ஆரியர் தமிழர் தொடர்பால் சமற்கிருதத்தை அமைத்துக் கொண்டனர் – பாவாணர்
இந்திய நாகரிக அடிப்படை தமிழ் நாகரிகமே!
இந்திய ஆரியர் பிற்காலத்தில் தமிழரொடு தொடர்பு கொண்ட பின்னரே, சமற்கிருதம் என்னும் அரைச் செயற்கையான இலக்கிய நடை வழக்கை அல்லது பொத்தக மொழியை அமைத்து, அதிற் பண்டைத் தமிழ் நூல்களையெல்லாம் மொழிபெயர்த்துக் கொண்டனர். இது என் ‘வடமொழி வரலாறு‘ என்னும் நூலில் விரிவாக விளக்கப்பெறும்.
தமிழர் தென்னாட்டுப் பழங்குடி மக்கள். தமிழ் தோன்றியது முழுகிப்போன குமரிக்கண்டத்தில் 50,000 ஆண்டுகட்குமுன். தமிழ் நாகரிகம் தோன்றியது 20,000 ஆண்டுகட்குமுன். தமிழிலக்கண விலக்கியம் தோன்றியது கி.மு.10,000 ஆண்டுகட்குமுன். இதன் விளக்கத்தை என் ‘தமிழ் வரலாறு‘ என்னும் நூலுட் காண்க.
இந்திய நாகரிக அடிப்படை தமிழ் நாகரிகமே. ஆயினும், இன்று அது அறியப்படாமலிருப்பதற்குக் கரணியம் (காரணம்):
ஆரியவருகைக்கு முற்பட்ட தமிழிலக்கியம் அனைத்தும் அழிந்தும் அழிக்கப்பட்டும் போனமையும், ஆரியக் குலப் பிரிவினையால் தமிழர் பல வகையிலும் தாழ்த்தப்பட்டிருப்பதும்; இவற்றிற்கு நேர்மாறாக, இந்தியக் கலைகளும் அறிவியல்களும் மொழி பெயர்த்து எழுதப்பட்டுள்ள சமற்கிருத நூல்களே!
இன்றிருப்பதும், அவற்றையெல்லாம் முதனூல்களே யென்று வடவர் வலிப்பதும், குலவரிசையிலும் கல்வித்துறையிலும் ஆரியர் உயர்த்தப்பட்டிருப் பதுமே!
ஒரு திருடன் தான் திருடிய பொருளைத் தனதென்றே வலிப்பினும், அப் பொருளின் வரலாறு அது பிறனது என்பதை மெய்ப்பிப்பதுபோல், தமிழ் வரலாறு, தமிழர் வரலாறு, தமிழ்நாட்டு வரலாறு ஆகிய மூன்றும், இந்திய நாகரிகம் தமிழரதே என்பதை ஐயந்திரிபற நாட்டுகின்றன. ஆயினும், இவ் வரலாற்றை மேலையர் அறியார். தமிழரும் இதுவரை அவருக்கு அறிவித்திலர். இற்றைத் தமிழில் வடசொற்களும் தமிழிலக்கியத்தில் வடநூல் முறைகளும் ஆரியக் கருத்துகளும் மிகுதியாகப் புகுத்தப்பட்டிருப்பதும், கோயில் வழிபாடு, சமற்கிருதத்தில் பிராமணப் பூசாரியரால் நடைபெற்று வருவதும், தமிழரின் இயற்பெயர் பெரும்பாலும் வடசொல்லா யிருப்பதும், தமிழைக் காட்டிக்கொடுக்கும் தந்நலத்தார் தலைமைப் பதவி தாங்கிக்கொண்டு தமிழப் பொதுமக்கட்குத் தெரியாதபடி தமிழ் நாகரிகத்தை மறைப்பதும், வடமொழியாளர் கூற்றை மேலையர்க்கு மெய்போற் காட்டுகின்றன.
“பொய்யுடை யொருவன் சொல்வன் மையினால்
மெய்போலும்மே மெய்போ லும்மே.”
“மெய்யுடை யொருவன் சொலமாட் டாமையால்
பொய்போ லும்மே பொய்போ லும்மே “
என்னும் வெற்றிவேற்கை வெண்செந்துறைகட் கேற்ப, ஆரியர் தமிழர் நிலைகள் நிற்கின்றன. ஆயினும் பொதுவியல்பிற்கு விலக்காகக் கில்பெட்டு சிலேற்றர் (Gilbert Slater) என்னும் சென்னைப் பல்கலைக்கழக மேனாட் பொருளியல்நூற் பேராசிரியர், தம் இந்திய நாகரிகத்தில் திரவிடக் கூறு (Dravidian Element in Indian Culture) என்னும் நூலில்,
“திராவிடர் இங்ஙனம் மொழியில் ஆரியப் படுத்தப் பட்டபோது, ஆரியர் நாகரிகப் பண்பாட்டில் திரவிடப்படுத்தப் பெற்றனர்” (“while the Dravidians were thus Aryanised in language the Aryans were Dravidised in culture.”) என்று நடுநிலைத் தீர்ப்புக் கூறியிருப்பது, தமிழரும் திரவிடரும் மகிழ்ந்து பாராட்டற்குரியது.
Leave a Reply