பண்பில்லான் செல்வம் கெட்டழியும் 1/3

பேராசிரியர் வெ.அரங்கராசன்

          பண்பில்லான் பெருக்கும் பெரிய செல்வமும்

          கண்முன்னே நில்லாது நீங்கிக் கெட்டழியும்.

அகச்சான்று:

பண்[பு]இலான் பெற்ற பெருஞ்செல்வம், நன்பால்

கலம்தீமை யால்திரிந்[து] அற்று                    [குறள்.1000]

பொருள் விரிவாக்க உரை:

நல்ல – சுவையுள்ள – தூய்மையான பாலை அழுக்கும் களிம்பும் படிந்த ஒரு கலத்தில் ஊற்றிவைத்தால், அது கலத்தினுள் படிந்த அழுக்கு, களிம்பு போன்ற குற்றங்களால் முழுவதும் திரிந்து, கெட்டழிந்து, பயன் இன்றிப், பாழாகி, நீங்கும். 

கலத் தீமையால் திரியும் அந்த நன்பால் போலவே

          சமுதாயத்திற்கு எந்த வகையிலும் உதவ வேண்டும் என்னும் ஈகைப் பண்பு போன்ற எந்த வகை பண்பும் இல்லாத ஒருவன் பெரிய அளவில் பொருட் செல்வத்தைத் திரட்டுகின்றான். அதை வீடெல்லாம் நிறையும்படி சேமித்துவைக்கின்றான்.

  இந்தகைய பெருஞ்செல்வம் முழுவதும் திரிந்து, கெட்டழிந்து, பயன் இன்றிப் பாழாகிப் போகும்.   

திரிதல் என்பதற்கு அகரமுதலிப் பொருள்கள்:

          பால் தன்மை மாறுபடுதல், வேறுபடுதல்.

விளக்க விரிவாக்க உரை:

          ஒருவன் அன்பும் அருளும் பாராட்டாது, செல்வம் திரட்டு வது ஒன்றையே நோக்கமாகக் கொண்டும்  மனிதப் பண்பியல்கள் சற்றும் இல்லாமல், பொருட் செல்வத்தைத் திரட்டுகின்றான்.

          அப்படித் திரட்டிச் சேர்த்துவைத்திருப்பது பெருஞ்செல்வமாக இருந்தாலும், அதற்கும் என்ன நிலைப்பாடு ஏற்படும் என்பதைத் தெளிவாக தெரிவிக்கும் தெளிகுறளே  இந்தப் பெருங்குறள்.

அதற்குமேலும் சென்று, வேறு நுண்பொருள்கள் கிடைக்கின்றனவா என ஆழ்ந்து சிந்தித்துப் பார்ப்போம்.  குறளுக்குள்ளே நாம் செல்லச் செல்லப் பற்பல  நுண்பொருள்களை நமக்கு நல்குவதுதானே நற்குறளின் நல்லியல்பு; வெல்லியல்பு.

ஒருவன் பெருஞ்செல்வம் திரட்டி வீடெல்லாம் நிறையும்படி  வைத்துள்ளான். அதற்கு அவனது முயற்சி ஒரு காரணமாக அமைகின்றது. அதற்குமேல் அவன் வாழும் சமுதாயமும் உறுதியாக ஒரு காரணமாக அமைகின்றது. நண்பர்கள், உறவினர்கள் போன்றவர்களும் அவனுக்கு உறுதுணைவர்களாக அமைந்திருப்பார்கள் என்பதில் எள்ளளவும் ஐயப்பாடு இல்லை.   

          அத்தகு துணைவர்கள் வறுமையில் வாடும் வருத்த  நிலைக் கும்  வரக்கூடும், அப்போது அவர்களுக்கும் அவன் உதவ வேண் டும். தனக்கு உறுதுணையாக நின்ற சமுதாயத்திற்கும் நன்றிக் கடன் செலுத்தும் வகையில் உதவ வேண்டும்.

        அத்தகையவர்களுக்கு உதவாமல், பெரிய அளவில் பொ ருள்களைச் சேர்த்து வைத்திருந்தால், அந்தப் பெருஞ்செல்வம்    என்ன நிலைப்பாட்டை அடையும் என்பதைத் தெள்ளத் தெளிவாகத் திருவள்ளுவர் உள்ளம் ஏற்கும்படி தெரிவிக்கும் அருங் குறளே இந்தக் குறள் [1000].

பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் =

கலத்தின் தீமையால் திரிந்த நன்பால்:

பண்பிலான்         = தீமைக் கலம்

பெற்ற                    = சேர்த்த

பெருஞ்செல்வம் = நன்பால்

பண்பின்மை        = கலத் தீமை

திரிதல்                  = செல்வம் அழிந்து, விட்டுநீங்குதல்

கலத்தின் தீமையால் திரிந்த நன்பால் போல:

கலத்தின் தீமையால் திரிந்த நன்பால் போலத்தான் பண்பு இ லான் பெற்ற பெருஞ்செல்வம் முழுவதும் திரிந்து, கெட்டழிந்து, பயன் இன்றிப் பாழாகி, நீங்கும்.  எப்படி..?

பண்பு இல்லாதவன் என்றால், அவனிடம் ஒழுக்கம், அன்பு, அருள், இரக்கம், நேர்மை, சமுதாய நலக் கண்ணோட்டம் போன்ற விழுமியங்கள் இருக்கா.

அதனால், அவன், அழுக்கு, களிம்பு போன்ற தீமை படிந்த கலம் போன்றவனாம். அவன் பெற்ற பெருஞ்செல்வம், நன்பால் போன்று இருந்தது. அஃதாவது அவனிடம் அந்தப் பெருஞ்செல் வம் வரும் முன்னர் நன்பால் போன்று இருந்தது.

அவனிடம் வந்த பின்னர் அந்தப் பெருஞ்செல்வம், திரிந்த பாலைப் போன்று மாறியது. அவனிடம் இருக்கும் பண்பின்மையால், அவன் முன்சுட்டப்பட்டவர்க்கு உதவாமல், நன்றி இல் செல்வமாக மாறிவிட்டான். 

அந்தப் பெருஞ்செல்வத்தைத் தனக்காகவே பயன்படுத்துகின்றான். பொதுநலம் பற்றி அவன் சிந்திப்பதே இல்லை. அத்தோடு அந்தப் பெருஞ்செல்வத்தைத் தீய செயல்களுக்கும் பயன் படுத்தினான்.

தன் போட்டியாளர்களை அழித்தல்,  மது அருந்துதல், கூடா நட்பைக் கூட்டுதல், தகாத உறவுகள் கொள்ளுதல் போன்ற தீய செயல்கள் / தீச்செயல்கள் செய்வதற்குப் பயன்படுத்துவான்.

அதனால்தான், அவனிடம் வந்த பின்னர், அந்தப் பெருஞ் செல்வம் கலத் தீமையால் நன்பால் திரிந்தது போலாயிற்று.

திரிந்த பால், குடிப்பதற்குத் தகுதியற்ற பாலாகும்; சுவை இல்லாத பாலாகும்; நாற்றம் அடிக்கும் பாலாகும்; குடிப்பவர்க்கு நோய் களைக் கொடுக்கும். அது அறவே பயன்படா உணவுப் பொருளாகும். அதைத் தரையில் தொலைவில் கொட்டி, அழிக்க  வேண்டும்.  

திரிந்த பால் போலவே அவன் பெற்ற பெருஞ்செல்வமும் அழியும்; அவனிடமிருந்து நீங்கும்.

பண்பு உள்ளான் பெற்ற பெருஞ்செல்வம்:

தீமை உள்ள கலத்தைத் தூய்மை செய்து, பின்னர் அதில் நன்பாலை ஊற்றிவைத்தால், அந்தப் பால் சுவையாக இருக்கும்; உடல் நலத்தை உருவாக்கும்; மணக்கும்; குழந்தைக்கும் உணவாகும். எல்லாரது விருப்பத்திற்கும் உள்ளாகும்.

அதிலிருந்து தயிர், மோர், வெண்ணெய், நெய் போன்ற பல பயன்பாட்டுப் பொருள்களைப் பெறலாம். அதுபோலவே,

பண்பு உள்ளவன் பெற்ற பெருஞ்செல்வம், தூய கலத்தில் ஊற்றிவைத்த நன்பால் போலச் செயல்படும்.

          அந்த நன்பால் போலவே பண்பு உள்ளான் செல்வமும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும்; உற்ற துணைவர்களாய் நின்று உதவிய அனைவரது வறுமையை வற்றச் செய்யப் பயன் படும்; சமுதாய நலன்களுக்காகப் பயன்படுத்தப்படும்; புகழ் மணம் பரப்பும். மொத்தத்ததில் ஈகை, ஒப்புரவு போன்ற அனைத்துச் சமுதாயப் பயன்பாட்டுச்  செயல்களுக்கும் பயன்படும் நன்றி உள்ள செல்வமாக உயரும். என்றும் நற்புகழ் ஈட்டும்.

மறுபக்கக் குறட் பா:

பெறப்படுபொருளை உணர்த்தும் குறட் பா:

  பண்[பு]உளான் பெற்ற பெருஞ்செல்வம், நன்பால்

கலம்தூய்மை யால்காத்தல் அற்று.                           

                             -பேராசிரியர் வெ.அரங்கராசன்

(தொடரும்)