supersinger-function01supersinger-function02 supersinger-function03

நாணமின்றி நடுநிலை தவறும் விசய் தொலைக்காட்சி!

  கடந்த இதழுரையிலேயே “திறந்த புத்தகம்போல் விசய் தொலைக்காட்சி இருக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டு இருந்தோம். ஆனால் உச்சப்பாடகர் நிகழ்ச்சியில் உலக மக்கள் தங்களைக் கவனித்துக் கொண்டிருக்கின்றனர் என்ற அச்சம் இல்லாமலும் தட்டிக் கேட்பதற்கு யாருமில்லர் என்ற தலைக்கனத்தாலும் வாக்கில் முதலிடம் பெற்றவருக்குப் பரிசு அளிக்காமல் மூன்றாம் இடம் பெற்றவருக்கு முதல் பரிசு அளித்துள்ளனர். ஒரு கோடிக்கு மேல் ஒருவர் வாக்கு பெற்றது பாரறிய அறிவிக்கப்பட்டது. அவர் (ஃச்) பூர்த்தியாக இருந்தால் அந்த வாக்கு எண்ணிக்கையை அறிவித்திருப்பர். மக்கள்வாக்கும் நடுவர் முடிவும் ஒத்துப் போவதாகவும் கூறியிருப்பர். அவ்வாறு சொல்லாததே முதலிடத்தில் உள்ளவர் பூர்த்தியல்ல என்பதை உறுதிப்படுத்துகிறது. முதலில் ஆறு கோடிக்கு மேல் வாக்குகள் வந்ததாகக் கூறியதன் காரணம், முதல் பரிசு பெறப்போவது தமிழ்ப்பெண் என்பதால் அவருக்குத் தர விருப்பமின்றிப் பிறரும் கோடிக்கணக்கில் வாக்குகள் பெற்றதாகக் கணக்குக் காட்டி விரும்பிய தமிழரல்லாதவருக்குப் பரிசு தர எண்ணியிருப்பர். ஆனால், குறைந்த காலத்தில் அதற்கான வாய்ப்பு இன்மையால், தவறாகத் தெரிவித்துவிட்டதுபோல் அறிவித்து விட்டனர்.

  தேர்தல் என்று வந்துவிட்டாலே வாக்கு அடிப்படையில்மட்டும்தான் வெற்றி முடிவாக வேண்டும். சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலில் நல்லவர் குறைவான வாக்குகள் பெற்று மிகுதியான கொலைகளும் கொள்ளைகளும் புரிந்த ஒருவர் வெற்றி பெற்றால் அவரைத்தான் வென்றவராக அறிவிக்க இயலுமே தவிர, நல்லவர் வாய்ப்பை இழக்கிறாரே என்று பரிவில் அவரை வென்றவராக அறிவிக்க முடியாது. அதுபோல்தான் வாக்குஅடிப்படையிலான எல்லாத் தேர்தல்களும். ஆனால், இங்கே முதலிடம் பெற்றவர் உண்மையில் குரலினிமையும் பாடற்திறமையும் பெற்ற தகுதியானவரே! ஆனால் தமிழர் என்பதைத் தகுதிக்குறைபாடு எனக் கருதுவோரால் அவர் வெற்றி பறிக்கப்பட்டுள்ளது. அதுபோல் இரண்டாமிடத்தில் இருந்தவரும் தமிழ்ச்சிறுமிதான். எனவே மூன்றாவதாக வந்த தமிழச்சி அல்லாதவருக்கு வாகைப்பட்டம் சூடியுள்ளனர். இதேபோல் ஐந்தாம் இடம் வந்தவருக்கு மூன்றாம் இடம் அளித்துள்ளனர். எனவே, முதல் கோணல் முற்றம் கோணலாகி ஒட்டுமொத்த முறைகேடாக அமைந்துள்ளது.

  மொத்த வாக்குகளில் 65 விழுக்காடு பெற்றவருக்கு மூன்றாம் பரிசாம்! அவர் பெற்றதில் ஒன்பதில் ஒரு பங்கு பெற்றவருக்கு முதல் பரிசாம்! இரண்டாம் இடம் பெற்றவருக்குப் பரிசு இல்லையாம்! அவரது வாக்கு எண்ணிக்கையில் 4இல் 1 பங்கு வாக்கு பெற்றவருக்கு மூன்றாம் பரிசாம்! வாக்குகள் பெற்ற யாரையும் பாடல் திறமையற்றவர் என நடுவர்கள் சொல்ல முடியாது. ஏனெனில் பல்வேறு தடைகளைக் கடந்துதான் முன் இறுதி நிலைக்கும் இறுதி நிலைக்கும் வந்துள்ளனர். எனவே எப்பொழுது வாக்கு அடிப்படையில் வாகையாளரை முடிவெடுக்கின்றார்களோ அப்பொழுதே நடுவர்களுக்கு அங்கே வேலை யில்லை என்பதைப் புரிந்து கொண்டு ஒதுங்கியிருக்க வேண்டும். அவ்வாறு ஒதுங்கினால் தாங்கள் விரும்புபவருக்குப் பரிசளிக்க முடியாதே! இத்தகைய முடிவால் பரிசுத்தொகையில் பங்குபெறும் ஊழலும் இடம் பெற்றுள்ளதோ என எண்ணுவதிலும் தவறிருக்காது. முடிவை அறிவித்ததும் செசிக்கா, அனுசுயா குடும்பத்தினர் வாக்கு எண்ணிக்கையை அறிவியுங்கள்; நாங்கள் பரிசு பெற்றுக் கொள்கிறோம் எனத் தெரிவித்திருக்க வேண்டும். நடுவர் முடிவு இறுதியானதுபோன்ற ஏதேனும் விதி உள்ள ஒப்பந்தத்தில் கையொப்பம் இவர்களிடமிருந்து பெறப்பட்டதோ எனத் தெரியவில்லை.

தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்

கொள்வர் பழிநாணு வார் (திருக்குறள் 433)

என்னும் திருவள்ளுவர் மிகச்சிறுஅளவு குற்றம் நேர்நதாலும் பழிச்செயல்களுக்கு வெட்கப்படுபவர் மிகப் பெரிய அளவாகக் கருதுவர் என்கிறார். ஆனால், இவர்களோ இமயமலை அளவு மிகப் பெருங்குற்றம் தொடர்ந்து புரிந்தாலும் வெட்கமின்றி உலவுகின்றனரே! இவர்கள் தம் சொந்தப்பணத்தில் சாதி, மொழி, இனம் பார்த்துப் பரிசு வழங்கினால் நாம் ஒன்றும் சொல்லப்போவதில்லை. ஆனால் மக்கள் பணத்தில் அல்லவா விளையாடுகிறார்கள்! மக்கள் வாக்குஅளிக்கும் பொழுது செலுத்தும் கட்டணத்திலிருந்துதான் நிகழ்ச்சி   நடைபெறுகிறது என்னும் பொழுது அதிலிருந்து அளிக்கப்படும் பரிசுத் தொகையும் மக்கள் பணம்தானே!

  எனவே, விசய் தொலைக்காட்சி நிறுவனமும் இதனை நடத்தும் ஏர்டெல் நிறுவனமும் உண்மை எண்ணிக்கையை அறிவித்து அதற்கிணங்கப் பரிசுகளை அறிவிக்க வேண்டும். முறைகேட்டிற்குக் காரணமானவர்களை இனித் தம் நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் தடை விதிக்க வேண்டும். முதல் பரிசு பெற்ற பூர்த்தி குடும்பத்தினரும் இம் முறைகேட்டிற்கு உடந்தையாக இருந்திருப்பின் அவருக்கு வழங்கிய பரிசைத் திரும்பப் பெறவேண்டும். உடந்தை இல்லை எனத் தெரியவந்தால் அப்பரிசுத் தொகையைத் திரும்பப் பெற வேண்டா. ஆனால், வாக்கு அடிப்படையில் முதலிரு இடம் பெற்றவர்களுக்கும் அவர்களுக்கு முன்பு வழங்கிய பரிசுகளைத் திரும்பப் பெறாமலேயே புதியதாக மீண்டும் பரிசுகள் அளிக்க வேண்டும். அல்லது வாக்காளர்களுக்கு அவர்களிடமிருந்து பெற்ற கட்டணங்களை ஏதேனும் வகையில் திரும்பத்தர வேண்டும். அஃதாவது பணமாகத்தான் திரும்பத்தரவேண்டும் என்றால் நடைமுறைச்சிக்கல்கள் எழலாம் என்பதால், அந்தத் தொகைக்கு அலைபேசி அழைப்புகளை மேற்கொள்ளலாம் என்பதுபோன்ற முறையில் செலுத்திய கட்டணங்கள் திரும்ப அளிக்கப் பெற வேண்டும். முறைகேட்டிற்குக் காரணமானவர்களிடமிருந்து முதலில் அளிக்கப்பட்ட பரிசு மதிப்பினைச் சமமாகப் பெற வேண்டும்.

இதனைக் கண்டுகொள்ளாமல் வழக்கம்போல் அமைதிகாத்து அடுத்து வரும் போட்டியையும் இதே மோசடி முறையில் திட்டமிட்டால், விசய் தொலைக்காட்சி நிறுவனமும் ஏர்டெல்நிறுவனமும் முறைகேடுகளுக்குக் காரணம் என்பது தெளிவாகும். அப்படியாயின்

1.       நம் நாட்டிலிருந்தோ பிறநாட்டிலிருந்தோ இசையன்பர்கள் இந்நிறுவனத்தின் மீது வழக்கு தொடுக்க வேண்டும்.

2.  விசய் தொலைக்காட்சியையும் அதில் பங்கேற்கும் கலைஞர்களையும் புறக்கணிக்க வேண்டும்.

3.       விளம்பரங்களும் தரக்கூடாது.

4.      இதன் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கக்கூடாது.

5. சிங்களத் தோழமை நிறுவனம் என்ற காரணத்தால் ஒரு சாராரால் புறக்கணிக்கப்படும் ஏர் டெல் நிறுவனத்தை உலக மக்கள் அனைவருமே புறக்கணிக்க வேண்டும்.

அதுதான் இவர்களுக்கும் இவர்களைப் போன்ற ஊடக ஊழல் வாதிகளுக்கும் தண்டனையாக அமையும்.

   தவறான தீர்ப்பு வழங்கிய குற்றத்திற்காக வளைந்த செங்கோலை நிமிர்த்த பாண்டிய மன்னன் உயிரையே விட்டான். இவர்கள் உயிரை விடவேண்டா! அறம்வழங்கி முறைப்படி வென்றவர்களுக்குப் பரிசும் பட்டமும் அளித்தால் போதும்! செய்வார்களா?

 

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரைfeat-default

அகரமுதல 67 நாள் மாசி10, 2046 / பிப்பிரவரி 22, 2015