பல நாடுகளிலும் இவ்வாறுள்ள சூழலை எடுத்துக் கூறி இங்கு மட்டும் தவறா எனக் கேட்டால் இயல்பாக இருந்திருக்கும். அவ்வாறில்லாமல் தன் செயல்பாட்டால் விடையிறுப்பேன் என்பதால், அவ்வாறே வினைத்திறனுடன் செயல்பட்டுத் தகுதியினால் பெற்ற பதவி என மக்கள் நம்பிக்கையைப் பெறுவார் என எதிர்பார்க்கலாம். இவ்வாறு கூறுவதன் காரணம் பதவி யேற்பு விளம்பரங்களைத் தடைசெய்து முன்னெடுத்துக்காட்டாக விளங்கியுள்ளதுதான். பதவியேற்பு அறிவிப்பு வந்ததிலிருந்து பதவியேற்றதும் தொடர்ந்தும் வாழ்த்தியும் புகழுரைகளைச் சூட்டியும் இல்லாத அடைமொழிகளைத் திணித்தும் விளம்பரங்கள் வரும். தங்களை அடையாளம் காட்டுவதற்காகவும் அவருடன் நெருக்கமாக இருப்பதாகக் காட்டிக் கொள்ளவும் இதன்மூலம் ஆதாயம் அடையவும் விளம்பரங்கள் கொடுப்பர். சிலர் கட்டாயத்தால் விளம்பரங்கள் கொடுப்பர். ஆனால், உதயநிதி, அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். கட்சியிதழ்களிலும் விளம்பரங்கள் வழங்கத் தடை விதித்து விட்டார். இதற்கு இவரை என்ன பாராட்டினாலும் தகும்.
இவர் அரசியலில் இறங்கத் தீர்மானித்த பொழுதே இவருக்கும் குடும்பத்தாருக்கும் அமைச்சர் ஆசையும் இல்லாமல் இருந்திருக்காது. ஆனால், ஆசையினால் மட்டும் உழைப்பின்றி முன்னேற எண்ணவில்லை. உழைப்பையே வழியாகக் கொண்டு தீவிரமாகச் செயற்பட்டுள்ளார். திமுக வெற்றிக்குக் கடுமையாகப் பரப்புரை மேற்கொண்டுள்ளார். சட்ட மன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்றதும் தொகுதி முன்னேற்றத்தில் கருத்து செலுத்தியுள்ளார். தன் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் இருக்கும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்குப் பாடங்கள் படிக்க உதவும் வகையில் இலவச இணைய வசதியை ஏற்படுத்தித் தந்துள்ளார் தொகுதிக்கான தனித்த அலைபேசிச் செயலியை உருவாக்கியதன் மூலம் தொகுதியில் ஏற்படும் குடிநீர், மின்சாரம், கழிவுநீர் அடைப்பு போன்ற சிக்கல்களுக்கு உடனுக்குடன் தீர்வு கண்டுள்ளார். பிற சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு முன்னெடுத்துக்காட்டு எனச் சொல்லும் வகையில், தன் செயற்பாடுகளை அமைத்துக் கொண்டார். வழித்தோன்றலுக்கான பரிசு எனப் பிறர் கருதுவதுபோல் அல்லாமல், மக்கள் பணிகளின் மூலம்தான் எதையும் அடைய வேண்டும் என்ற இலட்சிய இலக்குடன் செயற்பட்டுள்ளார். எனவே, இவர் தகுதியை வளர்த்துக் கொண்டே அமைச்சராக வீற்றிருக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் எனலாம். இதற்கு இவருக்குத் தோன்றாத் துணையாக இருக்கும் இவர் மனைவி கிருத்திகா உதயநிதிக்கும் பிறருக்கும் பாராட்டுகள்.
இவருக்கு நாம் வாழ்த்துடன் சில அறிவுரைகள் கூறவும் கடமைப்பட்டுள்ளோம். தமிழ், தமிழர் நலனில் கருத்து செலுத்தும் அரசாக இருப்பினும், அடிப்படையான ஆட்சித்தமிழ்ச் செயலலாக்கம் என்பது கனவாகத்தான் உள்ளது. தமிழ் வளர்ச்சியையும் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறைபோல் கருதிக் கருத்து செலுத்தலாம். அதற்கு இவர் முன்னெடுத்துக்காட்டாகத் திகழ்ந்து தமிழ்ப்பயன்பாட்டில் முதலிடத்தில் இருக்க வேண்டும்.
தங்கள் பெயர்களை அன்பழகன், அறிவழகன், மதியழகன், சிற்றரசு, தென்னரசு, நெடுஞ்செழியன் என்பன போன்ற தமிழ்ப்பெயர்களாக மாற்றித் தமிழுணர்வை வளர்த்தது தொடக்கத் தி.மு.க. இன்றைய தி.மு.க. தலைவர்களோ இன்றைய தலைமுறையினர்போல் ஆங்கிலத்தின் மீது மையல் – காமமயக்கம்(மோகம்) கொண்டு ஆங்கிலப் பெயர்களைச் சூட்டுகின்றனர். அதன் ஒரு வெளிப்பாடுதான் உதயநிதி தன் திரைப்பட நிறுவனத்திற்கு (இ)ரெட்(டு) செயிண்டு/Red giant எனப் பெயர் சூட்டியதாகும். தமிழ் நூல்களில் ‘அரக்கன்’ எனக் குறிக்கின்றனர். அஃறிணைப் பொருளான விண்மீனை அரக்கன் எனக் குறிப்பது ஏற்றதல்ல. இதன் அகன்ற பரப்பு அடிப்படையில் வியலி எனச் சொல்ல வேண்டும் என நான் முன்பே குறித்துள்ளேன்(கலைச்சொல் தெளிவோம் 29, 04.01.2015). எனவே இதன் பெயரைத் தமிழில் செவ்வியலி எனக் குறிக்க வேண்டும். தமிழில் சொன்னால் புரியாது என்பார்கள். ஆங்கிலப்பெயர் மட்டும் அனைவருக்கும் புரியவா செய்கிறது? இல்லையேல் மக்களுக்குப்புரியும் என எண்ணும் தமிழ்ப்பெயரைச் சூட்டுங்கள்.
இந்தித்திணிப்பை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டு தமிழை மறக்கச் செய்து இந்தியைப் பயிற்றுவிக்கும் இன்றைய திமுகவினர்போல் இல்லாமல் நம்ம பள்ளியை நம்ம school எனக் குறிப்பிட்டுத் திட்டப்பெயரில் ஆங்கிலத்தைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவந்து தமிழைத் துரத்தும் இன்றைய திமுகவினர்போல் இல்லாமல் தமிழ் வளர்க்கும் தமிழ் மகனாகத் திகழ்ந்து தலைமகனாக ஒளிர்விட வாழ்த்துகிறோம். அமைச்சர் பொறுப்பு மூலம் மக்கள் நலன்களுக்காக எண்ணுவனவற்றை எல்லாம் இனிதே நிறைவேற்றிச் சிறந்து திகழ்ந்து மேலும் மேலும் உயர்வு பெற வாழ்த்துகிறோம்.
உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின்
(திருவள்ளுவர், திருக்குறள் 540)
வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல – இதழுரை
Leave a Reply