அழிமொழி சமற்கிருதப் பற்றாளர்கள் தரும் தொடர் துன்பம் – இலக்குவனார் திருவள்ளுவன்
அழிமொழி சமற்கிருதப் பற்றாளர்கள் தரும்
தொடர் துன்பம்
சமற்கிருதத்தால் – சமற்கிருதப் பிழைப்புவாதிகளால் – நாம் காலந்தோறும் அடையும் தீங்குகள் பெரிதினும் பெரிது! அதன் தீமை குறித்தும் தமிழ்த்தேசியத்தைப் பேண வேண்டிய பாங்கு குறித்தும் நாம் விழிப்புணர்வு அடைந்துவரும் வேளையில், தமிழர்க்கெனத் தனியரசு இன்மையால் சமற்கிருதத்திணிப்புகளால் நாம் அடையும் இன்னல்கள் மிகுதியினும் மிகுதி!
சமற்கிருதத்திணிப்பால் நாம் மொழித்தூய்மையை இழந்தோம்!
தமிழ்பேசும் மக்கள் தொகையளவில் குறைந்தோம்!
தமிழ்பேசுவோர் நிலப்பரப்பைப் பெரிதும் இழந்தோம்!
தமிழ்த்தேசிய உணர்வை இழந்தோம்!
பிறப்பு முதல் இறப்பு வரை, தமிழ், தமிழ், தமிழ் என இருந்த வாழ்க்கைச் சூழலை இழந்தோம்!
நாளும் நற்றமிழால் படைத்தவரை வணங்கும் பெருமையை இழந்தோம்!
இறைவனுக்குப் பிடித்த மொழி இறைவன் பேசியமொழி என்றெல்லாம் பெருமையாகக் கருதி வந்த தமிழை ஒதுக்கிவிட்டு ஒண்டவந்தவர் மொழியைத் தேவமொழி என நம்பினோம்!
அயல்மொழி மோகங்களுக்கு ஆட்பட்டு அன்னைத்தமிழைப் புறக்கணித்தோம்!
ஊர்ப்பெயர்களில் தமிழ் அகற்றப்பட்டு சமற்கிருதமான அவலங்கள் அரங்கேறின!
இவற்றால் தமிழர் வணிகம் குறைந்தது! வளம் தேய்ந்தது! நலம் அழிந்தது!
1947 இல் ஆங்கிலேயரிடமிருந்து விடுதலைபெற்றாலும் இன்னும் நாம் மொழி விடுதலை பெறவில்லை.
மத்தியில் பேராயக்கட்சி(காங்கிரசு) இருந்தாலும் பா.ச.க. இருந்தாலும் சமற்கிருத, இந்தித்திணிப்புகள் நிறுத்தப்படாமல் தொடர்கின்றன.
மத்திய ஆட்சியில் தமிழகக் கட்சிகள் இடம் பெற்றாலும் தமிழ், தமிழ் என வானதிர முழங்கினாலும் மொழித்திணிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் செயல்படவி்ல்லை.
தமிழ்நாட்டில் தமிழே கற்பிக்காமல் சமற்கிருதம், இந்தி கற்றுத்தரும் பள்ளிகளைக்கூடத் தடுக்க முயலவில்லை.
ஆட்சியில் இருந்தால் அயல்மொழிகளை அணைத்து மகிழ்வதும் ஆட்சியில் இல்லையெனில் ஓட ஓட விரட்டுவதாக வாயளவில் பேசுவதுமே மொழிப்பற்று எனக் கட்சித்தலைவர்கள் செயல்படுகின்றனர். ‘பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும்’ நம்மை, நம் மொழியை, நம் இனத்தை அழித்து வருவதை உணர்ந்தும் பல்கட்சிகளாகப் பிரிந்து நிற்கின்றோமே தவிர, தமிழ்நலம் காக்க ஒற்றுமையாகச் செயல்படுவதில்லை. எனவே, மத்திய ஆட்சியில் உள்ளவர்களுக்குச் சமற்கிருதத் திணிப்பு என்பது எளிமையாகின்றது.
பா.ச.க.அரசின் சமற்கிருதத்திணிப்பின் அண்மை முயற்சி அனைவரும் அறிந்ததே! மத்திய அரசின் கீழ்வரும் அனைத்துக்கல்விநிலையங்களிலும் சமற்கிருதம் கட்டாயப்பாடமாக ஆக்கப்படும் என மனித வள மேம்பாட்டு அமைச்சர் சுமிருதி இராணி பேசியுள்ளார். கல்வியை மீண்டும் மாநிலப்பட்டியலில் கொண்டு வந்தால்தான் இதுபோன்ற கொடுமைகள் நிற்கும்.
மத்திய அரசின் பள்ளிகள் என்பன வானத்திலிருந்து குதித்துவரும் யாரோவிற்காக நடத்தப்படுவன அல்ல! நாட்டில்வாழும் பல்வேறுதேசிய மொழிக்கு உரியவர்களின் பிள்ளகைள்தான் அங்கே படிக்கின்றார்கள். எனவே, மத்திய அரசுப்பள்ளிகளில்தானே சமற்கிருதம் கட்டாயம் என எண்ணாமல் அனைத்து மாநில அரசுகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.
இந்தியா முழுமையும் அனைத்துத் தொடக்கப்பள்ளிகளிலும் ஆங்கிலம் உட்பட எந்த ஓர் அயல்மொழியும் பாடமொழியாகக் கற்பிக்கக்கூடாது. மத்திய நிறுவனப் பள்ளிகளும் இதனைப் பின்பற்ற வேண்டும்.
அந்தந்த மாநிலங்களில் வாழும் பிறமொழியாளருக்காக அவரவர் தாய்மொழியைக் கற்றுத்தரத் தனியாகப்பள்ளிகள் இருக்க வேண்டும். தாய்மொழிச்சான்று அளித்தால்தான் அம் மொழிகளைப் பயிலலாம் என நடைமுறைப்படுத்த வேண்டும்.
பா.ச.க.எதிர்ப்பாக இருந்தாலும் தமிழ்நாட்டின் ஒரே பா.ச.க. நாடாளுமன்ற உறுப்பினரான பொன்.இராதாகிருட்டிணனனுக்கு அமைச்சரவை உறுப்பினர் பதவிதராமல் அதிகாரமில்லாத் துணை அமைச்சர் பதவி தந்ததற்காகத் தமிழன்பர்கள் கண்டிக்கும் பொழுது அந்த உத்தமர், சமற்கிருதம் கற்றுக் கொள்ள முடியாமல் போனதற்காக வெட்கப்படுவதாகப் பேசுகிறார். நாட்டின் உயர்ந்த பொறுப்பில் இருந்தும் கொலைக்குற்றவாளி முன்பு கீழே அமரவைக்கப்பட்டபொழுது வராத வெட்கம் இப்பொழுது வந்துவிட்டதாம். இவர் சமற்கிருதம் கற்றாலும், பிராணமப்பூசாரியாக முடியாது பிராமணர்கள்போல் சடங்கு செய்யமுடியாது பிராமணச்சாமியார்கள் முன் சமமாக அமர முடியாது என்பனவெல்லாம் தெரிந்தும் நாணமின்றிப் பிதற்றுகின்றார்.
தமிழகப் பா.ச.க.விற்குத் தலைவராக வரப்போவது இராசாவா? தமிழிசையா என்ற பேச்சு வந்தபொழுது தமிழ்ப்பகையாளி இராசா வரக்கூடாது, தமிழ்க்குமரி அனந்தனின் மகளான தமிழிசை வரவேண்டும் என்று மாற்றுக்கட்சியில் இருந்தாலும் பா.ச.க.விற்கு எதிர்ப்பாக இருந்தாலும் தமிழன்பர்கள் எண்ணினர். ஆனால், தமிழிசை சமற்கிருதத்திணிப்பை வரவேற்கிறார். வெட்கக்கேடு!
தமிழகத் தலைவர்கள் சமற்கிருத எதிர்ப்பியக்கம் என்பதை வாயளவில் முழங்காமல் இந்தியா முழுமைக்குமாகக் கொண்டு செல்ல வேண்டும்!
இந்தியநிலப்பகுதி துண்டாடப்படாமல் இருக்க வேண்டும், பெரிய நாட்டின் ஆட்சிப்பொறுப்பாளர் என்ற சிறப்புடன் உலகை வலம் வரவேண்டும் என்றெல்லாம் நரேந்திரர்(மோடி) கருதினால், உடனடியாகச் சமற்கித, இந்தித்திணிப்புகளை நிறுத்த வேண்டும்! தேசிய மொழிகளின் வளர்ச்சியில் கருத்து செலுத்த வேண்டும்!
எங்கள் தேசம்! எங்கள் மக்கள்!
எங்கள் மொழி! எங்கள் கல்வி!
எங்கள் உரிமை! எங்கள் உயர்வு!
என ஒவ்வொருவரும் சமற்கிருத(,இந்தி)த் திணிப்புகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழவேண்டும்!
தமிழக அரசும் தலையிட்டுத் தமிழ் மக்களின் கல்வி உரிமைையைக் காக்க வேண்டும்!
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும். (திருவள்ளுவர், திருக்குறள் : 435)
– இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply