‘அ . . . .’ க்கு நன்றி! முதல்வரின் சிறப்பான அணுகுமுறையை உணரச் செய்தமைக்கு! – இலக்குவனார் திருவள்ளுவன்
‘அ . . . .’ க்கு நன்றி! முதல்வரின்
சிறப்பான அணுகுமுறையை உணரச் செய்தமைக்கு!
தலைமையமைச்சர் நரேந்திரர் மூன்று நாள் முன்பு சென்னையில் சில திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டித் தொடக்கி வைத்தார். இதில் பங்கேற்ற தமிழக முதல்வர் மு.க.தாலின் மிகச் சிறப்பாக நம் மாநிலத்தின் வேண்டுகோள்களைத் தெரிவித்தும் திராவிட நன்முறை ஆட்சி விளக்கம் குறித்தும் பேசினார். இதனால் கண்ணேறு பட்டதால் கண்ணேறு கழிக்கப் பூசுணைக்காய் கட்டுவதுபோல் ஒருவர் சிலவற்றை உதிர்த்துள்ளார். ‘முதல்வர் பேசிய உரைக்காக நான் வெட்கப்படுகிறேன்’ என்று கூறியுள்ளார். அந்த அளவிற்குச் சிறப்பாக அல்ல நூற்றில் ஒரு பங்குகூடப் பேச முடியாத பொழுது வெட்கப்பட்டுத்தானே ஆக வேண்டும். அதே நேரம் தலைமையமைச்சர் பாசக நிகழ்ச்சிக்காக வரவில்லை என்றும் ஆனால் முதல்வர் மரியாதை காண்பிக்காமல் தன்னை தானே இழிவுபடுத்திக் கொண்டார் என்றும் உளறியுள்ளார். இவ்வாறு அவர் பேசியிராவிடில் முதல்வரின் பேச்சு பத்தோடு பதினொன்றாகப் போயிருக்கும். அவரது உளறலால், முதல்வரின் உரையை மக்கள் முழுமையாகப் படித்துப் பார்த்தனர். இந்த அளவிற்குத் தமிழகத்தின் தேவைகளை வலியுறுத்தியுள்ளாரே என அவரைப் போற்றுகின்றனர்.
கச்சத்தீவை மீட்கவும் மீனவ மக்களின் உரிமைகளை நிலை நாட்டவும் முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மீனவர்கள் என்றால் அவர்கள் இந்திய மீனவர்கள்தாமே. இந்திய மீனவர்கள் குறித்து இந்தியத் தலைமையமைச்சரிடம் பேசாமல் பாக்கித்தான் தலைமை யமைச்சரிடமா பேச முடியும்?
பொருள் பணிகள் வரித்தொகை(GST)யில் 15.05.22 வரை நிலுவையாக உள்ள உரூ.14,006 கோடித் தொகையை விரைந்து தர வேண்டியுள்ளார். தமிழ்மக்கள் நலன்களுக்காகச் செலவழிக்க வேண்டிய பணத்தைத் தராமல் இழுத்தடிக்கும் ஒன்றிய அரசை நடத்துவோரிடம் இதனைக் கேட்காமல் யாரிடம் கேட்க வேண்டும் என்கிறார் அந்த ‘அ’ என்று தெரியவில்லை.
மாணாக்கர்களின் கல்வி வளர்ச்சிக்கும் எதிர்கால முன்னேற்றத்திற்கும் தடைக்கல்லாக உள்ள தேசியத்தகுதி நுழைவுத் தேர்வை நீக்கச் சட்டமன்றம் தீர்மானம் இயற்றியிருந்தது. இதனை ஆளுநர் ஒப்புதலுடன் ஒன்றிய அரசிற்கு இசைவிற்கு அனுப்பியுள்ளது. இதனைக் கிடப்பில் போட்டுள்ளது ஒன்றிய அரசு. எனவே, தமிழக மாணாக்கர் நலனுக்காக விரைவில் இசைவு வழங்க வேண்டியுள்ளார். இதில் என்ன தவறு கண்டார் என்று தெரியவில்லை. ஒருவேளை மருத்துவக்கல்லூரி அனைத்து இடங்களையும் ஒப்படைத்துவிடுவதாகப் பேசியிருக்க வேண்டும் என எண்ணினாரோ!
ஒன்றிய ஆளுங்கட்சியின் தமிழகத் தலைவர், தமிழ்மக்களின் நலன்களுக்கான வேண்டுகோள்களை நிறைவேற்றினால்தான் நம் கட்சி இங்கே பிழைக்க முடியும் என்று கூறி வற்புறுத்தி யிருக்க வேண்டும். மாறாகக் கட்சி மேலிடம் கூறியதற்காகத் தமிழக முதல்வர் மீது களங்கம் சுமத்த முற்படுவது எங்ஙனம் சரியாகும்? ஆனால், இதனால் முதல்வரின் சிறப்பான உரைகளை மக்கள் புரிந்து கொள்ள வழி வகுத்ததற்காக அவருக்கு நன்றி கூற வேண்டும்.
“உலகச் செம்மொழிகளில் இன்றளவும் உயிர்ப்போடு விளங்கக்கூடிய தமிழை இந்திக்கு இணையாக அலுவல் மொழியாகவும், உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகவும் அறிவிக்க வேண்டும்” எனத் தமிழ்நலம்நாடி வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக மக்களின் ஒருமித்த கருத்து இதுதானே! இதனைத் தெரிவித்தமைக்காக அவரைப் பாராட்டமனமில்லாவிடிலும் தமிழன் என்று சொல்லிக் கொள்வதால் அமைதி காத்திருக்கலாம் அல்லவா?
முதல்வர் வேண்டுகோள்களை மட்டும் தெரிவிக்காமல், “மற்ற மாநிலங்களின் வளர்ச்சியைவிடத் தமிழ்நாட்டின் வளர்ச்சி தனித்துவமிக்கது. தமிழ்நாட்டின் இந்த வளர்ச்சியானது வெறும் பொருளாதாரம் சார்ந்தது மட்டுமல்ல; சமூகநீதி, பெண்கள் முன்னேற்றம், சமத்துவம் போன்ற அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சிதான் தமிழ்நாட்டின் வளர்ச்சி!” என எடுத்துரைத்துள்ளார்.
ஒன்றிய அரசிற்கு நாம் அளிக்கும் வருவாய்வகைகளைச் சுட்டிக்காட்டி அதில் உரிய பங்கைத் தராத ஒன்றிய அரசின் தாழ்நிலையை எடுத்தியம்பி, நம் வருவாய் உரிமையை விளக்கியுள்ளார்.
“மொத்த வரி வருவாயில் தமிழ்நாட்டின் பங்கு 6 விழுக்காடு! இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 8.4 விழுக்காடு! சவுளித் துறை ஏற்றுமதியில் 19.4 விழுக்காடு! சீருந்துகள் ஏற்றுமதியில் 32.5 விழுக்காடு! தோல் பொருட்கள் ஏற்றுமதியில் 33 விழுக்காடு! ஆனால் ஒன்றிய அரசின் வரி வருவாயில் தமிழ்நாட்டுக்கு பகிர்ந்தளிக்கப்படுவது 1.21 விழுக்காடு மட்டுமே. எனவே, தமிழ்நாடு போன்ற வளர்ந்த மாநிலங்கள் நாட்டின் வளர்ச்சிக்கும், பொருளாதாரத்திற்கும் அளிக்கக்கூடிய பங்கிற்கு ஏற்ப, ஒன்றிய அரசும், திட்டங்களிலும் நிதியிலும் தனது பங்களிப்பை உயர்த்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அதுதான் உண்மையான கூட்டுறவுக் கூட்டாட்சியாக அமையும்!” என விளக்கி ஏதோ பிச்சை போடுவதாக எண்ணிப் பாராமுகமாக இருக்கக் கூடாது; உரிமையின் அடிப்படையில் உரிய பங்கைக் கேட்கிறோம் என்பதை உணர்த்தியுள்ளார்.
தமிழ்நாடு சார்பாக முதல்வர் பேசியதெல்லாம் பிற மாநிலங்கள் சார்பாகவும் குரல் கொடுத்துள்ளதாகத்தான் அமைந்துள்ளன. எனவே, தமிழ்நாட்டு வேண்டுகோள்கள் மூலம், இந்திய மாநிலங்களின் சார்பாகக் குரல் கொடுத்துள்ளார் எனலாம்.
தலைமையமைச்சர் முன்னால் ஒன்றிய அரசு, ஒன்றிய அரசு எனத் திரும்பத் திரும்பப் பேசி முதல்வர் அவமானப்படுத்தி விட்டாராம். அரசியல் யாப்பில் உள்ள தொடரைக் கூறியதற்கு இவ்வாறு கூறுகிறார் என்றால், வல்லாண்மை அரசு எனக் கூற வேண்டும் என விரும்புகிறாரா ‘அ’ எனத் தெரியவில்லை.
கட்சிக் கூட்டமல்ல என அடிக்கடிச் சொல்கிறார் ‘அ’. முதல்வர் ஓரிடத்தில் கூடப் பாசக அரசு அல்லது பாசக என்றோ திமுக அரசு அல்லது திமுக என்றோ பேசவில்லை. வேறு எதுவும் சொல்ல இயலவில்லை என்பதால் இவ்வாறு கூறுகிறார் போலும். அப்படி என்றால் பாசகவின் கொள்கைகளான தேசியக்கல்வி முதலானவற்றைத் தலைமையமைச்சர் பேசினாரே. அப்படி என்றால் பாசக கூட்டம் என்று எண்ணித்தானே அவர் பேசியுள்ளார் எனக் கண்டித்திருக்க வேண்டும். “திரும்பிப் போ” என்று சொல்லாமல் இருக்க வைத்துச் செய்து விட்டாரே; உறவுக்குக் கை நீட்ட அழைத்து, உரிமைக்குக் குரல் கொடுத்துவிட்டாரே என எண்ணி உரியவர் சொல்லி வால் ஆடுகிறது என்றுதான் மக்கள் பேசிக் கொள்கிறார்கள். அனைத்துக் கட்சித்தலைவர்கள் மட்டுமல்ல, பிற மாநில அரசினரும் துணிவான தெளிவான சிறப்பான பேச்சிற்காக முதல்வரைப் பாராட்டுகின்றனர்.
கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்
தக்கது அறிவதாம் தூது. (திருக்குறள் 686)
சொல்லவேண்டியவற்றை நன்கறிந்து, சொல்லவேண்டியவர் குறித்து அஞ்சாமல் அவர் செவியில் சென்று உள்ளத்தில் பதியுமாறு சொல்பவனாகவும் காலச்சூழலை அறிந்து நடப்பவனாகவும் அரசின் சார்பாகப் பேசுபவன் இருக்க வேண்டும் என்கிறார் திருவள்ளுவர். பிச்சை எடுப்பதுபோல் உரிமையானவற்றைக் கேட்பதோ அடிமைபோல் அஞ்சி உரைப்பதோ கூடாது என்கிறார் அவர். இதற்கு இலக்கணமாக அன்று முதல்வர் அஞ்சாமல் தமிழ்நாட்டிற்கு வேண்டியவற்றைத் தக்க முறையில் சொல்லி யிருக்கிறார்.
கடனறிந்து காலங் கருதி இடனறிந்து
எண்ணி உரைப்பான் தலை.(திருக்குறள் 687)
ஆற்றவேண்டிய கடமையை அறிந்து, அதற்குரிய காலத்தையும் இடத்தையும் தேர்ந்து, சொல்ல வேண்டியதைத் தெளிவாகச் சிந்தித்துச் சொல்பவனாகவும் இருக்க வேண்டும் என்கிறார் திருவள்ளுவர். தமிழ்நாட்டிற்கு வேண்டியவற்றை நிறைவேற்ற வேண்டிய கடமைகளை அறிந்து, தலைமையமைச்சர் வந்துள்ள காலத்தையும் இடத்தையும் தேர்ந்து எடுத்துச் சிறப்பாகப் பேசியுள்ளார் முதல்வர் மு.க.தாலின்.
எனவே, ‘அ’ செய்ய வேண்டிய வேலை, முதல்வர் வலியுறுத்தியுள்ள அனைத்தையும் நிறைவேற்றி நற்பெயர் எடுக்கச் சொல்ல வேண்டியதுதான். நற்பெயரை ‘எடுக்க’ விரும்புவர் நற்பெயர் எடுக்க வலியுறுத்துவார் என நாம் கனவு காணலாமா?
– இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல – இதழுரை
Leave a Reply