அரசியல் அதிர்வலை ஏற்படுத்திய மக்கள்நலக்கூட்டணி மாநாடு!
[படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]
அரசியல் அதிர்வலை ஏற்படுத்திய
மக்கள்நலக்கூட்டணி மாநாடு!
மதுரை மக்களுக்கு அங்கே ஓர் அரசியல் மாநாடு நடைபெறும் என்ற அறிகுறியே காணப்படவில்லை. மதுரைத் தெருக்களை அணிசெய்தவை திருமலை நாயக்கர் விழா, தொடர்பான அம்மாவிற்கு நன்றி அறிவிப்பு. அழகிரியின் பிறந்தநாள், தாலின் வருகை முதலான சுவரொட்டிகளே! இருநாள் முன்னர் நடைபெற்ற தமிழ்த்தேசியப்பேரியக்கத்தின் மொழிப்போர் 50 மாநாடு பற்றிய 1000 சுவரொட்டிகள் இருந்த இடம் தெரியா அளவிற்கு மேற்குறித்த சுவரொட்டிகள்தாம் இருந்தன. அதுபோல், மதுரையில் மக்கள் நலக்கூட்டணி மாநாடு 26 / 01 தான் நடைபெறுகின்றதா? இடம், அல்லது நாள் தவறோ என எண்ணும் அளவிற்கு அப்படி ஓர் அரசியல் மாநாடு நடப்பதற்கான அறிகுறியே இல்லை! கட்சி மாநாடு என்றால் கட்சிக்கொடிகள் பறக்க, ஆரவார முழக்கங்களுடன் ஊர்திகள் உலா வருமே! அப்படி ஒன்றைக்கூடக் காணவில்லை. என்றாலும் பின்னர் ஒற்றைப்பட எண்ணிக்கையில் வி.சி.கட்சிக்கொடிகளுடன் சில ஊர்திகள் வருவதைக் காண முடிந்தது. எனினும் அவ்வூர்திகளும் வெவ்வேறு நேரங்களில் தனித்தனியாக வந்தமையால், கட்சி மாநாடு நடப்பதற்கான அறிகுறியாகத் தெரியவில்லை.
விழா நடை பெறும் ஒத்தக்கடைக்குச் சென்றாலும் மாநாட்டுத்திடல் வரும்வரை அதற்கான அறிகுறியில்லை. காணொளிவழிப் பேசினாலும் கொடித்தோரணங்களும் விளக்கு வரிசைகளும் மிரட்டுவதைப் பார்த்தவர்களுக்கு வியப்பாகத்தான் இருந்தது. மாநாட்டுத்திடலில் உள்ள கொடிகள் தவிர மாநாட்டின் முன்பக்கம் ஒரு பகுதியில் மட்டும் சில கொடிகள் வரவேற்றன. மாலை 5.00 மணிக்குக் கூட்டம் எனக் குறிக்கப்பெற்றிருந்தது. மாலை 4.00 மணியளவில் முன்வரிசையில் 1000 பேர் அமர்ந்து இசைக்குழுவினரின் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தனர். ஆனால், பின் அலையலையாக மக்கள் கூட்டம் வந்தது. திறந்த வெளித்தடுப்பு கொள்ளாத அளவிற்கு இக்கூட்டம் இருந்தது. மகளிருக்கெனத் தனித்தடுப்பு போட்டிருந்த பகுதியில் காலி இருக்கைகள் இருந்தன. பின் பகுதியில் திரண்டிருந்த பெண்களை அங்கு வந்து அமருமாறு அடிக்கடி அழைப்பு விடுத்தவண்ணம் இருந்தனர். கூட்டம் தொடங்கியபொழுது அங்கும் காலி யிருக்கைகள் இல்லை. ஆனால், வந்திருந்த கூட்டம் கூலிக்கு வந்த கூட்டமல்ல! உணவுதந்தோ மதுவகைகள் வழங்கியோ பணம் கொடுத்தோ அழைத்துவரப்பட்டவர்கள் அல்லர் என்பது நன்றாகவே தெரி்ந்தது. காவல்துறையினர் இருந்ததாகத் தெரியவில்லை. ஒருவேளை பாதுகாப்பிற்கு வந்தால் அவர்களின் பணியிடப்பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்று வரவில்லையோ என்று தெரியவில்லை. ஆனால், மக்கள் நலக்கூட்டணியினரின் தொண்டர்படை கூட்டத்தை ஒழுங்குசெய்தது. எனவே, கட்டுப்பாடாக மக்கள் திரள் இருந்தமை, கூட்டணித் தொண்டர்களுக்கு மகிழ்ச்சியையும் பிறருக்கு வியப்பையும் தந்தது.
இவர் மாறுவார், அவர் மாறுவார் என்றெல்லாம் புறப்பட்ட புரளிகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதுபோல் நான்கு கட்சியினரும் ஒற்றுமையாக இருந்தனர். தலைவர்களின் பேச்சுகள் புயலாக வந்தாலும் தொண்டர்களுக்குத் தென்றலாய் இன்பம் தந்து உற்சாகம் தந்தது. இதுவரை அணி மாறலாம் என ஒருவேளை யாரும் எண்ணியிருந்தாலும் தொண்டர்களின் எழுச்சி அதனைத் துடைத்தெறிந்திருக்கும். என்றாலும் இனிமேல்தான் விழிப்பாக இருக்க வேண்டும். வைகோ குறிப்பிட்டுள்ளதுபோல் இக்கூட்டம், தி.மு.கவுக்கும் அ.தி.மு.க.வுக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கும். ஆனால், ம.ந.கூட்டணியின் வளர்ச்சி கண்களை உறுத்த இதனைக் கரைக்கவோ பிரிக்கவோ சிதைக்கவோ மேற்கொள்ளும் முயற்சிகள் முன்னிலும் வலிமையாக இருக்கும்.
தமிழ்நாட்டு வாக்காளர்களைக் கவருவதில் இன்றைய நிலையில் அ.தி.முக.தான் முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடம் தி.மு.க. என்பதிலும் ஐயமில்லை. பேராயக்(காங்கிரசு)கட்சி, பா.ச.க. ஆகியன் இறுதியில் உள்ளன. மூன்றாம் இடம் யாருக்கு என்பதில்தான் போட்டி.
என்றாலும் ஒவ்வோர் அணிக்கும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. எல்லாத் தொகுதியையும் திருமங்கலம்போல் ஆக்கிவிட்ட ஆளும் கட்சிக்கூட்டணிக்கு எத்தனை இடர்களைச் சந்தித்தாலும் ஆட்சியை இழக்க மாட்டோம் என்ற நம்பிக்கை உள்ளது. தி.மு.க. அணிக்கோ வெள்ளத்துயர்போன்ற பல காரணங்களால் ஆட்சி மீதுள்ள மனக்குறை தங்களின் வாக்குகளாக மாறி வாகை சூடலாம் என்ற நம்பிக்கை. இதே நம்பிக்கைதான் பா.ம.க.விற்கும் உள்ளது. வழக்குகளில் சிக்கியுள்ள இரு கட்சிகளுக்கு எதிரான வாக்குகள் தமக்கு விழும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். ஊழலையே அரசியல் கட்சிகளின் தகுதியாக வாக்காளர்களில் பெரும்பான்மையர் கருதுகையில் இவற்றால் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என எண்ணுவது அறியாமையே! மக்களால் பேராயக்கட்சி(காங்.) துடைத்தெறியப்பட்டிருந்தாலும், வாய்வீச்சால் எந்த அணியிலாவது இடம் பெற்று கட்டுத் தொகையையாவது திரும்பப் பெறலாம் என்ற நம்பிக்கை. இந்தியாவே பா.ச.க.தான் என்று பொய் மூட்டை அவிழ்க்கும் பா.ச.க. ஆட்சி அதிகாரத்தால் ஏதேனும் கூட்டணியில் இடம் பெற்று அணியின் வெற்றியைத் தன் வெற்றியாகச் சொல்லலாம் என்ற கடும் முயற்சியில் உள்ளது.
தே.மு..தி.க. தனக்கு இருக்கும் வாக்கு வங்கியால், பேர வலிமை கொண்டுள்ளது. பா.ச.க. அல்லது பேராயக்கட்சி(காங்.), விசயகாந்தை முதல்வர் வேட்பாளராக ஏற்றாலும் அக்கூட்டணி வெற்றி என்பது கானல் நீரே என்பது இக்கட்சிக்கும் தெரியும். முதல்வர் பதவி போன்ற பேரங்கள் தி.மு.க.வில் வெற்றியடையாது என்பதும் இக்கட்சியினருக்குத் தெரியும். எனினும் தே.மு.தி.க. இருக்கும் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும், அதன் மூலம் அதிகாரத்தைச் சுவைக்கலாம் என்ற நம்பிக்கை இக்கட்சிக்கு உள்ளது.
இவ்வாறு ஒவ்வோர் கட்சியணியும் வெற்றி நம்பிக்கையில் உள்ளனர். இவர்கள்போல், மக்கள்நலக்கூட்டணியும், இதுவரை வாக்களிக்காகத வேட்பாளர்கள் வாக்குகளைத் திரட்டுவதன் மூலம் வெற்றி பெறுவோம் என இதுவரை ஒப்புக்குச் சொல்லி வந்தாலும் இந்தக் கூட்டம் இவர்களுக்கே நம்பிக்கை அளித்திருக்கும்.
பேருந்துகள் ஏற்பாடு செய்யாமல், உணவு வகைகள், குடிவகைகள் வழங்காமல் திரளாக மக்கள் எழுச்சியுடன் வந்ததால் முயன்றால் வெல்லலாம் என்ற நம்பிக்கை துளிர் விட்டுள்ளது. ஆனால், மாநாட்டில் வைகோ சொன்ன 4 காளைகள், 1 சிங்கம் கதைபோல் ஆகாமல் இருப்பது இவர்கள் கைகளில்தான் உள்ளது. இப்பொழுதே வி.சி.க., முதல்வர் வேட்பாளர் குறித்து அறிவித்துச் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கட்சி எந்தக் கூட்டணியில் சேர்ந்தாலும் இவர்கள் கோரிக்கையை ஏற்கப்போவதில்லை. இக்கூட்டணியில் இருந்து வெற்றி பெற்றால் ஆட்சியைப் பகிரும்வாய்ப்பு கிடைக்கும் இவ்வாறிருக்க இருப்பதைவிட்டுப் பறப்பதைப் பிடிப்பதுபோல் கட்டுப்பாடின்றிப் பேசுவதைக் கைவிட வேண்டும். ஆசைப்பட்டதை எல்லாம் கூறுவது கூட்டணிக்கு உலை வைக்கும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். “யாகாவராயினும் நா காக்க” என்னும் தெய்வப்புலவர் திருவள்ளுவர் கட்டளையை அனைவரும் பின்பற்றினால் கூட்டணிப்பிணைப்பு மேலும் உறுதியாகும்.
வைகோ பேசும் பொழுது “கற்புக்கரசி வீதிவீதியாகப் போய்த் தான் விலைமகள் அல்ல என்று பறைசாற்றிக்கொண்டிருக்க மாட்டாள்” எனக் கூற வந்தவர் கொச்சை வழக்கைப் பயன்படுத்தி விட்டார். இவ்வாறு பேசினால் பெண்கள் திரளுவது குறையும் என்பதையும் பிறரும் இவர் மேல் வைத்துள்ள மதிப்பால் எதிர் எண்ணத்திற்குத் தள்ளப்படுவர் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். அதுபோல், “அந்த வானத்தையே நாங்கள் போட்டிக்கு அழைப்போம்” என்று சொன்னவர், வானத்தில் நிலா தெரிந்ததும், “அதோ! சந்திரன் இப்பொழுதுதான் புறப்பட்டு மேலே வந்து கொண்டிருக்கின்றான். வெள்ளுவா(பௌர்ணமி) முடிந்து நான்கு நாள்கள்ஆகிவிட்டன” என்றார். முழு நிலவிற்கு அடுத்து வருவது தேய்பிறை நிலா. வளர்முகத்தில் இருக்கும் பொழுது தேய்முகத்தைக் குறிப்பிடுவது தவறல்லவா? உணர்ச்சியில் உவமை தடுமாறக்கூடாதல்லவா?
திருமா பேசும் பொழுது கட்டுவிரியன், கண்ணாடிவிரியன், நல்ல பாம்பு என்றெல்லாம் உவமித்து மிகுதியான கைதட்டலைப் பெற்றார். ஆனால் மாநாடு முடிந்த இரு நாளிலேயே தான் அப்படிச் சொல்லவில்லை, தவறாகச்சொல்லவில்லை என்றெல்லாம் அறிக்கை விடுகிறார். எதிர்க்கட்சியினரை உவமைமூலம் விளக்குவது தவறல்ல. எனினும் நன்கு எண்ணிப்பார்த்து நல்லனவற்றையே பேச வேண்டும். அவ்வாறு பேசியபின்,தான் தெரிவித்த கருத்தில் உறுதியோடு இருக்க வேண்டும். இவர் விளக்கம் தருவதால், மீண்டும் அக்கட்சியுடன் உறவு கொள்ளத் தடையாக இருக்கக்கூடாது என மறுக்கிறார் என்ற தீப்பெயர்தான் வருகிறது. அவ்வாறு வருத்தம் தெரிவித்தவர் நல்ல பாம்பு என்று சொன்னதற்கும் வருத்தம் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு சொல்லவில்லை. ஒன்று தவறெனில் முழுமையான வருத்தமாக இருக்க வேண்டும். இல்லையேல் பேச்சு தொடர்பான கருத்துகளைப் புறந்தள்ள வேண்டும்.
வி.சி.க.தொண்டர்கள் மேடையின் இருபுறமும் நூறு, நூறு பேர் இருந்தனர். அவர்கள், ‘சிறுத்தை’, ‘திருமா’, ‘அம்பேத்கார்’ என யார் சொன்னாலும் வலுத்த ஆரவாரக் குரல் எழுப்பினர். முத்தரசன் பேசும்பொழுது “இந்த ஆரவாரம் நின்றால்தான் பேசுவேன்” என்றுகூடச் சொன்னார். திருமா, மேடையில் இருந்துகொண்டே கட்சித் தொண்டர்களைத் தொடர்ந்து அடக்கிக் கொண்டே இருந்தார்.
வைகோ பேசும்பொழுது, இவ்வாறு தொண்டர்கள் ஆரவாரம் செய்வது குறித்து திருமா வருத்தப்பட்டதாகவும் ஐந்து இலட்சம் மக்கள் திரண்டு இருக்கும்பொழுது முந்நூறு, நானூறு இளைஞர்கள் ஆரவாரம் செய்வது தவறில்லை என்றும் ஒடுக்கப்பட்டிருந்தவர்களின் ஆரவாரம் மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார். ஆனால், இந்த ஆரவாரத்தை அளவுகோலாகக் கொண்டு மாநாடு முழுவதும் பெரும்பாலும் சிறுத்தையரே குழுமியுள்ளதுபோல் மாயத் தோற்றத்தைக் காட்ட அக்கட்சியினர் முனைந்தால் இம் மாயையில் சிக்கித் தாங்களே அழிவர் என்பதை உணர வேண்டும். வைகோ பேச எழுந்த பொழுது கூட்டப்பகுதி முழுமையும் ஒருமித்து எழுந்த ஆரவார வரவேற்பு கூட்டணியின் மையம் அவர்தான் என்பதை உறுதிப்படுத்தியது. இவ்வாறு பேச்சிற்கு இடையூறு ஏற்படுத்தாத ஆரவாரம் எழுப்புவதுகுறித்த நெறியுரையையும் சிறுத்தையினருக்கு அளிப்பது நன்று.
தமிழகத் தலைவர்களுக்கும் அமைப்பாளர்களுக்கும் தொண்டர்களுக்கும் மட்டுமல்லாமல் பொதுவுடைமைக் கட்சிகளின் உயர்நிலைத் தலைவர்களுக்கும் உவகை அளிக்கும் வகையில் கூடல் மாநகரில் பெருங்கூட்டம் திரண்டிருந்தது. இம்மாநாட்டை, அரசியல் நோக்கர்கள், அரசியல் அணியினரின் திசைகாட்டியாகக் கருதினாலும், கட்சிகளின் போக்கைப் புரட்டிப்போடும் நெம்புகோலாக ஆர்வலர்கள் கருதினாலும், ஏற்றத்திற்கான எழுச்சியாகத் தொண்டர்கள் கருதினாலும், நாளிதழ்களும் காட்சி ஊடகத்தினரும் வழக்கம்போல் இருட்டடிப்பு செய்யத்தவறில்லை.
என்றாலும் எதையும் பொருட்படுத்தாமல் கருத்து சிதையாமல் தொடர்ந்து முயன்றால்,
தெய்வத்தா னாகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும். (திருவள்ளுவர், திருக்குறள் 619)
என்பதை எண்ணி ஒற்றுமையுடன் செயல்பட்டால்,
வெற்றி வாசலை எட்டிப் பார்க்கலாம்!
இகழ்ச்சியில் கெட்டாரை உள்ளுக தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.
(திருவள்ளுவர், திருக்குறள் 539)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை
Leave a Reply