அரங்கனின் குறள் ஒளி

1.காலத்தைத் தேர்ந்தால் வெற்றிகள் அமையும்

பொருந்தும் காலத்தை ஆராய்ந்து தேர்க;

விருந்தென அமையும் வெற்றிகள் எல்லாம்.                           

1.1,0.0.நுழைவாயில்:

            மேற்கொண்ட செயலில் வெற்றி பெற வேண்டும் என்றால், பொருந்தும் காலத்தை ஆராய்ந்து, அறிந்து தேர்வு செய்ய வேண் டும். காலத்தைத் தேர்ந்த பின்னர்த் தம் ஆற்றல் முழுவதையும் திரட்ட வேண்டும்; நம்பிக்கையை நெஞ்சில் பெருக்க வேண்டும்; அறிவு ஆற்றலால் சிந்தித்து, செயலின் அருமையை உணர்ந்து, அதை வெல்வதற்கு உரிய வழிமுறைகளைத் திட்டமிடல் வேண் டும்; இறுதியில் செயலில் இறங்க வேண்டும்;      

1.2.0.0.பொருந்தும் காலத்தை ஆராய்ந்து தேர்க;

              விருந்தென அமையும் வெற்றிகள் எல்லாம்:

பொள்ளென ஆங்கே புறம்வேரார், காலம்பார்த்[து]

உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்                                          [குறள்.487]

1.2.1.0.பொருள்கோள் விரிவாக்கம்:

            ஒள்ளியார் பொள்ளென ஆங்கே புறம்வேரார்;

            ஒள்ளியார் காலம் பார்த்து உள்வேர்ப்பர்.

1.2.2.0.பொருள் உரை விரிவாக்கம்:

          எந்த ஒரு செயலில் இறங்கும் முன்பு பொருத்தமான காலத் தைத் தேர்வு செய்வதில் வல்லமை மிக்கவர்கள் அறிவாளர்கள்.

தங்களுக்குத் தீமை, துன்பம் செய்யப்பட்டாலோ பகைமை ஏற் பட்டாலோ உடனே அப்போதே தங்களது சினத்தையோ பகைமையையோ வெளிப்படுத்திப் போராடப் புறப்பட்டுவிடமாட்டாகள். 

தங்களது சினம், பகைமை போன்ற உணர்வுகளை உள்ளத்திற்கு உள்ளேயே ஒளித்துவைத்திருப்பார்கள். சினத்தை வெளிப்படுத்தி வெல்வதற்கும் பகைமையைப் புலப்படுத்தி வெல்வதற்கும் பொருந்தும் நேரத்தை / காலத்தை எதிர்நோக்கிக் காத்திருப்பார் கள். உள்ளத்திற்கு உள்ளேயே புழுங்கிக்கொண்டிருப்பார்கள்.  

பொருந்தும் காலம் வந்தவுடன், ஆற்றலுடன் அறிவையும் பயன்படுத்துவார்கள்; வெற்றிக் கனியைப் பறிப்பார்கள்.

1.3.0.0.காலம் பார்க்கும் அஃறிணைப் பொருள்கள்:

            கோடைக் காலத்தில் மக்களது உடல்களில் சூடு மிகுதியாகும் என்பது எல்லோருக்கும் தெரியும்.  அந்தச் சூடான காலத்தில் மக்களுக்குக் குளிர்ச்சி தேவை.

மக்களது உடல்களில் குளிர்ச்சியை உண்டாக்க, இதுதான் பொருத்தமான காலம் என்பதை அறிந்த அஃறிணை மரங்கள், செடிகள், கொடிகள், படர்கொடிகள் ஆகியன பழங்களையும் நீர்க் காய்களையும் தருகின்றன; மக்களது உடல்களில்  குளிர்ச்சியைத் கொடுக்கின்றன; சூட்டைக் குறைக்கின்றன; மக்கள் மனங்களில் மகிழ்ச்சியை மலர்விக்கின்றன.    

பனை மரங்கள் நுங்கு, பதநீர், பனங்கற்கண்டு, பனங்கருப்பட்டி போன்றவற்றைப் பொருத்தமான காலம் அறிந்து, மக்களது உடற்சூட்டைக் குறைப்பதற்குக்  கொடுக்கின்றன;

வெள்ளரிப் படர்கொடிகள்  வெள்ளரி நீர்க் காய்களையும் பழங்களையும் தருகின்றன; மக்களது உடற்சூட்டைத் தணிக்கின் றன. தளர்ச்சியைத் தீர்க்கின்றன.

தருப்பூசணிப் படர்கொடிகள், தருப்பூணிப் பழங்களைக் கொடுத்து, மக்களது உடற்சூட்டைத் தணிக்கின்றன, அதேபோல் கிருணிப் பழங்களும் குளிர்ச்சியைத் தருகின்றன. 

பலா மரங்களும் மாமரங்களும் அளவோடு உண்டால், நலம் தருகின்ற பலாப் பழங்களையும்  மாம்பழங்களையும் மாந்தர்க்குத் தருகின்றன. இப்படி எத்தனையோ காய்களும் பழங்களும் மக்களது சூட்டைக் குறைக்கக் கோடைக் காலத்தில் கிடைக் கின்றன.

ஆனால், பகுத்தறிவு மக்களில் மிகப் பெரும்பான்மையினர்க் குப் பொருத்தமான காலத்தைத் தேர்வு செய்து, செய்ய வேண்டிய முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் அறிவு அற்றவர்களாக இருக்கின்றார்கள்.

பொருத்தம் அற்ற காலத்தைத் தேர்வு செய்கின்றார்கள்;  முயற்சிகளை முன்னெடுக்கின்றார்கள்; தோல்விகளைத் தழுவு கின்றார்கள்; வேதனைப்படுகின்றார்கள்.

அஃறிணைகளுக்குக்கூடக் காலம் அறிதல் அறிவு இயற்கையாக உள்ளது. இத்தகு அறிவு உயர்திணைப் பகுத்தறிவு மாந்தர்க்கு இல்லை என்பது வேதனையை விளைவிக்கின்றது.            

அஃறிணை உயிர்களிடமிருந்தும் உயர்திணை உயிர்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளன. 

    1.3.1.0.இதைத்தான், 

எப்பொருள் எத்தன்மைத்[து] ஆயினும், அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு                           [குறள்.355]

1.3.2.0.பொருள் உரை:

            ஒரு பொருள் எந்தத் தன்மைத்தாக இருந்தாலும் எந்த வடிவத்தில் இருந்தாலும்  பொருளாக இருந்தாலும் அதைப் பற்றிச் சிந்திக்கக் கூடாது..

 அந்தப் பொருளிலும் உள்ளடங்கியுள்ள உண்மைத் தன்மையை அறிவால் ஆராய்ந்து, அறிந்து உணர்ந்துகொள்ள வேண்டும். அதுதான் பகுத்தறிவாம்.   

1.4.0.0.அறம் உணர்த்தும் புறச்சான்று – 1

        வரலாற்று நிகழ்வு:

காலம் பார்க்கத் தவறிய கொலையாளன் இட்டுலர்            

எட்டுக் கோடி மனித உயிர்களைப் பலிகொண்டது கொடிய இரண்டாம் உலகப் போர். அதனால்தான், மனித வரலாற்றிலேயே மிக மிகக் கொடிய போர் எனக் கருதப்படுகின்றது. இந்தப் போரைத் தொடங்கிய நாசிச் செருமனியின் வல்லாட்சியாளன், வஞ்சகன் இட்டுலர்.

இந்தக் கொடிய போரைத் தொடங்கிய நாசிச் செருமனியின் கேடன் இட்டுலர், சோவியத்து உருசியாமீது போரைத்  தொடுத்த பின் னர்தான் படிப்படியாகத் தோற்கடிக்கப்பட்டான்.

1941ஆம் ஆண்டு சோவியத்து ஒன்றியத்தின்மீது இட்டுலர் போர் தொடுத்தான். தொடக்கத்தில் செருமனிப் படைகள் வெற்றிகளைக் குவித்தன. தலைநகர் மாசுகோ நோக்கி வேகமாக முன்னேறின.

அப்போது உருசியாவில் கடுங்குளிர் காலம். அந்தக் கடுங் குளிர் இட்டுலரின் படைக்குப் பழக்கம் இல்லாதது. அதனால், அவனது படைவீரர்கள் அந்தக் கடும்குளிரைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவனது வீரர்கள் செத்து வீழ்ந்தார்கள். 

அந்தக் கடும்குளிருக்குப் பழக்கப்பட்ட உருசியாவின் செம்படைகள் சற்றும் கலங்கவும் இல்லை; தயங்கவும் இல்லை.  கடுமையான தாக்குதல்கள் நடத்தின. அவற்றால், செருமனியப் படைகளுக்குப் பின்னடைவு ஏற்படத் தொடங்கியது. தாலின்கிராடு(Stalingrad) நகரைச் சுற்றி வளைத்து, முற்றுகை இட்டது

செருமன் இராணுவத்தைக் கண்டு கலங்கவில்லை; மயங்க வில்லை.  செம்படை. மிகுதீரத்துடன் போர் செய்தது. பெரும்இழப் புக்களுக்குப் பின்னர் வெற்றி பெற்றன உருசியச் செம்படைகள்.. பின்னர்ச் செருமனியை நோக்கி முன்னேறின.

         1944இல் செருமனியின் கட்டுப்பாட்டில் இருந்த பிரான்சு நாட் டுக் கடற்கரையில் அமெரிக்க, பிரித்தானியக் கூட்டுப் படைகள் தரையி றங்கின. இரண்டு திசைகளிலிருந்தும் நேச நாட்டுப் படைகள் செர் மனியைக் கடுமையாகத் தாக்கின.

         1945ஆம் ஆண்டு செம்படைகள் பெருலினை நெருங்குவதை அறிந்த இட்டுலர், ஏப்பிரல் 30ஆம் நாள் தற்கொலைசெய்து கொண்டான். கோடிக் கணக்கானவர்களைக் கொன்று குவித்த, அந்தக் கொடுங்கயவன், இறுதியில் தேடிக்கொண்ட கோழைத் தனமான தண்டனையைப் பார்த்தீர்களா? இதை அடுத்துச் செருமன் இராணுவம் தோல்வியை ஒப்புக்கொண்டது; சரண் அடைந்தது.

          இரண்டாம் உலகப் போரில் உருசியாவிடம் செருமனி தோல்வி அடைந்ததை ஒப்புக்கொண்டதற்கான ஒப்பந்தம் கையொப்ப மான நாள் 1945, மே 9.

            உருசியாவில் மிகக் கடும்குளிர்  காலம் தொடங்கியிருந்தது. அதுபற்றி அறியாத — அதற்குப் பழக்கப்பாடாத இட்டுலரின் படைகள், அந்தக் கடுமையான குளிர் காலத்தில் போர் தொடுத்துச் சென்றன. அதனால்,  நூற்றுக் கணக்கான படைவீர்கள் செத்துமடிந்தார்கள். பெரும்இழப்புக்களைச் சந்தித்தார்கள்; தோல்வியையும் தழுவினார்கள்.

காலத்தைக் கணிக்காது

கயவன் இட்டுலர் போர்தொடுத்தது,

ஞாலத்திற்குப் மிகவும் பெரிய

நன்மையையே கொடுத்தது.

1.5.0.0.அறம் உணர்த்தும் புறச்சான்று – 2

        குறுங்கதை:

சிந்தித்துப் பொறுமையாகச் செயற்பட்டால்,

வந்தமையும் வெற்றி என்பதை உணர்க:

சப்பானியச் சாமுராய் (வீரன்) ஒருவன் வீட்டில் எலித் தொல்லை மிகுதியாக இருந்தது. அதிலும் குறிப்பாக முரட்டு எலி ஒன்று அந்த வீட்டில் இருந்த உணவுப் பொருள்களைத் திருடித் தின்றது; மகிழ்ந்தது; மகிழ்ச்சியில் ஆடியது; ஓடியது.

வீட்டுப் பூனையால் அந்த எலியைப் பிடிக்கவே முடியவில்லை. அத்துடன் பூனைமீது அந்த எலி பாய்ந்தது; தாக்கிக் காயப் படுத்தியது.

ஆகவே, சாமுராய் தனது அடுத்த வீட்டில் இருந்த இரண்டு பூனைகளை அழைத்து வந்தான்; அவற்றால் அந்த முரட்டு எலியைப் பிடிக்கப் பெரிதும்  முயன்றான்.

ஆனால், அந்த முரட்டு எலி அந்தப் பூனைகளையும் தாக்கிக் காயப்படுத்தியது. முடிவில் சாமுராய், தானே அந்த எலியைக் கொல்வது என முடிவு செய்தான்.

.      ஒரு தடியை எடுத்துக் கொண்டன்; போய் எலியைத் துரத்தினான். எலி அவனிடமிருந்து தப்பித் தப்பி ஒடியது. ஒரு பொந்துக்குள் சென்று ஒளிந்துகொண்டது.  

திடீரென வேறொரு வழியாக எலி வெளியே வந்தது. அவன் மீதும் பாய்ந்து தாக்கியது. அதில் அவனும் காயம் அடைந்தான். “ஒரு முரட்டு எலியை நம்மால் பிடிக்க முடியவில்லையே! நாம் ஒரு சாமுராயா?” என மானக்கேடு அடைந்தான்.

அவனது மனவேதனையை அறிந்த ஒரு நண்பர்,

“நண்பா! அருகில் உள்ள மலையில் ஒரு கிழட்டுப் பூனை இ ருக்கிறது.  அந்தப் பூனையால் எந்த எலியையும் பிடித்துவிட முடியும்.” என அறிவுறித்தினான்.

சாமுராயும் வேறு வழியில்லாமல் அந்தக் கிழட்டுப் பூனையைத் தேடிப் போனான். போய் அதனிடம் உதவி கேட்டான்.

உடனே பூனையும் சாமுராய்க்கு உதவி செய்வதாக ஒப்புக் கொண்டது. அதன்படி மறுநாள் சாமுராய் வீட்டுக்கு அந்தக் கிழட்டுப் பூனை வந்தது.

பூனை இருப்பதை அறிந்த எலி, தயங்கித் தயங்கி வெளியே வந்தது. இப்பொழுது அந்தக் கிழட்டுப் பூனை, தன் இடத்தைவிட்டு நகரவேயில்லை. எலி துணிவுடன் அங்குமிங்கும் ஓடுவதும்  திருடித் தின்பதுமாக இருந்தது..

இந்தக் கிழட்டுப் பூனையோ இருந்த இடத்தைவிட்டு அசையவே இல்லை, இப்படி நகர  மறுக்கிறதே எனச் சாமுராய் அதன் மீது சீற்றம் கொண்டான்.

ஒரு நாள் முழுவதும் அந்தப் பூனை அசையாமல் அப்படியே இருந்தது. மறுநாள் வழக்கம்போல எலி வளையைவிட்டு வெளியே வந்தது. சமையல் அறைக்குள் சென்றது; இனிப்பு உருண்டைகளை ஆசை தீரத் தின்றது. தின்றுவிட்டு  மெதுவாக அச்சமே இல்லாமல் திரும்பியது.

அடுத்த நொடி திடீரெனப் பாய்ந்த அந்தக் கிழட்டுப் பூனை ஒரே அடியில் அந்த எலியைப் பிடித்துக் கடித்துக் கொன்றுவிட்டது. சாமுராய் அதைச் சற்றும் எதிர்பார்க்கவேயில்லை. இவ்வளவு பெரிய முரட்டு எலியை ஒரே அடியில் எப்படி அந்தக் கிழட்டுப் பூனை வீழ்த்தியது என வியப்படைந்தான்.

இந்தச் செய்தியை அறிந்துகொண்ட பூனைகள் எல்லாம் ஒன்றுகூடி வந்தன. “என்ன சூழ்ச்சி செய்து, அந்த முரட்டு எலியைக் கொன்றாய்? ” எனக் கேட்டன.

“ஒரு சூழ்ச்சியும் இல்லை. நான் தக்க நேரத்தை ஏதிர்பார்த்துப் பொறுமையாகக் காத்திருந்தேன். நான் என்ன செய்கிறேன் என்பதை அந்த எலி நன்றாக அறிந்தே ஒவ்வொரு செயலையும் செய்தது. ஆகவே.  அது தன்னைத் தற்காத்துக் கொள்ளப் பழகியிருந்தது. எனது பொறுமையைப் பார்த்து, அஃது என்னைச் செயலற்றவன் எனத் தவறாகக் கணித்துவிட்டது.

ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள். எதிரி நாம் செய்யப் போவதை ஊகிக்க முடிந்தால், அது நமது பலவீனம்.  நாம் என்ன செய்யப் போகிறோம் என அறியாமல் எதிரியை வைத்திருப்பதே நமது பலம்.” என விளக்கமாக விளம்பியது.

அப்போது மற்றொரு பூனை கேட்டது, “‘நான் பாய்ந்து தாக் குவதற்குப் பல ஆண்டுகள் பயிற்சி எடுத்திருக்கிறேன். என் நகங் கள்கூடக் கூர்மையானவை. ஆனாலும், என்னாலும் ஏன் அந்த முரட்டு எலியைக் கொல்லவே முடியவில்லை? நீ எப்படித் தாக்கிக் கொன்றாய்?” எனக் கேட்டது 

அந்த முதிர்ந்த அறிவு உடைய மூத்த பூனை, ’’எலியானது தன்னைக் காத்துக்கொள்ளப் பழகி இருந்தது. பூனைகளாகிய நீங்கள், ஓர் எலி நம்மைத் தாக்கும் என எதிர்பார்க்கவில்லை ஆகவே, அஞ்சிவிட்டீர்கள்.

இது உங்களுக்கு ஒரு புதிய நுகர்நிகழ்வு அல்லவா? கூடவே நான் ஒரு பூனை என்ற ஆணவமும் உங்களிடம் மேலோங்கி யிருந்தது. ஆணவம் உங்கள் அறிவைக் காணாமல் செய்து விட்டது. ஆகவே, எலியால் உங்களைத் துரத்தி, அடிக்க முடிந்தது.” எனக் கூறி முடித்தது. 

ஆகவே, இனிமையானவர்களே!  

ஆற்றல் அற்றவர்கள் கூச்சலிடுகின்றார்கள்; சினம்  கொள் கின்றார்கள்; அவசப்படுகின்றார்கள்; தங்களின் பலவீனத்தைப் பூமிக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றார்கள்.

ஆற்றலன் தனது பேச்சிலும், செயலிலும், பொறுமையையும்  அமைதியையும் பெற்றிருப்பான்.  உலகம் அவனைப்பற்றிக் கேலி பேசக்கூடும்; அதை அவன் பொருட்படுத்தமாட்டான்.

ஆனால், தகுந்த நேரத்தில் அவன் தனது திறமையை நிலை நாட்டுவான்; வெற்றியை ஈட்டுவான்.’’ எனக் கிழட்டுப் பூனை. கூறியது. இந்தக் குறுங்கதை சாமுராய்களுக்கு மட்டும் அன்று, உலகத்தார்  அனைவருக்கும் பொருந்தக் கூடியதே.

மற்ற பூனைகளிடம் இல்லாத ஒரு தனித்திறமையும் அந்தக் கிழட்டுப் பூனையிடம் கிடையாது. ஆனால், அது, தன் ஆற்றலை மட்டுமே நம்பவில்லை. எதிரியின்  ஆற்றல் இன்மையையும்  கணக்கில் எடுத்துக்கொண்டது.

வாயால் வடை சுடுவதைவிடச் சிந்தித்துச் செயலில் இறங்கி  வெற்றியுடன் முடிப்பதே இன்றியமையாதது என்பதைப் பட்டறிவு அதற்கு நன்கு உணர்த்தியிருந்தது.

“பொருத்தமான காலத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பது முட்டாள் தனம் இல்லை. மேதைமைத் தனம்.” என அந்தப் பூனை உணர்ந்திருந்தது.

முதியவர்கள் கேலிக்கு உரியவர்கள் அல்லர்.

போற்றிப் பேணிக் காக்கப்பட வேண்டியவர்கள்.

முதியவர்கள் நல்ல வழிகளைக் காட்ட வேண்டும்;

அவ்வழிகளில் இளைஞர்கள் செல்ல வேண்டும்.

சென்றால், முயற்சிகள் எல்லாம் வெற்றி பெறும்,

                          — பேராசிரியர் வெ.அரங்கராசன்

1.7.0.0.நிறைவுரை:

              இதுவரை கண்ட அகச்சான்றுகளாலும் புறச்சான்றுகளாலும் எடுத்துக்கொண்ட செயலை வெற்றிச் செயலாக மாற்ற வேண்டும்; அதற்காகப் பொருந்தும் காலத்தைப் பொருத்தமுற  ஆய்ந்து அறிய வேண்டும்; அதற்குக் காலம் பற்றிய ஆய்வு எத்துணை அளவிற்கு இன்றியமையாதது என்பன எல்லாம் தெளிவாகப் புரிகின்றது. .

            இதைத்தான் இன்றைய மேலாண்மை நிருவாக ஆய்வாளர்கள் நேர மேலாண்மை [Time Management] என்கின்றார்கள். இதனைக் காலத்தை வென்ற குறளாசான் 2054ஆண்டுகளுக்கும் முன்னரே கால / நேர மேலாண்மையைக் ‘காலம் அறிதல்’  என்னும் 49 ஆவது அதிகாரத்தில்  10 குறளில் மிக நுட்பமாக ஆய்ந்து, அறிந்து, உணர்ந்து செம்மையாகப் பதிவு செய்துள்ளார்.

            அனைத்தும் உணர்ந்து ஆராயும் அருமையர் திருவள்ளுவர், அன்று ஓலைச் சுவடிகளில் செதுக்கிய திருவள்ளுவம், இன்றும் ஞாலம் முழுமைக்கும் பொருந்துகின்றது என்பதை இந்தச் சிற்றாய்வுக் கட்டுரை சிறப்புறப் புலப்படுத்துகின்றது.

திருக்குறள் விளக்க அறிஞர் பேரா.வெ.அரங்கராசன்