.தி.மு.. ஆட்சியைக் கலைக்க வேண்டா!

“தேர்தல் முடிவு வந்ததும் மத்தியில் ஆட்சி மாறும். அடுத்த நொடி இங்கே அதிமுக ஆட்சி கலைக்கப்படும்” எனத் தி.மு.க.தலைவர் தாலின் கூறி வருகிறார். மக்களாட்சிக்கு எதிரான கருத்தை அவர் வெளிப்படுத்தத் தேவையில்லையே!

தி.மு.க. கூட்டணியினரும் ஆதரவாளர்களும் எதிர்பார்ப்பதுபோல் இடைத் தேர்தல்களில் தேவையான தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெற்றால் இயல்பாகவே இந்த ஆட்சி போய்த்தான் ஆகும்.  அவ்வாறிருக்க ஆட்சியைக் கலைக்க வேண்டிய தேவை என்ன? பன்னீர் அணியினர் பதினொருவர் மீதான கட்சிமாறி வாக்களிப்பு வழக்கிலும் தீர்ப்பு வந்து அவர்கள் பதவி செல்லாதது ஆகி விடும். அப்பொழுதும் ஆட்சிக் கலைப்பிற்குத் தேவை இல்லையே!

ஒருவேளை – ஒருவேளைதான் – குறுக்கு வழிகளில் பா.ச.க மத்திய ஆட்சியைக் கைப்பற்றி இங்கே தி.மு.க.விற்குப் பெரும்பான்மை கிடைத்தும் தில்லு முல்லு விளையாட்டுகளில் ஈடுபடலாம். அப்பொழுது தி.மு.க. கட்சி அடிப்படையில் போரிடாமல் மக்களைத் திரட்டிப் போரிட்டு நீதிமன்றத்தின் துணையுடன் ஆட்சியில் அமரலாம். எனவே, அத்தகைய சூழல் இல்லாத பெபாழுது ஆட்சிக்கலைப்பு என்ற பேச்சு தேவையில்லையே!

தி.மு.க.வின் எதிர்பார்ப்பு பொய்த்து அ.தி.மு.க. இடைத்தேர்தல்களில் வேண்டிய எண்ணிக்கையிலான தொகுதிகளில்  வெற்றி பெறலாம். அப்பொழுதும் ஆட்சிக் கலைப்பு தேவையில்லையே!  அத்தகைய சூழல் நேர்ந்தால், ஊழல் குற்றச்சாட்டு அடிப்படையில் மத்திய அரசின் துணையுடன் ஆட்சியைக் கலைக்க எண்ணுகிறாரா? அவ்வாறாயின் குறைவாண்டு ஆட்சிக்காக அடுத்து வர இருக்கும் நிலையான ஆட்சியை அவர் இழப்பதாக ஆகாதா?

மற்றொரு சூழலும் உருவாகலாம். இன்றைய நிலையில் பதவி பறிக்கப்பட்ட ச.ம.உறுப்பினர்கள் மீளவும் வெற்றி பெறுவர். அவ்வாறு வெற்றி பெற்றால் அ.ம.மு.க. வின் செயல்பாட்டிற்கேற்பத்தான் ஆட்சியின் ஆயுள் இருக்கும். தினகரன் தி.மு.க.வுடன் இணைந்து ஆட்சியைக் கவிழ்த்தால் அம்மா ஆட்சியைக் கவிழ்த்தார் என்ற அவப்பெயர் வரும் என்றுதான் அமைதி காத்தார். அந்த நிலைதான் தொடரும். ஆனால், மத்திய ஆட்சி மாற்றத்தால் ஆளுநர் மாறி பெரும்பான்மை ஆதரவு இல்லாத எடப்பாடியார் ஆட்சியைப் பதவி விலகச் செய்யலாம். அப்படி ஒரு நிலை வருவதாக இருந்தால் எடப்பாடி பழனிச்சாமி தினகரனிடம் சரணடைந்து விடுவார்.

சிறப்பான பின்புலம் இல்லாமல் முதல்வர் பதவியில் அமர்ந்து காட்சிக்கு எளியராக விளங்கித் திறமையாகச் செயல்படும் வல்லவராக எடப்பாடி பழனிச்சாமி உள்ளார். அரசியல்வாதிகளுக்குரிய ஊழல் இலக்கணத்தைப் புறந்தள்ளிப் பார்த்தால் அவரை ஆட்சிக் கட்டிலில் இருந்து முறையற்ற முறையில் தள்ள வேண்டிய தேவை இல்லை. 

 இப்போதைய சூழலில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே ஆட்சி மாற்றத்திற்கான வாய்ப்பைத் தெரிவிக்கிறது.  அவ்வாய்ப்பு கைகூட வேண்டுமெனில், பரப்புரையை மேலும் தீவிரப்படுத்தி வெற்றி காண வேண்டும். வெறும் குறுக்கு வழிக்கான கனவுகளால் பயனில்லை. மூன்றில் இரண்டு பங்கு ஆட்சி மாற்றத்திற்கு எதிரானதாக உள்ளது என்பதை எண்ணி அதற்கேற்பத் திட்டமிட வேண்டும்.

எனவே, தி.மு.க. சட்டமன்றத்தில் பெரும்பான்மை பெற்று நேர் வழியில் ஆட்சியில் அமரலாம். அதற்கு வாய்ப்பு இல்லாமல் போனால் மக்கள் வழங்கிய 5 ஆண்டுப் பதவிக்காலத்திற்கும் அ.தி.மு.க. அரசே நீடிக்க உதவுவதே சிறப்பாகும்.

 இந் நேர்வில், ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகளில் ஈடுபடாமல் மத்திய ஆட்சியில் பங்கேற்றுத் தமிழ் நாட்டிற்கும் தமிழ் மக்களுக்கும் வேண்டிய நற்செயல்களில் ஈடுபட்டு, அடுத்த தேர்தலுக்கான ஆயத்த வேலைகளில் ஈடுபடுவதே தாலினுக்குப் பெருமை சேர்க்கும்.

உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி

இடைக்கண் முரிந்தார் பலர்.(திருவள்ளுவர்,திருக்குறள் 473)

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை -அகரமுதல