பண்பில்லான் செல்வம் கெட்டழியும் 2/3

பேராசிரியர் வெ.அரங்கராசன்

(பண்பில்லான் செல்வம் கெட்டழியும் 1/3 தொடர்ச்சி)

புறச்சான்று – 1

அன்[பு]ஒரீஇத், தன்செற்[று], அறன்நோக்கா[து], ஈட்டிய

ஒண்பொருள் நில்லாது போம்.பேராசிரியர் வெ.அரங்கராசன்

          பொருள் கொள்ளையில் ஈடுபடும் கீழ்க்காணும் குற்றத்தார்களைப் பொதுமைப்படுத்தவில்லை. அவற்றைச் செய்கின்ற குற்றத்தார்களை மட்டுமே சுட்டும் என்பதைத் தெளிவாகத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

  1. மக்கள் உயிர்குடிக்கும் கள்ளச் சாராயம் காய்ச்சி விற்றல்
  2. அனைத்து வகைப் போதைப் பொருள்களையும் தயாரித்தல், கடத்துதல், விற்றல்
  3. குழந்தைகளையும் செல்வர்களையும் கடத்திச் சென்றுவிட்டுப் பெருந்தொகை கேட்டு மிரட்டுதல்
  4. பிறப்புச் சான்றிதழ், இறப்புச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், போன்ற பல் வேறு சான்றிதழ்களை வழங்க எல்லாரிடமும் கையூட்டுப் பெறுதல்,
  5. அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, ஊழல் செய்து கோடிகளைக் குவித்தல்
  6. குழந்தைகள் மருத்துவ மனைகளிலிருந்து குழந்தைகளைக் கடத்திக் கொண்டுவந்து விற்றல்
  7. அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறிப், பெருந்தொகைகளைப் பெற்றுக்கொண்டு ஏமாற்றுதல்
  8. மெலிந்தவர்களது நிலங்களைப் போலி ஆவணங்கள் தயாரித்துக் கைப்பற்றுதல்
  9. கையூட்டுப் பெற்றுக்கொண்டு, மதிப்பைக் குறைத்துப்போட்டுப் பத்திரங்களைப் பதிவு செய்தல்
  10. குழந்தைகள், பெரியோர்கள், நோயர்கள் போன்றோர்களது உயிரோடு விளையாடும் போலி மருந்துகளைத் தயாரித்தல், கடத்துதல், விற்றல்
  11. மகுடை (கொரோனா)க் கொடுந் தொற்றுக் காலங்களிலும் உயிர் காக்கும் தடுப்பூசிகளைக் கொள்ளை விலைக்கு விற்றல்
  12. மகுடை(கொரோனா) நோயர்களுக்குத் தனியார் மருத்துவமனைகளில் பல மடங்கு மருத்துவக் கட்டணத்தைக் கறத்தல்
  13. தேவை இல்லாமல் பல்வேறு சோதனைகளை எடுக்கச் சொல்லி நோயர்களிடம் மனச்சான்றே இன்றிப் பணம் பறித்தல்
  14. இல்லாத நோய், இருப்பதாகக் கூறி, மருத்துவ மனைகளில் சேர்த்துக்கொண்டு பணம் பறித்தல்
  15. வருமான வரி அதிகாரிகள் எனக் கூறி, வீட்டுக்குள் புகுந்து கொள்ளை அடித்தல்
  16. திருட்டு, கொள்ளை, வழிப்பறி போன்றவற்றில் ஈடுபட்டு நகையும் தொகையும் பறித்தல்
  17. கொல்லுதல், அடித்தல், உதைத்தல், துப்பாக்கியால் சுடுதல் போன்ற குற்றங்களைச் செய்து, கூலி பெறுதல்
  18. துள்ளுந்துகள், மகிழுந்துகள், சரக்குந்துகள் போன்ற ஊர் திகளைக் கடத்திச் சென்று விற்றல்
  19. நுகர்பொருளில் கலப்படம் செய்து பொருள் ஈட்டுதல்
  20. போலி மருத்துவர்கள், போலிக் காவலர்கள், போலிச் சாமியார்கள், போலி அதிகாரிகள் போன்ற பல்வேறு போலி வேடங்கள் போட்டுக்கொண்டு மக்களை ஏமாற்றிப் பணம் பறித்தல்
  21. குடும்பங்களை வறுமைக்குள் தள்ளும் – தடை செய்யப்பட்ட பரிசுச் சீட்டுகளை விற்றல்
  22. கணிணிக் (சைஃபர்) குற்றங்கள் எனப்படும் குற்றங்கள் செய்து பொருள் ஈட்டல். பிறரது வங்கிக் கணக்குகளிருந்து பணத்தைத் தங்களது கணக்குகளுக்கு மாற்றிக்கொள்ளுதல், பிற நிறுவனங்களிலிருந்து அவற்றின் வணிகக் கமுக்கங்களைத் திருடி எதிரி நிறுவனங்களுக்கு விற்றல், பணம் எடுக்கும் தானியங்கி இயந்திரங்களில் பிறரது கணக்குகளிலிருந்து பணம் திருடுதல் போன்ற குற்றங்கள் செய்தல்.

இவற்றை எல்லாம் கணினித் துறை வல்லுநர்களால் செய்யப்படும் குற்றங்கள். கல்வி, ஒழுக்கத்தைக் கற்றுத் தரவில்லை என்பதுதான் கொடுமையிலும் கொடுமை.

  1. உயர்மதிப்புக் கள்ளத் தாள்களை அச்சடித்துப் புழக்கத்தில் விடுதல்
  2. மருத்துவமனைகளில் சேரும் நோயர்களின் சிறுநீரகங்களை அவர்களுக்கே தெரியாமல் திருடி விற்றல்
  3. குழந்தைகள் குடிக்கும் பாலில், உணவுப் பொருள்களில், உயிர்காக்கும் மருந்துகளில் இவ்வாறு எவற்றில் எல்லாம் கலப்படம் செய்ய முடியுமோ,, அவற்றில் எல்லாம் ஆராய்ந்து, ஆராய்ந்து கலப்படம் செய்து, கலப்படக் குற்றங்களைச் சிற்றளவும் மனச்சான்று இல்லாமல் செய்து பொருள் செய்தல்
  4. வெள்ளை நிற முட்டைகளுக்குச் சாயம் பூசி, நாட்டுக் கோழி முட்டைகள் என விற்றல்
  5. கோடிக் கணக்கில் வருமான வரி ஏய்ப்புக்களைச் செய்து, சேர்த்தல், அந்தக் கள்ளப் பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் சேமித்தல்
  6. வீடுகளிலும் தொழிற்சாலைகளிலும் மின்சாரத்தைத் திருடி மின்சாரத் துறையை ஏமாற்றுதல்
  7. நிலத்தடி நீரை வற்றச் செய்யும் மணற் கொள்ளையடித்தல்
  8. காதலன்போல் நடித்துப் பெண்களை ஆபாசமாகப் படம்பிடித்து, அவற்றைக் காட்டி, மிரட்டிப் பணம் பறித்தல்
  9. மனைவியரை மிரட்டி, துன்புறுத்தி, கட்டாய வரதட்சணைகள்வழி நகையும் தொகையும் பெறுதல்
  10. பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள் கல்விக் கட்டணம் என்ற பெயரில் கொள்ளையடித்தல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சில பாடங்களுக்கு மிக அதிகமா கக் கட்டணம் வாங்குதல்.

இக்கட்டணங்கள் எல்லாம் அரசு அறிவித்த கல்விக் கட்டணங்களைவிட மிக அதிகம்.

  1. உயிர்ப் பாதுகாப்புத் தரும் முகமூடிகளையும் கைகழுவும் மருந்துப் பொருள்களையும் வேறு சில மருந்துப் பொருள்களையும் பல மடங்கு விலைகளில் விற்றல்
  2. இறந்த மகுடை(கொரோனா) நோயர்களின் உடல்களை மின்சுடுகாட்டில் எரிக்க 40,000 உரூ.வரை கேட்டுப் பெறும் கொடுமைகளும் நிகழ்கின்றன.
  3. ஐம்பொன் சிலைகள் போன்ற விலை மதிப்பு அற்ற சிலைகளைக் கோவில்களிலிருந்து கடத்தி, வெளிநாடுகளுக்கு அனுப்பிக் கோடி கோடியாகக் கொள்ளையடித்தல்

எஞ்சியவற்றைப் பட்டியலிட்டால், அந்தப் பட்டியல், அனுமனின் வாலையே சிறியதாக்கிவிடும். அதனால், இனிமேல் உள்ளவற்றை நீங்களே சிந்தித்துப் பார்த்துப் பட்டியலை ஆக்கிக் கொள்ளவும். 

குறளுக்குக் குறள் சான்று:

          ஒரு குறளுக்குப் பொருந்தும்படியான கருத்தைத் தெரிவிக்கும் புறச்சான்றுப் பாடல்களைப் பதிவு செய்வோம்.

          ஒரு குறளுக்குப் புறச்சான்றுபோல்  ஓர் அகச்சான்றுக் குறளே அமைவதையும் திருக்குறளில் காணலாம். திருக்குறளுக்கு உரிய சிறப்புகளுள் இதுவும் ஒன்று.         

இதனை உணர்த்தும் ஓர் அகச்சான்று:

         இந்த 1000ஆவது குறளுக்குப் புறச்சான்றுபோல் அமையும் அகச்சான்றாக அமைகின்ற குறள் இதோ.

   அன்[பு]ஒரீஇத், தன்செற்[று], அறம்நோக்கா[து], ஈட்டிய

   ஒண்பொருள் கொள்வார் பிறர்                           [குறள்.1009]

பொருள் உரை:

ஒருவன் உண்ணாமல், உறங்காமல் தன்னையும் வருத்திக் கொண்டும்,  சமுதாயத்தில் எவர்மீதும் அன்பையும் அருளையும் காட்டாமல், அறத்தைப் பற்றிச் சற்றும் சிந்திக்காமல், அறம் சாராத வழிகளில் சென்று, பெரிய அளவிளான செல்வத்தைச் சேர்த்து வீடெல்லாம் நிரப்பி வைத்திருக்கின்றான்.  

அத்தகு நன்றி இல்லாத பெருஞ்செல்வம்பற்றி ஆட்சியாளரின் கவனத்திற்குக் கொண்டுசென்றால், அல்லது ஒற்றர்கள்வழி ஆட்சியாளரின் கவனத்திற்கு வந்தால், அந்தப் பெருஞ்செல்வம் ஆட்சியாளரால் கையகப்படுத்தப்படும்.  

பேராசிரியர் வெ.அரங்கராசன்

(தொடரும்)