அரசியல்வாதிகளுக்காக அன்றே வலியுறுத்திய இலக்குவனார்!

திருக்குறள் எந்நாட்டவர்க்கும் எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய சிறப்பு மிக்கது. எனினும் திருக்குறளுக்கு உரை எழுதுவோர்கள் அல்லது விளக்கம் தருபவர்கள் முன்னோர் தெரிவித்து வழி வழியே வந்த விளக்கங்களையே தத்தம் நடைகளில் விளக்குகின்றனர்.

மாறுபட்ட கருத்தாக இருப்பின் மாறுபட்டு உரை தந்த முன்னோர் வழி வந்த கருத்தாகத்தான் பெரும்பாலும் இருக்கும். அங்கும் இங்குமாக மாறுபட்டு அமைவன சிலவே.

ஆனால் திருக்குறள் அறிஞர் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் அறிவியல் நோக்கிலும் இக்காலச் சூழலுக்கேற்பவும் திருக்குறட்பாக்களுக்கு விளக்கம் தந்துள்ளார்.

அவற்றில் ஒன்றையே இங்கே பார்க்கப் போகிறோம். திருக்குறளின் பெருமைக்கும் அதை உணர்த்தும் இலக்குவனாரின் உரை அருமைக்கும் ஒரு சான்றாக இஃது அமையும்.

திருவள்ளுவர் வழங்கியுள்ள அனைத்துக் குறட்பாக்களும் அனைவரும் பின்பற்றப்பட வேண்டியனவே என்றாலும் சில குறட்பாக்கள் சில துறையினருக்கும் சில குறட்பாக்கள் சில மாந்தருக்கும் மிகவும் இன்றியமையாதனவாக இருக்கும்.

அரசியலாளர்களுக்குப் பொருட்பால் முழுமையும் வழிகாட்டியாக அமைகின்றது. அவற்றுள் அரசியல் பிரிவில் உள்ள 25 அதிகாரங்களும் அமைச்சியல் பிரிவில் உள்ள 10 அதிகாரங்களும் மிகவும் கருத்துடன் அறிந்து அரசியலில் ஈடுபட்டுள்ளோரும் ஆட்சியாளரும் அறிந்து பின்பற்றப்படவேண்டியவை.

வெற்றியும் தோல்வியும் நிறைந்த அரசியல் உலகில் அரசியலாளர்கள் வழிகாட்டியாகக் கொள்ளவேண்டிய ஒரு திருக்குறட்பாவைப் பேரா.சி.இலக்குவனார் வலியுறுத்துகிறார்.

இடுக்கண் அழியாமை அதிகாரத்தில் உள்ள திருக்குறள் அது.

இடுக்கணழியாமை என்பது முயற்சியில் பொருளிழப்பு, மெய் வருத்தம், தோல்வி போன்ற துன்பங்கள் வந்த பொழுது, அதற்கு மனங்கலங்காமையைக் குறிக்கும் என அறிஞர்கள் விளக்குகின்றனர். இவ்வதிகாரத்தின் 6 ஆவது குறள்; மொத்தத்தில் 626 ஆவது குறள் வருமாறு:

அற்றேம் என்று அல்லற் படுபவோ? பெற்றேம்என்று
ஓம்புதல் தேற்றா தவர்.

இக்குறட்பாவிற்கு அறிஞர் சிலர் தரும் விளக்கங்கள் வருமாறு…

மணக்குடவர் உரை: பொருளற்றே மென்று இரங்கித் துன்ப முறார், அதனைப் பெற்றோமென்று போற்றி வைத்தலை நன்றென்று தெளியாதவர். இது பொருட்கேட்டினால் வருந்துன்பத்திற்கு அழியாதாரைக் கூறிற்று.

பரிமேலழகர் உரை: அற்றேம் என்று அல்லற்படுபவோ – வறுமைக்காலத்து யாம் வறியமாயினேம் என்று மனத்தால் துயருழப்பாரோ; பெற்றேம் என்று ஓம்புதல் தேற்றாதவர் – செல்வக்காலத்து இது பெற்றேம் என்று இவறுதலை யறியாதார்?

மு.வரதராசன் விளக்கம்: செல்வம் வந்த போது இதைப்பெற்றோமே என்று பற்றுக்கொண்டு காத்தறியாதவர் வறுமை வந்த போது இழந்தோமே என்று அல்லல்படுவரோ.

பாவாணர் உரை: பெற்றேம் என்று ஒம்புதல் தேற்றாதவர் – செல்வக் காலத்தில் யாம் இது பெற்றேமென்று மகிழ்ந்து கையழுத்தங் கொண்டு அதைக் காத்துக் கொள்ளுதலை அறியாதார்; அற்றேம் என்று அல்லல் படுபவோ – வறுமைக் காலத்தில் யாம் செல்வத்தை யிழந்தேமென்று துயரப்படுவரோ ? படார்.

சாலமன் பாப்பையா விளக்கம்: பணம் இருந்த காலத்தில் மனக்கஞ்சம் இல்லாமல் பிறர்க்கு வழங்கியவர், இல்லாத காலத்தில் வரும் துன்பத்தினால் ஏழையாகி விட்டோமே என்று வருந்துவாரோ?.

வ.சுப.மாணிக்கம் உரை: செல்வம் வந்தபோது பற்றற்று இருப்பவர் போனபோது துயரப் படுவாரோ?

கலைஞர் உரை: இத்தனை வளத்தையும் பெற்றுள்ளோமேயென்று மகிழ்ந்து அதைக் காத்திட வேண்டுமென்று கருதாதவர்கள் அந்த வளத்தை இழக்க நேரிடும்போது மட்டும் அதற்காகத் துவண்டு போய் விடுவார்களா?

சிவயோகி சிவக்குமார் விளக்கம்: விலகிவிட்டது என்று வேதனைப்படலாமா ? பெற்றதைக் கொண்டு சரியாக வாழாதவர்.

இடுக்கண் அழியாமை என்னும் பொழுது தோல்வித் துன்பத்தையும் குறிப்பிட்டிருப்பினும் அனைவரும் பொருட்செல்வம் குறித்தே கூறுகின்றனர். இருப்பினும் சிவயோகியார் உரை பொதுவாக இருந்தாலும் செல்வம் என்பது உட்பொருளாக உள்ளது எனலாம்.

ஆனால் திருக்குறள் அறிஞர் பேரா.சி.இலக்குவனார் அனைவரிடமிருந்தும் மாறுபட்டுக் காலத்திற்குத் தேவையான விளக்கம் அளிக்கிறார். அவரது விளக்கம் வருமாறு:

பெற்றேம்-என்று அரசியல் பதவிகளை அடைந்து விட்டோம் என்று கருதி, ஓம்புதல்-அவற்றைத் தம்மினின்றும் நீங்காமல் காத்தலை, தேற்றாதவர் – தெளிந்து அறியாதவர், அற்றேம் என்று – அவை தம்மைவிட்டு நீங்கிய காலத்தில் இழந்து விட்டோம் என்று, அல்லல்படுபவோ – துன்பப்படுவார்களோ? துன்பப்பட்டார்.

அரசியல் பதவிகளைப் பெற்றுப் பணியாற்றுங்கால் உண்டாகும் இடர்ப்பாடுகளை எவ்வாறு வெல்ல வேண்டும் என்று முதல் ஒன்பது குறட்பாக்களிலும் கூறி, அப்பதவிகளை இழந்த ஞான்று உண்டாகும் உளத்துயரை மாற்றுவதற்கு வழி இக்கடைசிக் குறட்பாவில் கூறுகின்றார்.

பதவிக் காலத்தில் உண்டாகும் இடையூறுகளை, பதவி பெற்றுள்ள மகிழ்ச்சியாலும், பதவியால் பெற்றுள்ள செல்வாக்கினாலும், மக்கட்குத் தொண்டாற்று கின்றோமே என்ற உணர்ச்சியின்பத்தானும், மாற்றுதல் எளிது. பெற்ற பதவிகளை இழக்கும் காலத்தில் உண்டாகும் துன்பத்தை வெல்லுதல் எல்லோராலும் முடியாது. அரசியல் பதவிகளைப் பெறுவதிலும் அவற்றைக் காப்பதிலுமே அரசியல் தலைவர்கள் கருத்தைச் செலுத்திக் காலங்கழிக்கின்றனர்.

அவர்கள் பதவிகளைப் பெறுங்காலத்தில் பெரு மகிழ்வும், அவற்றை இழக்குங்காலத்தில் பெருந்துன்பமும் அடைகின்றனர். பதவிகள் மக்கட்குத் தொண்டாற்ற வாய்ப்பளிக்கும் நிலைகளே என்று கருதித் தொண்டாற்றுபவர்கள், அப்பதவிகளில் என்றும் இருக்க வேண்டுமென்று விரும்பமாட்டார்கள். பதவிகள் தம்மை அகன்ற காலத்து வருந்தமாட்டார்கள்.

அரசியல் தொண்டில் ஈடுபடுபவர்கள் இக்குறட்பாவை என்றும் உள்ளத்தில் பொறித்து வைத்துக் கொள்வார்களாக!

உயர் பதவிகள் கிட்டிய காலத்தில் உள்ளம் மகிழாதும் உயர் பதவிகளை விட்ட காலத்தில் உள்ளம் வருந்தாதும் இருத்தலே உணமைத் தொண்டர் இயல்பு.

(இலக்குவம் : வள்ளுவர் வகுத்த அரசியல்: பக்கம் 734)

அரசியல் தொண்டில் ஈடுபடுபவர்கள் உள்ளத்தில் பதிக்க வேண்டிய குறளாக இதனை விளக்குகிறார். வந்துபோகும் செல்வச் சூழலில் இருக்க வேண்டிய மன உறுதியை அனைவரும் விளக்குகின்றனர்.

ஆனால் பேரா.சி.இலக்குவனாரோ பதவி வரும் பொழுதும் போகும் பொழுதும் இருக்க வேண்டிய மனநிலையை விளக்குகிறார்.

பதவிகளைப் பெறுவதையும் நிலையாகப் பதவிகளில் இருப்பதையும் இலக்காகக்கொண்டு அரசியல் தலைவர்கள் செயல்படுகின்றனர். தொண்டாற்றுவதையே இலக்காகக் கொண்டு செயல்பட்டால் துன்புறும் சூழல் வராது என்கிறார் பேரா.சி.இலக்குவனார். அவர் தந்துள்ள விளக்கத்திற்கு மேல் கூறுவதற்கு ஒன்றும் இல்லை.

இக்குறளை இலக்காகக் கொண்டு அரசியலில் ஈடுபடுவோர் செயல்பட்டால் ஊழலில் ஈடுபட வாய்ப்பில்லை.

– இலக்குவனார் திருவள்ளுவன்

(நவம்பர் 17, தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனாரின் 111 ஆவது பிறந்த நாள்)

தாய் மின்னிதழ் நாள்  17.11.2020