ஆற்றலாளர் அழகிரிக்கு இஃது அழகன்று!

  தொண்டர்களை அரவணைத்துச் செல்வதிலும் திட்டமிட்டுச் செயலாற்றுவதிலும் வல்லவர் அழகிரி. எனினும் ஒரு பகுதியில் பெறும் சிறப்பைவிட மாநில அளவில் பெறும் சிறப்பு வலிமையானது. எனவேதான், தென்மண்டலப் பொறுப்பாளரான இவரை விட மாநிலப் பொறுப்புகளில் உள்ள தாலின் வலிமையாளராக உள்ளார்.

 தலைவரை இழந்த திமுகவில் யார் பெரியவர் என்னும் போட்டியில் இறங்குவது கட்சி ஒற்றுமைக்கும் குடும்பஒற்றுமைக்கும் நல்லதல்ல.

  அழகிரி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கூட்டம் வரலாம். என்றாலும் அவரது அதிரடியான அறிவிப்புகள் ஊடகத்திற்குத் தீனியாக அமையுமே தவிர, அவரது செல்வாக்கை உயர்த்திக் கொள்ளப் பயன்படா. மத்திய அரசின் தூண்டுதலால் தனிக் கட்சி தொடங்கினாலும் இரசினி கட்சியில் பொறுப்பேற்றாலும் திமுகவில் சலசலப்பை உண்டாக்கலாம். ஆனால், பெரும்பான்மையர் அவருடன் செல்ல மாட்டார்கள். அப்படிச் செல்வதாக இருந்தால் அவரைக் கட்சியை விட்டு நீக்கிய செயல் கட்சியில் ஓர் அதிர்வை உண்டாக்கியிருக்க வேண்டுமே! அப்படி ஒன்றும் ஏற்படவில்லையே!  அழகிரி திமுகவில் இருந்தால் அவரது பின்னால் அணிவகுக்கும் தொண்டர்கள் அவர் வெளியே இருக்கும் பொழுது இல்லையே அதுதான் உலக நடைமுறை. கட்சிக்குள் இருக்கும் செல்வாக்கைக் கணக்கிட்டு, அழகிரி தனி அணி கண்டாலோ வேறு வகையாகத் தனித்துச் செயல்பட்டாலோ அவர் எதிர்பார்க்கும் வெற்றியை அடைய இயலாது.

 தாலினுக்குத் தரும் முதன்மை மூத்த தலைவர்களிடம் மன வருத்தத்தைத் தந்திருக்கலாம். என்றாலும் அவர்களின் பிள்ளைகள் தாலினைவிடச் செல்வாக்கு மிக்கவர்களாக உயரவில்லை. தாலினுடன் இணைந்து கட்டுப்பட்டு நடந்தால்தான் கட்சியில் பொறுப்பு என்ற நிலையில்தான் உள்ளனர். எனவே, மூத்த தலைவர்கள், தத்தம் பிள்ளைகள் நலம் கருதி அடங்கித்தான் கிடக்கின்றனர். செயல்தலைவராகவும் பொருளாளராகவும் இரு முதன்மைப் பொறுப்புகளில் தாலின் இருந்தாலும் வெளிப்படையாக அதனைத் தட்டிக்கேட்கும் துணிவுகூட இல்லாதவர்கள், அவரால் ஓரங்கட்டப்படலாமே தவிர, அவரை ஓரங்கட்டும் செல்வாக்கு அற்றவர்களே!  முதுமைப்பருவத்தின் வாயிலில் வந்த பின்னும் இளைஞர் அணித் தலைவராகத் தாலின் செயல்பட்டபொழுது வாய்மூடிக்கிடந்தவர்கள்தானே! இப்பொழுது மட்டும் துள்ளிக் குதிக்கவா போகிறார்கள்? எனவே, காலங்கடந்து அழகிரி எடுக்கும் எந்த முயற்சியாலும திமுகவில் பெரும் பிளவு ஏற்பட வாய்ப்பில்லை.

  கலைஞர் கருணாநிதிதான் திமுக என்ற நிலை மாறி அவரது காலத்திலேயே தாலின்தான் திமுக என்னும் நிலை  வந்துவிட்டது. இந்தச் சூழலில் அவரது தலைமையில் திமுக இயங்குவதுதான் நல்லது.

  கட்சியிலும் ஆட்சியிலும் பல்வேறு பொறுப்புகளில் செயல்பட்ட, இப்பொழுதும் செயல்படும் பாங்கு அவரது பட்டறிவைப் பட்டை தீட்டிக் கட்சி நலனுக்கு உதவும.

 தாலின்,  முதுமையைக் காரணமாகக் கூறிப் பேராசிரியர் அன்பழகனைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து விலகச் செய்யக் கூடாது. செயல்படா நிலையிலேயே கலைஞர் கருணாநிதி தலைவராகத் தொடரவில்லையா?

  ஒருவேளை தாலின் தலைவராக இருக்கும்பொழுது தான் அவர் கீழ்ப் பொதுச்செயலராக இருப்பதா எனப் பேராசிரியர் எண்ணலாம். அதனால் அவர் முதுமையின் போர்வையில் விலக முன்வரலாம். அத்தகைய சூழலில் கட்சியின் நெறியாளராகப் பேராசிரியருக்குப் பொறுப்பு வழங்குவது தாலினுக்கும் கட்சிக்கும் நல்லது. செயல் தலைவர் பொறுப்பை உருவாக்கிய திமுகவால் நெறியாளர் பொறுப்பை உருவாக்குவது ஒன்றும் சிக்கலானது அல்ல.

 அழகிரிக்குப்பொறுப்பு தந்தாலும் இணங்கிச் செல்வாரா என்பதில் தாலினுக்கு ஐயம் எழுவதே இயற்கை. எனவே, அவரை ஒதுக்கவே எண்ணுவார். இச்சூழலில்,எந்தப் பொறுப்பையும் எதிர்பார்க்காமல் தம்பிக்கும் கட்சிக்கும் வழிகாட்டியாக அழகிரி விளங்கலாம். இதனால் அவரது மதிப்புதான் உயரும்.

  இடைத்தேர்தல்களுக்கு முன்னர்ப் பொதுத் தேர்தல் வர பாசக வழி வகுக்கலாம். ஒரு வேளை இடைத் தேர்தல்கள் வந்தால் திமுக வெற்றி வாய்ப்பு ஐயமே! திருவாரூரில் தந்தைக்காக வாக்கு திரட்டிய செல்விக்கு ஓரளவு ஆதரவு உள்ளது. எனினும் கலைஞர் கருணாநிதிக்குக் கிடைத்த வாக்குகள் அவரது குடும்பத்தினருக்கோ கட்சியினருக்கோ கிடைக்கும் என எதிர்பார்ப்பது தவறே  எனவே, திமுக பெறக்கூடிய வாக்குகளைக் குறைத்துச் செல்வாக்கைக் காட்ட அழகிரி முயலக்கூடாது. மாறாக வெற்றி வாய்ப்பில்லாத திமுகவை வெற்றி பெறச் செய்து தன் செல்வாக்கை அவர் உணர்த்த வேண்டும்.

 நேரடியாகப் பொதுத்தேர்தல் வந்தாலும் திமுகவை ஆட்சியில் அமர்த்தும் வண்ணம்செயல்படுவதுதான் அழகிரிக்குப் பெருமை சேர்க்கும். மாறான இப்போதைய போக்கு அவருக்கு அழகல்ல

  தமிழ்நாட்டின் முதன்மைக் கட்சியான திமுகவின் வலிமை தமிழ்நாட்டிற்கு நலம் சேர்க்கும். தமிழ்நலன் நாடும் வலிமையான கட்சி எதுவும் தோன்றாத காரணத்தால், அதன் வீழ்ச்சி நாட்டிற்கும் வீழ்ச்சியாய் அமைந்துவிடும். எனவே, நல்லன ஆற்றுவதன் மூலம் திறமையை வெளிப்படுத்த வேண்டும். மாறாக, அல்லன செய்து அழிவுப்பாதையில்  ஆதரவாளர்களைத் தள்ளுவதால் அவருக்கும் அவர் குடும்பத்தாருக்கும் பெரும் நன்மை விளையாது.

  ஆற்றல்மிகு அழகிரி, திமுகவில் இணைந்து, அவரது தந்தை காலத்தில் திமுக சந்தித்த சறுக்கல்களைத் தாலினுடன் இணைந்து சரி செய்ய முன் வரவேண்டும். அவரது திறமை கட்சியை வலுப்படுத்தி நாட்டிற்கு நன்மை விளைவிக்க உதவ வேண்டுமே தவிர, கட்சியைச் சிதைப்பதற்குத் துணைபோகக் கூடாது.

 திமுகவில் இருப்பதுதான் தனக்கு செல்வாக்கு என்பதை அழகிரி உணர்வாரா? அல்லது திமுகவை வீழ்த்துவதாகக் கூறித் தான் வீழ்வாரா

கடல்ஓடா கால்வல் நெடும்தேர்; கடல்ஓடும்

நாவாயும், ஓடா நிலத்து(திருவள்ளுவர், திருக்குறள் 496).

நிலத்தில் ஓடும் வலிமையான தேர் கடலில் ஓடா.

கடலில் ஓடும் பெரிய கப்பல் நிலத்தில் ஓடா.

என்பதை இத் திருக்குறள் மூலம் விளக்கி ஓர் இடத்தில் செல்வாக்குடன் உள்ளவர், அவ்விடத்தை விட்டு அகலும் பொழுது செல்வாக்கு இழப்பார் என்கிறார் திருவள்ளுவர்.

ஆற்றலாளர் அழகிரி தமிழ் மக்களுக்கும் தமிழ் மொழிக்கும் தொண்டாற்றும் வகையில் அரசியல் பாதையை வழிவகுத்துக் கொள்வாராக!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை, அகரமுதல