(புதிய புரட்சிக்கவி’- களம் : 2 காட்சி : 1 – தொடர்ச்சி)

புதிய புரட்சிக்கவி

களம் : 2 காட்சி : 2


உதாரன், மேடையில் தன்பகுதியில் அமர்ந்திருக்கிறான். இளவரசி மறுபுறமாக வந்து தன்னிருக்கையில் அமர்கிறாள்


அறுசீர் விருத்தம்


இளவரசி: அறிவுங் கொளுத்தித் தமிழ்ப்பாடல்
அகமுங் குளிரப் பயிற்றுகிற
செறிவு மிக்கோய் செந்தமிழைச்
சேர்த்து வணங்கி மகிழ்கின்றேன்
நெறியாய்ச் செய்யுள் அடிப்படையை
நேற்றே உரைத்தீர் நனிநன்று
குறிப்பீர் இன்று தளையோடு
கொள்ளுந் தொடையை முறையோடு

கவிஞன்: வளையுள் வளைந்தி ருக்கும்
வனப்புறு சாரை தானும்
இளைய தவளை கவ்வ
இருநீர் சீறிப் பாய
விளையுங் கரும்பின் பூவும்
விதிர்த்திடும் தேன்பெ ருக்கு
களையுநர் கண்ம றைக்கும்
களிப்புறு நாட்டின் செல்வி

        சீர்பட      வகுத்த      சீரெல்லாம்
            சிறிதும்        பிசிறு          தட்டாமல்
        நேர்பட      இசையா       யமைதற்கு
            நெறிப்படச்      சொன்னார்       தளையைத்தான்
        ஏர்பட       நெஞ்சில்        பாவெல்லாம்
            இனிதே       வகுத்தார்      தொடையெல்லாம்
        ஆர்பட       என்றே       நடுங்காமல்
            அவற்றைப்        பேணல்       நன்றாகும்

இளவரசி: நிலையும் நினைப்பும் கவியாக
நெருக்குந் தளையே தடையாகும்
வலையைக் கட்டி யதற்குள்ளே
வனிதை யாடல் நன்றாமோ?
தளையை நீக்கின் தமிழ்ப்பாடல்
தழைக்கு மன்றோ எளிதாக
தளையின் தேவை என்னென்று
தயவாய்க் கூற வேண்டுகிறேன்

கவிஞன்: பாடலுக்குப் பொருத்த மின்றேல்
பண்ணதனால் பயனு மின்றே
ஆடலுக்கு மேடை யின்றேல்
ஆடலல்ல ஓட லாகும்
நாடலாகும் பண்ணொ ழுங்கை
நாட்டிவைத்தார் தளையா மென்றே
வாடலில்லா மாலை கட்ட
வண்ணமலர்க் காம்பு வேண்டும்

        பண்ணும்         பொருளும்        மாறுபட்டால்
            பாடல்       தாமுந்      தீங்காகும்
        எண்ணும்     ஓசை         வேறுபட்டால்
            இயையும்     பண்ணுந்     தீங்காகும்
        நுண்மை      இசையைக்     காத்திடவே
            நுவன்றார்       தளையை       முறையாக
        எண்ணம்      வேறாய்க்        கொள்வார்க்கே
            ஏற்ற            வாறு             விலக்களித்தார்

        குழம்பும்       ரசமும்      வேறன்றோ
            கூட்டுப்        பொருளும்        வேறன்றோ
        வழக்கம்     மாறும்      அட்டிலதை
            வாயும்      வயிறும்     ஏற்பதில்லை
        குழம்பாய்       ரசமாய்      வேண்டாமே
            கொடுப்பீர்      அனைத்தும்   ஒன்றாக
        குழப்பி     வாயால்      வயிற்றுனுள்ளே
            கூட்டு      விப்பேன்        என்பாரார்?

        தளையுந்     தொடையுந்        தக்கபடித்
            தம்முள்     மாறல்       விலக்கல்ல
        இளைத்தல்        பெருத்தல்       இல்லாமல்
            ஏற்ற            வாறு            அடியளவு
        விளையும்        பாவுக்      கொத்தபடி
            விலக்குத்       தந்து           வகுத்திட்டார்
        களையா       யதனை        எண்ணாதீர்
            கழனி        விளைவு      பலவாகும்

இளவரசி: மோனை எதுகை யின்றி
முத்தமிழ்ப் பாட லாமோ
ஏனை மொழியி லெல்லாம்
இன்னிசை நிரம்ப வேண்டின்
மோனை எதுகை தாமும்
முதன்மை யல்ல என்பார்
ஏன்நாம் இங்கு மட்டும்
இன்னும் விடுவ தில்லை

உதாரன்: மோனை எதுகை யின்றேல்
முத்தமிழ்ப் பாட லில்லை
ஆனை பூனை யோடே
அடுத்தோர் எருமை நிற்கும்
கானகக் காட்சி யொத்துக்
கரையிலா தமையுஞ் சொற்கள்
நாணத் தகுவ வன்றி
நற்பா டலாவ தில்லை

        கருத்தைப்       பிணிக்குஞ்      சொல்லேனும்
            காதுக்      கின்பம்     விளையாதேல்
        எருத்தைப்       பூட்டி          யோட்டுகிற
            எழில்கொள்       தேருக்      கொப்பாகும்
        பொருந்தும்      மோனை        எதுகையொடு
            பொருளும்        சிறக்கும்         நிலையின்றேல்
        மருவும்     மங்கைக்     கேலாத
            மணமில்      வண்ண        மலராகும்

        ஒத்த            எழுத்தே     இருந்தாலும் 
            ஒலிதான்     மாறும்      அங்கெல்லாம்
        மெத்தப்     பயனின்      றதனாலே
            மேன்மை      என்பார்       இயைபொன்றே
        ஒத்த            எழுத்தே     முத்தமிழில்
            ஒலிதான்     மாறும்         நிலையுண்டோ
        ஒத்த            ஒலிதான்     இல்லாக்கால்
            ஒழுங்காய்       இனிமை       அமையாதே

அமுதவல்லி: இதயம் பிணிக்கும் இசையெண்ணி
இயற்றும் பாடல் பொன்னாகும்
சிதையா வண்ணம் எழுத்தெண்ணிச்
செப்புங் கவிதை என்னாகும்
வதையாய் நெஞ்சிற் கொள்ளாமல்
வம்புப் பேச்சா யெண்ணாமல்
புதையும் நுட்பம் என்னென்று
புரியும் படியாய்ச் சொல்வீரே

உதாரன்: இசையிலே இனிமை வேண்டின்
இணையுநல் லோசை வேண்டும்
வசையிலா ஓசை வேண்டின்
வகைப்படு எழுத்து வேண்டும்
நசையுறு ஒலிதான் மாறா
நற்றமிழ் எழுத்தெல் லாமும்
இசைகெடல் என்று முண்டோ
எழுத்துகள் இணையு மானால்

        சரிகம       வென்றே      பேரிட்டார்
            சலியா       இசையின்     கூறெல்லாம்
        நிரைநேர்        என்றே       பேரிட்டார்
            நிறுத்த     இசையை       யாப்பாரும்
        நிரைநேர்        என்னும்     அசையெல்லாம்
            நிரைநேர்        என்னும்     ஒலியன்றோ
        முறைமை      யான         அமைப்பிதிலே
            முரண்பா     டென்ன       கண்டிட்டீர்

        அங்கை       புறங்கை     தாளமிட
            அழகுச்      சொற்கள்     கோலமிட
        தங்கத்      தமிழில்     பாட்டாகத்
            தயவாய்      அதனைக்      கொள்வாரும்
        பொங்குந்        தொடையும்        இணைந்துவர   
            பொருளுஞ்        சுவையுங்        கலந்துவர
        சங்கை       யென்றே      வெறுக்கின்றார்
            சலிப்பும்       ஏனோ     கொள்கின்றார்

        மோனை        எதுகை       இயைபென்று
            முரணோ       டளபும்      அய்ந்தாக
        ஏனை     யடியோ       டிணையென்றும்    
            எழிலாம்     பொழிப்போ     டொரூவென்றும்
        தேனை        மிகுக்கும்      முற்றென்றும்
            திகட்டாக்       கூழை        கதுவாயாய்
        வானை        யளக்கும்        வில்லாக
            வாயா        தொலியின்        நலமேது?

        உப்பிலாப்       பண்படம்     குப்பையிலே
            உரைமறுப்        பாருண்      டோபுவியிலே
        ஒப்பிலா     எதுகை       உப்பைத்தான்
            ஓஒவென்      றுமிழ்வார்      நோயாளர்
        துப்பிலா        தெதுகை      விடுத்தாலும்
            துடிப்பில்      மோனை        மிகுத்தாலும்
        ஒப்பிலாத்       தமிழ்ப்பா       சுவையிலே
            உருப்படா        திதனை       உணர்வாயே

எண்சீர் விருத்தம்

        தாளந்தான்           தப்பாது
            பாட்டி      யற்றும்
            தருக்கினரும்    ஓசையினைப்
            போட்ட       மைப்பார்
        நீளந்தான்           அசையென்று
            சொல்லி      வைத்தார்
            நீயிதிலே        தடுமாற்றம்
            கொள்ள       வேண்டாம்
        தாளத்தைக்           கைகொட்டிப்
            பாடு            வார்க்கும்
            தக்கபடி     அசையெண்ணி
            இயற்று      வார்க்கும்
        நீளந்தான்           அளவாக
            அமைதல்      காணாய்
            நினைப்பொன்றெ    தடுமாற்றம்
            கொள்ள       வேண்டாம்

        இடைமெலிக்கும்       இரண்டிலாது
            பெண்மை      யில்லை
            இழுத்துவிடும்   மூச்சிலாது
            நீச்ச           லில்லை
        தடையழிக்கும்        முனைப்பிலாது
            வளர்ச்சி        யில்லை
            தங்கத்தமிழ்     மூன்றிலாது
            வாழ்வு      மில்லை
        நடையொன்று       மில்லாத
            உரையு       மில்லை
            நடிப்பொன்று மில்லாது
            கூத்து          மில்லை
        தொடையொன்று      மில்லாத
            பாட         லில்லை
            தூய்தமிழுக்     கதுதானே
            சுவையின்        எல்லை

அறுசீர் விருத்தம்

அமுதவல்லி: மண்ணும் விண்ணுந் திருத்தமுற
மனத்தி லூறும் உணர்வுகளை
எண்ணும் பாங்கில் எடுத்துரைக்க
எவர்க்கும் உரிமை வேண்டாவோ
வண்ணம் கவிக்கு வேண்டுமென
வரம்பு கட்டல் நன்றாமோ
எண்ணம் எதற்குங் கட்டுப்பட
எந்தக் கவிஞன் உடன்படுவான்

உதாரன்: உரிமை உணர்வு மாந்தர்தம்
உள்ளங் கொள்ளல் நன்றேயாம்
சரிதான் மிகைதான் என்னுமோர்
சட்டம் இன்றேல் வாழ்வில்லை
திரிதல் இன்றி மொழியும், நாம்
செப்புங் கருத்தும் இனிமையுடன்
உரிய வாறு கவிதை, உளம்
பதிக்க யாப்பும் வேண்டுவதே

        ஒலியின்       அளவும்      எம்மொழிக்கும்
            ஒலிப்பின்       முறையும்        வகுத்துள்ளார்
        பலிநான்     அல்ல        என்எண்ணப்
            படிதான்     எழுத்தை       ஒலிப்பனெனப்
        புலியாய்        முழங்கின்       அவனைத்தான்
            புலியே      எனலாம்      புத்தியிலே
        வலியார்     யாரும்      மனிதனென
            மதியார்     அவனை        மறவாதே

எண்சீர் விருத்தம்

        ஆராயுந்   திறனதுவே
            அறிவா   மென்றும்
            அனைவருமே    பிறப்பதிலே
            நிகரா   மென்றும்
        நேராய்ந்து   சொன்னவராம்
            வள்ளு   வர்க்கும்
            நீள்புவியை  ஓரூராய்
            புவியோ  ரெல்லாம்
        சீரான   உறவாகக்
            கொண்ட  வர்க்கும்
            சிந்தித்தால்  தளையதுதான்  
            தளையா  யில்லை
        யாரீங்கே   தளைமீறிப்
            புரட்சி  யெண்ணம்
            யாமறியச்  சொல்லிவிட்டார்
            காட்ட  லாமோ?

        நாமார்க்கும்  குடியல்லோம்
            நமனை  யஞ்சோம்
            நற்றொண்டே   துறவாகும்
            எனுமு  ழக்கும் 
        ஏமாப்பு   மதமல்ல  
            சாதி   யல்ல
            எவ்வுயிரும்  போற்றுகென்ற
            வடலூர்ச்  சொல்லும்
        ஏமாறும்   மக்களிடைப்
            புரட்சி யெண்ணம்
            எழுப்புதற்கு யாப்பதுவுந்
            தடையா  யில்லை
        ஆமாறு    மன்றாட
            மாட்டாள்   தானும்
            அரங்கதுவே  கோணலென்றல்
            நகைப்பா  மன்றோ?

அமுதவல்லி: இலக்கணநூல் கல்லாமல்
நாட்டில் பல்லோர்
இயற்றுகிறார் தமிழ்ப்பாடல்
மறுப்பா ருண்டோ
உலப்பில்லாத் தமிழ்ப்பாடல்
இயற்ற வேண்டி
உருவான இலக்கணத்தை
முன்னே கற்றல்
அலுப்பான செயலாகும்
அதனைக் கொஞ்சம்
அருவெறுப்புக் கொள்ளாமல்
விளங்கச் சொன்னால்
நலுங்காத உள்ளத்தால்
நான்து ணிந்து
நல்லதமிழ்ப் பாப்புனைய
வாய்ப்பா மன்றோ
(உலப்பு – அழிவு)


அறுசீர் விருத்தம்

உதாரன்: எழுத்தறி வில்லா தாரும்
இயம்புவார் இனிய பாடல்
ஒழுகுறு இசையைத் தேரும்
உள்ளமே ஆசா னாகும்
பழுதற இசையொ ழுங்கு
பாடலா யமைவ தற்கு
விழுமிய எழுத்தைக் கொண்டு
வினைவலார் யாப்ப மைத்தார்

        குழலும்     யாழும்      வீணென்றான்
            குழந்தை     மழலை        கேட்குங்கால்
        மழலை        மொழியே      நிறைவென்றால்
            மனிதப்      பேச்சும்        வேண்டாவோ
        மழையில்     முளைக்கும்      மாங்கன்று
            மதுரக்      கனிகள்      தரல்கண்டு
        விழைவோ      டிட்டு          மரமாக்கி
            விளைக்குஞ்      செயலுந்     தவறாமோ

        மானா        வாரி            நிலத்தினிலும்
            மக்கள்      பயிரை        விளைக்கின்றார்
        ஏனாம்       பொன்னி      கங்கையென
            இயம்புவோர்  நாட்டில்        யாருண்டு
        கூனாய்க்        குருடாய்த்      திகழ்வாரும்
            குறையைத்        தாண்டி      உயர்கின்றார்
        வீணாம்      முழுமை      உடலென்றே
            வெட்டிச்        சிதைத்தல்       எங்குண்டு

பன்னிரண்டு சீர் விருத்தம்

    யாப்புநூல்          கல்லா       தாரும்
        யாம்மகிழப்      பாடு            கின்றார்
        யாரதைத்     தடுத்து     விட்டார்

யாரவர் நின்று விட்டார்
பாப்புனை ஆற்ற லில்லார்
பதைப்புறு மனத்த ராகிப்
பழைமையிற் பழியைப் போட்டுப்
பதுங்குவார் புதுமைக் குள்ளே
காப்புடை வாய்க்கா லுள்ளே
கனமழை பொழிக வென்றே
கட்டளை யிடுவா ரில்லை
கனமழை தடுப்பா ரில்லை
வாய்ப்பெனப் பொழியும் நீரை
வரம்புடை வாய்க்கா லாக்கி
வயலிலே பாய்ச்சி னாலே
வளஞ்சேர் விளைவென் றாகும்

    எழுதுகோல்    ஓடும்   போக்கில்
        இறைத்திடுஞ் சொற்கள்   தம்மை
        இதயமும்     பதிய   வைக்கும்
        இசையெனும்   யாப்பு  தானும்
    விழுமிய   மணிகள்  தம்மை
        விழைவுறு  மாலை யாக
        வியப்புற  இணைத்துக் காட்டி
        விளங்கிடும்  நரம்பை   யொக்கும்
    எழிலுறு   எதுகை  மோனை
        இயைந்திடும் மரபின்  றாயின்
        இருட்டிலே   வெளிச்சங் காட்டும்
        இனியமத்     தாப்பூ   வாகும்
    விழைவுறு   பாட  லாக
        விளங்கிடும்     மரபு    கண்டால்
        விண்ணிலே     நீண்ட   காலம்
        விளங்கிடும்     விண்மீ  னாகும்

அறுசீர் விருத்தம்

அமுதவல்லி: வில்லினை யொத்த பெண்ணாள்
விழிகளே நூறு கூறும்
சொல்லினைச் சுருக்க லன்றோ
சுவைமிகு தமிழுக் காகும்
வல்லவ ரான சான்றோர்
வாய்த்திட எதுகை மோனை
சொல்லொடு சொல்ல டுக்கிச்
சொற்சிலம் பாடல் நன்றோ

உதாரன்: சுற்றி உடலை மூடாமல்
துண்டு பலவாய் வெட்டிப்பின்
அற்றம் மறைக்குந் துணியைத்தான்
அழகோ டாடை தைப்பானேன்
முற்றத் துறந்த முனிவருந்தாம்
முற்றும் விடார்தம் அழகுணர்ச்சி
கற்றுத் தேர்ந்த கவிவல்லார்
காதுக் கின்பம் அழகென்றார்

        நேரமும்     நாரும்      வீணென்றால்
            நெஞ்சம்     விரும்பும்      மலர்க்குவியல்
        மாரனார்     மயங்கும்   கன்னியரின்
            மணிக்குழல்      சேர்த   லெவ்வாறு
        கூறிய       தையே        கூறலென
            குலவு    மிசையில்  பல்லவிதான்
        மாறி    மாறி  வருதலையே
            மறுப்பா     ருண்டோ      நாட்டினிலே

        இச்சை       பேசும்      விழியாட
            இளைஞர்      மனமுஞ்      சுழன்றாட
        கச்சை       மீறுங்      குன்றாடக்
            காளையர்     உயிரும்     மன்றாட
        பச்சை       வாழைத்      தண்டாட
            பார்ப்போர்      கையுஞ்      செண்டாட
        விச்சை      தேர்ந்தார்      மன்றாட
            வீணை        தாளம்       வேண்டாவோ

அமுதவல்லி: வாடலில் லாத மாலையாக
வண்டமிழ்ப் பாடல் படைக்குங்கால்
பாடலில் இனிமை சேரும்வகை
பகர்ந்தீர் நானும் அறியும்வகை
ஏடகம் தன்னில் பதிந்திருக்க
இனிமைத் தமிழைச் சுவைத்திருக்கப்
பாடமும் இன்று முடியட்டும்
பாவகை நாளை தொடரட்டும்.

(தொடரும்)

புலவர் சா.பன்னீர்செல்வம், புதிய புரட்சிக்கவி