அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 6. உ.ஏமம்

(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 5. ஈ. இன்பம்-தொடர்ச்சி)
அறிவியல் திருவள்ளுவம்
உ. ஏமம்
ஏமம் என்றால் பாதுகாப்பு. இடையூறோ, துன்பமோ, அழிவோ நேராமல் பாதுகாப்பளிப்பதும் ஏமம். இவை வரும்போது காத்துக்கொள்வதும் ஏமம். ஏமம், ஏமாப்பு, ஏமார்த்தல் எனும் மூன்றும் ஒரே பொருளன.
நாட்டையோ மக்களையோ உயிரினங்களையோ பகை, இயற்கை, குணக்கேடு, மொழி ஆட்சி முதலியவை தாக்குமானால் பல்வகைப் பாதுகாப்புகள் வேண்டும்.
இப்பாதுகாப்பு எதனால் அமையும்? எதனால் அமையும் என்பது பொருந்தாது. எவற்றால் அமையும் என்பதே பொருந்தும்.
திருவள்ளுவர் பாதுகாப்பனவாகப் படையையும், அரண்களையும், ஆட்சித் திறனையும் கூறியுள்ளார். இவை நாட்டையும் நாட்டு மக்களையும் உயிரினங்களையும் காக்கும்.
மனத்துன்பத்தை, வாழ்க்கையை, பண்புகளைக் காக்கும் ஏமங்களாகத் திருவள்ளுவர்
செல்வம் (1.12)
அடக்கம் (128)
கல்வி (398)
கேண்மை(815)
இனநலம் (458, 459, 306, 868)
அரண் (742, 744, 750)
பொருளியல், உளவியல், உளப்பகுப்பியல், கல்வியியல், அரசியல், குமுகாயவியல், கட்சி அரசியல், போர்முனை இயல், வாழ்வியல்.
ஆகியவற்றை ஏமமாகக் கூறியுள்ளார். இவை காக்கும்திறத்தைக் கூறியுள்ளமை இக்கால அறிவியல் துறைகள் பலவற்றுக்கு முன்னோடியாக உள்ளது.
(1) செல்வ ஏமம்
“செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவின்றி
எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து“(112)
இதில் ஆக்கம் செல்வத்தைக் குறிக்கும். இச்செல்வம் நேர்மை உடையவனால் ஆக்கப்பட்டால் அது அவனுக்குப் பின் வாழும் மக்களுக்கும் தொடரும்; நலன்களுக்கும் ஏமம் ஆகும். இதனால் செல்வம் ஓர் ஏமப் பொருளாகிறது.
இன்றளவில் அமெரிக்க நாடு பெரும் வல்லரசு நாடு. குறிப்பிடத்தக்க மேன்மையுடைய வல்லரசு. வல்லரசுடன் வளன் அரசு. இவ்வளத்திற்கு அந்நாட்டில் செல்வம் கொழிப்பதே காரணம். பெரும் செல்வ வளம் கொண்டு அறிவியல் ஆய்வுகளால் மக்களுக்கு ஆக்கம் தருகிறது. போர்க்கருவிகளைச் செல்வத்தால் குவித்து எத்தாக்கு தலையும் அழிக்கும் பாதுகாப்பைத் தந்துள்ளது. ஈரானும் அது போன்ற எண்ணெய் வளம் மிக்க நாடுகளும் தம் செல்வ வளத்தால் அந்நாட்டு மக்களைப் பாதுகாக்கின்றன.
இந்நாடுகளின் செல்வவளம் இந்நாட்டு மக்களின் தலைமுறை தலைமுறைக்குப் பாதுகாப்பாக விளங்குகிறது, எதிர்கால வளங்கள் பலவற்றிற்கும் செல்வக் குவியல் பாதுகாப்பாக உள்ளது. இதுதான் திருவள்ளுவரால் ‘எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து’ எனப்பட்டது.
அவ்வந் நாட்டுச் செவ்வங்களின் நிலைக்கு ஒரு விதிப்பு வைத்தால், அச்செல்வம் செப்பம் உடைய வழியில் வர வேண்டும். செப்பம் தவறி வந்த செல்வம் செப்பம் தவறியோர்களாலே பாதுகாப்பற்று அழிக்கப்படும். போரால் மட்டும் அன்று; அவ்வந்நாட்டு மக்களின் செப்பமில்லாத செயல்களாலும் பாதுகாப்பற்றதாகும். இதற்கு ஒர் உவமை கூறித் திருவள்ளுவர்
“சலத்தால் (வஞ்சத்தால்) பொருள் செய்து
ஏமார்த்தல் (பாதுகாத்தல்) பசுமட்
கலத்துள் நீர்பெய்து இரீதியற்று”(660)
என்றார்.
எனவே, திருவள்ளுவர் குறித்த ‘செல்வத்தால் பாதுகாப்பு’ (இருவகையிலும்) இக்கால உலக அரசுகளால் கண்காணும் காட்சியாக வெளிப்படுகின்றது. இது பொருளிய அறிவியலின் குறியாகும்.
(2) அடக்க ஏமம்
செல்வம் பாதுகாப்புத் தருவது. அது போன்று அது பாதுகாக்கப்பட வேண்டியதும் ஆகும். செல்வத்தைப் பேணிப் பாதுகாப்பது போன்று வேறு பலவும் பாதுகாக்கப்படவேண்டும் என்பார் திருவள்ளுவர். அவற்றுள் ‘அடக்கம்’ ஒன்று,
“காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
(ஏனெனில்)
அதனின் ஊங்கு இல்லை உயிர்க்கு(122)
இக்குறளில் உயிர்க்கு ஒப்பில்லாத செல்வம் ‘அடக்கம்’ என்றார். எனவே, செல்வம் போன்று அடக்கமும் ஓர் ஏமம் ஆகிறது.
‘அடக்கம்‘ ஏமம் ஆவதைத் திருவள்ளுவர் ஓர் உவமையுடன்,
“ஒருமையுள் ஆமைபோல் ஐந்து அடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்பு உடைத்து“(126)
என்று விளக்கினார். இதில் ‘அடக்க’லை ‘ஏமாப்பு’ என்றார்.
‘அடக்கம்‘ வேறு. ‘அடக்கல்‘ வேறு. ஆனாலும், இரண்டும் தொடர்புடையவை. ‘அடக்கம்‘ தானே அடங்குவது. ‘அடக்கல்‘ தானே அடங்காமல் அவா எழும்போது அடக்கிக் கொள்தல்.
ஆமை இயல்பாகவே நான்கு கால்களையும் ஒரு தலையையும் உள்ளே – ஓர் ஓட்டிற்குள்ளே வைத்திருத்தல் ‘அடக்கம்’. அடக்காமல் வெளியே நீட்டி ஒரு பகை தோன்றும்போது உள்ளே இழுத்துக் கொள்ளுதல் ‘அடக்கல்.’
இங்குத் திருவள்ளுவர் ‘அடக்கல்’ என்பதை வற்புறுத்துகிறார்.
இக்கால உளவியலில் ‘அடக்கல்’ (Repression) என்பது ஒரு துறை. இதனை ஆராய்ந்தவர் ஆஃச்திரிய நாட்டறிஞர் சிக்மாண்டு பிராய்டு (Sigmund Freud) என்பார். இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் இவர் உளப்பகுப்பியல் (Psycho-analyses) என்னும் ஓர் இயலைப் புதிதாக நிறுவினார். இவ்வாய்வில் ‘அடக்கல்’ ஒன்று, இவர் கருத்தின் படி ‘அடக்கல்’ என்பது பல்வகை மனப்போராட்டங்களால் விளைவது. அவற்றுள் இரண்டை இன்றியமையாதனவாகக் குறிப்பர்.
1. ‘தனியொருவனின் இயல்பான அவாவிற்கும் அவனின் நேர்மையான உணர்ச்சிக்கும் நேரும் மனப் போராட்டத்தால் விளையும் அடக்கல்.’
2. ‘தனியொருவனின் அவாவிற்கும் மக்கள் மரபு பற்றிய எண்ணத்திற்கும் நேரும் மனப்போராட்டத்தால் விளையும் அடக்கல்.’
இவையிரண்டையும் ஆமை உவமையாக்கப்பெற்ற குறளில் காண்கின்றோம்.
1. தனியொருவன் தன் அவா எழும்போது அவனின் உள்ளடக்கமான நேர்மை என்னும் உணர்ச்சி தடுக்கிறது. இரண்டிற்கும் போராட்டம். நேர்மை, அவாவை அடக்கல் செய்கிறது. இது ஆமை இயல்பாகவே அடங்கி இருக்கும் அடக்கல் போன்றது.
2. தனியொருவன் தன் ஐந்து பொறிகளில் எழும் அவாவினை அடக்காமல் எழுப்புவான். அப்போது அவனுக்குள்ளேயே தன்னைச் சூழ்ந்த குமுகாய மரபு என்னும் ஒழுக்க உணர்வு அவாவினைத் தடுக்கும். இரண்டிற்கும் ஒரு போராட்டம் நிகழும். அவன் அவாவைக் குமுகாய மரபு அடக்கும். இது ஆமையின் பார்வையில் தோன்றிய பகையால் உறுப்புக்களை அடக்கல் செய்வது போன்றது.
இவ்வாறாக இக்கால ‘உளப்படுப்பிய‘லைக் குறளில் காண்கின்றோம்.
அடுத்து, “எழுமையும் ஏமாப்பு உடைத்து” (398) என்றதிலும் இன்றைய ‘உளப்படுப்பியல்’ கருத்து பொதித்துள்ளது.
சிக்மாண்டு பிராய்டு.
‘முதற் பருவமாகிய குழந்தைக்கும் உடலுறவு ஊக்கம் இயல்பாக உண்டு. (இயல்பாகவே இதனை அடக்கலில் கொள்வதால்) இக்குழந்தைக்கு ஆளுமை (Personality)உருவாகும்’ என்று கண்டறிந்தார்.
இவ்வுளப்பகுப்பியலில் ‘அடக்கல்’ ஒருதுறை.
“ஐந்தடக்கல ஆற்றின்
எழுமையும் ஏமாப்பு உடைத்து”
என்றதில்,
‘ஒரு பருவத்தில் அஃதாவது குழந்தைப் பருவத்தில் இயல்பான ‘அடக்கல்’ அமையும். குழந்தையால் இவ்வடக்கல் அறியப்படாதது. இவ்வடக்கலே முதுமை வரை ஏழு பருவத்திற்கும் ஆளுமையாக நிற்கும். ஏழாவது பருவம் வரை இந்த ஆளுமை ஏமாப்பு ஆகும்’
இவ்வாறு பொருள் பொதிந்த இக்குறளால் அக்காலத் திருவள்ளுவரின் இக்கால உளப்பகுப்பியல் அடக்கல்’ புலனாகின்றது. எனவே திருவள்ளுவ உளப்பகுப்பியலாம் ‘அடக்கல்’ ஏமம் ஆகிறது.
அடக்கம் கல்வியாளர்க்கு அமைந்தால் கல்விக்குச் சிறப்பு என்பதை,
“கற்று அடக்கல் ஆற்றுவான்” (139) என்பதால் காட்டினார். இவ்வாறு காட்டிய தொடர்பாலும் மேலே கண்ட ‘அடக்கல்’ பற்றிய ஒருமை எழுமை என்னும் தொடர்பாலும் அடுத்துக் கல்வி ஏமத்தைக் காண நேர்கின்றது.
இடையில் ஒருமை, எழுமை பற்றிய ஒரு குறிப்பு. உரையாசிரியர்கள் ஒரு பிறப்பு, ஏழு பிறப்பு என்று பல இடங்களில் பொருள் கொண்டனர். ஏழு பிறப்பு திருவள்ளுவர் ஏற்றதே, ஏழு ஆயினும் அடக்கம், கல்வி பற்றிய கருத்தில் ஒரு (முதல்) பருவம், ஏழு (இறுதி) பருவம் என்று கொள்வதே அறிவார்ந்த பொருளாகும்.
ஏழு பருவங்களாவன :
பெண் : பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண்.
ஆண் : சிறுவன், மீனி, மறலோன், திறவோன், காளை, விடலை, முதுமகன்-இவ்வாறு ‘அவிநயம்’ என்னும் பழைய இலக்கணநூல் குறிக்கிறது.
(தொடரும்)
கோவை. இளஞ்சேரன், அறிவியல் திருவள்ளுவம்
Leave a Reply