அறவோர் உள்ளனரா? குற்றமற்றவர்களைத் தண்டிப்பது குறித்துக் கவலைப்படவில்லையா?
அறவோர் உள்ளனரா? குற்றமற்றவர்களைத் தண்டிப்பது
குறித்துக் கவலைப்படவில்லையா?
தன்நாட்டுக்குடிமகள் ஒருத்தியின் கற்பிற்குக் களங்கம் வரக்கூடாது என்பதற்காக அனைவர் வீட்டுக் கதவுகளையும் தட்டியதாக விளக்கம் அளிக்காமல் மன்னனாயிருந்தும் தன் கையை வெட்டிக் கொண்ட பொற்கைப்பாண்டியன் என்னும் மன்னன்ஆட்சி செய்த தமிழ்நாடு இது.
ஆடுமழைத் தடக்கை அறுத்துமுறை செய்த
பொற்கை நறுந்தார்ப் புனைதேர் பாண்டியன்
எனக் ‘குணநாற்பது’ என்னும் இலக்கியத்தில் நமக்குக் கிடைத்த ஒரே பாடலில் இடம்பெற்ற இவ்வடிகள் இவ்வரலாற்றை நமக்குத் தெரிவிக்கின்றன.
வச்சிரத் தடக் கை அமரர் கோமான்
உச்சிப் பொன் முடி ஒளி வளை உடைத்த கை
குறைத்த செங்கோல், குறையாக் கொற்றத்து
எனச் சிலப்பதிகாரமும் இவ்வரலாற்றுச் செய்தியை நமக்குத் தெரிவிக்கின்றது.
குற்றம் புரியாக் கோவலனுக்கு மரணத்தண்டனை கொடுத்துக் கொன்றமைக்காகப் பாண்டியமன்னன்.
யானோ அரசன் யானே கள்வன்
மன்பதை காக்கும் தென்புலம் காவல்
என்முதல் பிழைத்தது கெடுகவென் ஆயுள்என
(வழக்குரை காதை : 74-77)
உயிர் விட்ட உயர்ந்தஅறப்பண்பாட்டைச் சிலப்பதிகாரம் உணர்த்துகின்றது.
இத்தகைய தமிழ்ப்பண்பாடு எங்கே போயிற்று? இந்தியச் சிறைக்குள் சிக்கிச் சின்னாபின்னமாகிவிட்டதா? இந்தியத்துணைக்கண்டத்திலும் புத்தர் முதலான அறவோர்கள் வாழ்ந்துள்ளனரே!
அத்தகைய அறவாணர்கள் வழி வந்தவர் இன்று யாருமில்லரா?
பல்வேறு வழக்குகளில் வழக்கிற்குத் தொடர்பில்லாதவர்கள் தண்டிக்கப்படும் அவலம் தொடர்கிறதே! இதன் உச்சக்கட்டமாக இராசீவுகாந்தியைக் கொன்றதாக அப்பாவிகள் எழுவரை 25 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய நீதித்துறை துன்புறுத்தி வருகிறதே! வழக்கு தொடர்பான அதிகாரிகள் பலரும் பொய்யுரையாலும் புனைந்துரையாலும் இவர்களுக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்ததாகக் கூறியும் நீதித்தேவதையின் கண்கள் இன்னும் மூடிக்கிடப்பதேன்?
குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாவரும் குற்றமற்றவர்கள் என வெளிப் படுத்தும் உண்மைகளில் பேரதிர்ச்சியாக மோகன்இராசு என்னும் ஆய்வாளர் இப்பொழுது கூறியுள்ளார். அவரும் மற்றும் இருவரும் சேர்ந்து சாந்தன்(சாத்தன்) என்னும் உண்மையாகத் தேடப்பட்டவரைக் கொன்றதாகப் பெருமைபேசியுள்ளார்.(காண்க: சாந்தனை நான்தான் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றேன்.) எது எதற்கோ தானாக வழக்கு பதிந்து உசாவும் நீதிபதிகள் இதனைக்கேட்டதும் அவருக்கு மாற்றாக 25 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் – வேலைவாய்ப்பிற்காக வந்து மாட்டி வைக்கப்பட்ட – சாந்தனை உடனே விடுதலை செய்திருக்க வேண்டாவா? ஒரு பானை நஞ்சிற்கு ஒரு துளி சான்றாக இதை எடுத்துக்கொண்டு பிறரையும் விடுதலை செய்திருக்க வேண்டாவா?
செபமணி மோகன்ராசு என்னும் காவலர் உடையணிந்த கொலையாளி இதனைத் தேசப்பற்று எனப் பெருமைபேசியுள்ளான். வாதத்திற்காக இப்படி எண்ணுங்களேன்! தேசத்தலைவனைக் கொன்றவனைக் கொல்வது தேசப்பற்று என்றால், ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் படுகொலைகளுக்கும் கற்பழிப்புகளுக்கும் சித்திரைவதைகளுக்கும் உள்ளானதற்குக் காரணமான ஒருவரை அந்நாட்டு மக்கள் கொல்வதும் தேசப்பற்றுதானே! என்றாலும் அவர்கள் மீது கொலைப்பழி வரும், தாம் தப்பிவிடலாம் என எண்ணிய இந்திய நாட்டினர்தான் உண்மையான குற்றவாளிகள் என அவ்வப்பொழுது ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன. அவ்வாறிருக்கப் பொய்யாகக் குற்றம் சுமத்தித், தானே அதிகாரத்தை எடுத்துக் கொண்டு கொல்வது எப்படி அறமாகும்?
தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்னெஞ்சே தன்னைச் சுடும் (திருவள்ளுவர், திருக்குறள் 293)
என்பது இவர்களிடம் பொய்த்துப்போகின்றதே! நெஞ்சமே இல்லாதவர்களிடம் இதனை எதிர்பார்க்க முடியாதுதான்!
இவர்களுக்கு, இறைப்பற்றும் இல்லை! அறப்பற்றும் இல்லை! இறைப்பற்று இருந்தால் எழு பிறவி தொடர்ந்தாலும் பாவம் விடாது என அஞ்சி அறியாமல் அல்லது மேலலுவலர் அச்சு றுத்தலில் தவறு செய்திருப்பின், இவர்கள் விடுதலைக்குப் பாடுபட்டிருக்க வேண்டும்.
அறத்தின் மீது நம்பிக்கை இருப்பின் மனச்சான்றுடன் செயல்பட்டுச், செய்த குற்றத்திற்கு வருந்தி அப்பாவிகள் விடுதலைக்குப் பாடுபட்டிருக்க வேண்டும். இறை யுணர்வோ அறவுணர்வோ இருந்தது எனில் தவறு செய்தபின்னராவது மனச்சான்று இடித்துரைத்திருக்கும்.
அறந் தவறியோரே! அறந் தவறியோரே!
நீங்களும் உங்கள் வழிமுறை யினரும்
மண்ணாய்ப் போவீர்! மண்ணாய்ப் போவீர்!
கடுகி மடியுமுன் கழுவாய் தேடுவீர்!
விடுதலை செய்வீர் எழுவரை உடனே!
எனப் பதறும் நெஞ்சங்கள் கரைகின்றன!
எனவே, இராசீவு கொலை வழக்கில் அப்பாவிகள் சிக்க வைக்கப்பட்டுத் தண்டனை துய்த்து வருவது ஐயந்திரிபறத் தெரியவருவதால், தமிழக அரசு உடடியாக மறு விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிடவேண்டு மென்று மத்திய அரசிடம் வேண்டி அதுவரை முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, இராபர்ட்டு பயாசு, இரவிச்சந்திரன், செயக்குமார் ஆகிய எழுவரும் சிறைவிடுப்பில்(பரோலில்) இருப்பார்கள் என அறிவித்து இவர்களை விடுவித்து இவர்களின் மறுவாழ்விற்குத் தாராள உதவி வழங்க வேண்டும்.
தமிழக முதல்வர் செயலலிதா மனித நேயத்துடன் நடவடிக்கை எடுத்து வருவதால் இனியும் மத்திய அரசிற்கோ நீதி மன்ற முடிவிற்கோ காத்திராமல் எழுவர்க்கும் விடுதலை நல்கி, அறம்காத்த செல்வி என உலகோர் பாராட்ட வாழுமாறு வேண்டுகிறோம்!
ஓர்ந்து கண்ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை (திருவள்ளுவர், திருக்குறள் 541)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை அகரமுதல 139, ஆனி 05, 2047 / சூன் 19, 2016
தாங்கள் இதை எழுதிய ஐந்தே நாட்களில் செயலலிதாவின் உண்மை முகம் வெளியாகி விட்டது. ௨௫ ஆண்டுகளாகச் சிறையில் இருப்பதால் தன்னை முன்கூட்டி விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி நளினி தாக்கல் செய்துள்ள வழக்கில் அரசு கைவிரித்து விட்டது. “மூன்று நாட்களுக்குள் உரிய பதில் அளிக்காவிட்டால் எழுவரையும் நானே விடுதலை செய்வேன்” என்று சட்டப்பேரவையில் முழங்கிய செயலலிதா, இதற்காகத் தீர்மானமெல்லாம் கூடக் கொண்டு வந்த செயலலிதா இன்று அவர்களை விடுவிக்கத் தனக்கு அதிகாரம் இல்லை என்று மழுப்புகிறார் நீதிமன்றத்தில். இவர் செய்தவையெல்லாம் வாக்கு நோக்கம் கருதித்தானே தவிர உண்மையான அக்கறையால் இல்லை என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது.