அமைச்சர் இராசேந்திர பாலாசியின் பதவி பறிக்கப்பட வேண்டும்!

மத்திய அரசின் / மத்திய அரசு நிறுவனங்கள், வங்கிகளின் தமிழக வேலை வாய்ப்புகளில் 90 விழுக்காட்டினர் பிற மாநிலத்தவராகவே இருக்கின்றனர். இதனால் தமிழக இளைஞர்களின் நிகழ்காலமே இருண்டு வருகிறது. தனியார் நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்களிலும் தமிழர்கள் வேலை வாய்ப்புகள் வினாக்குறியாகி வருகிறது. எனவே, சித்திரை 20, 2050 – 2019 மே 3 – காலை 8 மணி முதல் சமூகவலைத்தளப் பரப்புரை இயக்கம் என்னும் அமைப்பு #தமிழக-வேலை-தமிழருக்கே என்னும் குறிச்சொற்களைப் பயன்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இதன் பின்னணியில் தமிழ்த்தேசிய இயக்கம் இருந்தது. எனினும் கட்சி வேறுபாடின்றி, அனைத்துத் தரப்பாரும் பெரிதும் வரவேற்றனர். வெளிநாடுகளில் உள்ள தமிழர்களும் இதற்கு ஆதரவு  தெரிவித்தனர்.

அண்மையில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் பொன்மலை தொடரி பணிமனையில் பணியமர்த்தப்பட்ட 300பேரில் ஒருவர்கூடத் தமிழரில்லை. இதுபோன்ற பல உண்மைகளை எடுத்துரைத்து இயக்கத்தினர் போராடினர். இதனால், மக்களிடையே பெரும் எழுச்சி ஏற்பட்டது.

இரு மொழிக்கொள்கையைத் தமிழக அரசு ஏற்றுள்ளதால் மக்கள் எழுச்சியைக் காரணமாகக் காட்டியாவது மத்திய அரசிற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்க வேண்டும். ஆனால், பா.ச.க.வின் நிழல் அரசாகச் செயல்படுவதாலும் அமைச்சர்கள் சிலர் பா.ச.க.வின் ஊதுகுழலாக இருப்பதாலும் அவ்வாறு எதிர்க்க வில்லை. ஆனால், முதல்வர் முதலான அனைவரும் அமைதி காத்திருக்க அமைச்சர் கு.த.(கே.டி.)இராசேந்திர பாலாசி   “இந்தி படிக்காததால்தான்  வேலை இல்லை” என்று திருவாய் அருளியுள்ளார்.  “தில்லி நம்மிடம் இருக்கு” என்று முன்பு சொன்னவர் அந்தத் தில்லியிடம் வற்புறுத்தித் தமிழ் மக்களின் முறையீடுகளுக்கு ஏற்ப பிற மாநிலத்தவரை மாற்றிவிட்டுத் தமிழ்நாட்டவருக்குப் பணி வழங்கச் செய்திருக்கலாம் அல்லவா?  நரேந்திரரைத் தந்தை (மோடி எங்கள் டாடி) என்று பேசியவர் அப்பனிடம் சுப்பன்களின் குறைகளைத் தெரிவித்து இருக்கலாம் அல்லவா? மாறாக இந்தி படிக்காததால்தான் வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை என்று சொல்வது முறைதானா?

தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார், “இந்தியைப் படிக்கவில்லையேல், இந்தியப் பேரரசின் அலுவல்களில்  அமர்தல் இயலாது; ஆதலின் அதனைத் தவறாது படித்தல் வேண்டும்” என்றுதானே இயம்புகின்றனர். வேலை வாய்ப்புக்கு இந்தி என்றால் வீட்டிலும் இவ்விந்திதானே இடம்பெறும். இந்தியக் கூட்டரசின் இணைப்பு மொழி என்று கூறப்பட்டு எல்லாத் துறைகளிலும் இந்தி இடம் பெறத்தான் போகின்றது. அங்ஙனம் இடம் பெறுங்கால் பிற மாநில மொழிகள் அவற்றின்  மாநிலங்களிலேயே புறக்கணிக்கப்படும் என்பதில் எட்டுணையும் ஐயமின்று. ஆங்கிலம் ஆளும் மொழியாக வந்ததன் விளைவால் பிறமொழிகட்குக் கேடு இல்லை என்பது ஓநாய்கள் பெருகுவதனால் ஆடுகட்குக் கேடில்லை என்பது போன்றதாகும். என அன்றே எச்சரித்துள்ளார்.[குறள்நெறி(மலர்1: இதழ்1): தை2,1995: 15.1.64] 

அவர் கூறியவாறு, தமிழ் நாட்டில் தமிழ் புறக்கணிக்கப்பட்டுத் தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்புகளைப் பறிகொடுத்து அல்லலுறுகின்றனர். ஆனால், தமிழ் மக்களுக்கான அரசின் அமைச்சர் இந்தி படிக்காததால்தான் வேலை இல்லை என்கிறார். அஃதாவது இந்தி படித்திருந்தால் இவர்களுக்கும்  வேலை கிடைத்திருக்குமாம். தமிழர்களின் வேலைவாய்ப்பு உரிமைகளைப் பறிக்கவில்லையாம். தமிழ்நாட்டில் செயல்படும் அலுவலகங்களில் 90 % இற்குக் குறையாமல் தமிழர்களுக்குப் பணிவாய்ப்பு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டிய அமைச்சரவை கூட்டுப் பொறுப்பு உள்ள அமைச்சர் இவ்வாறு பேசலாமா? வழக்கு முதலான பல்வேறு சிக்கல்கள் வந்தபொழுதும் அசையாமல் இருப்பதால் துணிந்து இவ்வாறெல்லாம் பேசுகிறார் போலும்! இவர் தொடர்பான துறையைச் சேர்ந்தவர் அல்லர். எனினும் பா.ச.க. அமைச்சர் பொன் இராதாகிருட்ணன்  சொன்னதை வழி மொழிந்தால்தானே பா.ச.க.வின் தாசனாக இருக்க முடியும். அதுதான் அவ்வாறு கூறுகிறார்.

தச்சுத் தொழிலாளியின் மகனாக எளிய குடும்பத்தில் பிறந்து சுவரொட்டிகள் ஒட்டுவது முதல் பல்வேறு பணிகளைப் புரிந்து படிப்படியாக முன்னேறி அமைச்சராக உயர்ந்தவர் மக்களின் குரலை எதிரொலிக்க  வேண்டாவா? மக்கள் நலனே அரசின் நலன் என்பதை உணரவேண்டாவா?

மாறாகத் தமிழர்கள் உரிமை மறுக்கப்பட்டுப் பறிக்கப்படுவதற்கு உடன்பட்டு உரைக்கலாமா? தமிழக அரசின் மொழிக்கொள்கைக்கு எதிராகத் தமிழர் நலன்களுக்குத் தீது விளைவிக்கும் வண்ணம்  உரைத்துள்ள இவரை, இவ்வாறு சொல்லியதற்காக வருத்தம் தெரிவிக்காவிடில், அமைச்சர் பொறுப்பிலிருந்து முதலமைச்சர் நீக்குவதே ஏற்றதாக இருக்கும். அப்பொழுதுதான் இவர் வழியில் வேறு யாரும் தீச்சொல் உரைக்க மாட்டார்கள்.

அமைச்சரவையின் நிலைப்புத்தன்மையே கேள்விக்குறியாக உள்ளதே இப்பொழுது எதற்கு இங்ஙனம் சொல்ல வேண்டும் என எண்ணலாம். அமைச்சரவையின் காலம் எத்தன்மையாக இருந்தாலும் இவரது அமைச்சர் பதவியைப் பறிப்பதே அரசின் மானத்தைக் காப்பதாக அமையும்!

அத்துடன் தமிழர்களின் வேலை, தொழில் வாய்ப்புகளுக்கும் தேவையான உறுதிக்காப்பைத் தமிழக அரசு நல் குமாறும் வேண்டுகிறோம்.

மேலும், மக்களுக்கு எதிரான, புகழையும் நன்மையையும் தராத தூய்மையற்ற செயல்களை எந்த நிலையிலும் மேற்கொள்ளாமல் அவற்றை விட்டொழிக்க வேண்டும்.

 என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு

நன்றி பயவா வினை.(திருவள்ளுவர்,திருக்குறள் 652)

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை – அகரமுதல